கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில், பேருந்து நிலையம் அருகே ஒரு பிணம் கண்டெடுக்கப்பட்டது. அந்த அநாதைப் பிணமாகக் கிடந்தவர், பிரபல மலையாளக் கவிஞர் அய்யப்பன்தான் என்பதை சவக்கிடங்கில் வைத்து ஒருவர் அடையாளம் காட்டினார். மறுநாள் சென்னையில், மகாராஷ்டிரா ஆளுநர் சங்கர நாராயணன் தலைமையில் அய்யப்பனுக்கு "குமாரன் ஆசான்" விருது வழங்கப்பட இருந்தது. இறந்துகிடந்த அவரது சட்டையின் கை மடிப்பில் இருந்த ஒரு துண்டுச் சீட்டில், ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தது. கவிதை போல் வாழ்வு என்பதற்கு உதாரணம், அய்யப்பன்.

"கண் அடைந்துபோகையில் பிணவறையில் இறந்தவனின் எண் சின்னங்களில் ஒன்றாய் என்னை நீ நினைப்பாயோ?"

என்ற கவிதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வைக்கிறது.

"இறந்து போன மகளின் சவப்பெட்டிக்காக
வாங்கிய கடன்
இன்னும் கட்டி முடியவில்லை"

என்று அய்யப்பன் எழுதியது அவரது வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அவர் இறந்து கிடந்த நாட்களில், கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருந்ததால், அவரது இறுதிச் சடங்குக்கு அமைச்சர்கள் வந்து இறுதி மரியாதை செய்வதற்காக என்று சொல்லி கிட்டத்தட்ட ஆறு நாட்கள் சவக்கிடங்கில் அந்தப் பிணம் காக்க வைக்கப்பட்டது. நெருப்புப் பிழம்பாய் வாழ்ந்த அந்த உடல் ப்ராய்லர் கோழியைப் போல் பதப்படுத்தி வைக்கப்பட்டது. எதற்காகத் தெரியுமா? தேர்தல் முடிந்து, அமைச்சர்கள், அரசியல்வாதிகள் வந்து ஒரு மலர்வளையம் வைப்பதற்காகவும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அரசு மரியாதை செய்வதற்காகவும் பிணவறையிலேயே கிடந்தார்.

"என்னிடம் ஒருவன் கேட்டான்
இன்னும் எத்தனை தொலைவு இருக்கிறது?
நான் சொன்னேன்
நெஞ்சக மருத்துவமனையிலிருந்து
பிணவறை வரைக்குமான தூரம்"

இங்ஙனம், சவக்கிடங்கு என்பதை தனது கவிதைகளில் பல இடங்களில் பதிவு செய்த அவரது உடல், அரசியல்வாதிகளின் வருகைக்காக அரசு இயந்திரத்தில் சிக்கியபோது கேரள இலக்கியவாதிகள், கவிஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

"பூகண்டம் தாண்டி நான்
போக நினைக்கையில்
பூமி எனக்காய் ஒரு
சிவப்புக் கொடி காட்டியது
சிக்னல் தவறிய வண்டி
எப்போது வரும்?"

என்று எழுதியவரை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வந்தது. ஆனால் சிவப்பு விளக்குடன் அரசு ஊர்தி வர தாமதமானது. வாழ்நாள் முழுவதும் கவிதைச் சிறையில் கிடந்தவர், கவிதையை மட்டுமே சுவாசித்தவர், எனக்கு கவிதைதான் தொழில் என்று வாழ்ந்தவர்.

"நினைவுகளில் காயங்கள்
நிறைய வேண்டுமென்றாலும்,
முதலில் வயிறு
நிறைந்திருக்க வேண்டும்"

என்றவர், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வலிகளின் சுமைகளைச் சுமந்து நடந்தார்.

"வீடில்லாத ஒருவனிடம்
வீட்டுக்குப் பெயர் வைக்கவும்,
குழந்தையில்லாத ஒருவனிடம்
குழந்தைக்குப் பெயர் வைக்கவும்
நீ சொல்லும்போது
இரண்டும் இல்லாதவனின்
நெஞ்சின் நெருப்பைப் பார்த்திருக்கிறாயா?"
என்று கவிதையில் தஞ்சமடைந்தார்.

"ஒரு நட்சத்திரத்தைக்
கொத்திக் கொண்டு போவதற்கு
என் கைகளிலிருந்து பறந்த புறா
தலையில் துளைத்த அம்புடன்
என் கைகளில்
செத்து விழுந்தது..." எனவும்,

"காயங்களின் வசந்தம்
என் வாழ்க்கை" எனவும் அவர் பதிவு செய்தார்.

"எனக்கு ஒரு வயதானபோது யாரோ ஒருவர் என் அப்பாவை பொட்டாசியம் சைனைட் கொடுத்துக் கொன்றார். பத்தாவது படிக்கும்போது மாணவர் இயக்கத்தின் செயலாளராக இருந்தேன். அன்று நாங்கள் பேரணியாக வரும்போது எதிரில் அம்மாவின் சவ ஊர்வலம் வந்தது. பிறகு என் சகோதரி மட்டும் மிஞ்சினாள். நான் வீட்டைத் துறந்தேன், ஒரு புத்தனைப் போல்" என்று தனது சுயசரிதையைக் குறிப்பிடும் அய்யப்பன் வாழ்வின் கடைசி வரையிலும் ஒரு சாய்வு நாற்காலி கவிஞராக இருக்கவில்லை. ரயில் நிலையங்கள், கடை வீதிகள், நண்பர்களின் அறைகள் மற்றும் நூலகங்களிலும் இருந்துதான் அவர் கவிதைகள் எழுதி வந்தார்.

"எனக்கொரு அறையில்லை
நான் காட்டிலும் கடற்கரையிலும்
கவிதை எழுதுகிறேன்
மழையும் வெயிலும் தாண்டி
கல்லையும் முள்ளையும் மிதித்து
காட்டிற்கான பயணம் ஆனந்தமானது
மலையில் போய் மறைந்த
வெளிச்சம் நாங்கள்
வலைபின்னக் கிடைக்காத
சிலந்திகள்"

என அனைத்துச் சூழல்களிலும் எடுத்தியம்ப தகுதியான வரிகளைத் தந்து சென்றார், திரு. அய்யப்பன்.

திராவிடத் தனித்துவமான சொற்சேர்க்கைகளால் வேறுபட்ட கவிதை பாரம்பரியத்தை நிறுவியவர். எழுதுகிற வேளையில் இருக்கின்ற மனோநிலையின் பாதிப்பு கவிதையின் வார்த்தைகளில் படிந்து விடுகிறது. எழுதுகிற பிரச்சினை நம்மை வேட்டையாடும்போது சிந்தனையில் தியானத்தில் ஆற்றலின் தன்மைகள் நம்மிலிருந்து அறுந்துபோகிறது. அது கனவுகளில் காட்சிப் படிமங்களாக உருமாறுகிறது. சில்வியா ப்ளாத், நீட்சே ஆகியோரின் கவிதைகள் போல தீவிரமான காட்சி படிமத்தை அய்யப்பனின் கவிதைகளிலும் காணமுடியும்.

"மஞ்சள் புலிகள்
குதித்து ஓடுவதைப்போல்
கொன்றைப் பூக்கள் வீழும்
காலத்தின் ஒருநாள்"

போன்ற கவிதைகள் கனவுகளின் பகுத்தறிவின்மையைத் தொடுகிறது.

'சட்ட விரோதமாக நடக்கத்தான் விருப்பம்' என்று கூறிய அய்யப்பனை அராஜகவாதி என்று அழைத்தனர். காந்தி மீது பிரிட்டிஷாரும் இப்படித்தான் முத்திரை குத்தினர். அவர் சட்ட மறுப்பு இயக்கத்தால் சவால் விடுத்தார். சமூகத்தில் நிலவிய அவலங்களை சகித்துக் கொள்ளாமல் போராடியபோது சேகுவேராவும் அராஜகவாதி என்றுதான் அழைக்கப்பட்டார். இன்று அருந்ததிராயும், நோம்சோம்ஸ்கியும் அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப் பேசும் போது அவர்களும் இந்தப் பட்டியலில்தான் இடம் பெறுகின்றனர்.

அய்யப்பன் தனது கவிதையில் எழுதினார் :

"பூக்களைப் பறித்துவிட்டு முட்களை வீசாதீர்
அந்த முட்களால்
பாசிஸ வரலாற்றின் அடிவாரங்களின்
தேவையற்ற வரிகளைக் காயப்படுத்துங்கள்"
இறுதியாக அவரது இறுதிக் கவிதை
"என் சவப்பெட்டி
சுமப்பவர்களுக்கு
வஸிய்யத் இல்லாத
ஒரு ரகசியம்
சொல்ல நினைக்கிறேன்
என் இதயத்தின் இடத்தில்
ஒரு பூ இருக்கும்
மண்ணால் மூடுவதற்கு முன்
இதயத்திலிருந்து
அந்தப் பூவைப் பறியுங்கள்
இதழ்களால்
முகத்தை மூடுங்கள்
ரேகைகள் மாய்ந்த உள்ளங்கையில்
ஓர் இதழ்
பூவினூடாக எனக்குத்
திரும்ப வேண்டும்
மரணத்திற்கு சற்று முன்பே
இந்த உண்மையைச்
சொல்ல நேரமில்லை
இல்லையெனில்,
சவப்பெட்டியை மூடாதீர்கள்
இனி என் நண்பர்கள்
இறந்தவர்கள்தானே"

மரணம், அய்யப்பா உன்னை வாழ வைத்தது.

(சமநிலைச் சமுதாயம் ஜனவரி 2011 இதழில் வெளியான கட்டுரை)

Pin It