tribel womenமாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் 21-05-2022 அன்று கோயில் நிர்வாகம் அன்னதானம் வழங்கி இருக்கிறது.

அப்போது அன்னதான உணவைச் சாப்பிட வந்த நரிக்குறவர் பெண்களைத் தரையில் அமர வைத்துச் சாப்பிடச் செய்திருக்கிறார்கள் கோயில் பொறுப்பாளர்கள்.

நரிக்குறவர்களும் மனிதர்கள் தானே! அவர்களைத் தரையில் உட்கார வைத்தும், மற்றவர்களை மேசை - நாற்காலிகளில் அமர வைத்தும் உயர்வு, தாழ்வு பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்? இது சமூக நீதிக்கு எதிரானது.

இச்செயலைக் கண்டித்துத் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அக்கோயிலின் பெண் செயல் அலுவலர் சிவசண்முகப் பொன்மணி, அக்கோயிலின் சமையலர் குமாரி ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே கோயிலில் சாப்பிட வந்த ஒரு நரிக்குறவர் பெண்ணை கோயில் நிர்வாகிகள் அவமானப் படுத்தி வெளியேற்றியதையும், பின்னர் அப்பெண்ணைக் கழகத் தலைவர் ஸ்டாலின் அழைத்துப் பேசி ஆறுதல் கூறியதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

நரிக்குறவர் சமூகம் நாடோடியாக, பின்தங்கிய சமூகமாக, கல்வியின் வாசலைக் கூடத் தொட முடியாத சமூகமாக இருந்து கொண்டு இருக்கிறது.

அந்தப் பாவப்பட்ட மக்களை, குறிப்பாக பெண்ணுரிமை பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்தக் காலத்தில் அப்பெண்களுக்குத் தீண்டாமைச் சிந்தனையுடன் உணவு தானம் கொடுத்தது வேதனைக்கு உரியது.

கடவுளின் சந்நிதானம் என்று சொல்லிக் கொள்ளும் இந்துக் கோயில்கள் தோறும் இது போன்றத் தீண்டாமை வேறு வடிவங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.

அம்பாளும், லட்சுமியும், சரஸ்வதியும் பெண் கடவுள்கள் என்று சொல்லிக் கொண்டு, வாழும் பெண்களைத் தீட்டு என்று சொல்கிறது இந்து மதமும், கோயில்களும்.

இது என்ன நியாயம்?

Pin It