தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில்/சிறுகதை வரலாற்றில் பெரிதும் அறியப்படாதவராக இருப்பவர் சி.நரசிம்மன் என்னும் இயற்பெயர்கொண்ட விமலாதித்த மாமல்லன். 1980 முதல் 1995 வரையில் அவரெழுதிய முப்பது கதைகளையும் ஒரே தொகுப்பாகத் தொடர்ச்சியாக வாசிக்கும் பொழுது அவரது கதைகள் பற்றிய சில மதிப்பீடுகளை நம்மால் பெறமுடிகிறது. அவரின் கதைகளுக்கான மனிதர்களும் கதைக் கருவிற்கான நிகழ்வுகளும் வெகுசாதாரணமானவை. மிகப்பெரும் தீர்வுகளையோ மனதை உலுப்பும் முடிவுகளையோ சொல்லாமல் அன்றாட வாழ்வில் சிலமணி நேரங்களில் நடக்கும் வாழ்வியலை இயல்பாகச் சித்திரிப்பதாகவே அமைந்தவை அவரின் பெரும்பான்மைக் கதைகள். மத்தியத் தர வர்க்கத்தின் அதிலும் குறிப்பாக மத்தியத்தர பிராமண வர்க்கத்தின் வாழ்வியலை அதனுடைய மொழிநடையிலும் மாறாமல் பிரதிபலிக்கின்றன அநேக கதைகள். அவரது கதைகளைப் பொருண்மை அடிப்படையில் கீழ்க்காணும் தன்மையில் வகைப்படுத்திக் கொள்ள முடியும்.

-      சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வைப் பதிவு செய்யும் குப்பை, வயிறு, சரிவு, உதிரிக்கூட்டம், புறப்பாடு போன்றவை.

-      சிறுநிகழ்வுகளையும் தனிமனிதர்களின் மனநிலைகளையும் நுணுக்கமாகப் பதிவு செய்யும் அறியாத முகங்கள், சரிவு பலாமரமும் ரோடு இன்ஜினும், எதிர்கொள்ளல், நிழல், ஒளி, புள்ளிகள் போன்றவை.

-      நடுத்தர பிராமண வர்க்கத்தின் வாழ்வைச் சிறுநிகழ்வுகளின் ஊடாகப் பிரதிபலிக்கும் இலை, போர்வை, நியமம் போன்றவை.

-      அலுவலகச் சூழல்களைப் பிரதானப்படுத்திப் புனையப்பட்ட வருகை, பந்தாட்டம் போன்றவை(போர்வை, நியமம், நிகழ் போன்றவையும் அலுவலகச் சூழல்களைப் பிரதிபலிப்பவையே)

-      இயற்கை இகந்த கற்பனையாக வெளிப்படும் தாசில்தாரின் நாற்காலி, சிறுமி, கொண்டுவந்த மலர், குல்லா போன்றவை.

எனும் இத்தன்மைகளில் இவற்றை வாசிக்க முடிகின்றது.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் சொல்லப்படும் நடுத்தர பிராமண வர்க்கத்தினரின் வாழ்வும் அவர்களின் அலுவலகச் சூழலும் முக்கியமானவை. மிகப்பெரும் கதைச்சிடுக்குகளின்றி நகரியச் சூழலில் ஒண்டுக்குடித்தனத்தில் இயங்கும் மனிதர்களைப் பிரதிபலிக்கும் போர்வை மற்றும் நியமம் கதைகள் மிக இயல்பானவை. குழந்தையின் ஏமாற்றத்தைப் பதிவு செய்யும் வலி மற்றும் பருவமடைந்ததால் தன் தோழியுடன் இனிப் பழக முடியாது என்பதை நினைத்து ஏங்கும் சிறுவனின் மன உணர்வை வெளிப்படுத்தும் இடைவெளி ஆகியவை எல்லாக் குழந்தைகளிடத்திலும் ஏற்படும் மனவிசும்பல் என்பதை உணர முடிகிறது. தனிமனிதர்களின் உணர்வை மட்டுமே பிரதானப்படுத்தும் கதைகள் அதிகம் உண்டு. சரிவு , உதிரிக்கூட்டம் மற்றும் எதிர்கொள்ளல் ஆகிய கதைகளின் கதைகள் பெரும்பான்மை ஒத்தது தான். மூன்று கதைகளும் பாத்திரங்கள் சில மணி நேரங்களில் சந்திக்கும் சமூகத்தைப் பெரும் பூடகங்கள் ஏதுமின்றிச் சிறுநிகழ்வுகளாகப் பதிவு செய்பவையாக அமைந்தவை ஆகும். நிழல் கதையில் வரும் தகடு லோம்டே எனும் பாத்திரம் மொழி தெரியாத ஊரில் ஒருவன் எதிர்கொள்ளும் மனரீதியான தனிமைப் போராட்டத்தை விவரிப்பதாக உளவியல் தன்மைகளுடன் அமைந்தது.

மத்திய அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நிலையில் அந்தச் சூழல் பற்றிய ஆசிரியரின் கதைகள் மிக இயல்பானவை. வேலை செய்வோர், அவர்களுக்கிடையேயான தன்முனைப்பு(ணிரீஷீ) ஆகியவை பதிவு செய்யப்பட்ட கதைகள் சில ஒரே தன்மையிலேயே அமைந்தவை ஆகும். போர்வை, நியமம், வருகை, பந்தாட்டம் ஆகியவை இத்தன்மையன. இக்கதைகள் சிலவற்றில் பகிரங்கமாகவே வெளிப்படும் சாதியம் பற்றிய பதிவுகள் அலுவலகச் சூழல் சார்ந்து அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் எனினும் அதன் மீதான ஆசிரியரின் பார்வையும் முக்கியமானது. ‘அவன் பிராமணனாக இல்லாதிருந்தாலும் பரவாயில்லை. பறையனாக வேறு இருந்தான். ஆனால் அவனைப் பார்ப்பவர்கள் யாரும் அப்படி சொல்ல முடியாது’ எனும் ராவ்ஜின் நினைவாகப் பதிவு செய்வது (போர்வை) ஒரு பிராமணரின் இயல்பு எனினும் அதைப் பற்றிய வேறெந்த விமர்சனமும் இல்லாதிருப்பது முக்கியமாகின்றது. இன்னும் சில கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர் கையாளும் சாதியம் சார்ந்த சொற்கள் மற்றும் நிகழ்வுகளையும் குடிசைப்பகுதி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்வதையும் இதனுடன் இணைத்துக் காணவேண்டியுள்ளது.

கம்யூனிச இயக்கத்தை யதார்த்தம் எனும் நிலையிலிருந்து கேள்விக்குள்ளாக்கும் சத்தம் கதையும் கம்யூச இயக்கத்தையும் பெந்தகொஸ்தெ கிறித்துவப் பிரசங்கதையும் ஒருமித்ததாகக் கருதும் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் கதையும் முக்கியமானது. இதே கதையில் வரும் இசங்கள், கலைப்படம் மற்றும் நவீன நாடகம் தொடர்பான ஆசிரியரின் பார்வையும் எதிர்மறையாகவே இருக்கிறது. இலக்கிய நிலையில் அன்று பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய இத்தன்மைகளை எள்ளல் தொனியுடன் பதிவு செய்ததிலிருந்து ஆசிரியரின் அரசியல் நிலையை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகின்றது. யதார்த்த வாழ்க்கையில் இயக்கம்சார் கொள்கை பயன்படாது என்பதைப் பதிவு செய்ய ஆசிரியர் பிரயத்தனப்பட்டிருப்பதைச் சத்தம் கதை தெளிவாக்குகின்றது. நெடுந்தூரம் பயணம் செய்தவர் இவர். அது சில கதைகளில் அப்படியே பிரதிபலிக்கின்றது. ஒளி அவ்வகையில் அமைந்தது தான்.

முதல் கதையான குப்பைத் தொடங்கி விபத்து கதை வரையில் அமைந்த மொழிநடை கவனிக்கப்பட வேண்டியது. மராட்டிய பிராமணப் பாத்திரங்கள் பேசுவது அவர்களின் இயல்பான உரையாடல் தன்மையில் அமைந்தது. முப்பது கதைகளின் மொழியிலும் பெரும் மாற்றங்கள் எதுவும் இல்லை. இத்தன்மையே கதைகளைப் படிக்கத் தொடங்கும்போது ஒருவித ஈர்ப்பினையும் போகப்போக ஒருவித சோர்வையும் தருகின்றது. இன்னும் குடிசைப்பகுதி மக்களையும் சாலையோர மக்களையும் பதிவு செய்யும் போது இவர் கையாளும் மொழி இயல்புடன் அமையவில்லை என்றே தோன்றுகிறது.

இவர் கதைகள் சிலவற்றை வாசிக்கும் போது புதுமைப்பித்தனின் தாக்கம் இருப்பதை மறுப்பதற்கில்லை. தாஸில்தாரின் நாற்காலி,புள்ளிகள், குல்லா ஆகிய கதைகளைப் படிக்கும்போது இந்நினைப்பு எழுகின்றது. கதைக்களமே அன்றி மொழிநடையும் புதுமைப்பித்தனின் சாயலை நினைவுபடுத்துகின்றது. உதிரிக்கூட்டம் கதையின் இறுதியில் ஆசிரியர் தந்துள்ள குறிப்பு முக்கியமானது. புதுமைப்பித்தன் கதை மீதான விமர்சனத்திற்குப் பதில் கூறவும் அஞ்சலி செலுத்தவும் எழுதப்பட்டதாகவும் வருகின்ற விமலாதித்த மாமல்லனின் குறிப்பினை நோக்கும்போது புதுமைப்பித்தனின் தாக்கம் அவருக்கு இருந்திருப்பதற்கான முகாந்திரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மிகச்சிறிய கருவைச் சுற்றி இயல்பான நிகழ்வுகள் மற்றும் மொழி மூலம் ஆசிரியர் பின்னும் கதைகள் சில மிகச் சிறப்பாக அமைந்தவை. ஒரு சில கதைகளைப் படிக்கும்போது ஏற்படுகிற அயர்வைத் தவிர்க்க முடியவில்லை என்பதையும் பதிவு செய்யவேண்டியுள்ளது. இதற்கு ஒரேவகை மொழியும் பொருண்மையும் காரணம் எனலாம்.

கதையாசிரியராக மட்டுமின்றிக் கவிஞராகவும் அறியப்படுபவர் விமலாதித்த மாமல்லன். இன்னும் இவரது எழுத்துகள் பற்றி விரிவாகப் பேசப்பட வேண்டியுள்ளது.

பார்வை நூல்

விமலாதித்த மாமல்லன், விமலாத்தித்த மாமல்லன் கதைகள், உயிர்மை பதிப்பகம், சென்னை 2010.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ் உரைநடை வரலாறு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It