நடிகர் விஜய், தான் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு, “தமிழக வெற்றிக் கழகம்” என்று பெயரிட்டு, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்னும் நிலையில், பொது வாழ்வில் அக்கறை கொண்டு அரசியலுக்கு வருவதாகச் சொல்லும் விஜய் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வாக்கை முன்னிறுத்தி இருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது!

அவர் விடுத்துள்ள அறிக்கையை ஊன்றிப் படித்த போது, சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. “இன்றைய அரசியலில், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை, சாதி, மத பேதங்கள் வாயிலாகப் பிளவுபடுத்தத் துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம்" என்கிறது அந்த அறிக்கை! இவற்றையெல்லாம் சரி செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் கூறுகிறார். படிப்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது!

vijay 266இப்படித்தான் 2019 ஆம் ஆண்டு, திரைப்படத் துறையில் இருக்கும் ஒரு பெரிய ஆளுமையிடமிருந்து அறிக்கை வந்தது. சிஸ்டமே கெட்டுக் கிடக்கிறது என்றும், அதைச் சரி செய்வதற்காகவே அரசியலுக்கு வருவதாகவும் அன்றைய அறிக்கை கூறியது. பிறகு 2020 ஆம் ஆண்டு இறுதியில், தான் அரசியலுக்குள் வரப் போவதில்லை என்று அவர் தெரிவித்து விட்டார்.

யார் ஒருவரும் அரசியலுக்கு வரக்கூடாது என்றோ, வந்தே தீர வேண்டும் என்றோ நாம் கூற முடியாது. அது அவரவர் விருப்பம், உரிமை! ஆனாலும் நடிகர் விஜய் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கையை முன் வைக்க வேண்டி இருக்கிறது.

விஜய் அவர்களே, உங்கள் அறிக்கையைப் பார்த்தவுடன் பூங்கொத்தோடு பலர் புறப்பட்டு வந்து விடுவார்கள். ஒருவர் சொல்வார் - காந்தியாருக்குப் பிறகு நீங்கள் அழைத்தவுடன்தான் யோக்கியர்கள் எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நான் உங்கள் கட்சிக்கு வந்து விட்டேன் என்பார். பிறகு சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும், அல்லது அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலோ, உடனே ஊழலை ஒழிக்க மறுபடியும் வெளியில் போய்விடுவார்!

இரண்டு திராவிடக் கட்சிகளையும் வேரறுப்பதே என் வாழ்நாள் இலக்கு என்னும் “மிக உயர்ந்த நோக்கத்தோடு “ இன்னொருவர் உங்களை ஆதரிப்பார். நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் வரையில் நான் ஓய மாட்டேன் என்று சூளுரை விடுப்பார். பிறகு நீங்கள் கட்சி தொடங்குவது பற்றி மறு சிந்தனைக்கு ஆளானால், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று எண்ணி வந்தேன், என் கணக்கு தவறாகிவிட்டது என்று சொல்லி, உங்களையும் முள் என்று மறைமுகமாகத் தெரிவித்து விடுவார். அவருடைய அறம் சார்ந்த அரசியல் அப்படிப்பட்டது.

இவர்களைப் போன்ற பெரிய மனிதர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு, உங்கள் அரசியல் பயணம் பற்றிய ஒரு வினாவிற்கும் விடை சொல்ல வேண்டும்!

நாட்டைத் திருத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு அரசியலுக்கு வந்திருப்பதாகச் சொல்லும் நீங்கள் , திரைப்பட வேலைகளை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறுகிறீர்கள். திரைப்படப் பணிதான் முதல் பணி, நாட்டைச் சீர்திருத்துவது பிறகுதான் என்று நீங்கள் கருதி இருக்கக்கூடும்! அதுவரையில் நாடும் உங்களுக்காகக் காத்திருக்க வேண்டும்! இன்னொரு வேண்டுகோளும் இருக்கிறது. நாட்டைத் திருத்துவதற்கு முன்பு, திரைப்படத் துறையிலும் சில சீர்திருத்தங்களைச் செய்து விட்டு வாருங்கள். கருப்புப் பணம் என்பது இனி எங்கும் இருக்கக் கூடாது, உங்கள் படம் உள்பட எந்தப் படத்திற்கான நுழைவுச் சீட்டும் ஒன்றுக்கு பத்தாக விற்பனை செய்யப்படக்கூடாது என்பதையும் உறுதியாகத் தெரிவித்து விடுங்கள்! உங்களின் சீர்திருத்தம் உங்கள் துறையிலிருந்தே முதலில் தொடங்கட்டும்.

இவற்றில் எல்லாம் விஜய் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், அவர் தொடங்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம், வெறுமனே தமிழக விளையாட்டுக் கழகமாக முடிந்து விடும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It