1
கேள்விகளற்ற சாத்தியங்களை
அசாத்தியமாக்கி அலைகிறது
கேள்விகளாலான உலகம்
அறைகளில் வியாபிக்கும் கேள்விகள்
பதில்களை யாசித்து நிற்கின்றன

அதிகாரத்தின் சொல்லாய் ஒலிக்கும்
ஒரு கேள்வி
பலரின் கனவுகளை
அக்னியில் தூக்கி வீசுகிறது

ஒழுக்கத்தின் புழுக்கத்தில்
வெளியேறும் கேள்விகள்
சில தற்கொலைகளை
நிகழ்த்தி கடக்கின்றன

பதில்களை கண்டடையா கேள்விகள்
கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளாகின்றன

கன்னம் கடக்கும் கண்ணீரை
கையென நீண்டு துடைக்கும்
ஒரு கேள்வி
பதிலை மறுதலிக்கும்
பதிலாகிறது

உச்சரிக்கப்படாத கேள்விகள்
துருப்பிடித்து குறுவாள்களென
மனதின் ஆழங்களில்
உறைந்து கிடக்கின்றன

கேள்விகள் தொலையும் பொழுதொன்றில்
தேடிக் கண்டடைய முடியாத
ரகசியப் பூக்களென உருமாறுகிறார்கள்
மனிதர்கள்

2

மௌனத்தில் உறைதல்

வார்த்தைகளின் பேரிரைச்சலுக்கு அப்பால்
மௌனத்தில் இறங்கித் திளைத்தல்
சந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில்
மனித முகம் தரிசிப்பதுபோல
அவ்வளவு சுலபமல்ல.

மௌனத்தின் மர்ம முடிச்சுகள்
யவனத்தின் மர்ம பிரதேசங்கள்
தப்பித்தலின் பொருட்டு தொலைதல் சாத்தியம்

தப்பித்து வெளியேற இயலா வனமொன்றில்
திரும்ப முடியாத பாதையொன்றில்
பூத்துக் குலுங்கும் செடியென
மௌனத்தின் உறைதல்
ஒரு குழந்தையின் புன்னகையில்
கரைதல் போலாகும்.

3

ஒரு புன்னகையின் மரணம்

கனவின் காலடித் தடங்கள்
கடந்து போன திசையெங்கும்
இரத்தச் சுவடுகள்

மனதின் அடியாழத்தில்
ஆழப் பதிந்து கிடக்கிறது
புன்னகையை உடுத்தியபடி
ஒரு குறுவாள்

மௌனத்தில் புதையும் கணமொன்றில்
உயிர்க்கிறது
இரத்தம் தோய்ந்த குறுவாள்
புன்னகையை கழற்றி வீசியபடி

வன்புணர்விற்குப் பின்
கசங்கும் புன்னகையின் தலைப்பை எடுத்து
குறுவாளை தடுக்க எத்தனிக்கும் தருணமொன்றில்
காலபெரு நிழலென
என்மேல் கவிகிறது
இரத்தம் தோய்ந்த என் மரணம்

4

கடந்தேகுதல்

பெருமழைக்குத் தப்பித்து
குடையில் நுழைவது போலல்ல
மூர்க்கமாய் முன்னேறி
தாக்கி தகர்க்க துடிக்கும்
விலங்கொன்றிடமிருந்து
விடுபட எத்தனித்து
குடிசை ஒன்றில் நுழைவது போலுமல்ல

நிசப்த நள்ளிரவுகளில்
பார்த்த பேய்ப்படங்கள்
ஞாபகங்களின் கதவு தட்ட
பாடிக் கொண்டே
பயம் தவிர்ப்பது போல்
அவ்வளவு எளிதல்ல.

நெடுநாள் வளர்ந்து
படர்ந்து கிளைபரப்பிய
நேசமரத்தின் அடியில்
கோடரியென
வார்த்தையொன்று விழுகையில்
கடந்தேகுதல்
5

பிரியங்களின் தேசம்

பிரியங்களின் தேசத்தில்
தன்னைத் தானே தாழிட்டுக் கொள்ளுதல்
தியானத்தின் உச்சம்

வெளியின் கழிவுகள்
வெளியே கிடக்க
உள்ளொளியில்
இறங்கி நடக்கலாம்.
உடல் கூட்டின் சூட்டைக் கடந்து
உயிர் தழுவிக் கிடக்கலாம்

கொஞ்சம் கொஞ்சமாய்
வெளியில் தொலைந்த
நம்மைக் கண்டடையலாம்
வெளியின் விசாலத்தை
நம்மில் தரிசிக்கலாம்

பிரியங்களின் பெருங்கூட்டத்தில்
காதல் நடனமொன்று
ஆடித் திளைக்கலாம்

தான் விலக்கி வெளியேறும்
தருணமொன்றில்
பிரியங்களற்ற தேசத்து மனிதர்கள்
விலங்கின் முகம் கொண்டிருக்க காணலாம்.

6

பதிவுகளற்ற பேரலைகள்

நீ நிற்க இயலாத இடங்களிலெல்லாம்
உன் படங்கள் தொங்குகின்றன
காலத்தின் மௌன சாட்சியாய்
சிலவற்றில் நான்...
திருவிழா நெரிசலில் தொலைந்த
குழந்தையின் விழிகளோடு.

அழுக்கடைந்து கிடக்கும்
அவற்றைத் துடைக்கும் வேளையில்
காலவெளிகளில் பயணிக்கின்றன
என் கால்கள்
நீண்ட நேரத்திற்குப் பின்
நிகழ்வுகளின் ஒளித்தடங்களில்
நடந்து வந்து சேர்கிறேன்
கனவுகள் உடைக்கப்பட்ட
பெருந்துக்கத்தோடு.

மீண்டும் தொங்கவிடுகிறேன்
ஒட்டியும் ஒட்டாமல் நிற்கும்
என்னை எனக்குள் நகைத்தபடி
கன்னம் கடக்கும்
ஒருதுளி நீர்
மார்பைத் தொடும் வேளையில்
உள்ளுக்குள் கேட்கிறேன்

அழுக்கைத் துடைத்தெறிவதுபோல
சட்டங்களை
உடைத்தெறிந்து
என்னை மீட்க தூண்டும்
மனசின் பேரலைகளை
படமெடுத்தல் சாத்தியம்தானா?

7

உடைபடும் பிரியங்கள்

அந்நியத் தன்மையின்
அருகாமையில்
நீயும் நானும் அமர்ந்திருக்கிறோம்.
இருந்தும்
நேற்றிலிருந்து
தொலைந்து போனேன் நான்

உனக்குள் கிடந்த தகிப்புகள்
வெடித்துச் சிதறுகையில்
முற்றத்திலிருந்த பூக்கள்
முட்களாகியிருந்தன

குரல்களில் ஏறுமுகத்தில்
மெல்ல மெல்ல
நான் இறங்கிக் கொண்டிருந்தேன்
உன்னிலிருந்து
மடைமுடைத்து வெளியேறும்
வெள்ளமாக

உடைபடும் பிரியங்களின் சங்கிலிகளிலிருந்து
விடைபெற்ற கண்ணிகளை
தேடி கண்டடைய இயலாத தவிப்பில்
ஆட்களற்ற பெருவெளியில்
ஆட்கொண்டு நிற்கிறது
என் பிரிய அந்நியம்

8

உறக்கத்தின் நிழல்

உன் நினைவுகளின்
பெரும் பள்ளத்தாக்கில்
இரவோடு ஒரு நாள்
சயனிக்க நேர்ந்தது

மெல்லப் படமென நீள்கிறது
நீயும் நானும்
நாமாகிக் கிடந்த நாட்கள்

மனசுக்குள் விழுந்த
மழைத்துளி வார்த்தைகள்
யாருமற்ற இந்த இரவின்
கருமையோடு கதைத்து
கொண்டிருக்கின்றன
துடைத்தெறிய முடியாத
நேற்றின் நினைவுகளை
பெருவெள்ளமென
பெருக்கெடுக்கிறது கண்ணீர்

நிசப்தத்தை
துரத்தியடிக்கிறது
அசரீரியென
விஸ்வரூபமெடுக்கும்
உன் சிரிப்பொலி

யாருமறியா இடமொன்றில்
நீ தந்த முத்தமொன்றின்
வாசனையில்
உள்ளம் விழித்த
கடைசி நொடியொன்றில்
என்னை நெருங்கும்
உன் காலடி ஓசையில்
கலைகிறது
இனி எப்போதும் கிடைக்காத
எனதான உறக்கம்

நீ விலகி நடந்த வெளிகளையே
வெறித்துக் கிடக்கும் விழிகளில்
உறக்கத்தின் நிழல்
இனி ஒருபோதும்
விழப்போவதில்லை.
கொடிது கொடிது

அநித்ய பொழுதொன்றில்
நிசப்தத்தைக் கடக்கும்
கலவிச் சத்தம்
மூடப்பட்ட கதவுகளின்
தாள்களை உடைத்துக் கடக்கும்
மூர்க்கம் கொண்டு
மனசின் அறைகளில் நுழைகிறது

சாவி துவாரம் வழி வழியும்
மல்லிகை மணம்
மெல்ல வியாபிக்கிறது
அறையெங்கும்

கண்கள் மூடிக்கொள்கையில்
உடை களைந்த உடல்கள்
வந்து வந்து போகின்றன
ஊடுருவிப் பாய்ந்தபடி

பின்னுக்கு இழுக்கும்
கலாச்சாரத்தின் கரங்களை
கரைகடக்கும் நதியின் வேகத்தில்
விடுவித்துக் கடக்கிறது
காமத்தின் கால்கள்

பசியடங்கும்வரை
ருசியின் முகம் அறிந்ததில்லை
கொடிது கொடிது
கொடுவாளினும் கொடிது காமம்

9

பொம்மைகளாகும் குழந்தைகள்

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பொம்மைகளை
அகல கண்விரித்துக் கடக்கும்
கடக்கும் குழந்தையொன்றின் கரம்
தனக்குப்பிடித்த ஒன்றைத் தொடும்

விடப்பட்ட பொம்மைகள்
கைவிடப்பட்ட குழந்தைகளாகிப்
போவதையறியாமல்
கடந்து போகும் குழந்தை
திரும்பிப் பார்த்து
ஒற்றைப் புன்னகையால்
கையசைக்கும்

உணவின் பக்கத்தில்
உட்கார்ந்தபடி
படுக்கையின் அருகே
படுத்தபடி
குழந்தைகளோடு
குழந்தையாவதையே
பொம்மைகள் விரும்ப
பொம்மைகளாகிப் போகின்றன
குழந்தைகள்.

10

சொல்

உறைக்குள் கிடக்கும்
வாளென ஒரு சொல்
உச்சரிக்கப்படாமலேயே கிடக்கிறது

பதுங்கிப் பாயக் காத்திருக்கும்
ஒரு புலிபோல
இரையென இன்னொரு சொல்லை
தேடிக்கொண்டிருக்கிறது

காத்திருப்பின் கால இடைவெளியில்
துருவேறிக் கொண்டிருக்கையில்
வன்மம் அணிந்து
கொள்கிறது சொல்

எதிர்வரும்
சொல்லொன்றின் கனம்
நிச்சயிக்கக் கூடும்
உறை கிழித்து
பெரும் பாய்ச்சலெடுத்து
வன்மம் தீர்க்கும்
ஒரு சொல்லின் மூர்க்கம்

Pin It