1980களுக்குப் பிறகான நவீன தமிழ் இலக்கியப் பரப்பு என்பதை எளிதில் சுட்டிவிட முடியாத அளவுக்கு விஸ்தரிப்புகளைக் கொண் டுள்ளது. கவிதை மொழி பல்வேறு சிந்தனையாடல்களைத் தன்னுள் கொண்டிருந்த அதே சமயத்தில் புனைகதை மரபு வளமாக வளர்ந்து வருகிறது. இப்பின்புலத்தில் தமிழ் நவீன இலக்கிய மரபுக்கு அறிமுகமானார் பெருமாள் முருகன்.

திருச்செங்கோடு (1004) என்பது இருபது சிறுகதைகளைக் கொண்ட முதல் தொகுப்பு. அடுத்து இருபத்தொரு கதைகளைக் கொண்டு வெளியான நீர்விளையாட்டு (2000) என்பது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. அடையாளம் பதிப்பகத்தின் வழியாக 2004இல் வெளியான பீக் கதைகள் (பதினான்குக் கதை களைக் கொண்டது) பெருமாள் முருகனின் மூன்றாவதும் இதுவரை யிலான கடைசித் தொகுப்புமாக இருக்கிறது. இதில் பீக்கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள வேக்காடு எனும்கதை திருச்செங் கோடு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பீ, பீ வாங்கிகளின் ஓலம் எனும் இரு கதைகளும் நீர் விளையாட்டுத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ஆக மூன்று தொகுப்பில் இடம்பெற்றுள்ள இவரது கதைகளின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு கதைகளாகும்.

திருச்செங்கோடு பெருமாள் முருகனின் கன்னி முயற்சித் தொகுதி என்றே சொல்ல வேண்டும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகள் பெரும்பான்மையான அவரின் மண்சார் மொழியையும் பண்பாட்டையும் சாதிய அரசியலையும் உள்ளடக்கியவை. தன் அனுபவத்தில் இருந்து பிழித்தெடுத்த கதைக் கருக்களைத் தனக்கே உரிய இயல்பான புனைவாக அவை இருக்கின்றன. அதே சமயத்தில் மற்ற இரண்டு தொகுப்புகளையும் இப்படி ஒரே சரடுக்குள் கட்டிவிட முடியாத அதீத புனைவுகள்.

தொகுப்பின்படி அவரது முதல் கதை கொறங்காடு என்பதாகும். தன்னுடைய ஊர் (மாவட்ட) பகுதியில் உள்ள அடிநிலை வாழ்க்கை முறையும் அப்பகுதியில் உள்ள (நாமக்கல்) கவுன்டர் எனும் சாதிக்கும் பறையர், வண்ணார், தோட்டி, சக்கிலி, அம்பட்டன் போன்ற சாதியினருக்கும் இடையே உள்ள கொத்தடிமை, அதட்டல், மிரட்டல் தனத்தை தீவிரவாதமின்றி எதார்த்தமாக புனைந்து விளக்கும் பெருமாள் முருகனின் கதை சொல்லல் அவரின் நேர்த்தியை அறிய வைக்கின்றது.

“தொடக்கத்தில் ஏறு வெயிலின் களத்தில் உருவானவை இதில் உள்ள சிறுகதைகள்தாம். இவை எனது பயிற்சிக் களமாகவும் அமைந்தன. அதை நோம்பிக்குக் கோர்க்கும் ஆவாரம் பூ மாலை போல, வெடித்த பூக்களும் மொக்குகளும் காம்புக் கோல்களுமாய் இத்தொகுப்பு நிறைந்திருக்கிறது. மாலைக்கு எல்லாமே வலுதான்” என்று தம் கதைகள் பற்றி பெருமாள் முருகன் முன்னுரையில் சொல்லியிருப்பது நோக்குதற்குரியது. சங்க செவ்விலக்கியங்கள் போல படிக்குந்தொறும் புதுப்புது அர்த்த உற்பத்திகளைக் கொண்ட புனைவாக அதுவும் வட்டார வழக்கில் சொல்லியிருப்பது அவரின் தனித்துவம்.

இவரின் முதல் கதை ‘கொறக்காடு’ என்பது. அது கொறக்காடு எனும் கிராமத்தில் வண்ணார் சாதி பெண் தன் கணவனை இழக்கி றாள். ஊர் நாட்டாமை உட்பட அனைவரும் விதவைச் சடங்கை நிகழ்த்தச் சொல்ல அப்படியான சடங்குகள் ஏதும் வேண்டாம் என்கிறான் அத்தை முறை உறவுக்கார படித்தவன்.

“என்னடா நீ பொழப்பத்தவனா இருக்கற. பெருமா கழுத்துல அஞ்சு பவுன் போட்டிருக்கா’ இப்ப உட்டா சமயம் ஏதுடா, சாங்கியம் பண்ணி வெள்ளச் சீல குடுத்தா நவையக் கழட்டித்தான ஆவோணும்...” (2008 : 16) என்று அவனின் அம்மா கட்டளை இடுகிறாள். இப்படி இன்னும் மாறாமல் இருக்கும் கொறக்காட்டை புனைகிறார். மதுப்பழக்கத்தால் வண்டியுடன் கூடிய மாடுகள் தங்கள் உயிரை விடுகின்றன எனும் புனைவு தடமாறும் வண்டிகள் எனும் கதை மனைவியின் தையல் மிஷினை விற்று ஐயப்பன் கோவில் போய் திரும்பும் ஏழைகளின் புனைவு ‘பயன்’ ஏழை கணவனை இழந்தவள் எருமை மாட்டை வைத்து பிழைக்கிறாள். அதை தடுக்கும் ஆதிக்க சக்திகள் பற்றி உண்ணிகள் கதை விளக்குகின்றது.

வேக்காடு எனும் கிராமத்து கவுன்டன் தன் கிணற்றில் யாரும் நீர் அருந்தக் கூடாது என்பதற்காக மேற்கொண்ட செயலை எதிர்நிலை யில் புனைவது வேக்காடு கதை. உறவுக்காரன் தானே என்று சொல்லி டிரேக்டரால் நிலத்தை உழுதற்கு அதிக பணம் கேட்பதை ‘ஒரம்பரை’ கதை சொல்கிறது. கறிக்குழம்பு அடுப்பிலே வீணானதற்காக தன் மனைவியை பல்வேறு சூழலைச் சொல்லி அடிக்கும் கணவனை ‘சிதைவு’ கதை காட்டுகிறது.

பெருக்கா எலி தன் வீட்டில் இருக்கிறது என்று அதனைப் பிடிக் கும் காட்டுக்காரனிடம் சொல்ல, அவன் பெரிய எலியை எடுத்துக் கொண்டு சிறிய எலியைக் கொடுப்பதை ‘கொடும்பினை’ கதை சொல்கிறது. அதில் எலி பிடித்தலை அருமையாகக் காட்சிப்படுத்தி யிருக்கிறார் ஆசிரியர். வறுமையால் குடும்பம் முடங்கி வறுமையில் உழல்வதை காட்சிபடுத்துகிறது ‘முடக்கம்’ எனும் கதை.

பெருமாள் முருகனின் தொடக்ககால கதைப்புனைவில் பரவலாக இடம்பெறும் சம்பவம் ஆட்டு கிடாய்க்கு ஒடை (விரய்) அடித்தல் என்பதாகும். அதனை வைத்தே அவரது ‘ஒடை’ எனும் கதை அமைந் துள்ளது. ஒடை அடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வீட்டின் முன்பு ரொம்ப நேரம் ஒருவன் ஒடை அடிக்க ஆட்டுடன் காத்துக் கிடக்கிறான். ஆனால் அவன் தன் மனைவியுடன் புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.

பெண்ணுக்காக (மனைவி) ஆண் வெம்பும் கதையை ‘வெம்பல்’ விளக்குகிறது. ஆட்டுக்கு உடல் நிலை சரியில்லை என்றவுடன் கிராமத்துப் பெண்ணின் மனம் எப்படி அல்லல்படுமோ அதனை நேர்த்தியான புனைவோடு விளக்கும் கதை ‘மொக்கபட்டம்’. இதுவரையிலான பதிமூன்று கதைகள் முழுக்க தன் மண்ணின் மரபுக் கதைக்கு மிஞ்சிய புனைவாக இல்லை. கீற்று கதை தொடங்கி கடைசி வரை இருக்கும் கதைகள் படைப்பாளனின் வாழ்தல் சார் புலம்பெயர் அனுபவ புனைவும் இணைவதைப் பார்க்க முடிகிறது.

கல்லூரி மாணவப் பருவக் காதலை கீற்று கதை விளக்குகிறது. கவுண்டனுக்கும் செருப்பு தைக்கும் சமூகத்தாருக்கும் இடையே இன்று நிகழும் அதிகாரப் பகிர்வின் புனைவே ‘ஆளுக்காரன்’ கதை யாகும். பள்ளத்தில் இருந்து மேட்டு வரை மிதிவண்டியைத் தள்ளி வரும் கவுண்ட பெண் அருகில் வந்த சக்கிலி இனப்பெண் அவனிடம் தன் இளமைகால அனுபவங்களை ஆசையோடு பகிர்கிறாள். அதை பெரிதுபடுத்தாது செல்லும் கவுண்ட பெண் செல்கிறாள். பெண் களுக்கு மத்தியில் இருக்கக்கூடிய சாதிய அதிகாரப் பகிர்வை இதுவரை இவ்வளவு திடமாக யாரும் புனையவில்லை என்றே தோன்றுகிறது. ‘மேடு’ எனும் கதை இதனை சாத்தியப்படுத்தியுள்ளது.

பெருமாள் முருகன் கதைகளிலே மிக சிறியதும் நல்ல செறிவான புனைவும் கொண்டது ‘விசுவாசம்’. கவுண்டன் வீட்டு அருகில் செருப்பு தைக்கும் சமூகத்தார் கடை ஒன்றை வைத்திருக்கிறார். அவர் அமர போடப்பட்ட கல் உயிர் பெற்றால் எந்த மாதிரியான உணர்வு களைப் பெறும் என்பது அப்புனைவு. கவுண்டன் வீட்டு குழந்தை அந்த கல்லில் சிறுநீர் கழிக்க அக்கல் “அது முழுக்க உருண்டோடி மண்ணில் விழும் வரைக்கும் கல்லின் வேதனை சொல்லி மாளாது. உப்பு கரிப்பு தொண்டைக்குள் இறங்கி அறுக்கும். வாய் முழுக்க நாறும். தூக்கம் முழுதுமாகப் போய்விடும். கொட்டாவி விட்டு விட்டுப் பார்க்கும். கண் மூட முடியாது. சில நாள் தான். அப்புறம் பழகிவிட்டது. நடு இரவில் அவன் வருகிற அரவம் கேட்டால் போதும். கிறக்கத்திலிருந்து லேசாகக் கண்ணை விழித்துப் பார்க்கும். வாயை அங்காந்து கொள்ளும். வெதுவெதுப்பான சூட்டில் உப்பு கரித்துக் கொண்டு விழும் பல்லலை சுகமாய் கூட முழுக்க பரவவிட்டு கொண்டு மயங்கும்” (2008 : 120-121).

திருச்செங்கோடு கதை தொகுப்பின் இறுதியாக ‘திருச்செங்கோடு’ என்பது, திருச்செங்கோடு கோவிலுக்குச் செல்லும் கணவன் இரு மனைவியரிடையேயான மன சலசலப்பை காட்சிப்படுத்துகிறது. பெ.மு.வின் முதல் தொகுப்பு சிறுகதைப் புனைவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தலுக்கான சாத்தியப்பாடுகளை இனங்காண்ப தாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் அவரின் முதல் தொகுதி யில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட அனுபவத் திற்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

பெ.மு.வின் இரண்டாவது கதைத் தொகுப்பு நீர் விளையாட்டு. காலந்தோறும் உருவாகும் கதை சொல்லிகளுக்கு ஏற்ப கதைத் தளங்களை அமைத்து கொடுத்து கொண்டே வரும் தன்மை உண்மை யில் வியத்தற்குரியது. சிறுகதையின் தந்தை, பிதாமகன், திருமூலர் என்றெல்லாம் பட்டங்கள் கொடுத்தளுக்கிணங்க, சிறுகதை விசால மான கதைக் கருவைத் தன்னுள் கொண்டுள்ளது. பெண்ணிய புனை வாளர்கள் உட்பட பலர் இயற்கையை, நீரை பற்றிய பல்வேறு விளை யாட்டுகளை கவிதையாகவும் புனைவாகவும் வரைந்துள்ளனர். ஆனால், பெ.மு.வின் நீர் விளையாட்டு பல்வேறு தத்துவ விசாரணை களை தன்னுள் கொண்டுள்ளது.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு அரசு பணிக்காகப் புலம் பெயரும் போது அவனுக்குள் ஏற்படும் சிலாகிப்புகளும் அவன் ஓய்வு நேரங்களில் தன் கிராமம் நோக்கி சைக்கிளில் பயணம் செய்து மீண்டும் மாலை திரும்புவதற்குள் இருக்கும் ‘வேட்கை’யை விளக்கு வது முதல் கதை. மௌனியின் கதைப் பாத்திரங்களின் மனநிலை சார்ந்து, ஆனால் உடல் தத்துவ இயக்கம் மற்ற ஒரு சைக்கிள் விளையாட்டு ‘வேட்கை’. நீலா எனு கிராமப் பெண்ணின் திருமணம் அவளின் காரைப் பல்லால் தடையாகிறது. அதனை போக்க செங்கல்லால் பல் துளக்க வேண்டும் என்று ஊர் யோசனை சொல்ல அதனைக் கேட்டு விதவிதமான செங்கற்களைச் சேகரித்து வைக் கிறாள். செங்கல் திருடி என்கிற பட்டமும் வாங்குகிறாள் என்பதை அவளுடன் அன்போடு பழகும் தம்பி கதையைச் சொல்வதைப் போல ‘நீலாக்கா’ என்ற கதை அமைந்துள்ளது.

மழை நீரில் விளையாடுவது என்பது பெண்களின் இயல்பான குணம். அப்படி மழைக்குருவியாக மாற நினைக்கும் பெண்ணை தடுக்கும் சூழ்நிலை பற்றிய புனைவு ‘மழைக்குருவி’, ‘கடை வீதியில் ஒருவன்’ எனும் கதை உண்மையில் பெ.மு.வின் தத்துவ விசாரணை புனைவில் அதுவும் தனிமனித மன உணர்வு காட்சிபடுத்தலின் வெற்றி. கிணற்று நீரில் விளையாடும் குழந்தையின் மனநிலை ‘புகலிடம்’ கதைக் காட்டுகிறது. உடல் நீரின் விளையாட்டு தனிமை யில் உடல் தாக நீரின் கோணங்களும் அதனை வரவேற்கும் மனநிலை யும் பற்றியது ‘சுவர்களும் கதவுகளும்’. ‘எருக்கஞ் செடிகள்’ எனும் கதை கற்பனை கலந்த மனிதத் தத்துவ விசாரணை. இறப்பதும், பிறப்பதும், பேயாகத் திரிவதுமான கற்பனையும் அதை பற்றிய உண்மை அறிதல்களும் எருக்கச் செடிகள் எண்ணிக்கையற்ற மலர் களை மலர்விப்பதும் பின் காய்ந்த காய் வெடித்து பஞ்சாக அங்கும் காற்றில் வியாபித்து நிற்பதுமான உண்மை தத்துவத்தை இறந்ததாக உணர்ந்த மனித மன உண்மை நிலை பற்றிய தத்துவ விசாரணை.

குழந்தையின் எச்சில் நீர் விளையாட்டு ‘சிறுத்த பூதம்’ எனும் கதை. அதீதக் கதைகளை விரும்பும் குழந்தை மனநிலையும் அதனை தன்னை மறந்து எழும் மதநீர் பட்டு பெற்றோரின் மகிழ்ச்சி விளையாட்டு, கணவன்-மனைவி உறவு, நாற்காலியில் அமர்ந்து பதநீர் அருந்தும் போதான இருமண உட்கிரகிப்புகளின் விளையாட்டு ‘இசை நாற்காலி’ கதை. குழந்தையின் சிறுநீர் பற்றிய கதைகளும், அக்குறிப்புள்ள கதைகளும் நிறைய தமிழில் உண்டு. ஆனால், பெ.மு.வின் சிறுநீர் பற்றிய புனைவு முற்றிலும் மாறுபட்டது. குழந்தையின் சிறுநீர் விளையாட்டே ‘பெரிதினும் பெரிது’.

பீவாங்கியின் ஓலம், பீ ஆகிய இரண்டு சிறு கதைகளும் ‘பீக் கதைகள்’ எனும் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. அவையும் நீர் விளையாட்டின் மற்றொரு புரிதலாக இருந்தாலும், அதனை அடுத்து பார்க்கலாம். சீட்டு விளையாட்டின் நுட்பங்களை ‘குரல்கள்’ கதை விளக்குகிறது. சீட்டு விளையாட தெரியாதவன் சீட்டு விளையாட கற்றுக் கொள்வதும் அவன் கற்றுக் கொள்வதோடு, கற்றுக் கொடுத்த வனை வெல்வதும் அப்படியான வெற்றியின் பொருட்டு பல குரல்கள் எழுவதை விளக்குகின்றது.

‘நீர் விளையாட்டு’ எனும் கதை, தொகுப்பின் தலைப்பாகவும் உள்ளது. உண்மையில் நீர் தன்னுள் பல்வேறு அறியப்படா மாயை களை கொண்டுள்ளது. குழந்தைகளோடு குளிக்கச் செல்லும் நடுத்தர வயது கொண்ட ஆண் (சித்தப்பா) நீரில் அதாவது கிணற்றின் நுட்பம் அறியாமல் விளையாடுகிறான். பின் உடல் சோர்ந்து கரையேறுவதாக சொல்கிறான். குழந்தைகள் அவரை உள்ளே தள்ளி மேலே ஏற விடாமல் குதிப்பதும் தண்ணீரை முகத்தில் தெளிப்பதுமான இயல்பான வி¬யாட்டுகள். அதனை எதிர்கொள்ள முடியாத சித்தப்பா நீரிலே மரணம் கொள்கிறார்.

“பிடிப்புத் தளர்ந்து நேராக நீருக்குள் போய் விழுந்தான். அவ்வ ளவுதான். எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டன போல குமுறத் தொடங்கினான். கைகள் அனிச்சையாக நீந்திக் கொண்டிருந்தன. திசை இதுவெனத் தெரியவில்லை. எங்கே பிறப்பென உணர இயல வில்லை. கை எதைஎதையோ பற்றியது. கால்கள் நடுக்கத்தோடு எவற்றின் மீதோ ஏறின. அது கிணற்றில் ஏதோ ஒரு பக்க சுவராக இருக்கலாம்” (2000:108)... என்று சித்தப்பாவை நீர் காவு வாங்குவதை பிள்ளைகள் உணராத விளையாட்டின் கூர்மையானப் பதிவு.

புனைகதை இலக்கியக் கருப்பொருளில் காக்கையைக் கொண்டு வரும் எண்ணற்ற கதைகள் உண்டு. ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன் போன்றோரின் புனைவில் அதன் நுட்பத்தைப் பார்க்க முடிகிறது. காக்கை, திருமணம் ஆகாத ஆணின் தலையில் கொத்த வரும் அவனுக்கு திருமணம் நிச்சயம் என்ற அந்நிகழ்வு நிற்பதுமான சாத்தியப்பாடுகள் கவனிக்கத்தக்கது. பெ.மு.வின் ‘காக்கை’ எனும் கதை ஆராயத்தக்கது. தன் அத்தை வீட்டுக்குச் செல்லும் சிறுவகை அண்டங் காக்கை தலையில் கொத்துகிறது. வருட கணக்கில் இடைவெளி விட்டு சென்றாலும் இந்நிகழ்வு நிகழ்கிறது. பெரியவ னான பின்பும் இது தொடர்கிறது. திருமணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு வரும்போது மட்டும் அதே காக்கை நீரில் குளித்துக் கொண் டிருக்கிறது. அவனைக் கொத்தவில்லை. இந்நிகழ்வு உண்மையில் காக்கைக்கும் மனித உறவுக்குமான இயற்கை உறவாடலின் வெளிப் பாடே. அத்தை உறவும் ஆணின் உடல்நிலை மாற்றதினூடாக நிகழும் ஆள்தெரிகாக்கை செயல்பாடு இவை.

பேருந்து பயணம் பற்றிய எல்லையடங்கா புனைவுகள் நமக்குண்டு. சிறுகதை நிலையில் அம்பையின் பயணம்-1, பயணம்-2 போன்றவை குறிப்பிடத்தக்கவை. பெ.மு.வின் ‘இருள் அழைப்பு’, ‘விதானம்’ பயண இலக்கியமாக அமைகிறது. பேருந்து பயணத்தின் போது எண்ணற்ற நிகழ்வுகள் புனைவாகியிருக்கின்றன. இருளில் போகும் பேருந்தில் தன் குழந்தை வெளிக்கு இருக்க நினைக்கிறது. அக்குழந்தையின் பாட்டி எவ்வளவோ முயன்றும் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் வண்டியை நிறுத்தவில்லை. அவர்கள் கீழ்சாதிகாரர்கள் என்பதாலோ என்னவோ அங்கு அவர்களின் பேச்சு எடுபடவில்லை. அவர்களின் சீட்டு கீழேயே பேப்பரை வைத்து தன் குழந்தையை பேள வைக்கிறாள். இதனைத் தொடக்கத்தில் இருந்தே ஒருவர் பார்த்துக் கொண்டு (பெ.மு.) இருப்பதாக செல்வது ‘இருள் அழைப்பு’ எனும் கதை.

பீக்கதைத் தொகுதியில் முதல் கதை ‘வேக்காடு’ என்பது. இது திருச்செங்கோடு தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அடுத்த கதை ‘பீ வாங்கியின் ஓலம்’ என்பது. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வாழ்க்கை நடத்த செல்லும் கணவன், மனைவி இடையேயான சில எதிர்கொள்ளலே அப்புனைவு. வீட்டோடு வடிய கழிவரை வாழ்க்கை, உணவுகளின் மீதியை எங்கு கொட்டுவது என்ற தன் மனைவியின் கேள்வி. கணவன் மீந்த உணவுகளை கழிவறையில் கொட்டுகிறான். அன்றிலிருந்து கழிவறையைக் காணும் அப்பெண் ணின் பார்வை நேர்த்தியாகப் புனையப்பட்டுள்ளது.

நகரத்தில் கூட்டாக அறை எடுத்து தங்கி பணியாற்றும் இளை ஞர்கள், அவர்களின் கழிவறை பைப் உடைந்து பீ குவியாகின்றது. அப்பீயை நீக்க வருபவனை தீண்டத்தகாதவனாக நினைத்தல் என்பதை மிக அற்புதமாக ‘பீ’ எனும் கதை விளக்குகிறது. அவ் விளைஞர்கள் இரவுகளில மது அருந்துகின்றனர். குறைந்த விலை யில் வாங்கிய ஒரேயரு பிளாஸ்டிக் டம்ளரையே அனைவரும் விரும்புதலும் அதனை வாங்கிய கதையும் பின் அந்த டம்ளரில் பீ வாருபவனுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்ததற்குப் பின் அந்த டம்ளரை யாரும் தொடுவதில்லை. உடல் கழிவு, இளைஞர் மன நிலை, தொழில் முறை வேற்றுமை இப்படிப் பல்வேறு களங்களைக் கொண்டுள்ளது. மேலும் பிற்சேர்க்கை-1, 2 என்கிற துணைத் தலைப்புகளைக் கொண்டு புதுவித கதை சொல்லல் முறையை இதில் பயன்படுத்தியுள்ளார்.

மூன்று இளைஞர்கள் கிணற்றில் விளையாடுகிறார்கள். அது வெள்ளைக் கவுண்டன் கிணறு. அவன் மீது இருக்கும் கோபத்தால் ஒருவன் கிணற்றில் சளி சிந்துவதும் மற்றொருவன் காறி உமிழ்வதும் செய்ய இவற்றைக் கவனித்த இன்னொருவன் இதற்கெல்லாம் மேலே ஒன்றை நாம் செய்ததாகச் சொல்ல வேண்டுமென்று எண்ணுகிறான். பீ பேண்டு விட்டதாகக் கூறி விடுகிறான். இது ஊருக்கே தெரிய வருகிறது. வெள்ளைக் கவுண்டன் அவனின் வீடு வரை வந்து திட்டுகிறான். பெற்றோர் அவனை உதைக்கின்றனர். அந்தக் கிணற்று நீர் இரவில் உலா வரும் கருப்பனார் நீர் அருந்தும் கிணறு. அவன் அனைத்தையும் நினைத்து இரவில் தன் நடைபயணத்தைத் தொடங்குகிறான். கிணற்றைத் தாண்டும் போது கருப்பனார் கிணற்றில் நீர் அருந்தும் சத்தம் கேட்கிறது என்று வெகு இலகுவான எதார்த்த தத்துவ இயல்பை மேல், கீழ் சாதி நம்பிக்கைகள் உரையாடலைப் புனைகிறார் ‘கருப்பனார் கிணறு’ கதையில்.

டீக் குடித்தால் தான் மலம் வரும் என்கிற நம்பிக்கையை எதார்த்தவியலுக்கு உட்படுத்திப் புனையப்பட்ட கதைதான் ‘தோழர் பி.எம்.மின் வெற்றி’. சேற்றிலே உண்டு சேற்றிலே உறங்கும் பன்றி களைப் போல நகரக் கழிவறைகளில் அம்மண குளியல், அம்மண மலங் கழித்தலையும் கேள்விக்குட்படுத்துகிறார் ‘வராக அவதாரம்’ எனும் கதையில்.

கிராமத்தில் இருந்து கிழவி நகரத்தில் இருக்கும் தன் மகள் வீட்டுக்குச் செல்கிறாள். அங்குள்ள கழிவறையைப் பழகுவது கடினமாகிப் பின் அக்கழிவறையின் செயல்பாட்டில் லயிக்கிறாள். இன்னும் கழிவறை சேமிப்பு தொட்டியின் மேல் சமையல் அறை அதிர்ச்சி அடைகிறாள் கிழவி. திரும்பவும் தன் கிராமத்திற்கு வருகிறாள். தன் வீட்டிலும் கழிவறை கட்ட வேண்டும் என்று விரும்புகிறாள். அதே சமயம் காட்டுக்குப் போய் மலம் கழிக்கும் ஒரு நாளில் தன் காதலிக்காக காத்துக் கிடக்கும் ஒருவன் காம உச்சத்தில் கிழவியைக் கட்டிப்பிடித்து விடுகிறான். இதனாலும் கழிவறை தன் வீட்டில் கட்டி விடுகிறாள். சுற்றியுள்ள குழந்தைகள் அந்தக் கழிவறை யில் பேண்டு விடுகின்றனர். பின் பூட்டு போடுகிறாள். உண்மையில் ‘கருதாம்பாளை’ என்கிற கதை மலம் கழித்தலின் எதார்த்தக் கதையாக அமைந்துள்ளது.

வயதான பாட்டி உடல் மாற்றத்தால் மலம் கழிப்பது கூட அதாவது தன்னை மீறி மலம் போவதை உணர்கிறாள். மருமகள் அதனைச் சுட்டிக்காட்டியதும் உணவே உண்ணாமல் இருந்து இறக்கிறாள். மலத்தின் மரணமாக அமைகிறது ‘மஞ்சள் படிவு’ கதை.

பாத்ரூமில் மலம் கழிக்கப் பழகிய பெண் திருமணமாகிச் சென்ற இடத்தில் திறந்த வெளியில்தான் மலம் கழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள தவிர்க்கும் இளம் பெண்ணின் மன உளைச்சலை ‘பிசாசுக்குப் போதுமான விஷயம்’ எனும் கதை விளக்குகிறது. உண்மையில் பெ.மு.வின் பீக்கதைகள் தொகுப்பு முழுக்க மலத்தின் பல்வேறு சிக்குமுக்குகளை உணர்த்துவன. மலம் கழித்தல் என்பது ஆண், பெண் இருவருக்குமே இயல்பு. அது உடலை விட்டு நீங்குவதும் நீங்குவது பற்றியதும், அதனைக் காண்பவர் பற்றியதும், அதன் தேக்கம், நாற்றம், நீக்கம் பற்றியதுமான பல்வேறு நிகழ்வுகளை ஒவ்வொரு மனித மனமும் உணரும் தன்மையை மிக நுட்பமான புனைவுகளாக பெ.மு. செய்திருக்கிறார். ஏனோ பொது கழிப்பிட கதவுகளிலும் கிராமங்களில் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களிலும் மலம் கழிக்கும் ஆண்களுக்கு எழும் காமம் பற்றியோ அதனை வெளிப்படுத்தும் வாசகங்கள் பற்றியோ ஒரு புனைவும் அமையாதது வருத்தத்தைத் தருகிறது.

திருச்செங்கோட்டில் தொடங்கிய அவரது புனைவு அடுத்தடுத்த இரண்டு தொகுப்புகளிலும் விசுவரூப புனைவாக மாறியிருப்பது போற்றுதலுக்குரியது.

சிறுகதைத் தொகுதிகள்

திருச்செங்கோடு, பெருமாள் முருகன், குறுத்து, ஈரோடு, 2008

நீர் விளையாட்டு, பெருமாள் முருகன், காலச்சுவடு, சென்னை, 2009

பீக்கதைகள், பெருமாள் முருகன், அடையாளம், புத்தாநத்தம், 2004

(கட்டுரையாளர் மயிலம் தமிழ்க் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் “தமிழ் இலக்கண மரபுகள்” குறித்து ஆய்வு செய்தவர்.)

Pin It