ஒரு கவிதை தன்னளவில் வாசகனை திருப்திப்படுத்துவதோடு நின்றுவிடுமாயின் அது எழுத்துக்களையும் சொற்களையும் பசி தீர்க்கும் உணவுத் துகள்களாக்கி வைத்திருக்கிறது என்று பொருள். தனிமனித துயரங்களின் நீங்கா நிழலைக்  கொஞ்சமேனும் துரத்தும் சக்தி வாய்ந்த ஒரு சொல்லை, சுரண்டச் சுரண்ட வளர்ந்து கொண்டிருக்கும் வளமுள்ள மகிழ்ச்சியை, கொள்ளை கொண்டு போகும் அதிகார வர்க்கத்திற்கெதிராக, முஸ்டி மடக்கி யுத்தம் செய்யும் வலிமை பெற்ற ஒரு சொற்றொடரை, பிழைப்புக்கென தேசங்களைத் துறந்து காற்றின் திசையெல்லாம் நமதென்று உரிமை கொண்டாடி பயணிக்கிற தேசாந்திரியை விரட்டும் கொடுங்கரங்களுக்கெதிராக குரலெழுப்பும் ஒரு வாக்கியத்தை எதுவெல்லாம் கொண்டிருக்கிறதோ அதையெல்லாம் கவிதையென கொண்டாடுங்கள்.

கண்ணீரைத் துடைக்கும் ஆறுதல் கரமாக, எதிர்த்துப் போராடும் வலிமையைத் தரும் சக்தியாக, மென்வாசனையை அடையாளப்படுத்தும் வனமாக எப்போதும் பிறந்து கொண்டேயிருக்கிறது. சிலர் அதை குப்பைத் தொட்டிக்குள் வீசிவிடுகிறார்கள். சிலர் குரல்வளையை நசுக்கிறார்கள். சிலர் உடன் வைத்துக் கொண்டே மெதுவிசத்தால் கொலை செய்கிறார்கள். சிலர் கொண்டாடுகிறார்கள்.

கவிதை தனி மனித அன்பு

கவிதை உரிமைக்குரல்

கவிதை அணிலின் சுதந்திரப் பயணம்

கவிதை ஒரு பறவை

 

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்...

2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது நாஞ்சில் நாடனுக்கு கிடைத்துள்ளது. "சூடிய பூ சூடற்க'' சிறுகதைத் தொகுப்பிற்கு இவ்விருது கிடைத்துள்ளது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர படைப்புலகில் உள்ள நாஞ்சில் நாடன், இதுவரை 112 சிறுகதைகள், 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகளை எழுதியுள்ளார்.

இவருக்கு புன்னகை தன் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

Pin It