நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில் தேர்தல் குறித்த சில விசயங்களை அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. மார்க்சிய அடிப்படையில் பார்க்கும்போது தேர்தல்கள் எப்போதுமே சாதாரண உழைக்கும் மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பவையாக இருப்பதில்லை. எனவேதான் நாடாளுமன்றவாதத்தை மார்க்சிய அரசியல் அறிஞர்கள் எப்போதுமே எதிர்த்து வந்துள்ளனர். அதன் மேல் உழைக்கும் மக்கள் முழுமையான நம்பிக்கை வைப்பது தவறானது என்று எச்சரித்தும் வந்துள்ளனர்.

இருந்தாலும் மாமேதை லெனினால் தலைமை தாங்கப்பட்ட ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றங்களில் பங்கேற்கவும் செய்துள்ளது. எப்போதெல்லாம் மக்கள் இயக்கங்கள் நடத்துவதற்கு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒரு அடக்குமுறைச் சூழ்நிலை நிலவுவியதோ அப்போதெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் அது பங்கேற்றுள்ளது. அடக்குமுறை அதிக அளவில் ஏவிவிடப்படாமல் இயக்கங்கள் நடத்துவதற்கு அதிகத் தடை எதுவும் இல்லாமல் மக்கள் இயக்கங்கள் முழுவீச்சில் நடைபெறும் போது நாடாளுமன்றங்களின் பக்கம் கவனம் திசை திருப்பிவிடப்படுவது கடுமையாக அக்கட்சியால் விமர்சிக்கவும் பட்டுள்ளது.

பொதுவான கம்யூனிஸ்டுகளின் புரிதல் நாடாளுமன்ற அரசியல் மூலம் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிலைநாட்ட முடியாது என்பதே. அதாவது ஒரு பிரத்யேகச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று ஒரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்குச் சேவை புரிவதற்காக வளர்த்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய அரசு எந்திரத்தை அப்படியே உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக மாற்ற முடியாது; அந்நிலையில் சமாதானப்பூர்வமாகவே அதைக் கலைத்துவிட்டு உழைக்கும் வர்க்கத்திற்கான அரசு எந்திரத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்; இதுவே தேர்தல்கள், ஜனநாயகம் குறித்த மார்க்சியப் புரிதலாகும்.

1957‡ல் இந்திய அனுபவம்

இந்தப் புரிதலுக்கு முரணாக அமைந்த முதல் நிகழ்வு இந்தியாவில்தான் ஏற்பட்டது. எந்த நாடாளுமன்ற முறை உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு உகந்ததல்ல என்று கருதப்பட்டதோ அந்த நாடாளுமன்ற ஆட்சி முறையின் படி நடத்தப்பட்ட தேர்தல்கள் மூலம் 1957‡ம் ஆண்டு கேரள மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் கேரள கம்யூனிஸ்டு மந்திரி சபையில் முதல்வராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் நாடாளுமன்றங்கள் மூலமே கம்யூனிஸ்டுகள் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறினார். அதன் பின் அமிர்தஸரசில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது கட்சிக் காங்கிரசும் அக்கருத்தை பிரதிபலித்தது.

அதே சமயத்தில் குருச்ஷேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது காங்கிரசில் செய்த கொள்கை ரீதியான தடம் புரலல்களுக்கும் அது ஒத்ததாக இருந்தது, அதாவது இருபதாவது கட்சி காங்கிரஸின் தீர்மானம் ஒன்றின் மூலம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சமாதானப்பூர்வ நாடாளுமன்ற வழிமுறையின் மூலம் சோசலிசத்தை கொண்டு வர முடியும் என்று கூறியது. அதை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாவது கட்சி காங்கிரஸ் கட்சி அதன் குறிக்கோளை சமாதானப்பூர்வ முறையில் அடையப் பாடுபடும்' என்ற சரத்தை புதிதாக அதன் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்த்தது. ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடித்துச் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. விமோச்சன சமரம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட போராட்டத்தின் மூலம் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியிலிருந்து இறக்கப்பட்டது.

சிலி - அனுபவம்

அதன் பின்னர் உலகறிந்த அளவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் மூலம் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் கம்யூனிஸ்டுகள் அமர்ந்தது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆகும். அங்கு 70-களில் சால்வடார் அலென்டே அவர்கள் தலைமையில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு அமைந்தது. ஆனால் அவரது தேர்தல் வாக்குறுதியான அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்கியது, அவரது ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டினால் தூக்கிஎறியப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்நடவடிக்கை இத்தகைய தலையீட்டை உருவாக்கும் என்று அவருடைய நெருங்கிய சகாக்கள் எச்சரித்தனர். அதனை எதிர்கொள்ள உரிய தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அவரைக் கேட்டுக் கொள்ளவும் செய்தனர்.

ஆனால் அவர் அவற்றை புறக்கணித்தார். அதனால் இந்த துயர சம்பவம் அங்கு நிகழ்ந்தது, கம்யூனிஸ்ட் ஆட்சியை தூக்கி எறிந்ததோடு அமெரிக்காவினால் அங்கு ஆட்சியாளனாக நியமிக்கப்பட்ட பினோசே, அலெண்டே உள்பட பல்லாயிரக் கணக்கில் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவிக்கும் கொடும்பாதகச் செயலிலும் ஈடுபட்டான். அமைதியான முறையில் சோசலிஸத்தை அமைத்துக் காட்டுவோம் என்ற விசயத்தில் அவர் மிகவும் பிடிவாதமாக இருந்தது அவருடைய உயிரையும், பாப்லோ நெருடா போன்ற உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு வாங்கிய கவிஞர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் உயிர்களையும் காவு கொண்டது.

நேபாளத்தின் புத்தம் புது அனுபவம்

இத்தகைய விதிவிலக்குகள் தவிர மார்க்சிஸத்தின் தேர்தல் குறித்த அடிப்படையான அரசியல் கண்ணோட்டத்தை நடைமுறைப் பூர்வமாக மறுதலிக்கும் சம்பவங்கள் வேறெங்கும் நடந்ததில்லை. மிக நீண்ட நாட்களுக்குப்பின்பு அத்தகைய ஒரு நிகழ்வு நேபாளத்தில் நிகழ்ந்தது. அதாவது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவேயிஸ்ட்) தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தது. மார்க்சிஸம் என்பதும் அதன் பார்வையும் பல வறட்டுச் சூத்திரங்களின் தொகுப்பல்ல. ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகச் சூழ்நிலைக்கும் உகந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டியதே மார்க்சிய விஞ்ஞானமாகும்.

அந்த அடிப்படையில் இந்த நிகழ்வுகளைப் பார்த்தோமானால் அவற்றின் தனித்தன்மைகளை அலசி ஆராய்ந்தோமானால் அந்த நிகழ்வுகள் ஏற்பட்டதற்கும், அதன்பின் ஏற்பட்ட விளைவுகளுக்குமான காரணங்களை நன்கு அறிய முடியும்.

கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சியின் வெற்றியே அது

அவ்விதத்தில் கேரளாவில் தேர்தல் மூலமான கம்யூனிஸ்ட் அமைச்சரவை ஏற்பட்டதற்கும் காரணங்கள் உண்டு. கேரளத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களாக விடுதலைப் போராட்டக் காலத்தில் விளங்கி அதன் பின் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் மக்களுக்கு இருந்த புரிதல் மற்றும் உணர்வு அடிப்படையில் ஏற்பட்ட வெற்றி என்பதைக் காட்டிலும் 1957ல் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தேர்தல் வெற்றி ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். போன்ற முன்னாள் காங்கிரஸ் கட்சியையும் அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியையும் சார்ந்த தலைவர்களின் மேல் கேரள மக்களுக்கு இருந்த அபிமானத்தின் காரணமாக பெறப்பட்ட வெற்றியே ஆகும்.

இதனை குடியரசு தலைவரால் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் இ.எம்.எஸ். அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முன்வைத்த வாதங்களே புலப்படுத்தும். தனது மந்திரி சபை அதீதமாக எதையும் செய்து விடவில்லை காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து தீவிர ஜனநாயக இயக்கங்களும் செய்ய விரும்பியதே என்றே அவர் பிரச்சாரம் செய்தார். அவரது மந்திரி சபை கொண்டு வந்த கல்வி மசோதாவும் நிலச் சீர்திருத்த மசோதாவும் கொள்கை ரீதியாக அன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடானதே.

எனவே அங்கு 1957ல் ஏற்பட்டது ஒரு முழுமையான வடிவத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்ற வெற்றியல்ல. எத்தனையோ தியாகங்கள் புரிந்த தலைவர்களையும் தொண்டர்களையும் கொண்டதாக அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்த போதும் அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டிய விதத்தில் உருவாகி வளர்ந்த கட்சி அல்ல. அதன் தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் ஒத்த நோக்கம், ஒருமித்த சிந்தனை போன்ற மிக அத்தியாவசியமான மார்க்சிய சிந்தனைப் போக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. அதன் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்குத் தேவையான தத்துவார்த்த மத்தியத்துவம் அக்கட்சியில் ஏற்படவில்லை.

எனவே உண்மையான அர்த்தத்தில் 1957ல் கேரளாவில் அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்ட ஒரு கட்சிக்கு தியாக சிந்தனையுடன் கூடிய அக்கட்சியின் தலைவர் மற்றும் தொண்டர்களின் மேல் இருந்த அபிமானத்தின் காரணமாக கிடைத்த வெற்றியே தவிர, உண்மையான அர்த்தத்தில் ஒரு சோசலிஸ அமைப்பை ஏற்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த வெற்றி அல்ல.

நாடாளுமன்ற விசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட விலை

அதைப் போல் சிலியில் அலெண்டே பெற்ற வெற்றி தங்கள் தேச வளங்கள் தங்கள் நாட்டின் மேம்பாட்டிற்குப் பயன்படாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொள்ளை கொள்ளப்படுவதற்கு எதிராகக் கிடைத்ததே தவிர, சுரண்டல் முறையை அப்படியே தூக்கிஎறிய வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கோட்பாட்டின் அடிப்படைக்கு கிடைத்த வெற்றியல்ல. சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அவற்றை எடுத்தால் எத்தகையப் பின்விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்து அதற்கான தயாரிப்புகளை செய்த பின்னரே அவற்றை எடுக்க வேண்டும்.

ஆனால் சிலியில் அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமான செப்புச் சுரங்கங்களை தேசியமயமாக்குவதற்கு முன்பு அலெண்டே அதன் பின்விளைவாக அமெரிக்காவின் தாக்குதல் வரும் என்பதை பார்க்கத் தவறிவிட்டார். அவரது பல நண்பர்கள் வற்புறுத்திக் கூறியும் கூட அவர் அமெரிக்கத் தாக்குதல் வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மக்களின் தொண்டர்படை எதையும் உருவாக்கவில்லை. இதன் விளைவாகவே ஒரு ராணுவ அதிகாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விலைக்கு வாங்கப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவ சதியின் மூலம் அகற்ற முடிந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலியின் சோஸலிஸ்ட் கட்சியும் பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு விசுவாசமானவர்களாக ஆகிவிட்டனர். தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு வர்க்க கருவியே என்பதையும் அதனை வேறொரு வர்க்கத்தின் நலனுக்கானதாக மாற்ற முடியாது என்பதையும் மறந்துவிட்டனர்.

முற்றிலும் புதிய நேபாள அனுகுமுறை

மிக சமீபத்தில் நடந்த நேபாள நிகழ்வுகள் உண்மையிலேயே மிகவும் சுவைகரமானவையும், தேர்தல் ஜனநாயகம் குறித்த மார்க்சிய லெனினிய கருத்துக் கருவூலத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பவையாகவும் அமைந்தன. மார்க்சிய கட்சிகள் எவையும் அதுவரை முன்வைத்திராத ஒரு புதிய கருத்தை தோழர் பிரச்சந்தா தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட்) கட்சி வைத்தது. அதாவது பல கட்சி ஜனநாயகம் நேபாளத்தில் நிலைநாட்டப்படும் என்று அது அறிவித்தது. அது குறித்த ஐயப்பாடுகள் எழுப்பபட்ட பொழுது பல கட்சி ஜனநாயக முறையை மனப்பூர்வமாக தாங்கள் கடைபிடிக்கப் போவதாகவும் சி.பி.என் (மாவோயிஸ்ட்)கள் தயக்கமின்றி உறுதி கூறினர்.

வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டே கட்சிகள் உருவாகின்றன; அதனால் உழைக்கும் வர்க்கத்தின் நலன் ஒன்றையே பிரதானமாக கருதும் கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான ஆட்சிமுறையில் பல கட்சி ஆட்சி முறைக்கு இடமில்லை. ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஏற்படும் ஆட்சி முறையில் உழைக்கும் வர்க்கம் ஒன்றின் நலன் மட்டுமே பிரதானமாக கருத்தில் கொள்ளப்படும். மற்ற சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தும் படிப்படியாக சமூகக் கட்டு மானத்திலிருந்தே அகற்றப்படும்.

எனவே அங்கு பலகட்சி ஆட்சிமுறைக்கு வாய்ப்பே இல்லை என்பது தான் மார்க்சிஸத்தின் இன்றுவரை நிலவி நிலைபெற்றிருக்கும் கருத்தாகும். இதிலிருந்து மாறுபட்டு பலகட்சி ஆட்சி முறைக்கு ஆதரவாக நேபாளின் சி.பி.என். (எம்) கட்சி முதல் முறையாக ஒரு புதிய கருத்தினை முன் வைத்தது.

இது உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்படும் கட்சிகள் சென்றது போல் வர்க்க சமரசப் பாதையில் நேபாள் மாவோயிஸ்டுகளும் சென்றுவிட்டனர் என்பதை காட்டுகிறதா என்பது நம் முன் எழும் கேள்வியாகும். இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடுகையில் மிகவும் பொறுமையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் நேபாளின் ஜனநாயகப் போராட்டம் ஒரு தியாகம் செறிந்த வரலாற்றினை கொண்டது. அரசின் நிரந்தர ராணுவத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு நேபாளத்தின் கிராமப்பகுதிகளில் பெருநில உடைமையாளர்களை எதிர்த்தும் அது போராடியது. நிலத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றி அவற்றில் கூட்டு விவசாய முறையை ஏற்படுத்தியது. பல அடிப்படையான சமூக மாற்றப் பணிகளை வெற்றிகரமாக திட்டமிட்டு, அதற்காக தனது அருமைத்தோழர் பலரின் உயிர்களை இழந்து செய்து முடித்த கட்சி சி.பி.என் (மாவோயிஸ்ட்) ஆகும். அத்தகையை கட்சியை எடுத்த எடுப்பில் அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு மார்க்ஸிய நிலைபாட்டிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறது என்பதற்காக ஒரு வர்க்க சமரச சக்தி என்று கூறிவிட முடியாது;

நேபாள நாட்டின் பிரத்தியேக நிலை

நேபாளத்தில் நிலவும் பிரத்தியேக நிலையை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொண்டே இது குறித்த எந்த முடிவிற்கும் வரவேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் நேபாளத்தின் கிராமப்புற மக்களை அடிப்படை சமூக மாற்றப்பாதையில் ஏற்கனவே அணி திரட்டிவிட்ட சி.பி.என்.(மாவோயிஸ்ட்) அமைப்பு பிற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக அமைப்பை கொண்டுவருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதின் மூலம் நகர்ப்புற முற்போக்கு சக்திகளையும் வெற்றிகரமாக தன்பக்கம் அணிதிரட்டி உள்ளது. பல கட்சி ஆட்சிமுறை என்ற பெயரில் சுரண்டல் வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை கொடுப்பதன் மூலம் அவை அந்நாட்டில் அதிகபட்சம் எதைச் செய்துவிட முடியும்?

அந்த உரிமையைப் பயன்படுத்தி சமுதாய மாற்றப் போக்கிற்கு பல முட்டுக்கட்டைகளை அக்கட்சிகள் போட முடியும். அந்த அனைத்து முட்டுக் கட்டைகளையும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து அந்த பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அப்பிரச்னையை சி.பி.என்(மாவோயிஸ்ட்) போன்ற ஒரு கட்சி எளிதாகவே அகற்ற முடியும்.

ரஷ்ய அனுபவமும் நோபள அனுபவமும் வெவ்வேறானவை

சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதில் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான வழி பின்பற்றப்படவில்லை; பின்பற்றப்படவும் முடியாது. ஏனெனில் எந்த இரண்டு சூழ்நிலைகளும் முழுக்க முழுக்க ஒரே மாதிரியானவையாக இருக்க முடியாது. முதன்முதலில் உலகில் தோன்றிய சமூக மாற்ற எழுச்சி ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிஸ்ட் புரட்சியாகும். அதில் ஆளும் வர்க்கத்தின் பல பலவீனங்களையும் அச்சயமத்தில் நடந்து கொண்டிருந்த முதல் உலக யுத்த சூழ்நிலையையும் அதனால் மக்கள்பட்ட துயரங்களையும் பயன்படுத்தி உரியதருணத்தில் ரஷ்ய முதலாளிவர்க்கத்தின் கையிலிருந்து ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்க கட்சி, ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் பறித்தது. உண்மையான சோசலிஸப் புரட்சியின் கட்டுமான வேலைகள் அதன் பின்னரே தொடங்கின.

எனவே அந்த முதல் சோசலிஸ அரசை நசுக்குவதற்கு உலக முதலாளிவர்க்கம் முழுவதும் தயார் நிலையில் இருந்ததால் அப்போது ஏற்பட்ட தொழிலாளி வர்க்க அரசின் வடிவம் மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லாவிடில் புரட்சியை காப்பாற்ற முடியாது என்பதே அன்று நிலவிய வெளிப்படையான நிலையாகும். மேலும் அந்த நாடு மிகப்பரந்த நாடு. எதிர்ப்புரட்சி சக்திகள் அந்நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தங்களது சீர்குலைவு நடவடிக்கைகளை ஆரம்பித்தால் அங்கு தொழிலாளி வர்க்க இயக்கம் அத்தனை முனைப்புடன் இல்லாவிட்டால் அச்சூழ்நிலையை சமாளிப்பது மிகக் கடினம். எனவே பாட்டாளி வர்க்கத்தின் அரசு வடிவமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மிக கடுமையாக அங்கு அமுல்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் இன்றைய நேபாளமோ அத்தனை பரந்த நாடல்ல. மேலும் அங்கு அரசு நிர்வாகம் எட்டமுடியாத இடங்களில் எல்லாம் சி.பி.என்(எம்) கட்சிக்கு அந்நாட்டில் அமைப்புகள் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டன. அக்கட்சியின் பலவீனமான பகுதியே நகர்ப்புறங்கள்தான். எனவே அரசின் ராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பிற்போக்கு சக்திகளின் சுரணடல் அமைப்பைத் தக்க வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் இயக்கங்கள் மூலமாகவே அவற்றை எதிர்கொள்வது மிகச் சரியான வழிமுறை ஆகும். அதன் மூலம் என்றும் நிமிர முடியாத அளவிற்கு உடைமை வர்க்க சக்திகளை உழைக்கும் மக்களே ஓரங்கட்டி நிறுத்த முடியும்.

எனவே பல கட்சி ஆட்சிமுறையில் வெளிவரும் சுரண்டல் வர்க்க கட்சிகளில் கருத்துக்களை வெளிப்படையாக வரவிட்டு, அவற்றின் உள்ளார்ந்த சுரண்டல் வர்க்க தன்மைகளை அம்பலப்படுத்தி அவற்றிற்கு எதிரான மக்களின் கருத்துக்களை திரட்டி முறியடிப்பது ஒரு மிகச் சரியான வழிமுறையாகும். இவ்வாறு சமூக இயக்கங்களை இதுவரையில் எந்த கம்யூனிஸ்டு கட்சியும் செய்திராத விதத்தில் இயக்கப் பாதையின் மூலம் நேபாளத்தில் அமுல்படுத்துவது ஒரு புது வரலாறாகவே இருக்கும்.

தெருவில் அரங்கேறும் ஜனநாயகம்

இத்தகைய கம்யூனிஸ்டுகள் தேர்தல்களை சந்திக்கும் முறையிலிருந்து சற்றே மாறுபட்டு நிகழ்ந்து கொண்டுள்ளவை தான் தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் என்ற பெயரில் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயகமாகும். அந் நாடுகளில் பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து வெற்றி பெற்ற கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அவற்றை அமுல்படுத்தாது மக்களை ஏமாற்றினால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்ற அங்குள்ள மக்கள் அனுமதிப்பதில்லை.

உடனடியாக தெருவில் இறங்கி அவர்கள் போராடத் தொடங்கிவிடுவர். ஆனாலும்கூட அந்நாடுகளில் அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் -அவர்களில் சிலர் நல்லவர்களாக இருந்தாலும்கூட-இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரத்தை அப்படியே வைத்துக் கொண்டு மக்கள் நலனை பராமரிக்க முயல்வதால் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்துக் கொண்டுள்ளனர். எனவே மக்கள் அடிக்கடி தெருவில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது.

இந்த நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிவது என்ன?. அதாவது தேர்தல் முறையின் மூலம் உண்மையான முற்போக்காளர்கள் ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சிகள் எத்தனை தூரம் ஜனநாயக இயக்கப் பின்பலத்துடன் நடக்கின்றனவோ அவ்வளவு தூரமே ஓரளவேனும் மக்கள் ஆதரவுப் பணிகளை ஆற்ற முடிந்தவையாக இருந்திருக்கின்றன என்பதுதான்.

எனவே மக்கள் இயக்கப் பின்னணி ஏதுமின்றி நமது நாடு போன்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் பொதுவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. மாறாக தேர்தல்கள் படிப்படியாக முன்பிருந்த அளவிற்குக் கூட ஜனநாயகத்தன்மை இல்லாதவையாக ஆகி பாசிஸ தன்மை கொண்டவையாக ஆகி வருகின்றன.

Pin It