அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும்  ஜுலியன் அசான்ஜ்

ஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.

அதாவது மனிதர்கள் பிறப்பால் சமமானவர்கள். பிறக்கும் போதே இவன் அடிமை இவன் ஆண்டான் என்று கூற முடிந்தவர்களாக மனிதர்கள் வேறுபட்டு நிற்பதில்லை என்பதை அக்கருத்து வலியுறுத்தியது. அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பில் அதன் முக்கிய முழக்கம் மனிதனின் பிரிக்க முடியாத உரிமைகள், சுதந்திரம் என்பனவாக இருந்தன.

அமைப்புகளும் முழக்கங்களும்

அதாவது பிறப்பால் ஏற்றத் தாழ்வு பாராட்டிய அடிமை சமூகத்திலிருந்து நிலவுடமை அமைப்புத் தோன்றியதால் அதன் முழக்கம் அடிமை சமூகத்தின் கருத்தோட்டமான ஆண்டான் அடிமைக் கண்ணோட்டத்தை எதிர்த்ததாக இருந்தது.

அதைப்போல் நிலவுடமை சமூக அமைப்பிலிருந்து தோன்றிய முதலாளித்துவ சமூக அமைப்பின் நோக்கம் சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரத்தைக் கடந்து லாப நோக்கப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டதாக இருந்தது. அந்த லாபத்தை ஈட்டுவதற்கான உற்பத்தியை நடத்துவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உற்பத்திக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் தொழிலாளரைப் பெறுவதற்கும் அதற்குச் சுதந்திரமும் உரிமைகளும் தேவைப் பட்டன.

குறிப்பாக நிலவுடமை சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பண்ணையடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தனர். அவர்களை விடுவிப்பதற்கு உரிமை மற்றும் சுதந்திரம் குறித்த முழக்கங்களை முன்வைப்பது முதலாளி வர்க்கத்திற்கு அவசியமாக இருந்தது. அந்த அடிப்படையில் தான் உரிமை சுதந்திரம் குறித்த முழக்கங்கள் ஆரம்பகால முதலாளித்துவத்தின் தாரக மந்திரங்களாக விளங்கின.

கருத்து உட்பட அனைத்தையும் அடக்க நினைப்பதே அரசு

அரசு என்பது வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகங்களுக்கு மட்டுமே அவசியமானது. அது அடிப்படையில் ஒரு அடக்குமுறைக் கருவி அதாவது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக ஆளப்படும் வர்க்கத்தை அடக்கி வைப்பதற்காக அதன் மேல் அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்காக இருக்கும் கருவி.

ஆட்சியதிகாரத்திற்கு வருவதற்காக உரிமைகள், சுதந்திரம் குறித்து வாய்கிழியப் பேசும் ஆட்சியதிகாரத்தின் அங்கங்களாக உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பின் அது அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவை குறித்து அதிகம் பேசுவதில்லை.

நான்காவது தூண்கள்

அந்நிலையில் கருத்துக்களைத் தாங்கி வருபவையாக இருக்கும் பத்திரிக்கைகளின் தோள் மேல் அந்தக் கடமை அதாவது சுதந்திரமாகக் கருத்துக்களைத் தாங்கிச் சென்று மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை விழுந்தது. அதானல்தான் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று கருதப்பட்டன.

இக்கருத்தைக் கூறியவர் புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற வாதியான எட்மன்ட் பர்க் ஆவார். அவர் இங்கிலாந்து நாட்டின் அரசு அதிகாரத்தில் முக்கிய நிறுவனங்களான மன்னர், தேவாலயம், பாராளுமன்றம் இவற்றை முதல் மூன்று தூண்களாகவும் பத்திரிக்கைகளை நான்காவது தூணாகவும் வர்ணித்தார்.

ஆங்கில இலக்கியத்தில் புகழ்பெற்ற நாடக மற்றும் சிறுகதை எழுத்தாளரான ஆஸ்கர் வொய்ல்டு பத்திரிக்கைகள் மட்டுமே உண்மையான தூண்கள்;

ஏனெனில் மன்னருக்கு எதையும் செய்யும் அதிகாரம் இல்லை. தேவாலயத்தின் நிலையும் அதுதான். நாடாளுமன்றமோ தனக்கு உண்மையில் இல்லாத அதிகாரத்தை இருப்பதாகப் பாவித்துக் கொண்டு செயல்படுகிறது. எனவே ஜனநாயகத்தை வழிநடத்தும் அதிகாரம் பத்திரிக்கைகளின் கைகளிலேயே உள்ளது என்று கூறினார்.

அடிப்படை உண்மை

நாடாளுமன்றம் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகப் பாவித்துக் கொண்டு செயல்படுகிறது என்ற கூற்றின் மூலம் அவர் ஒரு அடிப்படை உண்மையை வெளிக் கொணர்ந்தார். அதாவது கருத்து சுதந்திரத்தை வானளவிற்கு வலியுறுத்தும் முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலாளிகளின் நலன்களைத் தாண்டி நாடாளுமன்றம் எதையும் செய்ய முடியாது.

உண்மையான நடைமுறை இதுவாக இருக்கையில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் பல இருப்பது போல் ஒரு பொய்த் தோற்றம் முன்னிறுத்தப் படுகிறது. அரசின் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக அதன் நிரந்தர அங்கங்களான நிர்வாகம், நீதி அமைப்பு, போலீஸ் ராணுவம் ஆகியவை இருக்கின்றன. நாடாளுமன்றங்கள் இந்த நிரந்தர அங்கங்களை இயக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன.

எனவே இந்த நிரந்தர அங்கங்களின் செயல்பாட்டை நாடாளுமன்றங்களால் மாற்ற முடியாது. இதைத் தான் கேலித் தொனியில் ஆஸ்கர் வொய்ல்டு தனது மேற்கூறிய கூற்றின் மூலம் முன்வைத்தார்.

ஆட்டம் காணும் நான்காவது தூண்கள்

அந்த அளவிற்கு அதிசக்தி வாய்ந்தவைகளாக முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றிய காலத்தில் இருந்த கருத்து சுதந்திரத்தின் பாதுகாவலன் என்ற பத்திரிக்கைகளின் அந்தஸ்து படிப்படியாகக் குறைந்து இன்று மிக மோசமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இத்தகைய சீரழிவு பல்வேறு வகைகளில் நடந்துள்ளது. நிலவுடமைத் தளையிலிருந்து மன ரீதியாக மக்களை விடுவிப்பதற்கு ஒரு சமயம் பயன்பட்ட கருத்து சுதந்திரம் இன்று பல விதங்களில் முடக்கப்படுகிறது.

முதலாளித்துவம் சமூக ரீதியான உற்பத்தி தனிநபர் ரீதியாக அதன் பலன்களை அபகரிக்கப்பது என்ற தன்மை கொண்டதாக இருப்பதால் அதன் நெருக்கடி முற்றிய சூழ்நிலையில் அது தங்கு தடையற்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மாறியுள்ளது.

அதாவது கருத்து சுதந்திரம் உரிய வழியில் தங்கு தடையின்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டால் அது பல உண்மைகளை வெளியில் கொண்டு வரும் வேலையைச் செய்யும்; அதனால் அந்த உண்மைகள் அனைத்திலும் அடிப்படையான உண்மையாக விளங்கும் சமூக ரீதியான உற்பத்தி தனிநபர் ரீதியான அபகரிப்பு என்பதே சமூகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்ற உண்மையை மக்கள் அறிந்து கொண்டு விடுவர்.

அது முதலாளித்துவ அமைப்பின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்பதால் முதலாளித்துவ அரசுகள் பல கட்டுப்பாடுகளை பத்திரிக்கைகள் மீது விதிக்கத் தொடங்கின.

போர் மற்றும் அவசர நிலைக் காலங்களில் பத்திரிக்கைத் தணிக்கை முறை அமலுக்குக் கொண்டுவரப் பட்டது. ஆட்சேபகரமான வி­யங்கள் என்று கருதப்படும் செய்திகளைப் பிரசுரிக்க அனுமதி மறுக்கும் உரிமை தணிக்கை விதிகள் மூலம் அரசிற்கு வழங்கப்பட்டது.

இதுதவிர பத்திரிக்கைகள் பதிவு பெறுவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் என்ற அடிப்படையிலும் சுதந்திரத்தின் மூச்சுக் காற்று முடக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நேரடி ஒடுக்குமுறை நடவடிக்கைகளோடு பத்திரிக்கைகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவரும் பல்வேறு பிற நடவடிக்கைகளும் அரசுகளால் மேற் கொள்ளப்பட்டன.

பத்திரிக்கைகள் அவை தொடங்கப்பட்ட காலத்தில் மக்களுக்குச் சொல்வதற்கென்று முக்கிய விஷ‌யங்களை தங்கள் கைவசம் கொண்டிருந்தவர்களாலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஆனால் அதுவும் ஒரு தொழிலாக ஆகிய சூழ்நிலையில் அங்கும் மூலதனம் புகுந்தது. படிப்படியாக பத்திரிக்கைத் தொழிலிலும் முதலாளித்துவம் நிலை கொண்டது.

அந்நிலையில் முதலாளித்துவத்தின் அடிப்படை நலன் பாதிக்கப் படாமல் இதுவரை எழுதி வந்த பத்திரிக்கைகள் முதலாளித்துவத்தின் அன்றாட நலன் பேணும் வகையிலும் எழுதத் தொடங்கின. பத்திரிக்கைகள் முக்கியமாகத் தகவல்களை மட்டும் அளிப்பவையாக ஆகிவிட்டன.

முதலாளித்துவ சமூக அமைப்பில் மூடிமறைக்கவே முடியாத அளவிற்கு உள்ள ஊழல், லஞ்சம் போன்றவையே அது வெளியிடும் பிற செய்திகளின் கருப் பொருட்களாக ஆகின.

அரசு விளம்பரம் எனும் ஆயுதம்

அதுதவிர பத்திரிக்கைகளின் சுதந்திரம் மற்றும் நடுநிலைத் தன்மைகளை அரசாங்கங்கள் தங்கள் கைவசம் இருந்த அரசு விளம்பரங்கள் மூலம் நாசூக்காகக் கட்டுப்படுத்தத் தொடங்கின.

அதன்மூலம் கிடைக்கும் கணிசமான தொகையை மனதிற்கொண்டு அரசுகளின் மீது பத்திரிக்கைகள் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ விமர்சனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. படிப்படியாகப் பத்திரிக்கைகளின் தொனியும் எதையுமே உறுதியாகச் சொல்லாத முடியாததாக மாறியது.

முதல் பத்தியில் சொல்லும் வி­யத்தின் கூர்மையை இறுதிப் பத்திகளில் மழுங்கடிப்பது போல் எழுதும் ஒரு முதுகெலும்பற்ற நடை பெரும்பாலான பத்திரிக்கைகளின் நடையாகிப் போனது.

இவ்வாறு இன்றைய நிலையில் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசுகள் அனைத்தும் ஜனநாயகப் போக்கைக் கடைப்பிடிக்காது அதன் முகத் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டே மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பாசிஸ நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன.

இவ்வேளையில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக பத்திரிக்கைகள் ஆற்ற வேண்டிய பணி ஏராளமாக உள்ளது. ஆனால் பத்திரிக்கைகளின் எழுத்துக் கூர்மை, உண்மைகளைத் தயங்காமல் உரைக்கும் மனோதிடம், நடை, தொனி ஆகிய அனைத்துமே நாம் மேலே விவரித்த காரணங்களால் சீரழிந்து நிற்கின்றன.

இணைய தளங்களின் சேவை

முழு உண்மைகள் மக்களிடம் சென்று சேர்வதே இல்லை என்ற அளவிற்கு நிலைமை சீரழிந்துள்ள இன்றைய நிலையில் அதன் ஒரு மிகப்பெரும் நிவாரணமாக வந்தது இணைய தளங்களின் வளர்ச்சியாகும்.

இணைய தளங்கள் மூலமாகப் பல உண்மைகளைப் பல சாதனங்களிடமிருந்து பெற்று ஒன்றை ஒன்று பொருத்திப் பார்த்து முழு உண்மையை அப்படியே அறியும் வாய்ப்பு நமக்குக் கிட்டியுள்ளது.

இணைய தளங்கள் அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் போராட்டங்களில் மக்களை அணிதிரட்ட உதவும் சாதனங்களாகவும் மிகப் பெருமளவு பயன்பட்டன.

உலகமயக் கொள்கைகளின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திய, சியாட்டில் நகரையே உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடந்த வேளையில் நிலை குலையச் செய்த 40,000 பேருக்கு மேல் மக்கள் பங்கேற்ற மகத்தான இயக்கம் இணையதள அறிவிப்புகள் மூலமே ஒருங்கு திரட்டப்பட்டது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்த பத்திரிக்கைகள் கருத்து சுதந்திரத்தை மேற்கூறிய அடிப்படையில் உயர்த்திப் பிடிக்கத் தவறிய வேளையில் இணைய தளங்கள் அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை மூடிமறைக்கும் போக்குகளுக்கு ஒரு மிகப்பெரும் சவாலாக ஆகின. அதை எப்படி முடக்குவது என்பதே இன்று பல அரசுகளின் முழு முயற்சியாக உள்ளது.

இந்திய அரசு கூட இன்டர்நெட் கஃபேக்கள் இனிமேல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எனப் பல கட்டுப்பாடுகளை இன்டர்நெட் பயன்படுத்துவோர் மீது தற்போது விதித்துள்ளது. இப்போது கூட இந்திய அரசு பல தகவல்கள் மக்களுக்குச் சென்றுசேரா வண்ணம் அவற்றைத் தடுக்குமாறு கூகுல் இணையதளத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

விக்கிலீக் கேபிள்கள்

இந்தச் சூழ்நிலையில் பத்திரிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒரு உன்னத உயரத்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் செயல்படும் பத்திரிக்கையாளராக விக்கிலீக் அதிபர் ஜுலியன் அசான்ஜ் உருவாகியுள்ளார்.

அவர் விக்கிலீக் கேபிள்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் உண்மைகள் உலகின் அரசுகள் பலவற்றின் பசுத்தோல் போர்த்திய புலியாகச் செயல்படும் போக்குகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளன. அதற்காக உலக அரசுகள் பலவற்றின் எதிரியாக அவர் மாறியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய எதிரியாக அவர் மாறி யுள்ளார். அவரை உயர் தொழில் நுட்பப் பயங்கரவாதி என்று அமெரிக்கா சித்தரிக்கிறது. அவரது நடவடிக்கை களைக் கண்காணிப்பதற்கென்றே சி.ஐ.ஏ-யின் ஒரு பிரிவைக் கூட அது உருவாக்கியுள்ளது.

முதலாளித்துவ அரசியல் உலகமே தங்களது தலைவர்களின் எந்தத் திரைமறைவு நடவடிக்கைகள் எப்போது வெளியாகுமோ என்பதை எண்ணி நடுங்கிக் கொண்டுள்ளன.

அசான்ஜ் தலைமை ஏற்று நடத்தும் விக்கிலீக் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் பத்திரிக்கைகளின் ரகத்தைச் சேர்ந்ததல்ல. ஆனாலும் அவை வெளியிடும் பல்வேறு தகவல்கள் அரசுகள் குறித்த பரபரப்புகளை ஏற்படுத்தவல்லவையாகவே உள்ளன. விக்கிலீக் கசிவுகள் வெளிப்படுத்தும் செய்திகள் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

மூன்றுவகைத் தகவல்கள்

அதாவது அவர் விவரிக்கும் விதத்தில் மக்களிடம் சென்று சேரும் தகவல்கள் மூன்று தன்மைகளைக் கொண்டவையாக உள்ளன.

முதல்வகைத் தகவல்கள் இப்பூவுலகின் தண்ணீர், தாதுப் பொருட்கள் போன்ற இயற்கை சாதனங்கள் குறித்தவைகளாகும். அவற்றைப் பெரும்பாலும் முதலாளித்துவ நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்குப் பயன்படுத்துகின்றன; இரண்டாவது வகைத் தகவல் சாதனம் நூல்களாகும். அவை ஆழமான, தீர்க்கமான அறிவைத் தரக் கூடியவை. அவற்றின் வளர்ச்சியில் தற்போதைய நிறுவனங்கள் பெரும் அக்கறை எதுவும் காட்டுவதில்லை.

மூன்றாவது வகைத் தகவல்கள் அரசுகள் தோன்றிய காலம் தொட்டே அதாவது ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க, ரோம சாம்ராஜ்யங்கள் தோன்றிய காலம் தொட்டே மக்களின் பார்வைக்கு எட்டாமல் மூடிமறைத்துக் காப்பாற்றப் படுபவை.

ஏனெனில் வர்க்கச் சார்புடன் செயல்படும் அமைப்பு என்ற ரீதியில் என்றுமே அரசுகள் மக்களின் பார்வையில் படாமல் மறைப்பதற் கென்று சில வி­யங்களைக் கொண்டவையாகவே இருந்துள்ளன; தற்போதும் இருக்கின்றன. ஜீலியன் அசான்ஜ் இன்று ஏற்பட்டுள்ள இணைய தள வளர்ச்சியின் உதவியால் அவற்றை வெளிக்கொணர்ந்து அரசுகளின் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்தும் ஒரு அரும்பணியைச் செய்கிறார்.

மறுக்க முடியாதவை

பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகள் பெரும்பாலும் பத்திரிக்கையாளர்களின் பார்வையின் அடிப்படையிலேயே மெருகூட்டப்பட்டோ அல்லது திருத்தவும் புரட்டவும் பட்டோ கொண்டுவரப் படுபவை.

அவற்றிலிருந்து முழுமையாக மாறுபட்டு விக்கிலீக் கசிவுகள் முழு உண்மைகளை எந்த வகையான பொருத்திக் காட்டுதல்களும் இன்றி அப்பட்டமாக அப்படியே முன்வைப்பவையாக உள்ளன. அவற்றை யாரும் மறுக்கவே முடியாது என்ற அடிப்படையினைக் கொண்டவையாகவும் உள்ளன.

அந்தக் கசிவுகளின் மூலமாக வெளிப்படும் உரையாடல்கள் பத்திரிக்கைகளில் எழுத்து வடித்தில் பிரசுரிக்கப்பட்டு ஆவணங்கள் ஆகின்றன.

அந்த அடிப்படையில் பல அரசுகள் எவ்வகையிலும் தப்பிக்க முடியாத அளவிற்கு விக்கிலீக் கேபிள்களால் இதுதான் நீ என்று தோலுரித்துக் காட்டப் படுகின்றன. அதுதான் இக்கேபிள் கசிவுகள் குறித்து உலக அரசுகள் நடுநடுங்குவதற்கான மிகமுக்கியக் காரணமாகும்.

ஆட்டம் கண்ட ஆட்சியாளர்கள்

இதனால் தான் இந்தியா குறித்த பல தகவல்கள் இக்கசிவுகள் மூலம் வெளிவரப் போகின்றன என்பது தெரிந்தவுடனேயே ஹில்லாரி கிளின்டன் போன்றவர்கள் இந்திய ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் அரசிற்கும் எங்கள் அரசிற்கும் பல சங்கடங்களைத் தோற்றுவிக்கவல்ல பல செய்திகள் இவற்றால் வெளிவரப் போகின்றன; எனவே அவற்றைச் சந்திப்பதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

ஹில்லாரி கிளிண்டன் அவ்வாறு கூறியுள்ளதன் நோக்கம் அச்செய்திகள் குறித்தக் கேள்விகள் எழுந்தால் அவற்றைச் சமாளிப்பதற்கு இந்திய ஆட்சியாளர்களைத் தயார் படுத்துவதேயாகும். ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்: அமெரிக்க அரசு இத்தகவல்களை ஏற்கவோ மறுக்கவோ போவதில்லை; அதனைப் புரிந்து கொண்டு எதையயதையயல்லாம் பேசி நிலைமையைச் சமாளிக்க முடியுமோ அதையயல்லாம் பேசி சமாளித்துக் கொள்ளுங்கள் என்று.

அதன் காரணமாகவே அணுசக்தி ஒப்பந்த வாக்கெடுப்பின் போது பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவு விலைக்கு வாங்கப்பட்ட தென்ற குற்றச்சாட்டு விக்கிலீக் கேபிள் களால் உறுதி செய்யப்பட்ட போது இது சோதித்தறிய முடியாத ஒரு வி­யம் என்று கூறி பிரதமர் மன்மோகன் சிங் பணம் கொடுக்கப்பட்டதை மறுத்தார். அவர் மறுத்தாலும் அவர் வாதத்தில் சத்தும் இல்லை சாரமும் இல்லை என்பது உலகளவில் அம்பலமாகிவிட்டது.

இந்த அளவிற்கு அரசுகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக விக்கிலீக் கசிவுகள் அமைவதால் அதில் பணிபுரியும், அதற்கு உதவி செய்யும் பலர் கைது செய்யப் படுகின்றனர். அந்நிறுவனம் செயல்படு வதற்கென வைத்திருக்கப்படும் நிதி முடக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஜீலியன் அசான்ஜ் மீது கற்பழிப்புக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப் படுகின்றன.

நான் வாழும் சமூக அமைப்பு சரியானதாக இருக்க வேண்டும்

இந்நடவடிக்கைகள் ஒரு தனிமனிதன் சுரண்டல் அரசுகள் பலவற்றின் சிம்மசொப்பணமாக ஆகியுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றன. இத்தனை இடைஞ்சல்களையும் எதிர்கொண்டு இந்நிறுவனத்தை அவர் நடத்துவதற்கான காரணம் என்ன?

அதை அவரிடம் கேட்ட போது அவர் கூறிய காரணம்: நாம் வாழும் சமூகத்தில் பல கோளாறுகள் உள்ளன. பல அநியாய, அதர்மங்கள் நடைபெறுகின்றன. அவற்றைக் களைவதன் முதல்படி அவற்றை அறிந்து கொள்வதாகும். அவ்வாறு அறிந்து கொள்ளச் செய்யும் ஒரு பணியையே நான் செய்கிறேன். அதாவது நான் வாழும் சமூகம் சரியானதாக இருக்க வேண்டும் என்ற எனது விருப்பமே இதனைச் செய்ய என்னைத் தூண்டுகிறதுஎன்பதாகும்.

சரியானது எது - எடுத்துக்காட்டு

சரியானது, சரியற்றது என்ற கேள்விகள் இடத்திற்கு இடம் நபருக்கு நபர் வேறுபடும் தன்மைகள் கொண்டவை. அவ்வாறு இருக்கையில் பொதுவில் சரியானதென எதனைக் குறிப்பிட முடியும் என்ற கேள்வி எழும்போது அவர் அதனை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். இரண்டு குழந்தைகள் விளையாடுகின்றன. அதில் வயதிலும் உருவிலும் சிறியதாக இருக்கும் ஒரு குழந்தை அதற்குக் கிட்டிய ஒரு பொம்மையை வைத்து விளையாடுகிறது. அச்சமயத்தில் அங்கு வந்த வயதிலும் உருவிலும் பெரிய குழந்தை அப்பொம்மையை அதன் கைகளிலிருந்து பறிக்கிறது. இது சரியானது என்று எவராலும் கூற முடியாது”.

எனவே சரியானவை, தவறானவை என்பவை இருக்கவே செய்கின்றன என்பதை இந்த உவமையின் மூலம் அவர் விளக்கியுள்ளார். இதைக் காட்டிலும் எளிமையாகச் சரியானது எது என்பதை விளக்கும் உரிய எடுத்துக்காட்டு எதுவாக இருக்க முடியும்?

எளியவரை வலியவர் ஒடுக்கும் சூழ்நிலையே இன்றைய சமூகத்தில் அடிப்படையான பிரச்னையாக உள்ளது. அந்த நிலையில் அதனை எடுத்துக் காட்டுடன் விளக்கி அதனைச் சரிசெய்வதே தனது நோக்கம் என்று பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு செயல்படும் ஜீலியன் அசான்ஜ்ன் தீரமிக்க பணிக்காக அவரை கருத்துலகம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.

தனது சித்தாந்தம் இதுவென எதையும் அறிவித்துச் செயல்படாதவராக இருந்த போதிலும் அவர் தனது தீரமிக்க தீவிர முயற்சி எடுத்துச் செய்யும் பணிகளால் முற்போக்கு இயக்கங்களின் வளர்ச்சிக்கும் சமூகத்தைச் சரியான தாக்குவதற்கான அவற்றின் முயற்சிக்கும் ஈடுஇணையற்ற உதவிகளைச் செய்துள்ளார்.

முற்போக்கு இடதுசாரி இயக்கங்களின் பல வலுவான பிரச்சாரங்கள் கூட ஆற்ற முடியாத மக்கள் முன் அரசுகளைத் தோலுரித்து முன்னிறுத்தும் பெரும் பணியினை அவரது கேபிள் கசிவுகள் செய்துள்ளன. அத்தகைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கை என்ற ரீதியில் மாற்றுக் கருத்து தனது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் ஈடுஇணையற்ற அவரது நிறுவனத்தின் சேவைக்கு உரித்தாக்குகிறது.

Pin It