மொழியைப் புதிய அர்த்தங்களோடு புதுப்பிப்பது கவிதை. அதனால்தான் கவிதையை மொழியின் ராணி என்கிறோம்.

“கவிஞர்கள்
கவிதையை உண்டாக்குவதில்லை
கவிதை எங்கோ பின்னால்
காலங்காலமாக இருந்து வருகிறது
கவிஞன் அதைக் கண்டு
பிடித்துவிடுகிறான்” என்பார் செக் கவிஞர் ஜான் ஸ்கெசல்.

“சொல் புதிது பொருள் புதிது
சோதிமிக்க நவ கவிதை” என்ற பாட்டுப்பாட்டனின் வரிகளை உள்வாங்கி நவகவிதைகளில் நம்பிக்கையூட்டுகிற ஒரு சிலரால் தமிழ் நவீனக் கவிதையின் சுடர் தொடரோட்டமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

பிரேம்-ரமேஷின் தொலைதூரப்பயணி

“தொலைதூரப் பயணி
புகார் துறைமுகத்தில்
கலம் ஒதுக்க விரும்பினான்
ஒதுக்கியபோதுதான் அறிந்தான்
தான் கடைச்சங்க காலத்தவன் என்பதை
புதுச்சேரியில் கடல்காகம் என்ற
உணவுவிடுதியின் மேல்தளத்தில்
பட்டினப்பாலை பற்றி பேசிக் கொண்டிருக்கும்
ரமேஷையும் பிரேமையும் நெருங்கி
ஓலை நறுக்கை எடுத்துநீட்டி தன்
காதல் கணிகையின் முகவரி கேட்டான்”

அநேர்கோட்டில் இயங்கும் இக்கவிதை கடந்த காலத்தையும் நிகழ்காலத் தையும் எதார்த்தத்தையும் புனைவையும் இணைக்கும் புள்ளியில் நவீனத்தன்மையுள்ளதாய் மாறிவிடுகிறது.

இதே உத்தியில் படைக்கப்பட்ட இரா.தமிழரசியின் கவிதையொன்று

“குத்திக் கிழிக்கும் கூரியவாள்
தலை கொய்யும் வேல்
நடைநவில் புரவி
மதர்த்தயானை
பட்டொளி வீசும் பதாகை தாங்கிய தேர்

அத்தனையும் நம் அடுகளத்தில்
மொத்தமும் இழந்து நிற்கிறேன்
நிராயுதபாணியாய்
கத்தியின்றி ரத்தமின்றி
வெற்றி கொண்ட களிப்பில்
தெறிக்கிறது புன்னகைத் துளி”

இருவேறு காட்சிகளை இணைத்து புதிய பாண்டசி வடிவத்தில் உருவாகிறது அமிர்தம் சூர்யாவின் கவிதையொன்று :

“கிணற்றிலிருந்து தைலத்தை
திருடி உறிஞ்சிக் கொள்வதாய்
எழுந்த வாஸ்துவின் புகாரால்
அகத்தின் முற்றத்திலிருந்து
யூகலிப்டஸ் மரத்தை அப்புறப்படுத்த
நாள் குறித்ததை அறியாது
சுள்ளி பொறுக்கப் போன
பறவையின் திசையை
கண்காணித்த படியேயிருந்தது
சாலையோர டிரான்ஸ்பார்மின்
இடுக்கில் கூடுகட்டியிருந்த
கரும்பட்சி”

வாஸ்து, டிரான்ஸ்பார்மர் போன்ற சொல்லாட்சியும் தரும் பொருள்களும் கூடுதல் அர்த்தத்தை தருவதை தேர்ந்த வாசகன் உணரக்கூடும்.

தமிழில் இடையறாது ஒலிக்கும் குரல் அம்சப்ரியா... குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உலகம் பற்றிய அவரது அவதானிப்புகள் தமிழுக்குப் புதியவை.

கவனிக்கப்படாத புட்டி-யைப் பற்றி கவிதை செய்யும் மதுமிதா அந்தப் புட்டியை முன்வைத்து பலகேள்விகளை வாசகனுக்கு முன்வைக்கிறார்.

“உலகுக்கில்லாத அக்கறை உனக்கென்ன
என்னும் ஒரே கேள்வியில்
கடக்க நேரிடுகிறது
பச்சைப் புட்டியைக் கடந்து செல்வதாய்”

ஆனாலும் கவனிக்கப்படாத பல சங்கதிகளை வாசகன் கவனிக்க கைககாட்டுகிறது மதுமிதாவின் கவிதை.

“இப்போது இயல்பின்
எனது சிரிப்பொலிகள்
வாகனச் சீறல்கள் தாண்டியும்
தென்னங் கீற்றுகளின் சலசலப்பு கடந்தும்
உன் காதுகளில் இடியாக” என உறவின் நிராகரிப்பு குறித்து எழுதுகிற திலகபாமா தனது மொழியில் சொல்ல வருவது இதைத்தான். மனித உறவுகள் கவனிக்கப்படாத புட்டிகள் அல்ல காலால் சீந்தி உதைக்க... அப்படி புறக்கணிப்பின் புட்டியின் உள்ளிருந்தும் எழுதக்கூடும் புயற்காற்று என்பதையே.

நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனமாய்ப்படுவது சகமனிதன் குறித்த பிரக்ஞையின்மை; அக்கறையின்மை. அய்யப்பமாதவன் வரிகளில் தொனிப்பதும் அதுவே :

“சிதறிக் கிடக்கும் பூலோகத்தின்
மாபெரும் சோகங்களில்
நான் தலையிடுவதென்பது
என் வேலையில்லையென்று
நினைத்துவிட்டேன்.
கருணையில்லாத என்னிடம்
சொற்களில் சொல்ல முனைதல்
பேதமை மிக்கது”

இதற்கு மாறாக தாய்மையூரிய நேசத்துடன் வெளிப்படுகிறது தமிழச்சியின் கவிதை :

“சற்றுமுன் தோலுரிக்கப்பட்ட
பச்சை மாமிசத்தின்
வெதுவெதுப்பில் இருக்கிறது
அன்பு கசியும் இம்மனம்”

எளியமொழியில் வலிய சொல்லமைப்புகளால் தனது கவிதையைக் கட்டுகிற பாலைநிலவன் பலராலும் கவனிக்கப்படுபவர்.

“உன் அறைக்குள் பிரவேசிக்கையில்
தலையில் ஓணான்கள் நீந்தி திரிகின்றன.
அறையில் மலர்த்தி வைத்திருக்கும்
கரப்பான்கள் பீதியூட்டுகின்றன.
குருதி பூக்க மேசையில் அமர்ந்திருக்கும்
பூதங்களை
என் வருகை நிகழும் போதேனும்
அடைத்து வைக்கும்படி
சரணமெய்துகிறேன்.
இன்றைக்கு வருகிறேன் உன் அறைக்கு
இளஞ்சிசுவின் தேன் குருதி
கொத்தும் சிறு உயிர்களை
அனுமதி மறுக்கும்
நல்லதொரு கொசுவலையோடும்
நெரிசல் மிகுந்த வாழ்வின் சாலைகள்
துரிதத்துக் கெதிராகப் போனதால்
நெருக்கடிகள் மாற்றுவழியின்
திசையில் நெட்டித் தள்ளுகின்றன”

என “புறவழிச்சாலை” என்ற குறியீட்டின் மூலம் உறவு / நட்பு என வேறுவேறு அர்த்தச் செதில்களை வீசும் தமிழ்மணவாளன் தமிழின் நம்பிக்கைத் தருகிற படைப்பாளிகளில் ஒருவர்.

உண்மைக்கும் புனைவுக்கும் இடையே பாலமாய் தனது கவிதைகளைப் படைக்கிற கரிகாலன், கிராமத்து பொருளில், சமூக பிரச்னைகளை பதிவு செய்கிற இலக்குமிகுமாரன், கவிதையிலும் உரைநடையிலும் புதுமை படைக்கும் உமாமகேஸ்வரி, தி.பரமேஸ்வரி, சக்திஜோதி போன்றவர்களையும் இலக்கிய உலகம் அவதானித்தே வருகிறது.

“கிளிகளின் மொழிகளை
இசையெனப் புகழ்ந்த
காலமொன்றுண்டு
தன்குரலைத்
தனிக்குரலாய்ப் பதிவு செய்யுமிது
காக்கைகளின் காலம்” என பெருமிதப்படும் அன்பாதவன், மதிவண்ணன், என்.டி.ராஜ்குமார் ஆகியோரது குரல்களும் தமிழ் இலக்கிய உலகம் ஒதுக்கமுடியாதவை.

மனுஷ்யபுத்திரன் தொடர்ச்சியான தனது கவிதைச் செயல்பாடுகளால் வாசகன் கவனத்தைக் கவர்பவர்.

இன்னமும் பலகுரல்கள் நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும் செத்த மொழிகளால் உரைநடைத் துண்டுகளை கவிதைகளென செய்து தருபவர்களை என்ன சொல்வது?

கவிதை குறித்த உரையாடல் ஒன்றில் நவீன கவிதையின் பிதாமகர் எனக் குறிப்பிடும் பிரம்மராஜன் குறிப்பிடுவது மிக முக்கியமானது.

“ஆறு வருசத்துக்கு முன்னால் ஒகேனக்கல்லில் சில கவிஞர்கள் கூடினோம். எல்லோரும் கவிதை வாசித்தோம். உடனுக்குடன் அதைப் பற்றிக் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். அப்போது ஒருவர் கவிதை படித்தார். பலவித விளக்கங்கள் தரப்பட்டன. அப்போது அவர் சொன்னார்.

“இது சும்மா நான் உங்களை ஏமாற்றுவதற்காக பல கவிதைகளிலிருந்து வரிகளை எடுத்துப்போட்டு செய்தது என்றார். கவிதை என்பது இதுக்கு மேல ஒண்ணும் இல்ல. இப்படி ஒரு வார்த்தை. அப்படி ஒரு வார்த்தை. இப்படி ஒரு வரி. கடைசில தூக்கி நிறுத்தற மாதிரி ஒரு முத்தாய்ப்பு அவ்வளவுதான்”

நான் அவர்கிட்ட தயவுசெய்து இப்படி பண்ணாதீங்க. இது யாருக்கும் நல்லதில்ல. இது நேர்மைக்குறைவு என்று சொன்னேன்.”

கவிதைகளில் நவீனம் என்ற பெயரில் பம்மாத்து பண்ணுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

“இத்தனை நாட்கள்
ஏதோ ஒன்று ஙீ 10

சொல்லாமலே...” (அழகியசிங்கர் விருட்சம் கவிதைகள் பக் 52)

என்ன சொல்கிறது இக்கவிதை. தன் புத்திசாலித்தனத்தை மேட்டிமையை எளிய வாசகன் மேல் பாறையைப் போல தள்ளிவிடுவது எந்தவகை நியாயம்?

மாலினிபுவனேஷ் எழுதியிருக்கிற கீதா உபதேசத்தின் வேறு பிரதியிது.

“ஏன், ஏதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது
ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது
ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும்” (விருட்சம் கவிதைகள் பக் 179)

இத்தகைய கவிதைகளுக்கு லதாராமகிருஷ்ணனின் சிந்தனைத் துண்டொன்று பதிலாகிறது.

“எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு கூட, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டிற்குமே அடிப்படை ஒருவகையில், மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.”

Pin It