இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் குறிப்பிடத்தக்க ஒன்று.
இப்பல்கலைக் கழகத்தில் ஆளுநர் பன்வாரிலாலால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் குமரப்பா. இவர் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் மீது தாக்குதல்களும், உணவு அடிப்படையில் சாதிய, மத வேறுபாடுகளும் அதிகமாயின.
இதே பல்கலைக் கழகத்தின் மாணவி கேரளாவின், கொல்லத்தைச் சேர்ந்த 19 வயது பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்டார்.
மதம் சார்ந்த துன்புறுத்தல்களுடன் அம்மாணவிக்கு ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சலும் அதற்குக் காரணமாக அமைந்தது.
மாணவி பாத்திமா லத்தீஃப்புக்கு இத்தகைய உளவியல் சார்ந்த, மத அடிப்படையிலான கொடுமையைச் செய்தவர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராம், ஹேமச்சந்திர காரா என்பவர்கள்தான் என்பதை பாத்திமாவின் கைப்பேசியிலிருந்து காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கொடுத்திருந்த போதும், இப்பொழுது அப்பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது.
இவைகளுக்குப் பின்னால் காவிகளின் கை மேலோங்கி இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, இப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஜெகதீஷ்குமார் என்பவர் நியமிக்கப்படுகிறார். இவர் புகழ் பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டு அதே வழியில் மாணவர்களும் உருவான இடம்.
இதைப் பொறுக்க முடியாத காவிகள், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
முற்போக்கு மாணவர் அமைப்பைப் பொறுக்க முடியாத ஏ.பி.வி.பி அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக முகமூடி அணிந்துகொண்டு வகுப்பிலும், நூலகங்களிலும் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடத்தி இருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், இத்தாக்குதலுக்குத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரும், காவல்துறையினரும் உடந்தையாக இருந்தனர் என்று குற்றம் சாட்டுகிறார்.
இவரைத்தான் இப்போது புதிய பொறுப்பில் நியமிக்கிறார் தமிழக ஆளுநர்.
தமிழகத்தின் கல்வித் துறையின் மீது நடத்தப்படும் இந்நியமனத் தாக்குதலை வன்மையாக மக்கள் கண்டிக்க வேண்டும்.