இந்த ஆண்டு நவம்பர் தினம் நவம்பர் 20-ம் நாளன்று தேனி நகரில் ஒரு பொதுக்கூட்டம் மூலம் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. தேனியில் சி.டபிள்யு.பியின் செயல்பாடுகள் தொடங்கி ஒருசில ஆண்டுகளே ஆன நிலையில் தேனித் தோழர்கள் இப்பொதுக்கூட்ட ஏற்பாட்டினை பெருமகிழ்ச்சியுடனும் பெரும் முயற்சியுடனும் மேற்கொண்டனர். தேனி வட்டாரப் பொதுமக்களும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குத் தேவையான நிதி உதவியினைத் தந்து பேருதவி புரிந்தனர்.
தேனி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகவதி அம்மன் கோவில் திடலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் மார்க்சிய ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படங்கள் அலங்கரிக்க அக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தேனி மக்களிடையே பெரிதும் அறிமுகமான தோழர் ஜெயராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தோழர்கள் த.சிவக்குமார், வி.வரதராஜ், தங்கராஜ், செல்வராஜ், வதிலை சத்யா ஆகிய தோழர்களோடு சி.டபிள்யு.பியின் தென்இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் ஆனந்தனும் உரையாற்றினார்.
முதலில் உரையாற்றிய தோழர் வதிலை சத்யா தனது உரையில் நவம்பர் புரட்சிக் காலம் வரை உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற பல பாட்டாளி வர்க்க எழுச்சிகளை முன்வைத்தார்.
குறிப்பாக பாட்டாளி வர்க்க அரசான பாரி கம்யூன் அது உருவான 73 நாட்களிலேயே ஆளும் வர்க்கங்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது; நவம்பர் தினத்தின் மூலமாக சோவியத் யூனியனில் மலர்ந்த முதல் பாட்டாளி வர்க்க அரசு மாபெரும் பொருளாதார சக்தியாக மிகக் குறுகிய காலத்தில் பரிணமித்து இதுவரை மனிதகுல வரலாற்றில் தோன்றிய நிகழ்வுகளிலேயே மிகக் கொடுமையான நிகழ்வான பாசிஸ ஹிட்லரின் கோரத் தாக்குதலை இரண்டாவது உலகப் போரின் போது எதிர்கொண்டு பொருளாதாரத்தில் மட்டுமின்றி ஒரு மிகப்பெரும் இராணுவ சக்தியாகவும் உருவாகியது ஆகிய விசயங்களை விளக்கினார்.
அச்சமூக அமைப்பில் எவ்வாறு ஒரு சாதாரண கூட்டுப் பண்ணைத் தொழிலாளியான யூரி ககாரின் விண்வெளியில் பறந்த மாபெரும் விண்வெளி விஞ்ஞானியாக ஆக முடிந்தது என்பதையும் விளக்கினார். நவம்பர் தினம் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் அனுஷ்டிக்கப் படுவதன் காரணத்தையும் அவர் தெளிவு படுத்தினார்.
அவருக்கு அடுத்தபடியாக உரையாற்றிய அச்சகத் தொழிற்சங்கத் தலைவர் தோழர் செல்வராஜ் தனது உரையில் இன்றைய இந்திய முதலாளித்துவ அரசு விவசாயத்தை எப்படிப்பட்ட இழிநிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.
இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வும் அவை உரிய தருணத்தில் விவசாயிகளுக்குக் கிட்டாத போக்கும் பல விவசாயிகள் விவசாயத் தொழிலையே கைவிடும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதை விவரித்தார்.
அடுத்து உரையாற்றிய தோழர் தங்கராஜ் தனது உரையில் இந்த சமூக அமைப்பில் அனைத்துப்பகுதி மக்களும் அல்லலுற்றுக் கொண்டுள்ளனர்; அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களிலிருந்தான விடுதலை மக்கள் ஒன்றுபட்டு நடத்தும் இயக்கங்களின் வாயிலாக மட்டுமே நிகழவல்ல அடிப்படை சமூக மாற்றத்தின் மூலமே சாதிக்கப்பட முடியும்; அப்படிப்பட்ட இயக்கச் செய்திகளை முதலாளித்துவப் பத்திரிக்கைகள் திட்டவட்டமாக இருட்டடிப்புச் செய்கின்றன என்ற விசயங்களை விளக்கிப் பேசினார்.
உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் தமிழக அமைப்பாளர் தோழர் வரதராஜ் தனது உரையில் இந்தியப் பாட்டாளி வர்க்கம் நிமிர்ந்து நிற்க முடியாத வகையில் எவ்வாறு இலவசத் திட்டங்கள் அவர்களின் தார்மீக முதுகெலும்பை முறித்துள்ளன என்பதை விளக்கினார். ஜனநாயக ஆட்சி அமைப்பின் முக்கிய அம்சமான தேர்தல்கள் எவ்வாறு பணம் கொடுத்துப் பெறப்படும் வெற்றிகள் மூலம் பாழ்பட்டுப் போய் உள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
மாற்றுக்கருத்து ஆசிரியரும் கேளாத செவிகள் கேட்கட்டும் நூலின் ஆசிரியரும் சி.டபிள்யு.பி. அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர்களில் ஒருவருமான தோழர் சிவக்குமார் தனது உரையில் பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவை மக்களைப் பெரிய அளவு பாதித்திருந்தாலும் அதற்கு எதிராக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவர்களைத் திரட்டி நடத்தப்பட்ட இயக்கங்கள் மூலம் அப்பாதிப்பின் வெளிப்பாடு இல்லை என்பதை மிகுந்த ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.கழகத்தின் தலைவர் ஒருபுறம் இதற்கு எதிராக மக்களைத் திரட்டுவதை விடுத்து அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்ததன் பலனை மக்கள் தற்போது அனுபவிக்கிறார்கள் என்று வன்மம் பாடுகிறார்; மறுபுறம் இடதுசாரிக் கட்சிகளோ மக்களைத் திரட்டாமல் தங்களது ஊழியர்களைக் கொண்டு பெயரளவிற்கு சில ஆர்ப்பாட்டங்களை நடத்தி அத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்ற மனநிலையுடன் உள்ளன என்று கூறினார்.
இந்த நவம்பர் தினம் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு நவம்பர் தினங்களிலிருந்து மாறுபட்ட ஒன்று என்பதை அமெரிக்காவின் வால்வீதி போன்ற இடங்களில் நடக்கும் மக்களின் போராட்டங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
நமது அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் முதலாளித்துவம் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் பெரிய அளவில் உணர்ந்துள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த ஆண்டு நவம்பர் தினம் அமைந்துள்ளது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.
இறுதியில் சிறப்புரை ஆற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துக்களின் சாராம்சம்:
இங்கு குழுமியுள்ள மக்களுக்கு நவம்பர் தினம் அனுஷ்டிக்கப் படுவதன் முக்கியத்துவமும் காரணமும் பெருமளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கட்சிகள் ஏதாவது நிகழ்வுகளை அவ்வப்போது நடத்திக் கொண்டிருப்பது அவசியம்; அப்போது தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மக்கள் மனதில் நிற்கும்; அதற்காகச் சில கட்சிகள் முப்பெரும் விழா என்ற பெயரில் நிகழ்வுகளை நடத்துகின்றன; அதைப்போல் சி.டபிள்யு.பி. கட்சியைச் சேர்ந்தவர்கள் நவம்பர் தின நிகழ்ச்சியை நடத்தித் தங்களை மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைத்தால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
எனவே நவம்பர் தினம் பற்றி சில கருத்துக்களை உங்களிடம் முன்வைப்பது அவசியமாகிறது. நவம்பர் தினம் மனிதகுலத்தின் வரலாறு தோன்றிய காலத்திலிருந்து இதுவரை நடந்த நிகழ்வுகளிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதற்கு இணையான வேறெந்த நிகழ்வையும் ஒப்பிட்டுக் கூற முடியாத நிகழ்வாகும்.
எது வரலாறு
வரலாறு என்று நாம் கூறும்போது வரலாற்றை நாம் பாடப் புத்தகங்களில் படித்த அந்த விதத்திலேயே அது நமது நினைவிற்கு வருகிறது. அதாவது வரலாறு என்பது சிறப்புத் தன்மைகள் வாய்ந்த தனிமனிதர்களின் உயரிய நடவடிக்கைகளால் உருவாக்கப்படுவது என்ற கருத்தே நமக்கு போதிக்கப்பட்டது; இன்றும் போதிக்கப்படுகிறது. அத்தகைய வரலாறுகளைத் தெரிந்து கொள்வதால் பெரிய பலனொன்றும் இல்லை.
கடந்தகால நிகழ்வுகளை அறிந்து கொள்வதின் ஒரு அம்சம் அவை படிப்பினை தருபவைகளாக இருக்க வேண்டும் என்பதே. வரலாறு என்பது தனி மனிதர்களின் சாதனை என்ற விதத்தில் பார்க்கப்படுமானால் அதிலிருந்து பெறப்படும் படிப்பினை ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதாவது வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டால் வரலாற்றில் இடம் பெற்றுள்ள எவரைக் காட்டிலும் பெரிய மனிதராகத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் அவரிடம் இருக்க வேண்டும்; அதைத்தவிர சமூக ரீதியில் வரலாற்றுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது.
மக்கள் எழுச்சிகளே வரலாறு
ஆனால் வரலாற்றை அடிப்படையிலேயே மாறுபட்ட விதத்தில் பார்த்த பார்வை ஒன்று இருந்தது. அது மாமேதை மார்க்ஸின் பார்வையாகும். அவர் வரலாற்றை உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை மையப்படுத்தும் ஒன்றாகப் பார்த்தார்.
அந்த அடிப்படையில் மனித குலத்தின் முழு வரலாற்றையும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளாகக் கண்டார். அதாவது தொடர்ச்சியாக வளர்ந்துவரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த வகையில் உற்பத்தி உறவுகளை மாற்றி அமைப்பதற்காகவே மக்கள் எழுச்சிகள் உருவாகியுள்ளன. அத்தகைய மகத்தான எழுச்சிகள் மனிதகுல வரலாற்றின் அடிமை நிலைக்கு எதிராகவும் பண்ணை அடிமை நிலைக்கு எதிராகவும் இருமுறை நடந்தன.
இவையே வரலாற்றின் போக்குகளை மாற்றியமைத்த இரண்டு நிகழ்வுகள் அதன் பின்னர் கூலி அடிமை நிலைக்கு எதிராக ஏற்பட்ட மகத்தான எழுச்சியே நவம்பர் புரட்சியின் மூலம் நடைபெற்ற மூன்றாவது நிகழ்ச்சி.
முதல் இரண்டு எழுச்சிகளிலிருந்தும் கூட கூலி அடிமை நிலையை முடிவுக்குக் கொண்டுவருதற்காக நடைபெற்ற நவம்பர் சோசலிசப் புரட்சி பெரிதும் வேறுபட்டது. அதாவது முதலில் குறிப்பிட்ட இரண்டு எழுச்சிகளின் விளைவாகவும் தோன்றிய சமூக அமைப்புகளை ஆளுபவையாக உடமை வர்க்கங்களே அமைந்தன.
அதாவது அடிமை சமூகம் முடிவுக்கு வந்த நிலையில் நிலப்பிரபுக்கள் என்ற உடமை வர்க்கத்தினர் அதிகாரத்திற்கு வந்தனர். நிலப்பிரபுத்துவம் முடிவுக்கு வந்த நிலையில் முதலாளிகள் என்ற ரகத்தைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினர் அதிகாரத்திற்கு வந்தனர்.
இவற்றிலிருந்து மாறுபட்டு நவம்பர் சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே உழைக்கும் வர்க்கம் ஆட்சியதிகாரத்திற்கு வந்தது. அது வர்க்கங்களே இல்லாத ஒரு சமூகம் உருவாகும் என்பதை அதாவது கம்யூனிஸ சமூகம் உருவாகும் என்பதைக் கோடிட்டுக் காட்டியது.
அடிப்படைக் கோளாறு
முதலாளித்துவ சமூகம் அதன் ஆரம்ப காலத்தில் மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் நிகழ்வுகளை நிகழ்த்தியது. மூடநம்பிக்கைகள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக அது விளங்கியது.
மக்களுக்கிடையே நிலவிய அர்த்தமற்ற பல்வேறு வேறுபாடுகளை அது குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பெருமளவிற்குக் கலைந்தது. இருந்தாலும் அந்த அமைப்பின் உள்ளடக்கத்தில் இருந்த கோளாறான மனிதனை மனிதன் சுரண்டும் போக்கு ஒரு பகுதி மனிதர்கள் மற்றொரு பகுதி மனிதர்களை மிகவும் மோசமான வறுமைக்கும் பரிதவிப்பிற்கும் தள்ளும் கேவலமான ஒரு அமைப்பாக ஆகியது.
கற்பனாவாத சோசலிசம்
அதனைக் கண்ணுற்ற பல மனிதாபிமான சிந்தனை கொண்டவர்கள் அந்த நிலையை மாற்றுவதற்கு தனிமனித ரீதியில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்வைத்தனர். அவை கற்பனாவாத சோசலிசம் என்று அறியப்பட்டன. ஆனால் அப்படிப்பட்ட பரிந்துரைகள் நடைமுறையில் பெரிய பலன் எதையும் தரவில்லை. தொழில் நிறுவனங்கள் அதில் ஈடுபடும் தொழிலாளரின் நலனுக்கானவைகளாக செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு ஆலையின் அதிபராக இருந்தும் தனக்கு லாபம் தேவையில்லை என்று அறிவித்து தொழிலாளர் அனைவருக்காகவும் ஆலையை நடத்திய ராபர்ட் ஓவன் போன்ற கற்பனாவாத சோசலிஸ்ட் களால் அந்தப் போக்கை சமூகம் முழுவதற்கும் பரப்ப முடியவில்லை.
ஏனெனில் மனிதனின் சிந்தனை அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பொறுத்ததாகவே அமைகிறது. எனவே முதலாளிகள் தொழிலாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் இருவேறு சூழ்நிலைகளில் உள்ளனர். அவ்விரு மக்கட் பகுதியினருடைய சிந்தனைகளும் இருவேறு தன்மை கொண்டவைகளாக இருப்பது மட்டுமல்ல; அவை ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட தன்மைகளைக் கொண்டவையாகவும் உள்ளன.
அந்த நிலையில் ராபர்ட் ஓவன் போன்றவர்கள் பரிந்துரைத்த கற்பனாவாத சோசலிசம் சுரண்டப்படும் மக்களின் பிரச்னைகளுக்கு ஒரு சரியான தீர்வாக அமையவில்லை.
இயக்கவியல் பார்வை
அந்த நிலையில் தான் மாமேதை மார்க்ஸ் ஜெர்மனியின் தத்துவ ஞானி ஹெகல் முன்வைத்த இயக்கவியல் தத்துவத்தையும் பொருள்முதல்வாத சிந்தனையையும் ஒருங்கிணைத்து சமூகம், இயற்கை அனைத்தையும் பார்க்கும் ஒரு அற்புதமான இயக்கவியல் பொருள்முதல்வாதப் பார்வையை வகுத்தெடுத்தார்.
அவருடைய அந்தப் பார்வை சரியானதென அடுத்தடுத்து வெளிவந்த பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிரூபித்தன. கற்பனாவாத சோசலிச கருத்துக்களும் ஹெகல் முன்வைத்த கருத்துமுதல்வாத சிந்தனையும் அந்த இருவரில் ஒருவரின் உயர்ந்த நோக்கையும் மற்றொருவரின் ஒருபகுதி சரியான பார்வையையும் மறுபகுதி தவறான முடிவையும் வெளிப்படுத்தின. அதனால் அக்கருத்துக்கள் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை.
ஆனால் மாமேதை மார்க்ஸ் வகுத்தெடுத்த தத்துவமோ இதுவரை மனித குலத்தில் தோன்றிய அனைத்துத் தத்துவங்களிலிருந்தும் மிக உயர்வானதாக இருந்தது மட்டுமின்றி மற்ற தத்துவங்களைப் போல் அல்லாமல் அது நடைமுறை சாத்தியமானதாகவும் இருந்தது.
ஆம் மாமேதை மார்க்ஸ் கூறிய விதத்தில் இதுவரை தோன்றிய தத்துவங்கள் அனைத்தும் இந்த உலகைப் பல வழிகளில் பொருத்திக் காட்டும் வேலையை மட்டுமே செய்தன. ஆனால் சமூக அவலத்தின் மிகமுக்கியக் கேள்வியான அதனை மாற்றுவது என்பதை மார்க்சிஸம் மட்டுமே நவம்பர் புரட்சி மூலம் செய்தது.
கட்சியின் தேவை
ஆனால் அத்தகைய மாற்றம் அதாகவே ஏற்படக் கூடிய ஒன்றல்ல. அது சமூக மனிதனின் உணர்வு பெற்ற நேரடி நடவடிக்கையை பெரிதும் வேண்டுகிறது.
அவ்வாறு அத்தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயலும் போது அத்தத்துவத்தின் அடிப்படையிலான சமூக மாற்றத்திற்கு எதிரில் நிற்பது அமைப்பு ரீதியாகத் திரண்டெழுந்துள்ள முதலாளித்துவ அரசமைப்பாகும். அவ்வாறு அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள அரசமைப்பை அகற்றி அந்த இடத்தில் சமூக உற்பத்தி முழுவதையும் நடத்தும் உழைக்கும் வர்க்கத்தை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கு உழைக்கும் வர்க்கத்திற்கும் அமைப்பொன்று தேவை.
அந்த அமைப்பு ஒரு சாதாரண மக்கள் திரள் கண்ணோட்டத்தைக் கொண்டதாக இருக்க முடியாது. ஏனெனில் அது ஆளும் வர்க்கத்தின் மிகக் கொடிய அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்நிலையில் அது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழ வேண்டும்.
அத்தகைய பாட்டாளி வர்க்க அமைப்பு தான் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அந்தக் கட்சிக் கண்ணோட்டம் அதன் ஆரம்ப வடிவத்தில் மாமேதை மார்க்சின் சிந்தனையில் இருந்தாலும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் அதனைச் செழுமைப்படுத்தி மிகத் திறம்பட வடிவமைத்தவர் மாமேதை லெனின் ஆவார்.
உழைக்கும் மக்களின் தேவை மற்றும் மனநிலையைப் புரிந்து கொண்டவர்
மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில் ரஷ்ய சமூகத்தை சரியாகப் பகுத்தாய்ந்து பார்க்க முடிந்தவராக அவர் இருந்ததால் பொருளாதார ரீதியிலும் தொழில் வளர்ச்சியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல் அத்தனை வளராதிருந்த ஒரு நாட்டில் மாமேதை லெனினால் மனிதகுலத்தின் வரலாற்றையே மாற்றி அமைத்த ஒரு மகத்தான புரட்சியை நடத்த முடிந்தது.
அந்நாட்டில் நிலவிய முதல் உலகயுத்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு அவர் அந்நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய முழக்கங்களை வகுத்தெடுத்தார். அனைத்தும் போர்முனைக்கே என்ற முதலாளித்துவ மற்றும் மென்ஷ்விக் அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் முழக்கங்களுக்கு எதிராக மக்களின் இன்றைய தேவை ரொட்டியும் அமைதியுமே என்ற முழக்கத்தை மாமேதை லெனின் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது.
இவ்வாறு உழைக்கும் மக்களின் மனநிலையையும் அதன் தேவையையும் மிகச் சரியாகக் கணித்ததன் மூலமே அவர் அந்த மகத்தான சமூக நிகழ்வை ஆற்ற முடிந்தது. அந்த நிகழ்வு ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் என்ற புது சகாப்தத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது.
அந்த நிகழ்வு ஒரு நாட்டில் அதன் சூழ்நிலைகளுக்கு மட்டும் பொருந்தும் விதத்தில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல. அது உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வகையில் பொருத்தமுடையது. அதாவது அது பாட்டாளி வர்க்கப் புரட்சி தேசிய வடிவத்தையும் சர்வதேச உள்ளடக்கத்தையும் கொண்டது என்பதை நிரூபித்தது. எனவே தான் எங்கெல்லாம் சமூக அமைப்புகள் கூலி அடிமைத்தனத்தில் உலன்று கொண்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் அப்புரட்சி அடிப்படையில் பொருத்தமுடையது. அதனால்தான் நவம்பர் தினத்தை நாமும் நமது நாட்டில் அனுஷ்டிக்கிறோம்.
பாரி கம்யூன் படிப்பினை
இப்போது தான் அந்த அமைப்பு இல்லாமல் போய்விட்டதே. இந்நிலையில் அதை அனுஷ்டிப்பதன் அவசியம் என்ன? என்ற கேள்வி பலரது மனதில் எழலாம். ஆனால் நவம்பர் புரட்சி என்ற சமூக நிகழ்வும் முதன்முதலாக ஒரு நாட்டில் எடுத்த எடுப்பில் வந்துவிடவில்லை. அதற்கு முன்பு பாரி கம்யூனில் அந்த முயற்சி முதல் முறையாக மேற்கொள்ளப் பட்டது. அந்த முயற்சியின் மூலம் பல முக்கியப் படிப்பினைகள் உழைக்கும் வர்க்க இயக்கத்திற்குக் கிடைத்தன.
அதில் ஒரு முக்கியப் பிடிப்பினை பாட்டாளி வர்க்க ஆட்சி அமைப்பு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்க முடியும் என்பதாகும். ஏனெனில் அனைத்து மக்களுக்கும் பாரி கம்யூனின் பாட்டாளி வர்க்க அரசு வழங்கிய உரிமைகளைப் பயன்படுத்தியே அந்த அமைப்பை உடமை வர்க்கங்கள் நிர்மூலமாக்கின. எனவே ஒளிவுமறைவற்ற விதத்தில் பார்த்தால் எந்த அரசுமே ஒரு அடக்குமுறைக் கருவிதான் என்பது தெளிவாகிறது. இன்று ஜனநாயக அரசுகள் என்ற பெயரில் செயல்படும் முதலாளித்துவ அரசுகள் சிறுபான்மை முதலாளிகளின் நலன்களைக் காப்பதற்காக பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் முதலாளித்துவ சர்வாதிகார அரசுகளே.
இதற்கு எதிர்மாறாகப் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் ஜனநாயகமானதாகவும் அங்கிருக்கும் சிறுபான்மை உடமை வர்க்கத்தைப் பொறுத்தவரையில் சர்வாதிகாரமாகவும் இருக்கும் அரசமைப்பாகும்.
அந்த வகையில் பெரும்பான்மை மக்களின் ஜனநாயக அரசு என்ற ரீதியில் இன்றிருக்கக்கூடிய முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் அனைத்தையும் காட்டிலும் பலமடங்கு ஜனநாயகமானதே பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாகும்.
திட்டமிடுதலும் உணர்வு மட்டமும்
அதுபோன்ற படிப்பினைகளை எடுத்துக் கொண்டு நவம்பர் புரட்சியின் மூலம் தோன்றிய முதல் பாட்டாளி வர்க்க அரசும், அதன் பின்னர் பல்வேறு புரட்சிகள், போர்ச் சூழல் போன்றவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உருவான பல மக்கள் ஜனநாயக சோசலிச அரசுகளை உள்ளடக்கிய சோசலிச முகாமும் தற்போது இல்லாமல் போயுள்ளது.
சோசலிசம் மென்மேலும் வளர்ந்து அது கம்யூனிஸ சமூகமாக மாறுவதற்கு மக்களிடையே ஒரு மிகச் சிறந்த பொது நலனை அடிப்படையாகக் கொண்ட உணர்வு மட்டம் பராமரிக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி பாட்டாளி வர்க்க அரசு சரியான திட்டமிடுதலை அடிப்படையாகக் கொண்டு செயல்படவும் வேண்டும். இவ்விரண்டு நிபந்தனை களும் மிகச் சரிவரப் பராமரிக்கப் பட்டதன் காரணமாகத்தான் முதலாளித்துவ அமெரிக்கா உலகம் முழுவதையும் கொள்ளையடித்து 200 ஆண்டு காலத்தில் சாதிக்க முடிந்த வளர்ச்சியை சோசலிச சோவியத் யூனியன் 37 ஆண்டுகளில் சாதித்தது. ஆனால் இத்தகைய உணர்வு மட்டத்தைப் பராமரிப்பதற்கு மிகச் சரியான கட்சித் தலைமை அவசியம்.
அத்தகைய தலைமை தோழர் லெனின், ஸ்டாலின், போன்றவர்களால் கொடுக்கப்பட்ட வரை சோவியத் யூனியனில் சோசலிசம் பீடுநடை போட்டது. ஸ்டாலினின் மறைவிற்குப் பின் திட்டமிடுதலில் ஏற்பட்ட கோளாறு முதலாளித்துவ வழிமுறைகளைப் பின்பற்றுவதில் சென்று முடிந்தது.
அப்போதிருந்த குருச்சேவ் போன்றவர்களின் திருத்தல்வாதத் தலைமை திட்டமிடுதலில் மட்டுமின்றி மக்களின் உணர்வு மட்டத்தைப் பராமரிக்கவும் திராணியற்றதாக ஆகிவிட்டது. அதன் விளைவாகவே செல்லரித்தது போல் சோவியத் சோசலிச அமைப்பு எதிரிவர்க்கப் போக்குகளால் உள்ளூரத் திரணற்றதாகி கோர்பச்சேவ், எல்ட்சின் போன்றவர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
எவ்வாறு பாரிக் கம்யூனிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மாபெரும் தலைவர்கள் சோசலிச சமூகமாற்றத் திட்டத்தை நேர்த்தியுடன் வடிவமைத்தனரோ அதேபோல் இப்போது உள்ள உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் மேலே கூறிய கோளாறுகளிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு சமூகமாற்றத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
ஏன் வராது
இவையெல்லாம் கருத்தாக முன்வைப்பதற்கும் பேசுவதற்கும் நன்றாக இருக்கக்கூடிய விசயங்கள்; எங்கே இவையெல்லாம் அமலுக்கு வரப்போகின்றன என்ற எண்ணம் மக்களிடையே நிச்சயமாக மண்டிக் கிடக்கிறது. ஆனால் அதே சமயத்தில் சோசலிசமே இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின் முதலாளித்துவத்தால் சமூகத்தை ஓரளவிற்கேனும் பிரச்னைகள் இல்லாததாக நடத்த முடிகிறதா என்பதையும் அவர்கள் பார்க்க வேண்டும்.
முதலாளித்துவத்தின் ஒரு குடையின் கீழான ஆட்சி நிலவும் இன்றைய நிலையில் என்றுமே இல்லாத அளவிற்குச் சமாளிக்க முடியாத நெருக்கடியில் முதலாளித்துவ நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. கிரேக்க நாட்டில் முதலாளித்துவ அரசு திவால் நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமையில் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், அயர்லாந்து போன்ற நாடுகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
அவற்றிலிருந்து மீள்வதற்கு வழியேதுமில்லை என்ற நிலையில் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருதே ஓரே வழி என்ற நிலை உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தால் எவ்விதத் தயக்கமுமின்றி எடுக்கப்படுகிறது.
நெருக்கடி
அமெரிக்காவின் வால் வீதியில் நடைபெறும் போராட்டத்தில் இருந்து கிரேக்க நாட்டின் அரசு, தொழிலாளருக்கான பல்வேறு சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வரை இங்கிலாந்து நாட்டின் மாணவர் கிளர்ச்சி தொடங்கி பிற அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு அளவுகளில் நடைபெறும் கிளர்ச்சிகள் வரை அனைத்தும் ஒரு முழக்கத்தை அடிநாதமாகக் கொண்டுள்ளன. அந்த முழக்கம் முதலாளித்துவம் தான் நமது முழுமுதல் எதிரி என்பதே.
யார் எதிரி
இவ்வாறு உலகம் முழுவதும் பேரெழுச்சிகள் கிளர்ந்தெழுந்தாலும் பெரிதாக என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழலாம். அளப்பரிய தியாகங்கள் பலவற்றைச் செய்தவர்களாக இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக்கூடிய கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் இருந்தாலும் சோவியத் திருத்தல்வாதத் தலைமையின் செல்வாக்கு அவர்களை அப்பட்டமான நாடாளுமன்றப் பாதைக்குத் திருப்பிவிட்டு விட்டது.
அதன் விளைவாக அவர்கள் வர்க்க அரசியலைக் கைவிட்டுவிட்டு மற்ற கட்சிகளின் தலைவர்களைப் போல் ஒரு அரசியல் வர்க்கமாக ஆகிவிட்டனர். மற்ற கட்சிகளிலிருந்து மாறுபட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரு வேறுபட்ட அம்சமே அதனால் சமூக முன்னேற்றத்தின் எதிரிகள் என்று விஞ்ஞானப்பூர்வ ஆய்வின் மூலம் ஒரு மக்கட் பகுதியைக் காட்ட முடியும் என்பதுதான். ஆனால் இன்று அவர்கள் பின்பற்றும் அரசியல் அவ்வாறு யார் எதிரி என்பதையே காட்ட முடியாதவர்களாக அவர்களை ஆகிவிட்டது.
இதிலிருந்து படிப்பினை எடுத்துக் கொண்டு சோசலிசப் புரட்சிப் பாதையை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்ட இயக்கத்தை வளர்த்தெடுத்தால் அது நிச்சயமாக இங்கும் மிகப்பெரும் எழுச்சிகளை உருவாக்கும். கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளின் எதிரிகளை நண்பர்களாகக் காட்டும் கோளாறான அரசியல் பாதை தற்போது உழைக்கும் வர்க்கத்திலிருந்து அவர்களை அன்னியப்படுத்தியுள்ளது.
உலகமயத்தின் விளைவாக ஒருபுறம் நிராதரவான நிலைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் நிச்சயமற்ற ஒருவகை வளர்ச்சியும் நமது நாட்டின் ஒரு சிறு பகுதி மத்தியதர மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் தற்போது உள்ளூரக் கனன்று கொண்டிருக்கும் ஒரு மனநிலை உருவாகியுள்ளது.
ஆனால் வெளியில் தோன்றும் அவர்களின் மெளனத்தை மையமாக வைத்து இந்திய ஆளும் வர்க்கம் மனப்பால் குடித்துக் கொண்டுள்ளது. அவர்கள் இந்திய முதலாளித்துவத்தை நமது எதிரிகள் என அடையாளம் காட்டும் அமைப்புகளை நோக்கி வெகு விரைவில் அணிதிரளப் போவது உறுதி.
அந்த நிலையை உருவாக்க, வளர்த்தெடுக்க சரியான கம்யூனிஸ்ட் அமைப்பாக நமது அமைப்பை உருவாக்க விரும்பும் சி.டபிள்யு.பி. தோழர்கள் பாடுபட வேண்டும். அப்படிப்பட்ட நிலை தோன்றும் போது மகத்தான நவம்பர் தினத்தின் வரலாறும் படிப்பினைகளும் நமக்கு உரிய வழியினை நிச்சயம் காட்டும்.
அப்படிப்பினைகளை ஆக்கப்பூர்வ முறையில் உள்வாங்கிக் கொண்டு நமது நாட்டின் சூழலைச் சரியாகக் கணக்கிட்டு மக்களை இயக்கப் பாதையில் வழிநடத்தி மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு நமது மண்ணிலும் முடிவு காண்போம் என்று கூறி அத்துடன் நமது இந்திய சமூகத்தின் பல்வேறு கலாச்சார ரீதியானதும் சமூக ரீதியானதுமான பிரத்தியேகப் போக்குகளையும் எடுத்துரைத்து அவற்றை மார்க்சிய அடிப்படையில் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறி தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.
தேனியில் நடைபெற்ற இந்த நவம்பர் தினப் பொதுக்கூட்டம் தேனி மக்கள் சி.டபிள்யு.பி. அமைப்பை ஏறெடுத்துப் பார்க்கும் ஒரு சூழலை பெரிய அளவிற்கு உருவாக்கியுள்ளது. கூட்டம் ஏற்படுத்திய தாக்கத்தால் அதற்குக் குறைந்த அளவிற்கு நிதி வழங்கியவர்கள் கூட பின்னர் வெளிப்படையாகவே இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய அமைப்பு இது என்று தெரிந்திருந்தால் இன்னும் கூடுதலாகவே நன்கொடை கொடுத்திருப்போம் என்று கூறும் விதத்தில் அக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன் வாயிலாகச் சரியான அடிப்படை அரசியல் வழியின் கீழ் தேனி வட்டாரத்திலும் பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்கள் இயக்கங்கள் பெருமளவு வளரப் பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.