யாரோ என்னை
பின் தொடர்கிறார்கள்.
இறந்தகாலம் தொட்டு
மீண்டும் பிறந்தகாலம் தொடங்கி
வளர்சிதை மாற்றமாய்
உணருகிறேன் தொடருதலை.
நிழலில்லாத தருணங்களிலும்
உயிருள்ள கண்ணாடியில்
யாரது என் படிமமாய்...?!
திரும்பிப் பார்க்கும்போது
காணாமல் போகும்
அதன்
அரூபத் தொடுதலில்
உணர்கிறேன்
யுகம்யுகமாய் அகம் வளர்க்கும்
மிருகம் அதுவென்று.

கலைந்த தூக்கம்

மொட்டை மாடி கலக்கத்தில்
இரவு நீளும் பயணத்தூக்கத்தில்
யாரோ எழுப்பி
நேரம் கேட்டார்கள்.
சூரியக்கடிகாரம் இல்லாத
மணற்கடிகையை
தலைகீழாய் புரட்டிவைக்கிறேன்.
என்
மேனியெங்கும்
மணற்துகள்கள்

தேரோட்டம்

நான்கு மாட வீதிகளையும் சுற்றி
நிலைக்கு வந்தது தேர்.
நான்கு பேர் இழுக்க
பூக்கள் எங்கும் வீசப்பட
உற்சவ மூர்த்தி வாசலுக்கு வருகிறார்.
பழைய தேர்
உருள மறுத்தபோது
பின்புலத்தில் நெம்புகோலால்
குத்தி உருட்டி
கால்படாத குதிரைகளை
அலங்கரித்து பறையடிக்க
மாலையுடன்
சாமி வரும் வேளையில்
கவனிப்பார் யாருமில்லை
தேர்ச் சக்கரங்களில்
அடிபட்டு சாகும் நாயை!

Pin It