2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்னும் என் முன்மொழிவு ஏற்கப்படாத நிலையில், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்னும் நிலையிலிருந்தும் நான் விலகி வெளியே வந்தேன்! அன்று மாலை வெளிவந்த நாளேடுகளில் அந்தச் செய்தி வெளியானதைப் பார்த்துவிட்டு, நக்கீரன் இதழின் ஆசிரியர் நண்பர் கோபால் என்னைத் தொடர்பு கொண்டார். அடுத்த நாள் காலையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்!
என் பொதுவாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது !
அந்த ஆண்டின் (2006) இறுதியில், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், கருத்தியலையும் ஏற்றுக்கொண்டு, ஒரு தமிழர் அமைப்பை ஏற்படுத்த நானும், நண்பர்கள் சிலரும் முடிவு செய்தோம் !
தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடன், "திராவிட இயக்கத் தமிழர் பேரவை" என்னும் புதிய அமைப்பு, 22.01 .2007 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில்,இனமான பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது !
பேரவையின் அவைத் தலைவராக மறைந்த அய்யா கயல் தினகரன் அவர்களும், பொதுச் செயலாளராக நானும், பொருளாளராகத் திரைப்பட இயக்குனர் செல்வபாரதி அவர்களும் பொறுப்பேற்றோம். திமுகவில் பணியாற்றி வந்த தோழர்கள் பொள்ளாச்சி உமாபதி, சாவல் பூண்டி சுந்தரேசன் உள்ளிட்ட பலரும் இரட்டை உறுப்பினர் அடிப்படையில் பேரவையில் இணைந்தனர் !
19 ஆண்டுகள் பறந்தோடி விட்டன! இயன்றதைச் செய்வோம், இடைவிடாமல் செய்வோம் என்னும் எண்ணத்தைத் தாங்கிப் பிடித்து, இருபதாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கின்றோம்.
பாலினச் சமத்துவம் உள்ளிட்ட அனைத்து சமத்துவக் கோட்பாடுகளையும், சமூக நீதி, தமிழ் இன மொழி உணர்வு, பகுத்தறிவு ஆகிய திராவிடக் கருத்தியலை மக்களிடம் பரப்புவதும், சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவையும், அதன் கூட்டணியையும் ஆதரித்துப் பரப்புரை செய்வதும் பேரவையின் தொடர் செயல்பாடுகள் என்று கூறலாம் !
திராவிடக் கருத்தியலைப் பரப்புவதற்குப் பல்வேறு வடிவங்களை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்! அவற்றைத் தொடர்ந்து பின்பற்றியும் வருகிறோம்!
2007 - கருஞ்சட்டைத் தமிழர் (மாத இதழ் - இப்போது வார மின்னிதழ்)
2011. திராவிடம் 100 (You Tube)
2018 - கருஞ்சட்டைப் பதிப்பகம்
2019 - இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்
2020 - திராவிடப் பள்ளி
2021 - கல்வி உதவித் திட்டம்
2022 - திராவிட நட்புக் கழகம்
2024 - திராவிட முழக்கம் (மாத இதழ்)
ஒவ்வொரு பிரிவையும், பேரவையின் சார்பில் ஒவ்வொரு குழுவினர், பாதுகாத்து - வளர்த்து வருகின்றனர்!
கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழை 2007 ஜூலை மாதம் இன்றைய முதலமைச்சர் தளபதி அவர்கள் வெளியிட்டுத் தொடக்கி வைத்தார்!
2011 இல் தொடங்கப்பட்ட திராவிடம் 100 வலையொளி ஓரிரு ஆயிரம் பார்வையாளர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று 2,13,000 பேர் பின்பற்றுகின்றனர் (subscribers). இன்று வரையில் 3300 காணொளிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் திராவிடம் 100 காணொளிகளைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும் மேல் (5,22,53,944) என்பது எங்களுக்கே வியப்பும் மகிழ்ச்சியும் தருகிற செய்தியாக உள்ளது!
2018 நவம்பரில், மேடை முழுவதும் பெண்கள் மட்டுமே அமர்ந்திருக்க, தொடங்கப்பட்ட கருஞ்சட்டைப் பதிப்பகம் இதுவரை 167 நூல்களைக் கொண்டு வந்திருக்கிறது! 2019 ஆம் ஆண்டு முதல், சென்னை புத்தகக் கண்காட்சியிலும், வேறு சில மாவட்டக் கண்காட்சிகளிலும் இடம்பெற்றிருக்கிறது!
இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம், கருஞ்சட்டைப் பதிப்பக நூல்களை மட்டுமின்றி, திராவிட கருத்துகளைக் கொண்ட பல்வேறு பதிப்பகங்களின் நூல்களையும் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் அறிமுகம் செய்துள்ளது.
திராவிடப் பள்ளி - நாங்கள் பெருமையோடு சொல்லிக் கொள்ளத்தக்க ஒரு நிறுவனம் ! இதனையும், இருள் சூழ்ந்த கொரோனா காலத்தில், கழகத்தின் தலைவர், மாண்புமிகு இன்றைய முதலமைச்சர் அவர்கள்தான் அன்று தொடக்கி வைத்தார். அது அய்யா பெரியாரின் பிறந்த நாளான 2020 செப்டம்பர் 17.
திராவிட இயக்க வரலாறு, திராவிடக் கருத்தியல் கோட்பாடு, திராவிட இயக்கம் இங்கு ஏற்படுத்தி உள்ள தாக்கம் என மூன்று பிரிவுகளின் கீழ், பாடங்கள் அஞ்சல் வழியில் நடத்தப்படுகின்றன! மாதம் இரு முறை இணையவழி வகுப்புகளும் நடக்கின்றன!
சென்ற ஆண்டு வரையில் படித்து முடித்த மாணவர்கள் - 2264 பேர் !
இவ்வாண்டு 710 பேர் !
ஆக மொத்தம் - 2974 பேர்! இவர்களுள் பெண்கள் - 893 பேர் / ஆண்கள் 2081 பேர் |
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று 20 வெளிநாடுகளில் இருந்து 76 பேர் படித்து முடித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு, ஒடுக்கப்பட்ட - குறிப்பாக - பட்டியலின மாணவர்களுக்குக் கல்வி உதவித் திட்டம் என ஒன்றை தொடங்கினோம். 9 மாணவர்களோடு தொடங்கிய அந்தத் திட்டத்தில் இன்று 91 மாணவர்கள் பயனடைகின்றனர்.
கடவுள், மத மறுப்பு என்பது பேரவையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பதால், அந்த நம்பிக்கைகள் கொண்ட, அதே வேளையில் சமூக நீதியிலும் ஊற்றம் மிகுந்த தோழர்கள் நம்மோடு சேர்ந்து பயணிக்க இயலாமல் போயிற்று! அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 2022 ஆம் ஆண்டு, கன்னியாகுமரியில் திராவிட நட்புக் கழகம் என்னும் ஓர் இணை அமைப்பை உருவாக்கினோம்! அந்த அமைப்பும், இன்று பரவலாகப் பலரையும் சென்றடைந்திருக்கிறது!
கருஞ்சட்டைத் தமிழர் இதழை மின்னிதழாக மாற்றி விட்ட பிறகு, அச்சு வடிவில் ஒரு மாத இதழ் வேண்டும் என்று பேரவையின் பொதுக்குழு கருதியது ! அதனை ஏற்று, 2024 ஜனவரி முதல் தேதி அன்று திராவிட முழக்கம் என்னும் மாத இதழைத் தொடங்கினோம். இன்று வரை 25 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஒரு மாதம் கூட ஒரு நாள் கூட காலத்தாழ்வின்றி, திராவிட முழக்கம் வந்து கொண்டிருக்கிறது!
இவைகளையெல்லாம், எங்களின் சாதனைப் பட்டியலாக இங்கு நான் வெளியிடவில்லை. திராவிட இயக்கத்தின் நீண்ட நெடிய சமூகப் பயணத்தில், நாங்களும் சிறு பங்காற்றி இருக்கிறோம் என்பதைப் பதிவு செய்வதே நோக்கம் !
இன்னும், இன்னும் இயன்றதைச் செய்வோம் ! இடைவிடாமல் செய்வோம் ! நீங்களும் வாருங்கள், சேர்ந்து பயணிப்போம்!
- சுப.வீரபாண்டியன்