எப்போதும் நேர்மறையான (positive) சொற்களும், பேச்சும் ஒருவருடைய மனத்தை உற்சாகப்படுத்தி, உற்சாகமுடன் செயல்பட வைக்கும். அந்த வகையில், உடல் உறுப்பு குறைபாடுடையோரை ஊனமுற்றோர் (handicaped) இயலாதவர்(disabled) என்பன போன்ற எதிர்மறையான (negative)  சொற்களால் அழைப்பதைத் தவிர்த்து, மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கான இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதை நாமும் வரவேற்கிறோம்.

இந்திய அளவில் 2 விழுக்காட்டினராகவும், தமிழ்நாட்டில் 18 இலட்சமாகவும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசிடமும், சமூகத்திடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம்   UNCRPD (United Nations Convention Rights for Person with Disabilities Act 2007) இல் உள்ள சரத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

1. மாற்றுத் திறனுடையோருக்கான ஐ.நா. அவையின் சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.கல்வியில், வேலை வாய்ப்பில், மாநில சட்டமன்றங்களில், பாராளுமன்றத்தில் 3 சதவீத இடஒதுக்கீடு
3.தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி  உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
4.நாடெங்கும் மாற்றுத் திறனுடையோரின் தொகை பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
5. தடையற்ற சுற்றுப்புறச் சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும்.

இவை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கின்றனர். இதன் மூலம் தங்களுடைய சமூக, அரசியல் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளை வரவேற்பதுடன், அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவளிக்க வேண்டியது நம்முடைய கடைமையாகும்.

அரசும், தொண்டு நிறுவனங்களும் இலவசமாகக் கொடுக்கும் மூன்று சக்கர வண்டிகள், தாங்கு கட்டைகள் போன்ற உபகரணங்கள் மட்டுமே அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தினை முழுமையாக்கிவிட முடியாது. அவையயல்லாம், அவர்களின் அன்றாட செயல்களை எளிமையாக்க உதவுகின்ற கருவிகள். அவ்வளவுதான். இது மட்டும் தானா அவர்களின் தேவை?

உடல் குறைபாடுகளுடன் பிறந்தது அவர்களின் தவறல்ல. சக மனிதர்களே அவர்களை உதாசீனப்படுத்துவதுதான்  தவறு. அவர்களின் குறைகளைக் காரணமாகக் காட்டி கல்வி, வேலை, சமூக மதிப்பு மற்றும் பங்களிப்பு  போன்றவை மறுக்கப்படுகின்றன. இங்கே இவர்கள் கேட்பது சமூக அங்கீகாரம்.

தேர்தலில் உடலை வருத்தி, வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதோடு அரசியலுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள அரசியல் உறவு நின்றுவிடுகிறது. மக்கள் பிரதிநிதிகளும் இவர்களுடைய பிரச்சினைகளை சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் பேசுவதாகத் தெரியவில்லை. நீதிமன்றங்களை நாடலாம் என்றாலோ, அவை சட்டமன்றங்ளை விட உயரமாக இருக்கின்றன.எனவே தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே பேசினால்தான் தங்களுக்கு விடிவுபிறக்கும் என்பதால், தேர்தலில் வாக்களிக்கும் உரிமையோடு, பங்கேற்கும் உரிமையும் வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடஒதுக்கீடு எவ்வளவு அவசியமோ, அதே போன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் கண்டிப்பாக இடஒதுக்கீடு தேவை. அதுதான் அவர்களை சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையினை மேற்கொள்ள உதவும்.

குறைகளைப் புறந்தள்ளி குன்றின் மேலிட்ட விளக்குளாய் ஒளிவீசிக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர்.  வளமான குடும்பச் சூழல், படித்த விழிப்புணர்வு பெற்ற பெற்றோர், இதனால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்ற வாய்ப்புகள் சிலரைச் சாதனையாளர்களாக ஆக்கியிருக்கின்றன. இவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொருளாதார வசதியற்ற, படிப்பறிவற்ற பெற்றோரும் கூட, உடல் குறைபாடுடன் பிறக்கின்ற குழந்தைகளைப் புறக்கணிப்பதில்லை என்றாலும், அவர்களை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. எடுப்பதில்லை என்பதைவிட, அதற்கான பொருளாதார வசதி வாய்ப்புகள் அவர்களிடம் இல்லை, போதுமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப் படவில்லை என்பதுதான் உண்மைநிலை. அப்படியானால் இவர்கள் நிராகரிக்கப்படுவது எதனால்? அரசுகள் இவர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா? நிறைய செய்திருக்கிறது. ஏட்டளவில். இவர்களின் நல்வாழ்விற்கென பல்வேறு சட்டங்களை இயற்றியிருக்கிறது இந்திய அரசு.

The Mental Health Act, 1987
Rehabilitation Council for India Act, 1992
Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full participation) Act, 1995 எனப் பல சட்டங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல UNCRPD (United Nations Convention Rights for Person with Disabilities Act 2007) என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில் முதலில் கையயழுத்திட்ட ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அரசு செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். சட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஏட்டளவில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும். இதைத்தான் அவர்களும் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது இலவசங்களையும், சலுகைகளையும் அல்ல வாய்ப்புகளையும், உரிமைகளையும்.

- இரா.உமா

Pin It