கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்குகிற ஒருவருக்கு வாய்த்திருக்க வேண்டிய கவிதை பற்றி புரிதலும், கவித்துவம் மிக்க வார்த்தைகளின் அறிமுகமும் கைவசமாயிருக்கிற ஒருவரால் எந்தவொரு நிகழ்வையும் கவிதையாக்கிட முடியும்.

கவித்துவ எண்ணம் செறிந்த ஒருவரால் அடையாளம் காணக்கூடிய காட்சிகள் யாவும் கவிதையாகிவிடுவதில்லை. அதைக் கவிதையாக்குவதற்கும் அல்லது அது கவிதையாகும் தருணத்திற்கும் காலக் காத்திருப்பு அவசியமாகிறது.
அனுபவம் காட்சி தரிசன உருவாக்கச் செறிவு, கூர்மையான சொற்களின் வீச்சு இவைகளைக் கொண்டு கவிதையாக்கும்போது கவிஞன் அதை மரபுக் கவிதையாக்குவதும், புதுக்கவிதையாக்குவதும், நவீன கவிதையாக்குவதும் அவரவர் எழுத்துப் பயிற்சியைப் பொறுத்தது.

பூ.அ. இரவீந்திரனின் இத்தொகுப்பு மரபின் அடையாளங்களையும், புதுமையின் அறிமுகத்தையும் நவீனத்துவத்தின் எதிர்பார்ப்பையும் உள்ளடக்கிய தொகுப்பு.

குழந்தைமையும், முதிர்ச்சியின் தன்மையையும் ஒருங்கே பெற்ற கவிதைகளின் அறிமுகம் இவை. காலத்தைக் கடத்திச்சென்று அடுத்த நூற்றாண்டிற்குள் நிறுத்தி வைக்கவும், முந்தைய தொலைத்த காலத்தை இக்காலத்திற்கும் மீட்டெடுத்து வருவதும் சிறந்த கவிதையின் அடையாளம்.

கவிதையாலும்கூட கவனிக்கப்படாத ஒன்றுண்டு, எனில் அது இந்திய விவசாயமே! அசட்டுக் கணக்குகளின் அதிமுக்கியமானவர்கள், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்று குரல் கொடுத்துவரும்போது தொலைந்துபோன உழவுத் தொழில் பற்றிய ஏக்கக் குரலாகவும், ஒரு நூற்றாண்டினை புதைகுழிக்குள் புதைத்த செய்தியினை “உழவர் உலகத்தார்க்கு...” கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். “ஒன்பதாம் வேற்றுமை”, “இராட்சசம்”, “அறைக்குள் நுழைந்த கவிதை”, “வினோதக் கூச்சல்களுடன் ஒரு நகரம்” ஆகிய கவிதைகள் சொற்களை எளிமையான வகையில் பெரும் பொருள் கொண்டு, கிளைபரப்பி நிற்கிற பெருமரங்களாகத் திகழ்கின்றன.

எளிமையாய் எழுதுவதும், கண்முன் நிகழ்கிற அவலங்களைச் சுட்டிக் காட்டுவதும், எழுத்தாளனின் சமூகக் கடமையென்பதை ஏற்றுக் கொள்கிற யாரும் இக்கவிதைகளையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தூரிகையும் நிறங்களின் கடவுளும் - பூ.அ.இரவீந்திரன், கீதா பதிப்பகம், 58, கீதா இல்லம், அன்பு நகர், 3வது வீதி, இடையர்பாளையம், கோவை - 641 025.

Pin It