வாய்ப்புகளும் வசதிகளும் பெருகப் பெருக துயரங்களும் மனச்சலனங்களும் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. அழிகின்ற யாவற்றிலிருந்தும் ஒரு பழமையின் விசும்பல் தன் இறுதிக் கண்ணீரை இந்த உலகிற்கு தன் எச்சரிக்கையாக அடையாளப்படுத்துகிறது.

புதிய ஒவ்வொரு உருவாக்கமும் முதல் துவக்கத்தை மலர்ச் செண்டைப் போல ஏந்தி வருகிறது.

பழமையும், புதுமையும் ஓயாமல், எழுதித் தீர வேண்டிய கவிதைகளுக்கான கருப்பொருளாகவே படைப்பாளிகளுக்கு நிர்பந்திக்கிறது.

நிர்பந்தங்கள் ஒவ்வொரு தனிமனிதனையும் ஏதோ ஒரு மனக்கிலேசத்திற்கு நெட்டித் தள்ளுகிறது. அப்போது எழும் கதறல்களும், வலியும் கவிதைகளாகிவிடுகின்ற தருணங்கள் வாசகனுக்கு பொன் தருணங்கள்!

நிரம்பும் கோப்பையில் வழியும் துளிகளை ரசித்து, ருசித்து எழும் வரிகளைவிட, பற்றியெரியும் நெருப்பின் கடைசிச் சாம்பலை, கவிதையென அள்ளிவரும் வரிகள் வீர்யம் மிக்கவை...

கவிதைக்கான வெம்மை வாழ்தலிலிருந்து வெடிக்கிறது.

கவிதைக்கான கிளர்ச்சி, அனுபவித்த துயரத்திலிருந்து விடுபட வைக்கும் மந்திரச்சொல்லில் கிளர்ந்தெழுகிறது.

கவிதைக்கான அடையாளம், அடைய வேண்டிய யாவற்றிற்கும் அழைத்துச் செல்லும் பாதையின் முதல் அடியிலிருக்கிறது...

Pin It