கடந்துவிட்டோம் ஓராண்டைக் கலைஞர் இன்றி
கனிவான துணிவான தலைவா உன்றன்
தடம்பற்றித் தான்நடந்தோம் அதனால் தானே
தமிழ்நாட்டின் திசையெங்கும் வெற்றி கண்டோம்
விடமாட்டோம் ஒருநாளும் திராவி டத்தை
வேர்காக்கும் விழுதாகி நிற்போம் வெல்வோம்!
தொடமாட்டோம் மதவெறியை சாதி நஞ்சை
தொழமாட்டோம் எதிரிகளை மண்டி யிட்டே!
நெருப்பாறு நமைநோக்கி வருகு தென்ற
நிலையைநாம் மறுக்கவில்லை இருந்த போதும்
நெருக்கடியைப் பலமுறைநாம் சந்தித் துள்ளோம்
நேர்நின்றே புயல்மழையைப் புறங்கண் டுள்ளோம்
வருவதெலாம் வரட்டும்நம் தோள்கள் தாங்கும்
வருங்காலம் தனிலும்நம் புகழே ஓங்கும்
பெருமைமிகு உன்பெயரே ஆயு தம்தான்
பிழைபட்டோர் கத்திவெறும் காகி தம்தான்
அலைகடலின் ஓரத்தில் ஓய்வு கொண்ட
அண்ணாவின் தம்பிநீ எங்கள் அண்ணன்
கலையுண்டு இலக்கியங்கள் பலவும் உண்டு
கனிவான உரைநடையும் பேச்சும் உண்டு
நிலையில்லா உலகத்தில் நிலையாய் வாழ
நீதந்த சிந்தனைகள் நெஞ்சில் உண்டு
விலையில்லாத் தமிழ்ச்சொத்தே வெற்றிக் கோவே
விண்முட்டும் புகழோடு என்றும் வாழ்வாய்!
- சுப.வீரபாண்டியன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்ணாவின் தம்பி நீ, எங்கள் அண்ணன்!
- விவரங்கள்
- சுப.வீரபாண்டியன்
- பிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2019