தனது கல்விப் பருவத்திலேயே கவன ஈர்ப்பு பெறும் விதமாக தமிழ்ப் புனைவுலகத்தினுள் எழுத்தடி வைத்தார் பாஸ்கர் சக்தி. பெற்றதை இன்றுவரை விடாது தக்கவைத்து வருகிறார். தொடர்ந்து எழுதி நிறைப்பதில்லை என்றாலும் ‘எங்க பாஸ் காணோமே’ என்று நினைக்கும்போது ‘இதோ இங்கே இருக்கேன்’ என்று சன்னமான குரலுடன் கையை திடமாக உயர்த்துகிறார். விடாது எழுதுகிறார்.

நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையன்றை பாஸ்கர் சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்ட வைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளில் தனது பார்வையை ஊடுருவிச் செலுத்த முடிகிறது அவரால். வாசகரின் கவனம் சிறிதும் பிசகாமல் தன்வயப்படுத்தி புனல் வைத்து எண்ணை ஊற்றுவது போல் நமக்குள் நிரம்பி விடுகிறார்.

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப்போல, நடைபழகும் குழந்தை நிலம் நோகாமல் அடியெடுத்து வைப்பதுபோல யாருக்கும் தொந்தரவு தராத தனித்த எள்ளல் மொழிதான் அவரது புனைவின் முதலீடு. பலகதைகளில் எள்ளல் மொழியாகவும் இன்னும் சிலவற் றில் எள்ளலே கதையாகவும் ஆகியிருக்கிறது. சுயவலியின் தீவிரத்தை ஆனவரைக்கும் இலகுவாக்குவதற்காக எள்ளலை ஊடகமாகக் கையாளுகிறார் சாப்ளினைப்போல. தன் கதைகளில் வரும் கனமான நிகழ்வைக்கூட அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து, நீருக்குள் பாறையைப் புரட்டுவது போன்ற இலகுவாக மாற்றுகிறார்.

விடலைக் காதல், கிரிக்கெட் விளையாட்டு, சாவடிப்பேச்சு, கட்சித்தலைவர் வருகை, தொண்டனை உற்சாகமேற்றும் பாக்கெட் சாராயம், புருஷன்மார்கள் பெண்டாட்டிகளை உதைப்பது, ஆயிரம் வசவுகளை புயலாக வீசிக்கொண்டே பொம்பிள்ளைகள் குடும்பச் சிலுவைகளைத் தூக்கிச் சுமப்பது, தோப்புகள் சிரைக்கப்பட்டு பணமாகி மோட்டார் பைக்குகளாக படபடப்பது, சிறுவர்களின் வண்ணமயக் கனவுகளை உலகியல் லௌகீகத் தடிகளால் உதைத்துக் கலைப்பது என்கிற பரப்பினுள் கதைகள் காற்றைப்போல உலவு கின்றன. ஆனால் அவர் மென்மையாகத் தீண்டும் புள்ளி நமக்குச் சுரீரென்ற வலியைத் தருகிறது.

மாப்பிள்ளை விருந்துக் கஞ்சிக்கே குவார்ட்டர் போட்டுவிட்டு வருகிறவன் சண்டையிட்டு முக்காலியைத் தூக்கி மாமனார் முகத்தில் அடித்துவிட்டு புதுப்பெண்டாட்டியை உதறிவிட்டுப் போகிறான். எத்தனைதான் கெஞ்சினாலும் வைத்துப் பிழைக்கிற வழியைக் காணோம். ஆனால் லஞ்சத்தில் சிக்கி வேலையிழந்த பின்னர் சொந்தத் தொழிலுக்கு பணத்திற்காக மாமனாரிடம் தூது விடுகிறான். தன் பிள்ளையின் நகரப் படிப்பிற்காக ஐந்து வருடங்கள் கைவிட்ட ஒருகுடிகார ஊதாரியை நம்பி அவனைக் கணவனாக ஏற்றுப் பின்தொடர்கிறாள் பெண். தாத்தாவுடனான உறவினால் சிறுவன் இயற்கையின் பால் கொண்டிருக்கும் கவர்ச்சியை ‘லூஸ§த் தனம்’ என்கிறாள். யாருக்கோ சேவகம் செய்வதற்குப் பெறும் அற்பக் காகித அத்தாட்சிக்காக (சர்டிபிகேட்) மொத்த வாழ்க்கையையும் பணயம் வைக்கும் துணிவை அளிப்பதாக இருக்கிறது, முறை கல்வி பற்றிய நமது சமூகத்தின் மொண்ணையானப் புரிதல், வயதான மனிதரை மருமகன் வன்மத்துடன் தாக்கும்போது தடுக்காத சமூகம், அவர் திருப்பித் தாக்கியதை ‘என்ன இருந்தாலும் மருமகனை மாமனார் செருப்பாலடித்தது தப்புதான்’ என்கிறது.

வளர்ச்சியின் பெயரால் இங்கு நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் பண்டங்களின் பெருக்கமாக மட்டும்தான் இருக் கிறதேயழிய எந்தவகையிலும் மனித அறங்களை மேம்படுத்து வதாக இல்லை. மாறாக சரிவை நோக்கி இட்டுச்செல்வதாக இருக்கின்றன. ‘தாத்தாப்பூ’ என்ற கதை, ஒரு கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவருக்கு இயற்கையின் மீதுள்ள பிடிப்பையும் தன் பேரனுக்கு இயற்கையின் மீதான காதலை அவர் கைமாற்றித் தருவதையும், புதிய தலைமுறை பிறஉயிர்களில் காட்டும் ஆர்வத்தையும் ஈரமண் மணம்கமழ நமக்குள் பரவச் செய்கிறது. அச்சிறுவன் நகர படிப்பிற்காக கிளம்பும்போது வாசக மனம் வேர்பறித்த செடியாக வாடி விடுகிறது. காட்சிகளாகவும் உரையாடலாகவும் நகரும் புனைவில் பிரதிக்கும் வாசகருக்கும் நடுவில் ஆசிரியர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு நிற்பதில்லை.

அதேதான் ‘வீராச்சாமி பி.காம்’ கதையும். பெரும் எள்ளலோடு துள்ளிக் கொண்டு ஓடுகிறது. ‘மில்லிகிராம் சுத்தமாக,’ தக்கி முக்கி பட்டம் வாங்குகிற ஒருவன் எதற்கும் லாயக்கற்ற டம்பப் பேர்வழி யாகவே தன் வாழ்வைக் கடக்கிறான். படைப்பாளியின் எள்ளல் வாசிப்புச் சுவாரஸ்யத்தைக் கடந்து தோல்தடிக்காதவர்களிடம் நிகர வலியாகத் தங்குகிறது. அதே பாணியில் எழுதப்பட்டக் கதைகள் ‘கட்சிக்காரன்’, ‘சாயம்போன புளூ ட்ரவுசர்’. பொருளாதாரரீதியாக அடிநிலையில் இருக்கும் குடும்பங்கள் மதுப்போதையால் அன்றாடப் பிரச்சனைகளை எத்தனைத் துயரத்துடன் எதிர்கொள்கின்றன என்பது யதார்த்தக் காட்சிகளாக விரிகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட சதவீதக் குடும்பங்கள் இந்த வளைக்குள் இருந்து மீளமுடியாமல் சிக்கிக் கிடக்கின்றன என்ற பயங்கரத்தை மேற்படிக் கதைகளை வாசிக்கும் யாராலும் உணரமுடியும்.

கிட்டத்தட்ட அப்படியரு கிரிக்கெட் போதையில் பிச்சைமணி விழுகிறான் என்பது கிராமத்துச் சூழலில் இயல்பாகச் சொல்லப்படு கிறது.

பிச்சைமணிக்கு எந்த வேலையானாலும் வெகுசாதாரணமாகக் கற்றுக் கொள்ளமுடியும். பண்ணை வேலை, கொத்துவேலை, மில்லுவேலை அத்துடன் சேர்த்தே காயல் கட்டுகிறவேலை எதையும் ஆர்வத்துடன் செய்வான். ‘அப்படியே பெருமாள்பயகிட்ட சிரைக்கிற வேலையும் கத்துக்கட மாப்பிள்ளை’ என்று சொன்னால் ‘அதுக்கென்ன மாமா அதுவும் தொழில்தானே’ என்ற பக்குவம் பெற்ற உழைப்பாளி. ஒருநாள் எதேச்சையாக வேலைக்குப் போகமுடிய வில்லை. பதின்மவயது தாண்டும் இளசுகள் பஞ்சாயத்துப் போர்டு டிவியை இயக்குகிறார்கள். அதை ஒருஆர்வத்தில் வேடிக்கை பார்க்கும் பிச்சைமணி அப்படியே அதில் இலயித்து விடுகிறான். போகலாம் என்று திட்டமிட்டிருந்த காயில்கட்டும் பகுதிநேர வேலையையும் அன்று மறந்து விடுகிறான். நம்காலத்தின் கேடு இது. நம்மையறியாமல் திறன் உழைப்பை இழந்து கொண்டு வருகிறோம். (சாரமற்ற வறட்டு உழைப்பிற்குள் தள்ளப்படுகிறது சமூகம்). இந்த நுட்பமான மாற்றங்களைப் பன்முகப் பார்வை கொண்ட தேர்ந்த கலைஞனால் தான் எடுத்துரைக்க முடியும் காலமாற்றத்தின் கலாப்பூர்வமான பதிவு இது.

தான் எழுதுகிற களத்தின் நிலவியல், வரலாற்றியல் பின்புலம் அறிந்தவர் பாஸ்கர் சக்தி. அதற்காக அவற்றை வலிந்து திணிப்ப தில்லை.

எத்தனை பெரிய வலிமைகளும் எத்தனை பெரிய தந்திரங்களும் தனக்குரிய சுழற்சிப் பாதையில் சரிவை எதிர்கொண்டேயாக வேண்டும். சடையப்ப மாமா எல்லாத் தந்திரங்களும் அறிந்தவர். அவற்றைக் கையாண்டு மேல்நோக்கியே பயணித்து வருபவர். கண் பார்க்கப் பார்க்கவே கையில் எண்ணும் பணத்தாளில் இருந்து நூறு நூறு ரூபாய் நோட்டுகளாக தொடையிடுக்கில் தள்ளிக் கொள்கிறவர். அப்படிப்பட்ட ஆளிடம் சர்வசாதாரணமாக ஒருலோடு தேங்காயை ஏமாற்றிக் கொண்டு போய்விடுகிறான் வெளியூர்க்காரன். இந்தக் கதைக்கு ‘வாட்டர்லூ’ என்று தலைப்பிடுவதன் மூலமாக மட்டுமே தொடர்வெற்றி கண்டுவந்த நெப்போலியன் வாட்டர்லூப் போரில் தோல்வியுற்று தனிமைச்சிறையில் மடிந்ததை நினைவுறுத்துகிறார். அனைத்துத் தெளிவான திட்டங்களையும் மீறி வாழ்க்கை தனக்கே யுரிய திருப்பங்களைக் கொண்டிருப்பது தான் அதன் சுவாரஸ்யம். இந்தத் தத்துவ அடித்தளத்தின் மீதுதான் தனது கதைகளைக் கட்டியெழுப்பிக்கொண்டு போகிறார் பாஸ்கர் சக்தி.

பொதுவாக மரணம்பற்றிய கதையென்றால் அது துக்கத்தைப் பேசுவதாக அல்லது சொத்துத் தகராறு பற்றியதாக அதுஒரு மர்மமாக இருக்கும். ஆனால் பா.ச அதைக் கூடிக்களிக்கும் ஒரு கொண்டாட்ட மாகக் காட்டுகிறார். காசு பணப்பிரச்சனை இல்லை. உறவுகளுக்குள் புகார் இல்லை. இறப்பவருக்கும் அதுவொரு இனிய விடுதலையாக இருக்கிறது, பழுப்புநிற புகைப்படம். பாஸ்கர் சக்தி தனது எள்ளலை எப்படிப்பட்டக் கதையிலும் துணிச்சலுடன் கையாள முடிகிறது. காரணம் அதுதன்னை முன்னிருத்தி பிறவற்றைக் கீழ்மைப்படுத்துவ தில்லை. எந்த இறுக்கமான சூழலையும் தனது இருப்பால் தளர்த்தும் குழந்தைமையின் வேடிக்கையாக இருக்கிறது அது. அவரது தனித்துவத்திற்கு எடுப்பான உதாரணம் இந்தக்கதை.

தமிழக நடுத்தர விவசாயக் குடும்பத்தினுள் நிலவும் கபடற்ற கூட்டு உறவின் ஒரு பகுதியைத் துல்லியமாக காட்சிப்படுத்துகிறது பழுப்புநிற புகைப்படம். சாகக் கிடக்கும் மூதாட்டியின் முகம் இறுதிவரை வாசகருக்குக் காட்டப்படாமல் பாட்டியின் முப்பது வயதின் இளையமுகம் போட்டோ மூலமாகக் காட்டப்படுகிறது. இது கலைஞனின் அழகியல் சாதுர்யம். சுமார் நூற்றியிருபது பக்க குறுநாவலை பத்து பக்கச் சிறுகதையாக்கி அடர்த்தியாகத் தருகிறார். மிகவும் தேர்ந்த குறைவான வார்த்தைகளில் அடுக்கடுக்கான காட்சிகள். இதுவொரு காலத்தின் கலாச்சாரப்பதிவாக இருக்கிறது. எந்த நிகழ்வுகளிலும் கடனே என்று தலைகாட்டுவது, உணர்வு ரீதியான பங்களிப்பின்றி அட்டன்டன்ஸ் கொடுப்பது என்றாகி வருகிற இன்றைய சூழலில் நமது பண்பு என்னவாக இருந்தது என்பதை நினைவுறுத்துவதாக இருக்கிறது.

தமிழ்ப் படைப்பாளிகள் மற்றயாரும் பாஸ்கர் சக்தியளவு விடலைக் காதலை எழுதியதாகத் தெரியவில்லை. மிகவும் இளவயதி லேயே எழுத்துலகில் இவர் புகுந்து விட்டதும் ஒருகாரணமாக இருக்கலாம். (நல்ல கொடுப்பினை) அவர் எழுத்தில் கிட்டத்தட்ட கால்பங்களவு விடலைக் காதலாக இருக்கிறது. இவையனைத்தும் விரசமற்றக் காதலைச் சொல்வதுடன் மட்டுமல்லாமல் அப்பருவத் திற்கே உரிய விளையாட்டுத் தனத்தையும் சாகச உணர்வையும் காட்டுவதாக இருக்கின்றன. யாருக்கும் அப்பருவ விளையாட்டுக் களை நினைவூட்டுவதாக இருக்கின்றன. இதில் ‘உதயாவுக்குத் திலகா சொன்ன கதை’ புடைத்து நிற்கிறது. ‘பிறன் நிழலைக் கண்டாலே கற்பு கெட்டது’ என்ற சொல்லடைவால் பெண்ணை மிரட்டி வைத்துள்ள நம் சமூகத்தில் இயற்கையான காதல் கம்பீரமாக முன் வைக்கப்படுகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையில் பெரும் மனத்திறப்பை நிகழ்த்துகிறது. நொடிக் காரணத்தில் தற்கொலைகள் பெருகி வரும் இந்நாளில் தாய் மகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ‘காதலைச் சினிமாவோடும் பாட லோடும் சம்பந்தப்படுத்திக் கொள்கிறவர்கள் நாம். அனுபவங்களி லும் வாழ்விலும் எதிர்கொள்ளச் சிரமப்படுகிற சமூகம் நம்முடை யது’ என்ற புரிதலுடன் தனது மூன்று காதல் அனுபவங்களை நம்முடனும் தன் மகள் உதயாவுடனும் தனது நாற்பத்தியோராவது வயதில் பகிர்ந்து கொள்கிறாள்.

முதல் காதலைச் சேகர் வெளிப்படுத்த அங்கே தோழமை திரிந்து பயம் பற்றிக் கொள்கிறது. இவள் அம்மா மடியில் முகம் புதைத்து அழ, அவன் பயந்துபோய் கிணற்றில் குதித்துக் காலுடைத்துக் கொள்கிறான். அவனது முதல்காதல் தோல்வியில் பெற்ற அனுபவத் தால் இரண்டாவது காதலில் தோற்றபோதும் துவலவில்லை. திலகாவும் தனது இரண்டாவது காதலில் உடல் பாதுகாப்பு பற்றி எச்சரிக்கை கொள்கிறாள். மூன்றாவதாக அவளை முழுதாகத் தெரிந்தவனுடன் கனிகிறது.

மகள் தன் காதலை அம்மாவிடம் சொல்ல தன் காதல் கதைகளை அவளது பாய்பிரண்டிடம் சொல்லப் பரிந்துரைக்கிறாள் அம்மா. அவன் மிரள்கிறான். என்ன நடக்கிறது?. மூன்றாம் தலைமுறைக்குச் சொல்வதற்குப் புதிய காதல் அனுபவம் துளிர்க்கிறது.

காதலை பாஸ்கர் சக்திபோல் புரிந்து கொண்டால் பல சிக்கல்களை எளிதில் அவிழ்த்து விடலாம். காதல்மீது புனிதம் என்ற சாணிக் கூடையை ஏன் ஏற்றி வைக்க வேண்டும். ஏன் குமைய வேண்டும் என்று நாகரீகமாக கேட்கிறார் படைப்பாளி. இந்தக் கதைக்குள் ஒரு ஞானியின் தெளிவையும் வாழ்வியல் எதார்த்தையும் ஒருசேரப்பெற முடிகிறது. அல்லது இரண்டுமே ஒன்றுதான் என்று உணர முடிகிறது.

அனைத்து சர்வதேசிய, தேசியப் பிரச்சனைகளும் வீடுகளுக்குள் தான் வந்து முடிகிறது. இவற்றைத் தம் படைப்பினுள் கொண்டுவர முயலும் படைப்பாளி பிரச்சனைகளாகவேப் பார்த்து படைப்பாக்க முயற்சிக்கும் போது அவை குண்டு குண்டு மாத்திரைகளாக வாசகரின் உள்ளங்கையில் நின்று திணறடிக்கிறது. ஆனால் பாஸ்கர்சக்தி தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தரமறுப்பதைக் குடும்பப் பிரச்சனையாகப் பார்க்கிறார். ‘தீர்த்தயாத்திரை’ கதை. குடும்பத்தின் தண்ணீர்த் தேவை. குடும்பஸ்த்தன் அதற்குப்படும் அவஸ்த்தை. வெறுத்துப் போய் தண்ணியடித்து விட்டு பாரில் அண்டை மாநிலத்தவருடன் சலம்புவது. அதில் எழும் வாதப்பிரதி வாதங்களில் நதிநீர் பிரச்சனை தெருவிற்குள் வருகிறது. எதையும் வாழ்க்கையின் ஊடாகவே புரிந்து கொண்டால் அதன் கலைப் பரிணாமம் நயமாகக் கைகூடுகிறது.

இதே தன்மைதான் தக்ளி கதையிலும். உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் வழிபட்டுப் போற்றி பாடி பரணேற்றத் தான் தயாராக இருக்கிறதேயழிய அவற்றைப் பின்பற்றுவதால் வரும் சிரமங் களை நகத்தால் தீண்டக்கூட சித்தமாயில்லை இன்றைய தலைமுறை. ‘தாழம்பூ தனக்கு மணக்காதுங்கிற மாதிரி வீட்டுக்கு என்ன புண்ணியம். தியாகம் பண்ண வேண்டியதுதான். அதுக்காப் பென்சன் வேண்டாம், சலுக வேண்டாம்ன்னு பெருமைக்கு மாவு இடிச்சிட்டுப் போய்ட்டாரு பெரியவரு. சரி நமக்கிருக்கிற பேரை வச்சு நம்ம பிள்ளையக் கொஞ்சம் மேலே தூக்கிவிடலான்ற நல்லெண்ணம் இல்லாத மனுசன்’ என்று சுதந்திரத்திற்காகச் செய்த தியாகத்தை இழிவு செய்கிறவர்களாக வளர்ந்துவிட்டோம். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட குடும்பத்தில் இருந்தே கல்வியை வியாபாரம் செய்யும் பிள்ளைகள் உருவாகிறார்கள். இந்த அரசு சுதந்திரம் பற்றிய தெளிவை தனது சமூகத்திற்கு அளித்துள்ள விதம் அப்படி. முன்னர் சொன்னது போல இங்கு அனைத்தும் தனது சாரத்தை இழந்த கூடுகளாகி வருகின்றன என்பதை வழக்கமான எள்ளலுடன் அச்சுறுத்தி நினைவூட்டுகிறது ‘தக்ளி’.

காந்தி மீது அபிமானம் கொண்டு தன் பிள்ளைக்கு அரிச்சந்திரன் என்று பெயர் வைத்து கனவு கண்டவரின் பிள்ளை சமூகத்தில் நிலவும் அத்தனை திருகிதாள வேலைகளையும் செய்து ஒவ்வொன்றி லும் சிக்கி எத்தனை சிறுமைப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அதே வேலைகளையே செய்கிறான். இதைவெறும் சரிவாக மட்டும் கண்டு புறந்தள்ளிப்போய்விட முடியாது. விரைவாகப் பணம் சம்பாதிக்கும் சமூகத்தின் பேராசையை காலத்தின் வீழ்ச்சியாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

வாழ்க்கை நிறுவி விட முடியாத பல ரகசியங்களைக் கொண்டது என்பதை உணர்த்துகிறது ‘நட்சத்திரக் கடை நொண்டன்’ கதையும், ‘நாகம்’ கதையும். பலருக்கும் எதிர்காலத்தை முன்னுரைக்கிற ஒருவன். அவன் சவால் விட்டுக் கூறிய விதமாகவே அனைத்தும் நிகழ்ந்தேறுகிறது. அவனுக்குச் சுயமாக காலில் கொதிக்கிற எண்ணை கொட்டி பேசமுடியாமல் போனது எப்படி என்பதைப் போதிய தர்க்கங்களுடன் முன் வைக்கிறது. அதுபோலவே ஊரில் அத்தனை பேரின் பாம்புக்கடிக்கும் மருத்துவம் பார்க்கிறவன், நாகத்தின் வருகையை வாசத்தால் உணர்கிறவன் பாம்புகடித்து இறக்கிறான். விசித்திரமான இக்கதைகள் புதுமைப்பித்தனின் மகாமாசானம் கதையை, கயிற்றரவு கதையை நினைவூட்டுகின்றன. கிராமத் தொன்மம் பதிலற்ற அலைக்கழிப்பை வாசகனுள் நிகழ்த்துகிறது. அக்கதைகளின் நிகழ்வை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறடிக்கிறது.

‘ஏழுநாள் சந்திரன் ஏழுநாள் சூரியன்’ ஒரு குறுநாவல். ஒரு தற்காலிக திருட்டிற்குள் புதைந்திருக்கும் நியாயத்தின் வலியை ஒப்புக்கொள்ளும் விதமாகப் பொதுமைப்படுத்துகிறது. உலகம் முழுதும் பிரபலமான குழந்தைப் பாடலுடன் கதையைத் தொடக்கி முரண்படாமல் தனக்குரிய தர்க்கத்தை நிறுவுகிறார் புனைவாளர்.

அனைத்துக் கதைகளையும் முழுமையாக ஆய்வதற்கு சாத்திய மற்றது இப்பரப்பு. இதை எழுதுகிறவனுக்குப் பருண்மையாகப் படுகிறவற்றை மட்டும் பகிர்வதே ஆவது. பதினைந்து ஆண்டு காலத் திற்கும் மேலான பாஸ்கர்சக்தியின் புனைவுக் களனும் சொல்முறை யும் நுட்பமாகச் செழுமைபெற்று வந்துள்ளது. காலமாற்றத்தைச் செரித்து முன்னேறுகிறது என்பதைச் சமீபத்தியக் கதைகள் அழுத்தமாக உரைக்கின்றன.

‘அதனதன் வாழ்வு’ என்ற கதையில் எள்ளலின் தீவிரம் அடங்கி ஜுரத்தின் வெப்பமாகப் பரவுகிறது. கதையின் வரிகள் ஒவ்வொன் றும் இழுத்துக் கட்டிய நரம்புகளாக அதிர்கின்றன. வியாபாரத்திற்குள் உள்ள சிக்கல் சிறிய வியாபாரிக்குப் பெரிய வியாபாரி கைகொடுத்தல் போன்றவையும் ஆடுகளை வெட்டிக் கசாப்பு போடுகிறவரின் ஈரமான உள்ளுணர்வும் வாடிக்கையாளர் பால் கொண்டுள்ள அக்கறையும், ஆடுகளை வெட்டுவதன் மூலம் பெறுகிற குற்ற வுணர்வும் என நீண்ட காலமாக வியாபார உலகத்தின் பட்டறிவாக கதை செழுமை பெற்றுள்ளது. மனைவி கணவனை ‘டா’ போட்டுத் திட்டுவது, கணவன் மனைவியை மோசமாகப் பேசுவது என்றிருந் தாலும் இருவருக்குமான பரஸ்பர அன்பு வார்த்தைப் பூச்சுகளற்று உணர்த்தப்படுகிறது. கதையின் இறுதியில் ஓங்கு தாங்காக கையில் கத்தியுடன் நிற்கும் ராமையா மீது வாசகருக்கு ஆட்டுக்குட்டியின் மீது ஏற்படும் பரிவே ஏற்படுகிறது. ‘ஆடு தனது கடைசி நொடியை வாழ்ந்து முடித்தது’ என்ற கதையின் இறுதி வரியில் கலைமேதைமை இயற்கையாகச் சுடர்கிறது.

ஜீவனத்திற்கு மனிதன் தன் ரத்தத்தை விற்பது போல, ஒட்டு மொத்த மனித குலமும் இயற்கையை விற்று தனது நுகர்ச்சியைத் துய்ப்பதைப்போல ஒரு புறத்தில் தமிழகமே நிலவிற்பனை நிலைய மாக மாறிப்போனது. நீங்கள் சந்திக்கிற நான்கு பேரில் இருவர் ரியல் எஸ்டேட் ஏஜண்டாகவும், ஒருவர் பிளாட் வாங்க அக்கிரிமெண்ட் போட்டவராகவும், இன்னொருவர் பிளாட் அட்வான்ஸ§க்குப் பணம் திரட்டிக் கொண்டிருப்பவராகவும் இருப்பார். இதையெழுதிக் கொண்டிருப்பவர் ஒரு கமர்சியல் பிளாட் ஆசையில் அத்தனையும் இழந்து வெறும் ஆளாக நிற்கிறார். (அதுவே அனைத்திலும் ஆக நல்லது.) தமிழத்தை மிகப்பெரிய கேள்விக் கொக்கியில் தொங்க விடவுள்ள இந்தச் சிக்கலை அரசோ சமூக அக்கறைகொண்ட அமைப்புகளோ கண்டு கொள்ளவே இல்லை.

தாத்தா பேரனைக் கேட்கிறார். ‘நானும் உன் அப்பனும் சீக்கிரத்தில் இறந்து விடுவோம். நீயும் உன் தலைமுறை ஆட்களும் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க’ என்றதற்கு பேரன் சொல்கிறான். ‘நான் ரீ போக் ஷ¨ வாங்கணும்’. அம்மாவுக்கு ஐந்து லட்சத்திற்கு நகை வாங்க வேண்டும். அப்பாவுக்கு ஐந்து லட்ச கடனை அடைத்து பத்து லட்சத்தில் தொழில் நடத்த வேண்டும். தமிழகமே இந்த மந்திரத்திற்குத் தான் தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இதை அத்தனை அற்புதமாக கதையாக்கி இருக்கிறார். இந்தக் கதையை சமூக - அரசியல் - பொருளாதார - கலாச்சார இப்படி அனைத்து வகைமைக்குள்ளும் அடங்கும் கதையாகப் பார்க்கலாம்.

இறுதியாக அவர் எழுதிய ‘தாம்பரம் சந்திப்பு’ தேர்ந்த சிற்பியின் கவனமான செதுக்கல். சுயாபிமானமிக்க ஒரு கும்பலே இன்று சமூகத்தின் முன்மாதிரியாகவும் அதன் வழிமுறையே செவ்விய லானது என்றும் அனைத்து வகையிலும் நிறுவ முயற்சிக்கிறது. அத்தனை தத்துவங்களையும் தனது கட்கத்தில் இடுக்கிக் கொண்டு ‘நான் வாழ எதையும் செய்வேன். அதுவே யாவற்றிலும் உயர்ந்த அறம். என்னைப் பின்தொடர். இப்படிச் சொல்வதற்கான எல்லாத் தகுதிகளும் பெற்றவன் நான். நான் மட்டுமே’ என்று உரத்துக் கூறும் கும்பலின் பிரதிநிதியான சந்தானத்தைப் பற்றிய கதை. ‘ஊருக்கெல் லாம் குறி சொல்லுமாம் பல்லி. கழுநீர்ப் பானையில் போய் விழுமாம் துள்ளி’ என்ற பழமொழியின் கதை வடிவம் இது. எச்சரிக்கையான எச்சரிக்கை. செல்போனை புல் சார்ஜ் போட்டு மேலும் ஒரு அரைமணிநேரம் அமுக்கி அமுக்கி சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் முன் ஜாக்கிரதைப் பேர்வழி. பிறத்தியார் மீது துளியும் நம்பிக்கையற்றவன். அடுத்த தலைமுறை மீது காழ்ப்பான உணர்வில் சொந்த மகளின் மீது சந்தேகப்பட்டு சோதிக்க முயன்று இறுதியில் ரயில் வண்டியில் வித்தவுட்டில் டி.டியிடம் சிக்கிக் கொள்வதை கச்சிதமான பழகு மொழியில் அதே எள்ளலும் துள்ளலுமாக புதிய மெருகுடன் புனைவை நிறுவுகிறார்.

படைப்பாளியின் பதின்ம வயதிற்கு முற்பட்ட நினைவடுக்குகளில் இருந்து தான் படைப்புகள் அனைத்தும் உருப்பெருவதாக கருதப்படுகிறது. ஆனால் பாஸ்கர் சக்தி படைப்புகளை நிகழ்காலத் தில் இருந்து படைக்கிறார். சவால் மிகுந்த அந்த வேலையை துணிச்சலுடன் மேற்கொள்கிறார்.

படைப்புகள் அனைத்தும் வடிவரீதியாக முழுமையாகப் பொருந்தி விட்டதாகச் சொல்வதற்கில்லை. சொல்லப்பட்டுள்ள புனைவு இலக்கணங்களுக்குள் சரியாக அடைவதில்லை என்றாலும் குறிப்பிட்ட அப்படைப்பில் படைப்பாளி அழுத்தம் தர நினைக்கும் புள்ளியை நோக்கி தடங்கலில்லாமல் இட்டுச்செல்கிறார்.

(கட்டுரையாளர் சிறுகதை ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்)

Pin It