சிப்பியும்
கிளிஞ்சல்களும்
சங்குகளும் நிறைந்த
ஒரு பெரிய மணல் வெளியில்

வாழ்வின் பெருவெளியாய்
அகன்று பரந்து செல்கிற
ஒரு நதியின் எச்சரிக்கையில்
மரணத்தின்
துர்வாசம் சுமந்த
அம்மிருகம் வெறிகொண்ட
பசியினால் விழித்தேயிருக்கும்

நக்கி வீசியெறிந்த
வாழையிலைப்போல்
நிர்வாணமாய் வீற்றிருக்கும்
படுக்கைக்கு உடுத்தியபடி

ஆடையின்றி
எச்சிலின் சுகம் மிகுந்த
துர்வாசம்
காதலை காதலால்
ஆக்கிரமித்துக் கொள்கின்றன

இருளைக்
கவ்வி இழுத்துப் போர்த்தியபடி
இருக்கும் அந்த இரவும்
வழக்கம் போல்
நிலவும் நட்சத்திரங்களும்
ஈரம் சுமந்து திரியும்
காற்றும் பனித்துளியோடு
கசகசத்துச் சிரிக்கும் பூக்களும்
எப்போதும் போலவே
விடியும் அந்த இரவும்
மாற்றமின்றியே!

- மருதம் ஷப.கெஜலட்சுமி

Pin It