கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் .சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் .ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

 

தோழர் ஆனந்தன் தனது உரையில் மக்கள் எதிர்கொண்டுள்ள விலையுயர்வு, வேலையின்மை ஆகிய பிரச்னைகளை விளக்கினார். அந்தப் பிரச்னைகள் எவ்வாறு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாதவையாக முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரை இருந்தே தீரும் பிரச்னைகளாக உள்ளன என்பதை எடுத்துரைத்தார். பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் அதிருப்தி ஆளுகின்ற கட்சி மீது ஏற்பட்டாலும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி உறுதியாகத் தோல்வியடையும் என்ற நிலை தோன்றாதுள்ளது. அதற்கான காரணம் ஆளும் கட்சி மத்திய அமைச்சரவையில் குறிப்பிட்ட அமைச்சகங்களைக் கோரிப் பெற்று அவற்றில் ஊழல் செய்து ஈட்டிய பணத்தைத் தனது வெற்றிக்காக வாக்காளர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதே.

 

எதிர்க்கட்சியினரும் அப்பிரச்னையை கையிலெடுத்துப் பேசத் தயங்குகின்றனர். அதற்கான காரணம் பணம் வழங்குவதைப் பிரச்னையாக ஆக்கினால், வாக்காளர்கள் பணம் கிடைப்பதைக் கெடுத்து விட்டனர் என்ற எண்ணத்தில் தங்களுக்கு வாக்களிக்காமல் போனாலும் போய் விடுவர் என்ற எண்ணம் அதாவது பாராளுமன்ற வாதம் அவர்களை ஆட்டிப் படைப்பதேயாகும்.

 

ஆனால் தேர்தலில் விளையாடும் இந்தப் பணம் அதனை வழங்கி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வருவோரை அவர்கள் எத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்  தட்டிக் கேட்க முடியாத அடிமைகளாக வாக்காளர்களை ஆக்கி விடுகிறது. இக்கொடுமையைத் தேர்தல் அரசியலே சாத்தியமான ஒரே அரசியல் என்று எண்ணுவோரால் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக அணிதிரள வாய்ப்புள்ள உண்மையான ஜனநாயக சக்திகளை ஒருங்கு திரட்டிப் போராட முடிவதில்லை. மக்கள் இயக்கங்களின் மீது நம்பிக்கையுள்ள, தேர்தல் அரசியல் அத்தகைய மக்கள் இயக்கங்கள் வலுப்பெற மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படக் கூடிய ஒரே கட்சியினால் மட்டுமே இது செய்யப்பட முடியும் என்பதை எடுத்துரைத்தார்.

 

சரியான அரசியல் கட்சியின் தேவையை வலியுறுத்திய அவர், அது போன்றதொரு கட்சி எகிப்தில் இல்லாததன் காரணமாகவே ஜனநாயகத்திற்காக அணிதிரண்ட மகத்தான மக்கள் சக்தி முஸ்லீம் பிரதர்கூட் அல்லது இராணுவம் ஆகியவற்றில் ஏதாவதொன்றால் பயன்படுத்திக் கொள்ளப்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது என்ற கருத்தை முன்வைத்தார். மக்கள் மெளனமாக இருப்பதால் அவர்களிடம் எழுச்சியுணர்வு இல்லாமற் போய்விட்டது என்று கருத முடியாது. அதற்கு எடுத்துக்காட்டு டுனிசியாவின் எழுச்சி, வேலையில்லாத இளைஞன் ஒருவனின் தீக்குளிப்பு அந்நாட்டில் மட்டுமல்ல பல ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஜனநாயகத்திற்கான மக்கள் எழுச்சிகளைத் தூண்டுவதாக அமைந்தது என்பதை எடுத்துரைத்தார்.

 

ஆளும் முதலாளி வர்க்கத்திற்குச் சேவை புரிய ஏராளமான கட்சிகள் உருவாக முடியும்; ஏனெனில் முதலாளிகளுக் கிடையில் நிலவும் தொழில் போட்டியின் விளைவாக முதலாளித்துவத்திற்குச்  சேவை செய்யப் பல கட்சிகளும் இருக்க முடியும்; ஒரே கட்சிக்குள் கூடப் பல குழுக்களும் இருக்க முடியும். ஆனால் பாட்டாளி மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வு முதலாளி வர்க்கத்தை ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியயறிவதே என்பதாக இருப்பதால் அந்நோக்கை நிறைவேற்ற ஒரே கட்சியே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக ஒரு நாட்டில் ஒரு சமயத்தில் இருக்க முடியும்.

 

அதன் தலைவர் தொண்டர்களின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்கினை வகிக்க வல்லது அது கட்டும் மக்கள் இயக்கங்களே. மக்கள் இயக்கங்களில் உதட்டளவில் மட்டுமின்றி உள்ளத்தளவிலும் கவனம் செலுத்தாத எந்தக் கட்சியும் அது தனது தலைவர் மற்றும் தொண்டரின் வளர்ச்சிக்காக எத்தனை தன்வயமான நடவடிக்கைகளை எடுத்தாலும் அவற்றால் அதன் தொண்டர் தலைவர்களிடம் தேவைப்படும் கலாச்சாரத் தரத்தை கொண்டு வர முடியாது. அத்தகைய தன்வயமான நடவடிக்கைகள் ஒரு ஆசிரமத் தன்மையைக் கட்சிகளுக்கு ஏற்படுத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்பதை விளக்கினார்.

 

அத்தகைய சரியான தத்துவார்த்த ரீதியிலான வளர்ச்சியை ஒரு புறமும் மக்கள் இயக்க நடைமுறையை மறு புறமும் கடைப்பிடிக்கும் அமைப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் சி.டபிள்யு.பிஐ வலுப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

 

தேனியில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புடன் நடத்தப் பெற்ற இந்த அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் தேனி நகரின் அரசியல் உணர்வுபெற்ற மக்களின் பார்வையை சி.டபிள்யு.பி. அமைப்பின் பக்கம் திருப்பும் வகையினதாக அமைந்தது.

 

Pin It