இலக்கியமும் கலையும் மக்களைவிட்டு, விலகி, பொழுதுபோக்கு அம்சங்கள் தூண்டுதலாகி, அதனால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளே முதன்மையாகி, அதற்கான  வாழ்வியல் போராட்டமே நிரந்தரமாகிவிட்டால் அதன் பலன் விளைச்சல் பயிர்கள் பதர்களாகிவிடுவதுதான்...!

குழந்தைகளிடமிருந்து சீரிய கதைகளையும், கற்பனையாற்றலையும் பிடுங்கிக் கொண்டு, வெறுமனே அச்சடித்த காகிதங்களை பாடத்திட்டங்களென திணித்து அவர்களை மதிப்பெண் பெறுகிற இயந்திரங்களாக மாற்றினால் சமூகக் குற்றங்கள் பெருகிவிடும்...

"அறம் செய்ய விரும்பு'', "ஆறுவது சினம்'', - மறக்கடிக்கப்பட்டு பொருட்களின் அடையாளம் கொண்டு கற்கும் மேலைக் கல்வி இறுதியில் குழந்தைகளைக் குற்றவாளிகாளாக்கி வேடிக்கை பார்க்கிறது.

பாடப் புத்தகங்கள் வாழ்வியல் வழிகாட்டிகளாகவும் அறம் போதிக்கும் சக்தியாகவும் மாறும் நாளே இலக்கியப் பொன்னாளாகும்.

பாடப் புத்தகங்களோடு, அவர்களுக்குப் பிடித்தமான உலகை அடையாளப்படுத்தும் கதைகளையும், பாடல்களையும் அள்ளியள்ளிப் பரிசாக கொடுக்கிற நாளே இலக்கியத் திருநாளாகும்.

குழந்தைகளைப் புறக்கணித்துவிட்டு, எழுதுகிற இலக்கியங்களால் ஆகப்போவதொன்றுமில்லை.

குழந்தைகளுக்கான கவிதைகள் மலரட்டும்...

குழந்தைகளே எக்காலத்திற்குமான நல்ல கவிதைகளாகட்டும்...

- புன்னகை

Pin It