தீபாவளியன்று வெளிவந்துள்ள நல்ல தமிழ்த் திரைப்படம் மைனா. தீபாவளி நாள்களையே மையமாக வைத்து நகரும் கதை. தீபாவளிப் பட்டாசு நெடியைத் திரையரங்கிலும், வெளியேயும் நுகர வைத்தது சிறப்பானது. திட்டமிட்ட படப்பிடிப்பு - தயாரிப்பின் வெற்றி இது.

இதில் யார் கதாநாயகன் என்று புரியாமல் குழம்பி விட்டோம். இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமங்களா? அவற்றை அப்படியே உள்வாங்கித் தொகுத்தளித்த சீரிய படப்பிடிப்பா? தலைதீபாவளிக்கு பிறந்தகம் போகத்துடிக்கும் ஆணவம் - அகங்காரம் - ஆதிக்கம், பிடிவாதம் நிறைந்த மனைவிக்கு கணவராகவும், தப்பி ஓடிய சிறைவாசியைத் தேடி மலைப்பள்ளத் தாக்குகளில் தத்தளிக்கும் கிளைச்சிறை அலுவலர் பாஸ்கரா? நெடிய நீண்ட தலைமுடி - அழுக்கடைந்த கைலி, சட்டையுடன் முரட்டுத்தனத்தையும், முழுமையாகக் காதலையும் ஒருங்கே காட்டும் சுருளியா? இவர்களில் யாரைக் கதாநாயகன் என்பது.

சென்னை மாநகரில் படம் பார்த்தாலும், மூன்று மணிநேரம் நம்மை தேனி, மூணாறு மலைப்பகுதிகளில் உலவவைத்த, இல்லை யில்லை, வாழவைத்த இயக்குநர் பிரபு சாலமோன் பாராட்டுக்குரியவர். முன்னர் பெற்ற மோசமான அனுபவங்களால் சோர்ந்துவிடாமலும், சுணங்கி விடாமலும் வீறு கொண்டு எழுந்து வீரியம் மிக்கத் திரைக்காவியத்தைத் தந்துள்ளார். கைதேர்ந்த சிற்பி, நுணுக்கமான திறன்காட்டித் தன் படைப்பினை உருவாக்குவது போல் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இதில் சிறப்பு, தம்பி இராமையா, செவ்வாழை இருவர்தான், முகமறிந்த நடிகர்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள். ஆயினும் அவர்களை நடிகர்களாகப் பார்க்க முடியவில்லை. நம்மோடு வாழும், நம் பக்கத்துவீட்டுக்காரர்கள் போலவே தோன்றுகிறார்கள்.

மனித உணர்வுகள் நேரத்துக்குத் தக்கபடி மாறும் என்பதைப் பல்வேறு காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போக வேண்டியவனை, மலை மலையாய் அலையவிட்டவனைப் பார்த்து, உன்னைக் கஞ்சா கேஸ் போட்டுச் சீரழிப்பேன், உன் காதலியை பெரியகுளம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்க வைத்துச் சீரழிப்பேன் என்று கோரமுகம் காட்டும் ஜெயிலர் பாஸ்கர், மரணத்தின் வாசலில் தன்னைக் காப்பாற்றிய அவனிடம் கைகூப்பி நன்றி தெரிவிப்பதும், பின்னர் நட்புமுகம் காட்டுவதும் அருமை.

தேவை உள்ளவரை மருமகனே, மருமகனே என்று அழைத்து சுருளியைப் பயன்படுத்திவிட்டு, நேரம் வந்ததும் அவனைத் தூக்கி எறியத் துணிவதும், சிறையிலிருந்து தப்பி வந்த முரடன் சுருளியைத் துணிவுடன் எதிர்த்து நின்றுவிட்டு, மகளைத் திருமணம் செய்ய வந்த துபாய் மாப்பிள்ளை குடும்பத்தார் திரும்பிச் செல்லும்போது அவர்கள் கால்களைப் பிடித்துக் கதறுவதும் நல்ல காட்சிகள்.

ஆதரவற்று நடுத்தெருவில் நின்ற விதவைத் தாயையும், அவர் மகளையும் அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்து, வளர்த்து, உழைப்பையயல்லாம் அவர்கள் நலனுக்கே தாரைவார்த்துவிட்டு, கடைசி யில் மைனாவை வேறு ஒருவனுக்கு மண முடிப்பேன் என்று அவர் தாய் கூறியதும், கொதித்து எழுந்து தாக்குவதும், தான் சிறைப்பிடிக்கப்பட்டவன் என்ற எண்ணமே இல்லாமல் மைனாவுடன் காதல் மொழி பேசுவதும் சிறப்பு.

பயம் - பாசம் - படிப்பு என்று மட்டுமே இருந்த மைனா, தன்னை அடுத்தவனுக்குத் திருமணம் கட்டிக்கொடுக்க முயலும்போது சீறிச்சினந்து எதிர்த்து நிற்பது இயல்பு - சிறப்பு.

சைக்கிளும், டைனமோ வெளிச்சமும் நாம் மறந்து போனதை நினைவூட்டியுள்ளன. ஒரே பாடலில் நம்முடைய கிராம விளையாட்டுக்களான கல்விளையாட்டு, கில்லி, கிட்டிப்புல், டயர் வண்டிப் பந்தயம் என்று அனைத்தையும் படமாக்கியுள்ளது அரிய, போற்றத்தக்க பதிவு.

இமானின் இசை படத்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளது. அடுத்தடுத்துப் பாடல்கள் வந்தாலும் அவை அலுப்புத்தட்டாமல் இருப்பது பாராட்டுக்குரியது. உச்சகட்டக் காட்சிகள், சிறிதும் எதிர்பாராதவை, சிறப்பானவை.

 நல்ல திரைப்படத்தினை வழங்கிய இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர்கள், படப்பிடிப்புக் குழுவினர், தயாரிப்பாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Pin It