நாம் கீழே வெளியிட்டிருப்பது கலைஞரின் உரை. தமிழின உணர்வோடு இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் போர் முழக்கம். 1985 ஆம் ஆண்டு எதிர்கட்சியில் இருந்த கலைஞர் காங்கிரஸ் ஆட்சியை நோக்கி வைத்த கேள்விகள். தி.மு.க. தலைமைக் கழகமே, “தமிழனுக்கு ஒரு நாடு; தமிழ் ஈழ நாடு” என்ற தலைப்பில் இந்த உரையை நூலாக வெளியிட்டுள்ளது. ஒருமைப்பாட்டுக்கு எதிராக, கலைஞர் பேசியதில் கால்பங்கு கூட பேசாத சீமானை, கொளத்தூர் மணியை அதே கலைஞர் சிறைப்படுத்தியிருக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். - கலைஞர் மீது இந்த உரைகளுக்காக எந்த வழக்கையும் போடவில்லை.

“நான் உறுதியாகச் சொல்கிறேன். அரசியல் லாபத்திற்காகத் தான் இலங்கைப் பிரச்சினையை எடுக்கிறோம் என்று யாராவது சொன்னால், நாங்கள் நடந்து முடிந்த பொது தேர்தலிலேயே இலங்கைப் பிரச்சினையை முன் வைத்திருப்போம்.

நாங்கள் இலங்கைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக வலியுறுத்த விரும்பவில்லை. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலிலே ஓடுகின்ற இரத்தம், தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கின்ற துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ்!! தமிழ்! என்று துடிப்பது உண்மையானால் அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்ற வேண்டுமா? வேண்டாமா? அவனுடைய உரிமைக் குரலுக்கு ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை! பழங்கதை பேசிப் பயனில்லை; வீரம் பேசிப் பயனில்லை. கனக விஜயர் தலையில் கல்லேற்றிக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாகக் கொண்டு வந்தான் கரிகாலன்; ராஜேந்திர சோழன் கடாரம் சென்றான்; வென்றான்! இது சரித்திரம்!

ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். என்ன செயலில்? எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இப்போது வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம்.
ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காததைப் போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை.

எனவேதான் சொல்லுகிறேன், இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக - அதற்குத் தயாராகிவிட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித் தமிழ் ஈழ நாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழ நாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.

தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளுமே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஓரணியில் நிற்க வேண்டும்.

பிரதமர் ராஜீவின் பொல்லாத பேச்சு

பத்திரிகைச் செய்தியின் குறிப்புப்படி அக்டோபர் முதல் நாள் பயங்கரமான எரிகுண்டுகள் தமிழர்கள் பெரும்பாலும் வாழுகின்ற திரிகோணமலைப் பகுதியிலே வீசி எறியப்பட்டு, பத்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

250 பேர் தப்பித்துப் பிழைத்து அகதிகளாக வந்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இரண்டு விடுதலைப் போராளிகள் முகமெல்லாம் கருகிப் போய் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. இப்படி நடைபெறுகின்ற அக்கிரமங்களை நாம் கண்டிக்கத்தான் இந்த பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்துகிறோம்.

இந்த அக்கிரமத்தை கேட்க வேறு ஆளே இல்லையா? நாம் கேட்க வேண்டிய முறைப்படியெல்லாம் கேட்டாகி விட்டது - 1983 ஆம் ஆண்டில் இந்த அநியாய இனப் படுகொலை இலங்கையில் தொடங்கியவுடன் தமிழகம் கொந்தளித்தது - கிளர்ச்சி வடிவெடுத்தது.

ஜனநாயக ரீதியில் அணுகிப் பார்த்தோம். போராட்ட ரீதியில் அணுகிப் பார்த்தோம். பல முறையீடுகளை எடுத்துச் சென்று அன்றைக்கு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களை சந்தித்துப் பார்த்தோம். எதுவும் நடைபெறவில்லை. இப்போது நடைபெறுகின்ற அக்கிரமங்களை மாநிலங்களவையில் வை.கோபால்சாமி, எல். கணேசன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன போதும், நாடாளுமன்றத்திலே என்.வி.என். சோமுவும், கலாநிதியும் எடுத்துச் சொன்ன போதும் கிடைத்த பதிலென்ன?

வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு விமானத்தில் சிங்களவர் ஆயுதங்களை ஏற்றி வந்தார்கள். அப்படி ஆயுதங்களை ஏற்றி வந்த அந்த விமானம் எண்ணெய் இல்லாத காரணத்தால் திருவனந்தபுரத்திலே இறங்கியது. அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. அதை இலங்கைக்கு அனுப்புவீர்களேயானால், அது இலங்கைத் தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும். எனவே அங்கே அனுப்பாதீர்கள் என்று தமிழ்நாடு ஒருமித்த குரல் கொடுத்து கேட்டுக் கொண்டது. அப்படியிருந்தும் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கையை காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழர்களைக் கொல்லுகின்ற ஆயுதங்களைத் தாங்கியிருந்த அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பியது நியாயம் தானா? என்று கோபால்சாமி கேட்டபோது பிரதமர் எழுந்து, “அந்த ஆயுதங்களில் - ‘இது தமிழர்களைக் கொல்ல’ என்று எழுதப்படவில்லை” என்று சொன்னார்.

உலகத்தில் எந்த யுத்தத்திலாவது - எந்த துப்பாக்கிக் குண்டிலாவது - அல்லது எந்த துப்பாக்கியிலாவது இது இன்னின்னாரைக் கொல்ல என்று எழுதப்பட்டிருக்குமா? நான் வேதனையோடு ராஜீவ்காந்தி அவர்களைpப் பார்த்து கேட்கிறேன். அன்னை இந்திராகாந்தியின் உடலைப் பல குண்டுகள் துளைத்தனவே - அதிலே எந்தக் ‘குண்டிலாவது இது இந்திரா காந்தியைக் கொல்ல’ என்று எழுதப்பட்டிருந்ததா? ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாமல், உணர்வு இல்லாமல், விமானத்தை அனுப்பி - அதிலே வந்த ஆயுதங்கள் தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன. இது நியாயம்தானா என்று கேட்டோம்.

இப்படிக் கேட்ட கோபால்சாமிக்கு கிடைத்த பதில் அந்த ஆயுதத்தில் தமிர்களைக் கொல்ல என்று எழுதப்படவில்லை என்கின்ற ஹாசியமான - நகைச்சுவை வாய்ந்த ஒரு பதிலைத்தான் பிரதமர் ராஜீவ்காந்தி தருகிறார். எனவேதான் இலங்கையில் இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற நாம்தான் முன்வரவேண்டும். நாம் தான் குரலெழுப்ப வேண்டும் என்கின்ற இறுதி முடிவுக்கு இன்றைக்கு நாம் வந்திருக்கின்றோம்.

(தொடரும்)

Pin It