தற்போது சி.பி.ஐ.(மார்க்சிஸ்ட்)-களுக்கும் சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) களுக்கும் லால்கரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சுவையான பல விசயங்களை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் 22 ஆதிவாசிப் பெண்கள் உட்பட பலரை மேற்குவங்க சி.பி.ஐ.(எம்) அரசாங்கம் கைது செய்து காவலில் வைத்தது. அவ்வேளையில் மேற்குவங்க காவல்துறை அதிகாரி திரு. அதிந்திரநாத் தத்தா அவர்கள் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிப்பதற்காக சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்)களுடன் மேற்குவங்க அரசாங்கம் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் விளைவாக அந்த போலிஸ் அதிகாரி விடுவிக்கப்பட்டார். அதற்குப் பதிலாக கைது செய்யப்பட்ட 22 ஆதிவாசிப் பெண்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேற்குவங்க அரசு இவ்விசயத்தில் உறுதியாக இல்லாமல் மிகவும் பலவீனமாக நடந்து கொண்டது என ஊடகங்கள் மேற்குவங்க அரசை விமர்சித்தன. அத்தகைய ஊடகச் சித்தரிப்பின் ஒரு பகுதியாக டெவில்ஸ் அட்வகேட் என்ற தலைப்பில் பிரபல பேட்டியாளர் கரன் தாப்பர் நடத்தும் நிகழ்ச்சியில் சி.பி.ஐ.(எம்)ன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யச்சூரி பங்கேற்று அது குறித்த கரன் தப்பாரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது ஆதிவாசிப் பெண்கள் விடுதலை குறித்த கேள்வியைக் கரன் தாப்பர் முன்வைத்த போது சீத்தாராம் யச்சூரி அவர்கள் மாவோயிஸ்ட் அல்லாத நடுத்தர வயதுள்ள நிராதரவான பெண்களே; அவர்களை விடுவித்ததில் தவறேதுமில்லை என்று கூறினார். அதற்கு கரன் தாப்பர் மேற்குவங்கக் காவல்துறை அப்பெண்கள் மீது சுமத்தியுள்ள குற்றசாட்டுகள் அரசிற்கு எதிராக போரிடுபவர்கள், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் போன்றவையாகும். மேலும் மேற்குவங்க அரசு வழக்கறிஞர் திரு.சாந்தி சரன் மகாபத்ரா இரண்டுமுறை அவர்களுக்கு ஜாமீனில் விடுதலை வழங்கக் கூடாது என்றும் எடுத்துரைத்துள்ளார். இது போன்ற இத்தனைத் தீவிரதன்மை வாய்ந்தவையாய் அவர்கள் மீதுள்ள குற்றசாட்டுகள் இருக்கும் போது அவர்களை எவ்வாறு நிராதரவான பெண்கள் என்று கூறமுடியும் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சீத்தாராம் யச்சூரி, நான் மாணவப் பருவத்தில் அரசியலில் இருந்த போது என்மீது கூட காவல்துறை இராஜ துரோகம் செய்தேன்; அரசிற்கு எதிராகச் செயல்பட்டேன் என்று பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. இதுபோல் கொலை, கொள்ளை முயற்சி, அரசிற்கு எதிராகச் செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்வது இயல்பான ஒன்றே என்று கூறினார்.

அவ்வாறான அவரது பதிலுக்குக் கேட்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு கேள்வியை கரன் தாப்பர் கேட்கவில்லை. அதனை நாம் கேட்போம்: நீங்கள் மாணவப் பருவத்தில் அரசியலில் இருந்த போது டெல்லி காவல்துறை நிர்வாகமோ, ஆந்திர அரசோ தங்கள் மீது இந்தத் தீவிரப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருக்கலாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடப்பது உங்கள் கட்சியின் ஆட்சி. அந்த ஆட்சியும் மற்ற ஆட்சிகளின் பாணியில் நடுத்தர வயதில் உள்ள, அப்பாவிகளான நிராதரவான ஆதிவாசிப் பெண்கள் மேல் இத்தனை தீவிரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடியது தானா? அப்படியானால் மற்ற கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் காவல்துறை, அரசு நிர்வாகங்களிலிருந்து உங்கள் அரசாங்கத்தின் நிர்வாகமும், காவல்துறையும் வேறுபட்டதில்லையா? என்பதாகும். வருமா இதற்கான சரியான பதில்?.

- மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு

 

Pin It