stalin 233வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டித் தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூட்டணியை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று அழைக்கின்றோம். எதிர்த்தரப்பினர் ஒரு வினாவை எழுப்புகின்றனர். முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறுபான்மையினரின் கட்சிகள் சிலவற்றை அருகில் வைத்துக்கொண்டு, "மதச்சார்பற்ற" என்று சொல்வது எப்படிச் சரியாகும்? நியாயம் போலத் தோன்றுகின்ற இவ்வினாவிற்கு விடையளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

நாம் நம் கூட்டணியை, மதச்சார்பற்ற கூட்டணி என்றுதான் அழைக்கிறோமே அல்லாமல், மத நம்பிக்கையற்ற கூட்டணி என்று அழைக்கவில்லை. மதச்சார்பு, மத நம்பிக்கை, மதவாதம் ஆகிய சொற்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டினை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது.

நம் நாட்டில் மத நம்பிக்கை உடையவர்களே மிகுதி என்பதை நாமே மறுப்பதில்லை. மறுக்க வேண்டியதுமில்லை. அவர்கள் எல்லாக் கட்சியிலும், எல்லாக் கூட்டணியிலும் உள்ளனர். அதனால்தான் மத நம்பிக்கையற்ற என்னும் தொடரை நாம் பயன்படுத்தவில்லை. மதச் சார்பு என்பது வேறு. நம் கூட்டணி ஆட்சிக்கு வருமானால், அமையும் அரசு, ஒரு மதத்திற்குச் சார்பாகவும், பிற மாதங்களுக்கு எதிராகவும் செயல்படாது என்பதே மதச்ச்சார்பற்ற என்னும் சொல்லுக்குப் பொருளாகும். இதனைத்தான் நம் அரசமைப்புச் சட்டமும், secular என்னும் சொல்லின் மூலம் குறிப்பிடுகின்றது.

அரசமைப்புச் சட்டமே ஏற்றுக்கொண்டுள்ள ஒன்றை, நாம் ஏன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்? இன்று இருக்கின்ற பாஜக அரசு, இந்துமதச் சார்பு உடையதாக இருக்கிறது. இந்துமத நம்பிக்கைகளை, இந்துமதத்தின் உணவுப் பழக்கங்களைப் பிற மதத்தினர் மீது திணிக்கிறது. இந்தப் போக்கு, ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது. ஆகவே அதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அதனை எதிர்க்கும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்கள் ஆட்சி எப்படியிருக்கும் என்ற வினா எழுவது இயல்பே. அந்த ஐயத்தைப் போக்கும் வகையில் கூட்டணியின் பெயர் அமைந்துள்ளது என்று கூறலாம். நம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எல்லா மதங்களும் சமமாக நடத்தப்படும், எவருடைய உரிமையும் மறக்கப்படாது என்பதை விளக்குவதற்காகவே 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி" என்று தெளிவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆதலால், திமுக கூட்டணி, மதச்சார்பற்ற கூட்டணியே ஆகும்!

Pin It