விழி மீதேறிக் குதிக்கும்
ஆச்சர்ய புருவக் கதிர்களோடு
முதல் எதிர்கொண்ட யமுனாவை
சொற்களால் அளவிட இயலாமல்
நினைத்தபடி வெப்பச்சூரியனை உடைத்து
வழியேற்படுத்தி நடந்து கொண்டிருக்கிறது
வெம்மையிலிருந்து கரையேறிப் புகுந்த
அச்சிறு குளிர் நிறைவளாகத்தினுள்
கண்ணாடி முட்டியபடி
மென்வலி ரசித்துக் கொண்டிருந்த
மீன் குஞ்சுகளின் குறுகுறுப்
பார்வையின் பின்னலில்
பயணித்துக் கொண்டிருக்கிறது
மறக்காமல் நினைவு
சத்தத்திற்காய் காத்திருந்த
காதுகளில் படர்ந்தவொலியை
வார்த்தைகளாய் நிறைத்தபடி
யெதையோ நினைத்து
யெதையோ செய்து
யெதையோ நோக்கி
யெதுவோ ஆகி
யெங்கோ
பயணித்துக் கொண்டிருக்கிறது
நானாகிய அது.
- பொன்.வாசுதேவன்