ஒற்றுமை, அமைதியை மேம்படுத்துவதற்குப் பாடுபட்டவர் என்னும் முறையில் 1995ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு விருதினைப் பெற்ற எகிப்து நாட்டு அதிபர் ஓஸ்னி முபாரக் (Hosni Mubarak), இன்று அமைதியை இழந்து தவிக்கிறார். இராணுவத்தின் தரைப்படை, வான்படை ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர். 1972இல் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பொறுப் பேற்றார். முன்னாள் அதிபர் சதத் 1975இல் அவரைத் துணை அதிபராக நியமித்தார்.
சதத் எகிப்து ‡ இஸ்ரேல் அமைதி உடன்படிக்கையில் கையயழுத்திட்டார். இதனை அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. அரபு நாடுகள் கூட்டமைப்பில் (Arab League) இருந்து எகிப்து வெளியேற்றப் பட்டது. அதன்பிறகும், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப் பாட்டைத் தொடர்ந்ததால், 1981 ஆம் ஆண்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது அதிபர் சதத் கொல்லப் பட்டார். துணை அதிபர் முபாரக் அதிபரானார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து ‡ இஸ்ரேல் அமைதி உடன்படிக்கையில் இருந்து முபாரக் விலகிக் கொண்டதால், 1989இல் எகிப்து மீண்டும் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1991 இல் நடந்த வளைகுடாப் போரில் எகிப்தும் பங்கேற்றது.
கடந்த 29 ஆண்டுகளில் 6 முறை முபாரக்கைக் கொல்ல முயற்சிகள் நடந்ததாகவும், அவற்றிலிருந்து அவர் தப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அவருடைய சர்வாதிகார முகம் வெளிப்படத் தொடங்கியது. எதிர்ப்புகளை ஒடுக்க முற்பட்டார். தன்னை எதிர்த்தவர்களைச் சிறையில் அடைத்தார். அப்படித்தான் எதிர்க்கட்சித் தலைவர் நூர் (Nour) 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு ஆளானார். முபாரக்கின் இந்தச் செயலை அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கண்டித்தன.
30 ஆண்டுகளாகத் தொடர்கின்ற அவருடைய ஆட்சியில், வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு போன்றவை உச்சத்திற்குப் போய் விட்டன. அதிருப்தி அடைந்த மக்கள் கடந்த ஒரு வார காலமாக முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அமெரிக்காவில் எகிப்து மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. முபாரக் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற முகமது எல் பரதேயும், முஸ்லிம் மதத் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனநாயகத்திற்கான இந்தப் போராட்டத்தில் இராணுவ வீரர்களும், நீதிபதிகளும் கூட இணைந்துள்ளனர். மக்கள் புரட்சி, மக்கள் ஏற்று நடத்துகின்ற போராட்டங்கள் வெற்றியைத் தரும் என்பதை வரலாறுகள் காட்டுகின்றன.எகிப்து மக்களின் போராட்டமும் வரலாறு படைக்கும் என்று நம்புகிறோம்.
ஒரு வேளை இந்த இதழ் வெளியாகும் தருணத்திலும்கூட எகிப்தின் அதிபராக முபாரக்கே தொடர்வார் என்று சொல்வதற்கில்லை.
.............................