இலங்கையில் 'ஜனதா விமுக்தி பெரமுன' என்ற இயக்கத்தை 14-05-1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது அதன் தலைவர் ரோகண விஜயவீர, பொதுச் செயலாளர் லயன்ஸ் போபகே.இந்த இயக்கம் மார்ச்சிய - லெனினிய இடதுசாரி வழியில் இலங்கையில் ஒரு சோசலிச அரசை நிறுவ முயன்றது. 1971 மற்றும் 1987-89 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்திப் போராடி இலங்கையை அதிரவைத்தது. ஆனாலும் அந்தக் கிளர்ச்சிகள் தோல்வியடைந்தன.
ஆயுதம் ஏந்தியப் போராட்டம், அதன் நடைமுறைகளை மக்கள் ஏற்கவில்லை. அதனால் ஆயுதங்களைக் கைவிட்டுத் தேர்தல் அரசியலுக்கு இந்த இயக்கம் வந்தது. 1987 இல் மாணவராக ஜேவிபியில் இணைந்த அனுரா குமார திசநாயகா உழைப்பால் முன்னேறி 2004ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார். 2014ஆம் ஆண்டு ஜேவிபி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் இன்று இலங்கையின் அதிபர். இலங்கை மக்களின் நலன் பேணுவதுடன், இப்போது சிதறடிக்கப்பட்டு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலைக் கருதுவதும் அவரின் கடமை.
தவிர அண்மையில் இருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்களை ஒவ்வொரு நாளும் இலங்கைக் கடலோரப் படையினர் தாக்குவதும், பிடித்த மீன்களை அழிப்பதும், கைது செய்வதும், இலங்கை நீதிமன்றம் அவர்களுக்குக் கோடிக்கணக்கில் தண்டனை விதித்துச் சிறையில் அடைத்துப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மார்க்சிய இடதுசாரி கொள்கையாளர், அதிபர் அனுரா குமார திசநாயகா, (தமிழ்நாட்டு) மீனவத் தொழிலாளர்கள் சுதந்திரமாகக் கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் வேண்டுகோள், செய்வார் என நம்புவோம்.
- கருஞ்சட்டைத் தமிழர்