திராவிட இயக்கத்திற்கு எதிரான அரசியல் அனைத்தும் ஜாதி ஒழிப்பிற்கு எதிரான அரசியல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் நாம் தமிழர் கட்சியின் அரசியலாகும். ஆரியர்-திராவிடர், பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதர் என்பதற்கு மாற்றாக தமிழர் - தமிழர் அல்லாதார் என்னும் கருத்தைத் திராவிட இயக்கத்திற்கு எதிராக உருவாக்க, பொய்களாலும் உணர்வுத் தூண்டுதளாலும் ஒரு அரசியலை சீமான் முன்னெடுத்து வருகிறார். ஜாதிய ரீதியாக, பட்டியல் சமூக மக்களுள் மிகவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தை இழிவாகப் பேசியதோடு, இன்னொரு ஜாதியை உயர்வாகப் பேசியிருக்கிறார் சீமான்.

வாயில் வருவதெல்லாம் வரலாறு, கத்துவதெல்லாம் கருத்தியல் என தமிழர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார். பார்ப்பனர்கள் முன்னெடுக்கும் அரசியலும், சீமான் முன்னெடுக்கும் அரசியலும் வெவ்வேறானவையன்று. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக, மக்களைப் பார்ப்பனரல்லாதாராக - திராவிடர்களாக-தமிழர்களாக ஒன்றிணைக்க நூறாண்டு காலமாகத் திராவிட இயக்கம் இம்மண்ணில் போராடி வருகிறது. தமிழர் என்கின்ற உணர்வைத் திராவிட இயக்கம் இம்மண்ணில் தட்டி எழுப்பியது. அந்த உணர்வின் மீது நின்று கொண்டு “தமிழர்” என்கின்ற சொல்லுக்குக் கலங்கம் விளைவிக்கும் வண்ணம் ஜாதி ரீதியாக தமிழர்களைப் பிரித்துத் தன்னுடைய சுயநலத்திற்காக பல இளைஞர்களின் வாழ்வையும் பாழாக்கி அரசியல் செய்து வருகிறார் சீமான்.

நாம் இழிவகாகக் கருதும் ஜாதியைக் “குடி” என்று சொல்வதும், ஒரு ஜாதியை உயர்த்திப் பேசுவதும், இன்னொரு ஜாதியைத் தாழ்த்திப் பேசுவதும் தமிழர் ஒற்றுமையைப் பலவீனப்படுத்துவதும் சீமானின் தொடர் செயல்பாடாக இருந்துவருகிறது. இந்த நிலையில் அவருக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற அவர் கட்சியினருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களைக் களத்தில் இருந்து அருந்ததியர் சமூகத்தினர் விரட்டி விட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிரான கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன.

உழைக்கும் அடித்தட்டு மக்களை இழிவு செய்திருக்கிறார் சீமான். தமிழர்கள் ஒன்றிணைந்து அவருக்குக் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

Pin It