1.
நெஞ்சுக்குள் நிரம்பி நிற்கும்
குளத்தில் மேலுமொரு துளி
இன்று விழுகிறது.
நேசம் தூர்ந்த மனதில் நானொரு
கடல் சேமிக்கிறேன்.

2.
எழ முடியாத வீழ்ச்சியின்
இருண்ட அறைக்குள்
வெண்ணிற நாய்க்குட்டிகள்.

3.
நீண்ட தனிமையின் கரங்களில்
கூர் ஈட்டிகள்.
திறந்த நெஞ்சுடன் மழை பற்றிய
கனாவில் திளைத்தபடி நான்.

4.
ஒரு சுண்டெலி அங்குமிங்கும்
ஓடுவதும் அழகு.
அடித்து தூர எறிந்த பின்
வட்டமிடும் காக்கைகூட்டங்களும்
கொஞ்சம் அழகுதான்.

5.
அனைத்து இலைகளையும்
உதிர்த்துவிட்டு
எதற்காக நிற்கவேண்டும்
மரம்?
வேர்களில்
ஈரம் காய்ந்துவிடவில்லை.


6.
ஒரு தவறான முடிவு.
அதன் பிறகு,
அனைத்து துவக்கமும்
முடிவாகவே.

7.
அணைந்துபோனது
மெழுகுவர்த்திரி.
ஒளிவீசியது இருள்.

8.
கடின யுத்தத்திற்கு பின்
வீழ்த்தினேன்.
இனி வீழ்த்த யாருமில்லையென
நானுமொரு புத்தனானேன்.

9.
தவறிய சொல் சிதறியது.
காலமெல்லாம்
பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்
சிதறிய சொற்களை.
வாழ்வெங்கும் குருதி கசிய.

10.
ஒரு குழந்தையை
 கொன்றவனாகத்தான்
இவ்வுலகம்
நினைவில் வைத்துக்கொள்ளும்
பொழுதுபோக்க
கவிதை எழுதுபவனை.

Pin It