maniammaiyarதந்தை பெரியார் அவர்களின் உயிரை மட்டும் அல்ல கடைசி வரையில், பெரியார் இறந்த பிறகும் கொள்கையைக் காப்பாற்றிய உலகம் கண்டிராத பெண் ஆளுமை அன்னை மணியம்மையார். அம்மா பழகவும், பேசவும் தென்றல்தான். ஆனால், அய்யாவின் கொள்கை முடிக்கும் போராட்டம் என்றால் பெரும் எரிமலையாக வெடிக்கும் குணம் கொண்டவர்.

தந்தை பெரியார் அவர்கள் 21.2.1950 ல் “வடவர் சுரண்டல் எதிர்ப்பு மாநாடும்”, வடவரிடமிருந்து எப்படி நம் உரிமையைக் காத்துக் கொள்ளுதல் என்று “வகுப்புரிமை மீட்பு மாநாடும்” எதிர்கால நிலையை உணர்ந்து அப்போதே மக்களைப் பக்குவப்படுத்த மாநாடு நடத்தி இருக்கிறார் அந்தத் தொலைநோக்காளர்.

திராவிடர் கழகமோ அல்லது பெரியாருக்குப் பின் தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்களோ வடவர் ஆதிக்கத்தையும், பார்ப்பனர்களின் புளுகுப் பித்தலாட்டங்களையும் நன்குணர்ந்து தமிழ் மக்களின் கல்வியும், வேலைவாய்ப்பும்தான் நமக்கான ஒரே ஆயுதம், அதுவே தீர்வெனத் தன் பேச்சிலும் எழுத்திலும் மக்களின் கல்விதான் விடுதலையே என்றுரைத்தனர். அப்படியொரு கருத்தை அன்னை மணியம்மையார் அவர்கள் 22.7.1974 அன்று எழுதிய தலையங்கத்தில் குறிப்பிடுகிறார்.

1974 இல் கூடிய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் 80% வேலைவாய்ப்பு உள்ளூர்க்காரர்களுக்கே, அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் இருப்பவருக்கு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போதைய தி.மு.கழக அரசு ஆட்சியை சரிவர நடத்தி வந்தாலும் இந்த முடிவென்பது, பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கே 80% வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும் என்கிற நமது கிளர்ச்சிக்கு நல்லதொரு வெற்றியாகும்.

ஆனால், அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரிடம் பயின்றவர் அல்லவா? அம்மாவின் அன்றைய அறிக்கையில் “ 15 வருடங்களுக்குக் குறையாமல் குடியிருந்து வருகிறவர்கள் என்கிற சாக்கில் இன்றைக்குப் பல துறைகளில் ஏகபோகமாய் உயர்பதவிகளை அனுபவித்து வருகிற பார்ப்பனர்களும், மலையாளிகளும் மற்றும் பல சமூகத்தினர்களும் மேலும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு விடலாம். பெரிய அளவுக்கு அவர்களுக்கே இந்நல்வாய்ப்பு பெரிதும் பயன்பட்டுவிடும் என்பதே நமது பயம்”. ஆகவே இதற்கு பதிலாக அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் தமிழ்நாட்டில் குடியிருந்தவர்கள் என்பதற்குப் பதிலாக, இனி ஒரு 15 ஆண்டுகளுக்கு தமிழர் அல்லாதவர்களுக்கு 20% சர்க்கார் உத்தியோகமே வழங்கப்படும் என்பதாகத் தீர்மானம் செய்யப்பட்டிருக்குமேயானால், இடத்தின் அடிப்படையில் இல்லாமல், இனத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தால் நம் இனம் முன்னேறுவதற்காகத் தீர்மானம் இருந்திருந்தால் தி.மு.கழக ஆட்சிக்குக் ‘கிரீடம்’ வைத்ததுபோல் இருந்திருக்கும்” என தமிழகத்தின் குரலாய், பெரியாரின் சிந்தனை ஊற்றாய் தமிழ்நாட்டு மக்களின் தாகம் அறிந்து செயல்படும் ஓர் அன்னையாய், பிள்ளைகளின் தவிப்பை உணர்ந்து அடிமை விலங்கொடிக்க, வலி உணர்ந்து தமிழக உரிமைக்கான பாதை காட்டியவர் அன்னை மணியம்மையார்.

இந்திய தேசியம் என்கிற போர்வையில், மாநிலங்களின் தனித்தன்மைகள், பண்பாடு சீரழிவதற்கு முடிவு கட்ட தந்தை பெரியாருக்குப் பின்னால் கிடைத்திட்ட “இராவண லீலா “ கண்ட அன்னை மணியம்மையார்தான் இன்று தமிழ்நாட்டில் தமிழருக்கு 100% வேலை கேட்கும் அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் முன்னோடி.

Pin It