காமிக்ஸ் இருபதாம் நூற்றாண்டின் கலை வடிவம். கோடான கோடிப் படிமங்களைச் சுகிக்கின்ற மனித இனத்தை நோக்கிப் பாய்கிற வடிவங்களான புகைப்படம், திரைப்படம் இவற்றோடு சேர்ந்து பிறந்து நம்மிடம் வந்து சேர்ந்ததுதான். பலநூற்றாண்டுகளாகப் பழைய வடிவமான எழுத்துக்களைத் தாண்டி புதிய தொடர்பு சாதனமாக வந்து சேர்ந்தவை.  இவை ஒரு கருத்தை அறிய முற்படுபவர்களிடம் ஒருவித ஜனநாயகத் தன்மையை நிறுவின இவை அதிவேக-ரோட்டரி அச்சு எந்திரம் வந்த பிறகு, தினசரி செய்தித்தாள், வண்ணம் என்பன காமிக்ஸ் புத்தக வடிவத்தைப் பெரிய உயரத்திற்குக் கொண்டுவந்து விட்டன.

காமிக்ஸ் வார்த்தைகளையும் படங்களையும் உபயோகித்தாலும் அவை வெறும் வார்த்தையோ, வெறும் படமோ இயங்கும் தளத்தில் இயங்கவில்லை. தனக்கான ஒரு சக்தியைக் கொண்ட வடிவமாக அது இருக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து வைத்திருப்பதால் அதற்கு முன்பு வெறும் வார்த்தைகள் பேசிய முறைக்கு அப்பால், காண்பியல் மொழியோடு பேசும் முறையால் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புரட்சிகரமான ஒரு வடிவமாகத்தான் கொள்ளப்படுகிறது. வார்த்தைகளுடன் படங்களும் கூடிய நாவல் வடிவத்தில் பேசுகிறது காமிக்ஸ்.  காமிக்ஸ் காலம், வெளி, கட்டமைப்பு, சொல்லப்படும் முறை இவற்றின் வழியாக வேறு எந்த வடிவமும் செயல்படாத முறையில், ஏன் சினிமாவும் கூட செயல்படாத தனி வழியில் செயல்படுகிறது.  சினிமாவில் நாட்காணும் செட், நடிகர், காமிராவின் கோணம், மிக அருகில் தென்படும் கண்ணீர் துளி என அனைத்தும் காமிக்ஸில் ஒரு ஓவியராலேயே படைக்கப்படுகிறது.

சமகாலத்தில் சமூகத்தின் போக்கை வெளிப்படுத்தியிருப்பதுடன் அதைப் பதிவும் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட குகைமனிதனின் ஓவியம் இயங்குவது போலவே, அதன் தொடர்ச்சி போலவே பெரிய பாரம்பரியம் மிக்க நாகரிகம் கண்ட உலகின் பல்வேறு பகுதியில் இவ்வடிவம் ஊடகமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வளர்க்கப்படுகிறது. அதேபோல் பெரும் காண்பியல் மரபுடைய நாம் இக்கலையைத் தொடர்ந்து பேணிவளர்க்க மறந்துவிட்டோம்.  ஒரு தொடர்ச்சி அறுந்து விட்டது. குகை ஓவியம் தொட்டு கோயில் சிற்ப ஓவிய வழியில் கடந்த நூற்றாண்டு பத்திரிகை வளர்ச்சி, அதன் தேவையின்படி அவற்றில் பணிபுரிந்த ஓவியர்கள், தேவைகருதி ஒரு சிறு பகுதியாகத் தமிழில் காமிக்ஸ் முயற்சி நடந்திருக்கிறது. அவ்வப்போது புத்தக வடிவில் சில முயற்சிகள் கண்டு தோல்வியுற்றன. வெளிநாட்டிலிருந்து பழைய உரிமைகளைச் சொற்ப விலைக்கு வாங்கிவந்து பெரிய அச்சக உரிமையாளர்கள் சிலர் முயற்சித்து அதுவும் தொடர்ச்சியின்றி நின்றுவிட்டது.

1960களின் நடுவில் முதன்முதலில் தமிழில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளிக்கொண்டுவந்த காமிக்ஸ், டால்டன் பிரசுரம் கொண்டுவந்த “பால்கன்”, “பொன் மலர்” போன்றவை அரிய முயற்சிகள். அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளின் முயற்சியும் அரிதாகி நின்றுவிட்டது. இரும்புக்கை மாயாவியைத் தொடர்ந்து, Pai and Companyயின் முயற்சி போன்றவை ஒரு காலகட்டம் அவ்வளவே. என் ஆசைக்கு, குமுதம் ஆலோசகராக இருந்தபோது நாம் செய்யலாம் என்று நான் முதல் வாரம் வரைந்து காட்டியவுடன், அதில் லயித்து மகிழ்ந்து சுஜாதா இருக்கும்போது அவருடன் சேர்ந்து எழுதி ஒரு தொடர் வெளிவந்தது. இப்போதும் என் மனதில் செல்லம் வரைந்த ‘குண்டுபூபதி’ இருக்கிறது. அவ்வப்போது சில கதாபாத்திரங்களுடன் ஆன முயற்சி. ஆனால் பழைய முறையான ஒரே அளவில் உள்ள கட்டங்களுடன் தான் முயற்சி நடந்தது. நான் அதைச் சிறிது மாற்றி கதையின் நடத்தும் முறைக்கு ஏற்ப கட்டங்களை வடிவமைக்க பரிட்சார்த்தமாக முயற்சித்தேன் குமுதம் தொடரில்.

பள்ளிப் பருவத்தில் வெளியிலிருந்து வரும் காமிக்ஸ்தான் தமிழ்க் குழந்தைகளுக்கு. தீவிரமான அவ்வடிவம் குறித்த தேடுதல் கொண்ட அனைவருக்கும்கூட வெளிநாட்டில் இருந்துவரும் காமிக்ஸ் மட்டும்தான். 1950களில் என்னுடைய ஆரம்பப்பள்ளி நாட்களில் மதுரையில் என் தந்தையாருடன் தென்பகுதியின் முக்கிய புத்தகக்கடையாகிய பாரதி புத்தக நிலையத்திற்குச் செல்லுவோம். வாரத்திற்கு இருமுறை எப்படி யும் சென்றுவிடு வது ஒரு தொடர் சடங்கு. அப்புத்தகக் கடை யில் வெளிநாடு களில் இருந்துவரும் காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கிற அடுக்கிற்கு அருகிலேயே உட்கார்ந்துவிடுவேன். என்னைச் சுற்றி பெரியவர் களின், கடைக்கு வருபவர்களின் கால்கள்தான் இப்படியும் அப்படியும் கடந்து செல்வது தெரியும். புத்தகக் கடையிலிருந்து திரும்புவதற்குள் அனைத்து காமிக்ஸ்களையும் பார்த்துவிட வேண்டும் என்கிற தீவிரத்தைத் தவிர எனக்கு அப்போது வேறு நோக்கமே கிடையாது.

அத்தனை வெறி அந்த கட்டங்களைப் பார்ப்பதிலும் அந்த நான்கு கலர் உலகத்தை ருசிப்பதிலும் தான். Walt Disney Comics, Harvey Comics, Gold key Comics Illustrated போன்றவைதான் அப்போது. இடைப்பட்ட காலத்தையெல் லாம் தாண்டி, இப்போது, ஐரோப்பா செல்லும்போதெல்லாம், குறிப்பாக, பாரீஸில் முதன்முறையாக ஈழத்துக்கவிஞர் சுபாசு வின் வீட்டில் தங்கியபோது அவர் துணைவியாரும் குழந்தை களும் செயின்மிஷலில் கொண்டுவந்து மிகப்பெரிய காமிக்ஸ் புத்தகக் கடையின் முன்பு என் தோளில் இருக்கிற பையில் ஒரு சாண் விட்சை வைத்து நாள்முழுவதும் அங்கு விட்டுச் சென்றதில் ஆரம்பித்து மிகப்பெரிய, மாபெரும் வளர்ச்சி கண்டுவிட்ட இக்கலைவடிவத்தின் போக்குகளையும் வரலாற் றையும் பல்லாயிரக்கணக்கான இத்துறையில் சாதனைபுரிந்த கலைஞர்களின், இப்போதைய சமகாலக் கலைஞர்களின் படைப்புகளையும் திகட்டாது பருகுகிற பருகிக்கொண்டே இருக்கிற, திராட்சை ரசக் கிடங்கிலேயே மயங்கிக் கிடக்கிற குடிகாரனாகவே இப்போதும் என்னை உணருகிறேன். இந்த மயக்கமே என்னைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. என் வாழ்நாளில் அந்தக் கட்டங்களில் நிலைகுத்தி இருந்த நேரம்தான் நான் செய்த வேலைகளில் பெரும்பகுதி. இந்தப் பார்வைதான் என் சக கலைஞர்களில் இருந்து என்னைத் தனித்திருக்க வைத்திருக்கிறது. பலருக்கு இந்த காண்பியல் மொழியோடு கூடிய தொடர்புசக்தி பெருவாரியாக இல்லாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன்.

mayavi_370காமிக்ஸ் புத்தகம் குழந்தைகளுக்கானது. அதைத் தொடர்ந்து படிக்கிறவர் வளராதவர் என்ற புனைவிலிருந்து வரும் சமூகத்தைச் சேர்ந்த வர் இவர்கள். என்னைச் சுற்றியிருந்த மூத்த கலைஞர் களுக்குக்கூட இதில் தெளிவு இல்லை. ஏன் ஓவியக்கல்லூரி ஆசிரியர்களுக்குக்கூட உலக காமிக்ஸ் துறையில் பங்களித்தவர் கள் பற்றிய நல் அபிப்பிராயம் அப்போது கிடையாது. ஏனெ னில் பின்புதான் எனக்கும் அறியக்கிடைத்தது 1960களின் கடைசியில்தான் பெரிய வெளிச்சம் அக்கலைஞர்களின் மீது பாயத் தொடங்கியது என்பது. அவர்களின் பங்களிப்பு உயரிய ஒன்றாகவும், காமிக்ஸ் ஒன்பதாவது கலை என்றும் உலகம் கொண்டாடத் தொடங்கியது அப்போதிலிருந்துதான். நெசவாளர் பணி மையத்தில் 80களின் கடைசியில் மூத்த ஓவியர் ஆதிமூலம் அவர்களிடம், நான் பணியாற்றியபோது அவ்வப்போது நான் கண்ட இத்துறை சார்ந்த வரலாறு மற்றும் மிகப்பெரிய அர்ப்பணிப் போடு செயலாற்றிய மாபெரும் கலைஞர்களின் படைப்புகளை திரு.ஆதிமூலம் அவர்களிட மும் காண்பிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவரும் இந்த 150, 200 ஆண்டுகளுக்குள் வளர்ந்துவிட்ட  இக்கலைவடிவம் பற்றிய மதிப்பீடு தாமதமாக இங்கு வந்ததால் இதன்பால் விரிவான பார்வை இங்கு இல்லை என்பதையும், நாங்களும் அறிந்திருக்கவில்லை என்றும், நான் அளித்த புத்தகங்கள், பெரும் கலைவிமரிசகர்களின் சீரிய பார்வையும் தனக்கு விரிவான பார்வையை அளிக்கிறது என்றும் கூறி மகிழ்வார் என்னிடம்.  குறிப்பாக அப்போதைய “GRAPICS” இதழின் காமிக்ஸ் பற்றிய புதிய முன்னெடுப்பும், மறுவாசிப்பும் மற்றும் நான் அவருக்குச் சேகரித்துக் காண்பித்த Hal Foster Milton Caniff, Alex Raymond, Burne Hogarth, Winson Mccay போன்ற ஓவியர்களின் படைப்பைத் தீர்க்கமாகப் பார்த்தபின், நான் அவருக்கு அளித்தமைக்கு என்னைப் பாராட்டியதும் அப்போது எனக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்த ஒன்று.

ஓவியக்கல்லூரி நாட்கள் நிறைவானபோது வந்த Star Wars பற்றி நான்கு புகைப்படங்களைப் பார்த்துவிட்டு என் ஓவியக் கல்லூரி சகமாணவர்களிடம் திரைப்பட உலகவரலாற்றை மாற்றப்போகிற படம் இது என்று நான் சொன்னபோது “உனக்கு காமிக்ஸ் பிடிக்கும் அதனால் சொல்கிறாய்” என்று சொன்னவர்கள் இன்றும் குப்பைத் தமிழ் சினிமாவில் அங்க மாய் இருக்கிறார்கள்.

1980களின் கடைசியில் கம்ப்யூட்டர் வரும்போது அதையும் நோக்கி நான் சென்றபோது கேலியாகவும் “காமிக்ஸ் அனிமேஷன் உன்னை பெரும்பாடுபடுத்துகிறது” என்று கூறியவர்களும், இவை சார்ந்த பார்வை இல்லாமலேயே ஓவியக் கல்லூரி முதல்வராகவும் இருந்துவிட்டுப் பின்னாளில் அனிமேஷன் பயிற்சிப் பள்ளி ஓன்றுக்கு வகுப்பு எடுக்கச் சென்றவர்களும் நம்மிடம் உண்டு. இப்போது காமிக்ஸ் தயாரிப்பு கம்ப்யூட்டர் இல்லாமல் கிடையாது.

இன்றும் இந்த ஊடகத்தின் சக்தி தெரியாதவர்களே ஊடகத்துறை படிப்பிற்கான பாடத்திட்டங்களைப் பல கல்லூரிகளில் தயாரிக்கிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் பல கல்லூரிகளுக்கு நான் விரிவுரை ஆற்றச் செல்லும்போதும் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில் இயங்க வரும்போதும் இத்துறையை வளர்த்தெடுக்கப் போராடி வந்தும் இயலவில்லை. சமீபத்தில் சில புத்தக வெளியீட்டாளர்கள் “Graphic Novel” செய்ய வேண்டும் என்று (அதில் நிச்சயமாகப் பெரிய வருமா னம் உண்டு என்பதைக் கண்டதாலோ தெரியவில்லை.) வருவ தும் கூடவே இதற்கான ஓவியர்களே கிடைக்கவில்லை என்றும் குறைபடுகளும் எனக்குத் தெரியவந்தது. அப்படிச் சொன்ன ஒரு பத்திரிகையாளருக்கு “ஒரு நாற்பது ஆண்டுகளாக நம் தமிழ்ப் பதிப்பாளர்கள் படங்களோடு கூடிய அவசியமான இடங்களில் படங்கள் இருந்தே ஆகவேண்டிய இடத்திலும் இல்லாமல் அதைத் தவிர்த்துச் செலவைக் குறைக்கும் வழியாக அதைக் கண்டு லாபம் பார்த்தவர்கள் படங்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளையும், எழுத்து களையும்கூட படங்கள் தவிர்த்த லாபகரமான புத்தக வடிவி லேயே தமிழ் மக்களுக்குச் சேவை செய்தார்கள். 

சமகாலத்தில் அதைச் செய்திருந்தாலோ, ஆதரித்திருந்தாலோ தான் இன்று நிறைய ஓவியர்கள் இருந்திருப்பார்கள் என்று பதில் சொன்னேன். இன்னும் கம்ப்யூட்டர், இணையதளம் போன்ற வசதி வந்தவுடன் படங்களை உபயோகிக்க வெளி யீட்டுச் செலவு கட்டுப்பாட் டிற்குள் வந்துவிட்டதாகக் கருதியதுடன் ஓசியில் கிடைக்கும் வெளிநாட்டு ஓவியர்களின் படங்கள், திருட்டுப் படங்கள் போன்றவற்றைப் புரியாமலே பயன்படுத்து வது பெருகிவிட்டது. கூடவே சில எழுத்தாளர் கள்,  ஓவியம் மற்றும் ஓவியருக்கான இடம் தங்கள் முக்கியத்து வத்தைக் குறைக்கும் என்றும் கருதுகிறார்கள். பெரிய வியாபாரப் பத்தி ரிகை ஓவியம், ஓவியர் முக்கியத்துவம், காப்பிரைட் ஆகியவற் றைப் பற்றிப் பெரிதாகப் பேச விரும்பவில்லை.

சிறிய பத்திரிகைகள் பல Layout செய்யும்போது இணைய தளத்தில் கிடைக்கிற வசதியான படத்தை பக்கத்தில் போட்டு நிரப்பி கல்லாவை நிரப்புகின்றன. வளரும் கலைஞர்களை நிராகரிக்கின்றன. பெரும் வாரப்பத்திரிகைகளில் தொழில் முறை ஓவியர்கள் இயங்குகிறார்கள். ஒருமுறை அவர்களுக்குப் பணம் செலுத்துவது தாமதமானால் அடுத்த முறை அப்பத் திரிகைகளுக்கு ஓவியம் அளிப்பதற்கு யோசிக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் நானும், திரு ஆதிமூலம் அவர்களும் பணத்தை முன்னிருத்தி பெரும் பத்திரிகைக்குச் செல்லவில்லை. சமகாலப் பரிட்சார்த்தமுறை செயல்பாடுகளைச் சிறுபத்திரி கைகளைத் தாண்டி மக்களிடம் கொண்டுசெல்ல ஒரு வெளி வேண்டியிருந்தது. வியாபாரப் பத்திரிகைகளும் எந்த நிர்பந்தமும் சொல்லாததற்குக் காரணம் புதியன வேண்டும். இவை புதிதாக இருக்கிறது என்பதுதான். மற்றபடி எதுவு மில்லை.

தற்போது சிறுபத்திரிகை போல் தோற்றமளிக்கும் பத்திரிகைகளில் வளரும் கலைஞரும் காசு இல்லாமல் வரைந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். யாரும் கிடைக்காத பட்சத்தில்  தரமற்றவற்றை நவீன ஓவியமாகக் காண்பிப்பது அல்லது இருக்கவே இருக்கிறது இணையதளம் படங்களை அளிக்க... திடீரென்று “கிராபிக் நாவல்” செய்ய எப்படி ஆட்கள் வருவார்கள்? குற்றம் ஒரு இடத்தில் இல்லை. பள்ளிப் பாடத்திட்டம், ஓவியக்கல்லூரிப் படிப்பு செய்நேர்த்திக்கான அங்கீகாரம், கடந்தகாலம் தொட்டு இன்றுவரை பெரிய பத்திரிகைகளில் இருந்து சிறுபத்திரிகை வரையில் உள்ள காண்பியல்சார் அணுகுமுறை, ஓவியர்களுக்கான பொருளா தார ஒத்துழைப்பு, சமகால வடிவங்களான பதிப்புத்துறை, சினிமா போன்றவற்றில் உள்ள காண்பியல் சார் பார்வை என்று பல்வேறு தளத்தில் பார்க்க வேண்டும்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் சமமாகச் சேர்ந்து செயல்பட படைப்புரிமை சமமாக இருக்க வேண்டும். இன் னும் குறிப்பாகக் காமிக்ஸ், கிராபிக் நாவல் போன்றன.  இவை யெல்லாம் தெளிவாக இருக்கும் நிலையிலேயே வளரும். இன்னும் எழுத்தாளர்கள் நிலையே தெளிவாக இல்லாததால் தான் தங்கள் நிலையில் புகழ் பணம் ஆகியவற்றில் பாதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற பயமும் அவர்களிடம் இருக்கிறது. குறிப்பாகக் காமிக்ஸ், கிராபிக் நாவல் பெரும் அளவில் ஓவியரின் தளம். உலகம் முழுவதும்  பெரும்பாலும் கொண்டாடப்படுகிறவர்கள் இத்துறையில் ஓவியராகவும், எழுத்தாளராகவும் ஒருவரே இருப்பவர்தான் என்றாலும் மிகையில்லை. எனவே இக்குறைகளைக் களைவது முதல் வேலை என்பதுடன் அனைத்துத் தளத்திலும் சமமான பார்வை வந்தால் ஒழிய இவை வளருவதற்கான வாய்ப்பு இல்லை.

வார்த்தைகளோடு அதற்கான படிமங்களைக் கண்டு உணராத சமூகம், காண்பியல் மொழியால் கட்டமைக்கப் பட்ட உலகத்தில், அது வளர்ந்து ஓங்கி வருகிற காலகட்டத்தில், தொடர்பு நிலைக்கு அப்பாலே நின்றுவிடும்.  காண்பியல் மொழி அறிவு, செய்நேர்த்திக்கான பட்டறைகள், அங்கீகாரம், பதிப்புரிமை போன்றவையே தொடர்ந்து இளைய சமூகத்தை இத்துறை நோக்கி ஈர்க்கும். அதற்குத் தற்போதைய கல்வி  மற்றும் அரசுசார் துறைகள் பத்திரிகை, பதிப்பகத்தார், கலைத் தொழில் பாடத்திட்டம் என இவை அனைத்தும் ஒருமித்த வழியில் நடந்தால்தான் வழி பிறக்கும்.

Pin It