ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இது முன்னேற்றத்திற்கான (Development) ஒரு நிதி நிலை அறிக்கையா என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டி இருக்கிறது.

nirmala seetharaman 309முன்னேற்றம் (development), வளர்ச்சி(growth) இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. முன்னேறிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் (economic growth) மட்டும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் சமூக, பண்பாடு போன்ற நிலைகளில் கவனம் செலுத்துவதில்லை. சேமிப்பு மற்றும் முதலீடு என்பதை மட்டுமே அவர்கள் கணக்கில் கொள்வார்கள். நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. வரவை விட செலவு அதிகமாக இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

நம்முடைய பொருளாதாரம் என்பது ஏழைப் பொருளாதாரம். ஆகவே இங்கே முன்னேற்றம் என்பதுதான் முக்கியம். இந்தியாவில் வறுமை, வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், குறைந்த பொருளாதார வளர்ச்சி ஆகியனதான் இருக்கின்றன. இதனை சரிசெய்ய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி மற்றும் டப்ளோ எழுதிய ஒரு கட்டுரையில் 1990க்குப் பிறகு 1 விழுக்காடு மக்கள், 38 விழுக்காடு வருமானத்தை எடுத்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த ஒரு விழுக்காட்டினருக்குத்தான் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அடிமட்டத்தில் இருக்கும் 50 விழுக்காடு ஏழை மக்களுக்கு 2.5 விழுக்காடுதான் வருமானம் போயிருக்கிறது. உலகத்திலேயே ஏழை-பணக்காரர்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது இந்தியாவில்தான். அதாவது ‘Country of Inequalities’.

இந்த இடைவெளியைக் குறைக்கவில்லை என்று சொன்னால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது.

கவுசிக் பாசு எனும் பொருளாதார அறிஞர் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையில், கொரோனா தொற்றுக் காலத்தில் மேல்தட்டு மக்களின் வருமானம் அதிகமாகி இருப்பதாகவும், அடிமட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் வருமானத்தை இழந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதாவது மேல்தட்டில் இருக்கக்கூடியவர்களின் வருமானம் 23 லட்சம் கோடியில் இருந்து 53 லட்சம் கோடியாகப் பெருகியிருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மானியங்களையும் குறைத்திருக்கிறார்கள். உணவுக்குக் கொடுக்கக்கூடிய மானியத்தையும், மக்களை வறுமையின் பிடியில் இருந்து காக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கும் மானியத்தைக் குறைத்திருக்கிறார்கள். இதனால் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்குப் பணம் போய்ச் சேரப் போவதில்லை. எனவே இந்த நிதி நிலை அறிக்கை என்பது ஏழை எளிய மக்களை நோக்கி உருவாக்கப்படவில்லை.

பதிவுத் துறையை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அதேபோல் டிஜிட்டல் கரன்சி என்பதும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கக்கூடிய ஒன்றாக அமையும். ஜிஎஸ்டி எனப்படும் இந்த மறைமுக வரி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதாகும். அவர்கள் கையில் பணம் இல்லாமல் செய்துவிடும்.

ஒரு ரூபாய், ஒரு சாதாரணக் குடிமகனுக்குப் போக வேண்டும் என்று அரசாங்கம் செலவு செய்தால் 14 பைசா மட்டும்தான் செல்கிறது, மீதமுள்ள 86 பைசா அந்த மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. இந்தச் சீர்கேட்டைக் களைய எந்த நடவடிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை அல்ல. வறுமை, ஏழ்மை அதிகரிக்கும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கும். வரி அதிகமாகப் போடப்படவில்லை என்றாலும்கூட இருக்கிற வருவாய் குறையும். பொருளாதார மந்தம் ஏற்படும். விலைவாசி கூடும். எனவே இந்த நிதிநிலை அறிக்கை மக்களுடைய வறுமை ஏழ்மைக்குத் தீர்வு காணவில்லை.

பேராசிரியர் முனைவர் வெ.சிவப்பிரகாசம்

Pin It