கீற்றில் தேட...

நான்காவது அனைத்துலக மனித நேய மாநாடு, ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் மாநகரில், எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது!

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் என்று பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்! காலை முதல் இரவு வரை, இரண்டு நாள்களும் தொடர்ந்து மாநாட்டின் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன. இடையில் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோரின் இசை நிகழ்ச்சி , குறிப்பாக குறளிசைக் காவியம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது! அரங்கமே எழுந்து நின்று கையொலி எழுப்பி அவர்களைப் பாராட்டியது! ஆஸ்திரேலிய நாட்டின் செனடர்கள், மாநகர மேயர் என்று பலரும் வந்திருந்தனர்!a raja and subaveeதமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஆகியோர் வாழ்த்திடும் காணொளிகளோடு தொடங்கி, இந்திய ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சர் ஆ. இராசா அவர்களின் நிறைவுறையோடு மாநாடு முடிவடைந்தது!

ஆஸ்திரேலியாவிலும் தலைகாட்டிய சாதி உணர்வைக் கண்டித்து, அதுவும் ஒருவிதமான இனவெறிதான் என்று கூறி, சாதி உணர்வைப் பரப்பினால் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தையும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த செனடர் லீ மேடையில் பாராட்டப்பட்டார்.

நான்காவது அனைத்துலக மனித நேய மாநாடு, ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் மாநகரில், எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார் - அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம் (PATCA) நடத்திய இம்மாநாட்டில், தொடக்கம் முதல் இறுதி வரையில்,

அவ்விரு சிந்தனையாளர்களின் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தன!

வந்திருந்தோர், கேட்டறிந்தோர் அனைவரும் பாராட்டிய அம்மாநாட்டை, அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் சோம. இளங்கோவன், முனைவர் அண்ணாமலை மகிழன் , தோழர் மூர்த்தி, தோழர் சுமதி உள்ளிட்ட பலரும் முன் நின்று நடத்தினார்கள்.

அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்ற அம் மாநாட்டின் சிறப்பைக் கண்டு, பாவம், தினமலர்தான் கொஞ்சம் நொந்து போய்விட்டது! அவர்களின் வலையொளியில், இந்த மாநாடு பற்றிக் கேள்விப்பட்ட ஆஸ்திரேலியத் தமிழர்கள் அனைவரும் பதற்றத்தோடும், ஆக்ரோஷத்தோடும் இருப்பதாக வாசு ஸ்ரீனிவாசன் என்னும் ஒருவரைப் பேச வைத்திருந்தது! அதுவே அம் மாநாட்டின் வெற்றிக்கு போதுமான சான்றாகவும் இருந்தது!

சுப.வீரபாண்டியன்