பார்ப்பனர்கள் வென்று விட்டனர்! பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்கள் தோற்று விட்டனர்!
ஆம்! ஜூன் 22.2026 தமிழ் இந்து நாளிதழில் இரண்டாம் பக்கத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அது எழுதப்பட்டுள்ளது.
அதில் கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு கட்டப்படாமல் இருந்த 17வணிக வளாகங்கள், 29 திருமண மண்டபங்கள் என மொத்தம் ரூ.245 கோடி மதிப்புள்ள 46 கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி அனைத்தும் இப்போதைய தவெக ஆட்சியில் ரத்து செய்யப் பட்டதை வரவேற்று அவர் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் ஆலய வருவாயில் அறநிலையத் துறையானது பள்ளிகளையும், கல்லூரிகளையும் கட்டிப் பணத்தைச் சீரழித்ததாகவும், இனி தவெக ஆட்சியில் இத்துன்பங்கள் தொடராது என்றும் டி.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.
மேலும் இந்து அறநிலையத்துறை பணம் புனிதமான காரியத்துக்கு மட்டும் தான் பயன்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதாவது கல்லூரி கட்டுவதும், வணிக வளாகம், திருமண மண்டபம் கட்டுவதும் புனிதமற்ற செயல் என்று கூறுகிறார்.
ஏற்கனவே இராமேஸ்வரம், மதுரை போன்ற ஊர் கோயில் பிரகாரங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் கடைகளை அகற்றச் சொல்லி அரசு நெருக்கடி கொடுத்த வேளையில் மாற்று ஏற்பாடாக வணிக வளாகங்களைக் கட்டி சிறு வியாபாரிகளுக்கு வழங்கினால் அவர்களும் அவர்களது நூற்றுக்கணக்கான குடும்பங்களும் பிழைத்துக் கொள்ளும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதே போல அறநிலையத் துறை சார்பில் திருமண மண்டபங்கள் கட்டப்படுமானால் தனியார் திருமண மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பதற்கு மாறாக ஏழை எளிய இந்துக்கள் கோவில் திருமண மண்டபங்களில் மகிழ்ச்சியுடன் தங்களது குடும்பத் திருமணங்களை நடத்திப் பயனடைவர்.
அறநிலையத் துறை சார்பில் கட்டப்படும் பள்ளி, கல்லூரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம் ஏழைகளுக்கு பயனளிக்கும் மிகவும் புனிதமான செயல் அது. இவ்வாறான பணிகளைச் செய்வதன் மூலம் ஏழை எளிய இந்துக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றலாம் என்கிற வகையில் தான் திமுக அரசு இந்நற்காரியங்களை மேற்கொண்டது. அதாவது ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது தான் திமுகவின் கொள்கை ஆகும்.
ஆனால் அது தவறு என்று இந்த மயிலாப்பூர் மாமா கூறுகிறார். அதாவது கோயில் வருமானத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இந்துக்கள் பலன் பெற்று விடக்கூடாது. அந்த வருமானம் முழுவதையும் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு கூறுகிறார். அவரது இந்த ஜாதிக் கண்ணோட்டத்தை மறைக்க "இந்து" என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். அப்படியென்றால் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் இந்துக்கள் இல்லையா என்ன?
அவரிடம் நாம் கேட்க வேண்டிய மற்றொரு முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. கோயில் வருமானம் என்கிறீர்களே அது எங்கிருந்து வருகிறது? இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பார்ப்பனரல்லாத (பிற்படுத்தப் பட்ட, பட்டியலின) மக்கள் அன்றாடம் உண்டியலில் இட்ட காணிக்கை, மொட்டை போடுவது, அர்ச்சனைச் சீட்டு வாங்குவது ..... போன்றவற்றால் கிடைத்த வருவாயல்லவா அது? அதாவது அவர்களது உழைப்பில் விளைந்த பணம் அல்லவா? அந்தப் பணத்தில் தானே பள்ளி கல்லூரிகள் கட்டப்படுகின்றன? அவர்கள் அளித்த காணிக்கையில் விளையும் பலனை அவர்களது குழந்தைகள் அனுபவிப்பதில் என்ன புனிதம் கெட்டுவிடுகிறது.
மேலும் இந்து அறநிலையத் துறை வருவாய் முழுவதையும் இப்பணிகளுக்குச் செலவிட வில்லையே! ஆலய பராமரிப்பு, குடமுழுக்கு, ஆலயக் கட்டுமானம், மராமத்து போன்றவற்றிற்கு எல்லாம் அதிக அளவு திமுக அரசு செலவு செய்துள்ளதே! கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு குடமுழுக்கும் நடைபெற்றுள்ளதே!
ஆக, மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் இன் நோக்கம் கோயில் நலன் சார்ந்ததோ, இந்துக்களது நலன் சார்ந்ததோ அல்ல!பார்ப்பனர்களது சுய நலன் சார்ந்தது, தங்களது கைகளில் ஆலயங்களை ஒப்படைத்துவிட்டு அரசு வெளியேற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.
அதன் முதற்படியாக, தங்களவா இப்போது அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதில் பார்ப்பனர்கள் குதூகலமடைகின்றனர் . அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் நிர்வாகத் திறனைப் பாராட்டி தமிழ் இந்துவில் எழுதுகின்றனர். திமுக அரசு கட்டத் திட்டமிட்ட வணிக வளாகம், திருமண மண்டபம் கட்டுமான அறிவிப்பு ரத்து செய்யப் பட்டதைப் பாராட்டவும் வரவேற்கவும் செய்கிறார்கள்.
ஆக தவெக ஆட்சி மயிலாப்பூரார்களின் பரிபூரண ஆசியுடன் தான் அமைந்து - தொடர்கிறது என்பதுடன் அது பார்ப்பனரல்லாத தமிழர்களின் நலன்களுக்கு எதிரானது என்பதும் உறுதியாகிறது!
பார்ப்பனரல்லாதார் இனியாவது விழித்துக் கொள்வார்களா?
- குமரன் தாஸ்