தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதைக் காரணம் காட்டி, “தம்பதியர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியிருப்பது, தமிழ்நாட்டின் சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை மரபை கேலிக்கூத்தாக்கும் பிற்போக்குத்தனமான அணுகுமுறை!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வாயிலிருந்து வெளிவரும் இத்தகைய கருத்து, பெண்களின் உடல், சுய உரிமை, குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றை மீதான உலகளாவிய பெண்ணிய சிந்தனைக்கு முற்றிலும் முரணானது. அதைவிட வேதனைக்குரியது, இது இந்துமகா சபை–ஆர்.எஸ்.எஸ். போன்ற பிற்போக்கு இயக்கங்களின் “அதிக குழந்தைகள் வேண்டும்” என்ற குரலை அப்படியே எதிரொலிப்பது போல அமைந்திருப்பதுதான்.
அமைச்சர் அருண் ராஜுக்கு ஒரு எளிய கேள்வி:
கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் குழந்தைப் பிறப்பு குறித்து என்ன சொன்னார் என்பது தெரியுமா?
1930-களிலேயே பெரியார், பெற்றோர் தங்களுடைய சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ற அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைப் பிறப்பை அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்துவது வெறும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான திட்டமல்ல; பெண்களின் உடல்நலம், கல்வி, சுயமரியாதை, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக விடுதலை ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதே பெரியாரின் சிந்தனை.
பெண்ணை வெறும் “பிள்ளை பெறும் இயந்திரமாக” பார்க்கும் சமூக அமைப்பை பெரியார் கடுமையாக எதிர்த்தார். பெண்கள் தங்கள் உடல் குறித்து தாங்களே முடிவெடுக்க வேண்டும்; குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும், அளவோடு பெற்றுக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமையும் அறிவும் இருக்க வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையை அவர் முன்வைத்தார்.
இன்று உலகம் பெண்களின் இனப்பெருக்க உரிமை, குடும்பத் திட்டமிடல், பாலின சமத்துவம், தாய்மார்களின் உடல்நலம் ஆகியவற்றை மையமாக வைத்துக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ “அதிக குழந்தைகள் பெற வேண்டும்” என்ற பிற்போக்குத்தனமாகப் பேசுவது மிகுந்த முரண்பாடு மட்டுமல்ல, அறமற்ற செயலாகும்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறித்து கவலைப்படுவதற்கு முன், தமிழ்நாட்டுப் பெண்களின் நல்வாழ்வு குறித்து சிந்தியுங்கள்!
பிறப்பு விகிதத்தை உயர்த்துவது அரசின் இலக்காக இருக்கக் கூடாது.
பெண்கள் விரும்பியபடி வாழும் உரிமை, ஆரோக்கியமான தாய்மை, குழந்தைகளுக்குத் தரமான கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவையே மக்கள் நல்வாழ்வின் உண்மையான அளவுகோல்கள்.
பெரியார் வாழ்ந்த காலத்திலேயே குடும்பக் கட்டுப்பாடு, பெண்களின் உரிமை, கர்ப்பத் தடுப்பு ஆகியவற்றைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். அந்தக் காலத்திற்கே முன்னோக்கிய சிந்தனையைக் கொண்டிருந்த பெரியாரின் மண்ணில் இன்று “இன்னும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறுவது அபத்தமாகும்.
அமைச்சர் அருண் ராஜ் பெரியாரின் பெயரை மட்டும் அறிந்திருந்தால் போதாது; பெரியாரின் கொள்கையையும் படிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியலைப் புரிந்து கொள்ளாமல், பிற்போக்குச் சக்திகளின் மக்கள் தொகை அரசியலை எதிரொலிப்பதை நிறுத்த வேண்டும்.
பெண்ணின் உடல் — அவளுடைய உரிமை.
குழந்தைப் பேறு — அவளுடைய தேர்வு.
குடும்பத் திட்டமிடல் — குடும்பத்தின் உரிமை.
மக்கள் நல்வாழ்வு — அரசின் பொறுப்பு.
இதைக் கூட புரிந்துகொள்ளாத மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களே!
பெரியாரைப் படியுங்கள்;
பெரியாரின் பெயரைச் சொல்லி பெரியாருக்கு எதிரான கருத்துகளைப் பேசாதீர்கள்!
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிந்தனையிலும் தொலைநோக்குப் பார்வையிலும் திட்டமிடலிலும் கட்டமைப்பிலும் வலுவாக நிற்கும் தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமகா சபையின் பிற்போக்கு அரசியலை எதிரொலிக்கும் வகையிலான கருத்துகளுக்கு இடமில்லை.
பெரியாரின் பெயரை உச்சரிப்பது மட்டும் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுவதாக ஆகாது.
பெரியார் பெண்களுக்கு அளித்த சுயமரியாதையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் எதிர்த்த பிற்போக்குத்தனத்தை அடையாளம் காண வேண்டும்.
இல்லையெனில், வரலாறு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
- முனைவர் காந்தி பாபு