இந்தியாவின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 11.08.2022 அன்று பதவியேற்ற ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 67(a) இன் படி பதவி விலகினார். குடியரசு துணைத் தலைவர் இது போன்று தனது பதவி காலத்திற்கு இடையே பதவி விலகுவது இந்தியாவில் இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தங்களது குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து குறுகிய காலத்தில் விலகினர்.
மருத்துவக் காரணங்களுக்காக ஜெகதீப் தன்கர் தனது பதவியிலிருந்து விலகுவதாக இருந்தால் அம்முடிவை அவர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே எடுத்திருப்பார். மாறாக கூட்டத் தொடரின் முதல் நாளில் அவையையும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தையும் நடத்திய பிறகு பதவி விலகலை அறிவித்திருப்பதால் இம்முடிவு பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான 21.07.2025 அன்று மதியம் 01.00 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை ஜெகதீப் தன்கர் நடத்தினார். இதில் பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை பா.ஜ.க தலைவரான ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் பங்கேற்றனர். அதே நாள் மாலை 04.30 மணிக்கு அக்கூட்டம் மீண்டும் நடைபெற்ற போது மாநிலங்களவை பா.ஜ.க தலைவரான ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் பங்கேற்கவில்லை. அத்துடன் தாங்கள் கூட்டத்தில் பங்கேற்க இயலாதது பற்றி குடியரசு துணைத் தலைவரிடம் தெரிவிக்கவும் இல்லை. அவர்களுக்கு பதிலாக அக்கூட்டத்தில் பா.ஜ.க ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மட்டுமே கலந்து கொண்டார். அன்று இரவே குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியானது.
இதன் பின்னணியை ஆராய்ந்த போது, அண்மையில் தனது வீட்டில் பணமூட்டை சிக்கியதால் சர்ச்சைக்குள்ளான நீதிபதி யஷ்வந்த் சர்மா பதவி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானத்தை ஆளும் பா.ஜ.கவோடு ஆலோசிக்காமல் ஏற்றுக் கொண்டது தான் ஜெகதீப் தன்கரின் பதவி விலகலுக்கு காரணம் என்பது தெரிய வருகிறது
ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரக் கோரி மக்களவையில் குறைந்தது 100 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் குறைந்தது 50 உறுப்பினர்களும் கையெழுத்திட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவை மக்களவைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். அந்த வகையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 124, 217 மற்றும் 218 இன் கீழ் தாக்கல் செய்த மனுவை ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அரசில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பதால் அவர் சட்டப்படி இம்முடிவை எடுத்திருக்கலாம்
இதனால் அதிருப்தி அடைந்த ஆளும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஜெகதீப் தன்கருக்கு பல்வேறு வகையில் நெருக்கடி அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவர் பதவி விலகலை அறிவித்ததாகவும் டெல்லி வட்டாரங்களில் பேசப் படுகிறது.
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்றக் கூடாது" என்று கேசவானந்த பாரதி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், "குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்க கால வரையறை நிர்ணயிக்கப்படுகிறது" என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கடுமையாக விமர்சித்தவர் ஜெகதீப் தன்கர். பல்கலைக்கழக வேந்தர் பதவியை உச்சநீதிமன்றம் பறித்த பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசியவர் ஜெகதீப் தன்கர். மாநிலங்களவையில் ஒருதலைப் பட்சமாக இவர் நடந்து கொண்டதால் எதிர்க்கட்சிகள் இவர் மீது 2024 டிசம்பர் மாதம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இவ்வாறு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக நடந்து கொண்ட ஜெகதீப் தன்கர் இந்த ஒரு விவகாரத்துக்காக அவமானப்படுத்தப்பட்டு பதவியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
74 வயது நிறைவில் உள்ள இவரது பதவி விலகல் அறிவிப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏற்பாடு என்றும், இதை வைத்து எதிர் வரும் செப்டம்பர் மாதம் 75 வயதை நிறைவு செய்ய இருக்கும் பிரதமர் மோடி பதவி விலக அழுத்தம் கொடுக்கப்படும் என்ற தகவலும் ஆங்காங்கே பரவியுள்ளது.
எது எப்படியாயினும் ஜெகதீப் தன்கரோ, மோடியோ யாராக இருந்தாலும் தங்களது திட்டம் நிறைவேறியதும் அவர்களை தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ் தயங்காது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இனியாவது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களில் செயல்படுவோர் சிந்தித்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
- வழக்கறிஞர் இராம. வைரமுத்து