அண்மைக் காலமாக ஊடகங்களில் அதி முக்கியத்துவம் பெற்ற செய்திகளுள் ஒன்று கொலை தொடர்பானது.

அதன் பெயர் “கவுரவக் கொலை ”

வன்முறையின் மூலம் ஒரு மனிதனின் உயிரை அழிப்பதற்குப் பெயர் - கொலை! இது அநாகரீகமான செயல். இக்கொலைச் செயலுக் குக் கூட கவுரம் இருக்கிறது என்பதைக் கவுரவக்கொலை என்று பிறர் சொல்லக்கேட்டு த்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

கொலைகளுக்குக் கூட மதிப்பளிக்கும் ஆற்றல் சாதிக்கு மட்டுமே இருக்கிறது என்பதற்குச் சான்று இந்தக் கவுரவக் கொலைகள்.

சாதிக்கும் கவுரவக் கொலைக்கும் என்ன தொடர்பு? - காதல்தான்!

honor_killing_400காதலுக்குச் சாதி தெரியாது; காதலுக்கு மதம் தெரியாது; காதலுக்கு சொத்துசுகம் தெரியாது; காதலுக்கு ஏற்றத்தாழ்வு தெரியாது; காதலுக்குத் தெரிவதெல்லாம் அன்பு, தோழமை, சமத்துவம்.

ஆனால் சாதிக்குள் இருப்பதெல்லாம் தீண்டாமை, அண்டாமை, ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், பெண்ணடிமை, சமத்துவமற்ற சமுதாய அமைப்பு.

இந்தக் கொடிய சாதிய அமைப்பு முறையைக் காதல் உடைக்கும் பொழுது, காதலர்கள் கொல்லப்படுகிறார்கள் - அதற்குப் பெயர்தான், கவுரவக் கொலை யாம்! சாதிக்கான கொலையைக் கவுரவப்படுத்தும் அநாகரீகத்தை இங்கே காணமுடிகிறது.

தேசிய மகளிர் ஆணையம் கூறும் புள்ளி விபரப்படி 75 விழுக்காடு (கவுரவக்) கொலைகள் சாதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 1000 பேர்கள் இப்படிக் கொல்லப்படுகிறார்கள். இந்த 1000 பேர்களில் “கருவாய் ” இருந்த உயிர்கள் கணக்கிடப்பட வில்லை என்கிறது மகளிர் ஆணையம். தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 20 விழுக்காடு இக் கொலைகள் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளன.

 சக்தி வாகினி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில், இது குறித்து மத்திய அரசும் 8 மாநில அரசுகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடந்த ஜுன் 12 ஆம் நாள் ஆணை பிறப்பித்தது.

நடுவண் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, “கவுரவக் கொலைகளைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும். அதற்கான சட்டமுன்வடிவு தயார்” என்று கூறியிருக்கிறார்.

வரவேற்கப்படவேண்டிய செய்தி. ஆனால் சட்டத்தால் மட்டும் இந்தக் காட்டுத்தனமான கொலைகளைத் தடுத்து விட முடியுமா?

சான்றாக அரியானா மாநிலத்தில் மனோஜ் பன்வாலி - பாப்லி காதல் தம்பதியரை 2007 ஜுன் மாதம் (கவுரவக்) கொலை செய்தனர். 29 மார்ச் மாதம் கொலைகாரர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்தது.

உடனே, அரியாணா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த “காட் ” என்றக் கட்டப்பஞ்சாயத்துத் தலைவர்கள், அரியானாவில் குருசேத்தராவில் ஏப்பரல் 1 ஆம் தேதி “மகா பஞ்சாயத்து ” என்ற பெயரில் கூடி மேற்கண்டத் தீர்ப்பை எதிர்த்துள்ளார்கள்.

அதுமட்டுமன்று, இத்தகைய சாதி, கோத்திரம் மீறிய திருமணங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்றும், திருமண வயதை பெண்ணுக்கு 15, ஆணுக்கு 17 என்றும் குறைக்க வேண்டும் என முடிவெடுத்து, இதை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பரித்துள்ளார்கள்! மீண்டும் குழந்தைத் திருமணத்திற்கல்லவா இது அடிகோலுகிறது!

இவர்களை, இந்தக் கட்டப்பஞ்சாயத்துகளை சட்டம் என்ன செய்தது ? என்ன செய்ய முடிந்தது ? இவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் சாதி, சாத்திரம், கோத்திரம் - மனுநீதி!

அதனால்தான் கல்கத்தாவில் ரிஸ்வான் - பிரியங்கா தம்பதியரின் (கவுரவக்) கொலையில் ரிஸ்வான் இரயில் பாதையில் துண்டு துண்டாகக் கிடந்தார்.

அரியானாவின் பிரதீப்சிங் - பரபஜோத்கவுர் தம்பதியர் சாதியை மீறி மணந்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவர் உடல்களிலும் தலா 15 குண்டுகள் துளைத்திருந்தன.

ஜார்கண்டில் நிருபமாபதக் - பிரியபன்சு காதல் தம்பதியரில் நிருபமா 3 மாத கர்ப்பத்துடன் தூக்கில் இட்டுக்(கவுரவக்) கொலையானார்.

இன்னும் பட்டியல் நீளுகிறது!

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கட்டிக் குளத்தில், காதல் மனைவி மேகலாவின் கண்முன்னாலேயே கணவன் காளிதாசைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, மேகலாவையும் அறிவாளால் வெட்டி இருக்கிறான் தந்தை விஜயன்.

ஜுனியர் விகடன் இதழுக்கு விஜயன் அளித்த சிறு செய்தியில் “போனது காசோ பணமோ இல்ல...எங்க குடும்ப மானம்... அந்தப்பயல கொன்னுட்டு, அவளையும் வெட்டினேன். சனியன் செத்துப் போச்சுன்னுதான் வெட்டுறதை நிறுத்தினேன். கடைசில பாத்தா, அதுபொழச்சிருச்சி. ஜெயிலுக்குப் போறதெல்லாம் வருத்தமா இல்ல, அவள (மகளை) உசிரோட விட்டதுதான் வருத்தம் ” என்றானாம் மீசையை முறுக்கியபடி!

செய்தது கொலை! சொல்வது குடும்பமானம்! அந்த மானம்தான் சாதி, சாதியம்!

சாதி மாறித் திருமணம் செய்தால், அந்தக் குடும்பமே ஊர்விலக்கல், அவமானங்கள், மொட்டை அடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், நிர்வாணப்படுத்தல், சாணிப்பால் குடிக்கச் செய்தல், சாணிப்பால் சட்டியை மண்டையில் உடைத்தல், கழுதைமேல் ஊர்வலம், இதற்கும் மேலாக 70 -80 வயது பெரியவர்கள் எல்லாம் ஆதிக்க சாதி, மீசைமுளைக்காதச் சின்னப்பயல்கள் கால்களில் விழுந்து வணங்குதல், கொடுமைக்கு ஆளாகுதல் என்னும் கொடுமைகள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையே நிகழத்தானே செய்கிறது ? அதன் உச்சகட்டம் தானே கவுரவக் கொலைகள்!

“நீ யாரோ ? நான் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினரோ ? இப்படிப்பட்ட நாம் சிவந்த மண்ணில் கலந்த நீரைப்போல பிரிக்கமுடியாத அன்பால் ஒன்று சேர்ந்திருக்கிறோம் ” என்ற காதல் சமத்துவத்தை வேறோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து விட்டது இந்துத்துவ, பார்ப்பனிய மதச் சட்டங்கள்.

இந்தச் சட்டங்கள் அரசியல் சட்டங்களைவிட வலிமையானவை என்பதை புறக்கணிக்க முடியாது.

அதனால்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் கருத்தாயுதங்களை மக்களுக்காகக் கையில் எடுத்தார்கள்.

அகமணமுறை என்பது சாதிக் கோத்திரங்கள், உறவுமுறைகளுக்குள் இருப்பவை. இது சாதிக் கட்டுமானத்தைக் காக்கும்.

புறமண முறை சாதிகளை, கோத்திரங்களை, மதங்களை உடைத்தெரிந்து நடப்பவை. எனவே புறமணமுறையை ஊக்குவித்தார்கள், ஆதரித்தார் கள் பெரியாரும், அம்பேத்கரும்.

புறமணமுறைக்குப் பாதுகாப்பு இல்லாததால்தான் இன்று நடைபெறுகின்றன - கவுரவக் கொலைகள். இவைகளைத் தடுக்க, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கடவுளைக் காட்டி பயமுறுத்தினார்கள், கோயிலைக்கட்டி தலைவணங்கச் செய்தார்கள், சாஸ்திரங்களைச் சொல்லி அறிவை மழுங்கடித் தார்கள். மக்களை அடிமைப்படுத்தவே சாதியும், கோத்திரமும், குலப்பிரிவுகளையும் உண்டாக்கி னார்கள் பார்ப்பனர்கள்.

இந்த உதவாக்கரைப் பார்ப்பனியம்தான் இன்று “கவுரவம் ” என்றாகிவிட்டது. இந்த கவுரவம் பெற்றபிள்ளைகளைக்கூட கொலைசெய்கிறது என்றால், அந்தக் கவுரவம் வேண்டுமா? அந்தச் சாதி வேண்டுமா? அந்தக் கோத்திரம் வேண்டுமா? என்று மக்களை உணரச்செய்தால் மட்டும்தான் கவுரவம் தொலையும், கொலையும் மாறும்!

அதற்குப் பெரியாரையும், அம்பேத்கரையும் விட்டுவிட்டால் வேறு வழியே இல்லை!

- எழில்.இளங்கோவன்

Pin It