1
சபிக்கப்பட்ட கடவுள்

இன்றும் நுழைந்துவிட்டன
மனிதமுகம் மாட்டிய சாத்தான்கள்
தேவாலயம் முழுவதுமாய்...

புனிதமடர்ந்த தேவனின் சங்கீதம் ஒலிக்கிறது...
அக்கணம் பெரும்பாலான சாத்தான்கள்...
காதுகளை பொத்திக் கொள்கின்றன...

அமைதியை நிலைநிறுத்த நிகழும்
சமாதானப் பொழுதுகளில்
எதிரிலிருப்பவன் முகத்தில்
எச்சில் உமிழ்கின்றன...

மிகுந்த சாந்த சொரூபியென்ற
பெருமிதமிழக்க விரும்பாத அல்லது
இயலாத தேவன் அப்போதே
வழங்கி விடுகிறார் பாவமன்னிப்பை...

பூகம்பத்தைப் போல் வெடிக்கும் நிம்மதியோடு...
வெளியேறும் சாத்தான்கள்
மகிழ்கின்றன... காதலிக்கின்றன... வாழ்கின்றன...

குற்றங்கள் நிரம்பி வழியுமொரு நாள்
சாத்தான்கள்கூடி தேவனை சபிக்கின்றன
சிலுவையில் அறைய...

அது பலித்துவிடுகிறது அக்கணமே...

2

பொறாமை மேவும் கடவுள்


இருளில் விடியலாகவும்...
பகலில் அந்தியாகவும்
செம்மையேறும் உன் வார்த்தைகள்
அடர்மௌனம் உடைத்து
என் வார்த்தைகளை அழைக்கின்றன
காற்றில் மிதந்து சல்லாபிக்க...

கட்டுடைத்து கிளம்பிய என் வார்த்தைகள்
விண்ணடையும் வேகத்தில்
பறக்கத் தொடங்கின
உன் வார்த்தைகளின் விரல் பிடித்து...

நீரில் விழும் துளிகளைப்போல் இணையும்
விரல்களின் பரிசங்கள்
வார்த்தைகளை உருமாற்றுகின்றன
ஆதாமாகவும்... ஏவாளாகவும்...

இப்போது அவர்கள் பாம்புகளைப் போல்
பின்னியிருக்கிறார்கள்...
வெட்கமுடைத்து கலந்து திரியும்
அவர்களை நோக்கித் திகைத்து
மேலும் உறைந்தது நம் மௌனம்...

கேவலம் மிகுந்து வழியும்...

இவ்வுலகம் உடைத்து புனிதம் நெய்தே
புதியதோர் உலகம் சமைக்கும் நோக்கில்
பிணைத்தே திரிகிறார்கள் அவர்கள்..
பசுந்துகிடக்கும் வெளிகளெங்கும்...

வார்த்தைக்கு மீளும்படி கையுயர்த்தி
அழைத்த ஒளிவட்ட கடவுளுக்கு
ஏமாற்றமே மிஞ்சுகிறது

அவர்கள் சல்லாபிக்க... சல்லாபிக்க...
குரல்வளை குதறும் கூர்பற்கள்
முளைக்கிறது கடவுளுக்கு...

Pin It