மக்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு வண்டியில் ஊர்வலம் போய்க் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடைய ஆட்சிக் காலத்தில், 'அண்ணா அடிக்காதிங்க.. அண்ணா' என்று கதறிய பெண்களின் பொள்ளாச்சிச் சம்பவம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை டி.வி. பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அன்றைய முதலமைச்சர் இன்று எந்த முகத்தோடு மக்களைச் சந்கிக்கிறேன் என்று போகிறார்?

போகின்ற இடமெல்லாம் பேசுவது பொய், தனிமனித விமர்சனம், திமுக அரசின் மக்கள்நலத் திட்டங்களுக்கு எதிராகப் பேசுவது. இதுதான் அவரின் அரசியல் நாகரிகமாக இருக்கிறது.

அதிமுக கூட்டணி கண்டு பயப்படுகிறாராம் ஸ்டாலின், சொல்கிறார் அவர். அதிமுக கூட்டணி என்றால் எடப்பாடியும், தமிழகத்தில் 'போணி' ஆகாத பாஜகவும்தான். இது ஒரு கூட்டணியாம். இரண்டும் தமிழர் விரோதக் கட்சிகள்.

இந்த நிலையில் அவரின் 'இருகட்சி'க் கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறாராம்.

இடதுசாரி சிந்தனையாளர்கள் கடைந்தெடுத்த வலது சாரிகளுடன் போக மாட்டார்கள் என்ற அடிப்படை அரசியல் கூடத் தெரியவில்லை, எடப்பாடிக்கு.

பாமக கூட்டணிக்கு வந்தால், அமித்ஷாவைப் போல ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்ற பயமும் இருக்கிறது அவரிடம்.

நீங்க கூட்டணிக்கு வாங்க, நீங்க வாங்க...என்று ஏலச்சீட்டு நடத்துபவர் போல கூவிக் கொண்டு இருக்கும் எடப்பாடியைப் போல, எப்போதாவது, யாரையாவது அழைத்திருக்கிறாரா திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்?

அதிமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும், கூட்டணி ஆட்சி கிடையாது என்று முழக்கிக் கொண்டு இருக்கும் பழனிச்சாமிக்குத் தெரியும், 2026 தேர்தலில் அவர் கட்சி படுதோல்வி அடையப் போகிறது என்று.

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரும் ஸ்டாலின்தான், என்பது மக்கள் எடுத்துள்ள முடிவு.

முதல்வர் சொல்கிறார் அது 'சுந்தரா டிராவல்ஸ்' வண்டி என்று. அதுகூட கொஞ்சம் ஒவர்தான், பழனிச்சாமிக்கு!