நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியைச் சந்திக்க அவரின் நாடாளுமன்ற வளாக அலுவலகத்திற்குச் சென்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க அனுமதி மறுத்து விட்டது ஒன்றிய அரசு.
மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், வேளாண் பயிர்களுக்குக் குறைந்தபட்ச விலையை உறுதி செய்யச் சட்டம் இயற்ற வேண்டும் என்று 2020-21 ஆண்டுகளில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் போராட்டத்தால், வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றது.
ஆனால் தற்போதுவரை அந்த கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை.
எனவே ஆகஸ்ட் 15 அன்று புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிப்பதோடு மீண்டும் டிராக்டர் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்த வேளாண் சங்கங்கள், இதுகுறித்துத் தனிநபர் மசோதா கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளனர் ராகுல் காந்தியிடம்.
இது ஒரு புறம் இருக்க ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் பாஜக தனது இரண்டு கூட்டாளிகளுக்குச் சாமரம் வீசியதன் விளைவாக எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியினர் நாடாளு மன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். பீகார், ஆந்திரா தவிர ஏனைய எதிர்கட்சி மாநிலங்களை நிதிநிலை அறிக்கை புறக்கணித்து உள்ளது.
நிதி ஒதுக்கித் திட்டங்கள் அறிவிக்கும் போது அந்த மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுவது இயல்பு. அந்த வகையில் ஏன் தமிழ்நாடு என்ற பெயர் வரவில்லை என்று கேட்பது நமது உரிமை.
ஆனால் பா.ம. க அன்புமணி "தமிழ்நாடு என்ற பெயர் வரவேண்டும் என்றால் 25 எம்.பி. களையாவது அனுப்பி இருக்க வேண்டும்" என்று அதிமேதாவியாக தமிழ் மக்களைக் கேலி பேசி இருக்கிறார்.
விவசாயிகளைத் தலைமேல் வைத்துப் பேசுவார், அன்புமணி. விவசாயிகளைத் திரும்பியும் பார்க்க மாட்டார், மோடி.
இந்த ஜாடிக்கேற்ற மூடிகளிடம் "குடி உயராமல் கோன் உயராது" என்று யார்தான் சொல்வார்களோ?
- கருஞ்சட்டைத் தமிழர்