மிக நாசூக்காய் இலகுவாய்
வெளியேற்றிவிட்டாய்
என்னிலிருந்த உன்னை.

வந்ததின் நினைவின்றி
வாழ்ந்ததின் தடங்களின்றி
வெளியேறல் சாத்யமானது
ஆச்சர்யத்தை அளிக்கிறது
வருத்தத்தையும்

உள் நுழைந்தாய் உயிர்க்காற்றாய்
வெளியேறும் மூச்சு
நுரையீரல் தப்பியதா துப்பியதா

இணைதல் இலகுவெனில்
பிரிதலும் சுலபமன்றோ
விடுதலை வெளியே விருப்பம்

ஓடு திறந்து சிறகு விரித்து
வானம் அளக்கப் பறக்கையில்
மகிழ்வேன் தாய்ப் பறவையாய்...

கவனம் :
வெளியேறும் எவையும் கழிவுகளல்ல...
நீரும் சேறும் பிரியாவிடில் நீங்கா நோயல்லோ
சுகந்த வெளியேறலே வண்டுகளுக்கு அழைப்பு
கருவிகளின் துளைவழியே
காற்று வெளியேறும்போதே இசை

துளியாக நுழைந்தது சிசுவாக...
பனியாக நுழைந்தது முத்தாக...

வெளியேறலாம் நீ
வெளியேற்ற முடியுமா நினைவுகளை!

எரிகிறேன் தீயாக
பிரிகிறாய் புகையாக
சாம்பலோடு முடியுமோ சகலமும்...?

- அன்பாதவன்

Pin It