கீற்றில் தேட...

 

கௌதம் பான்

தமிழாக்கம்: டி.ஜி.ரவீந்த்ரன் 

ஜூலை 2, 2009, வியாழனன்று சட்டப் பிரிவு 377இன் சில பகுதிகள் குறித்த தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பின் மொழி மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. 1946ஆம் ஆண்டில் நடந்த அரசியலமைப்புச் சட்ட விவாதங்கள் இந்த முடிவை எட்டு வதற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வாதங்கள் நாம் இன்று அறிந்திருப்பதைவிட மற்றொரு விதமான இந்தியாவை நமக்கு நினைவுபடுத்துகின்றன. விடுதலையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த இந்தியாவின் கனவுகள் அவற்றில் வெளிப்பட் டிருந்தன. நமது அரசியலமைப்புச் சட்டத்தை அதன் ஆத்மார்த்த உணர்வுகளின் வழியே பார்க்க வேண்டுமே தவிர, குறுகிய சட்ட மொழியின் வார்த்தைகளாகப் பார்க்கக் கூடாது என்று நேரு இந்த விவாதங்களின் பொழுது தனது உரையின் மூலம் வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கருத்தியலை எடுத்துக் காட்டும் ஒரு இணைப்புக் கோடு இருக்கிறது என்று சொல்ல இயலுமானால் அது, அதில் பொதிந்திருக்கும் "ஒன்றிணைந்து செல்லும் பண்பு" (inclusiveness) என்பதே. இந்தியச் சமூகத்தில் ஆழமாக, பரம்பரைப் பரம்பரையாக உட்பொதிந்துள்ள நன்னெறி எல்லா மக்களின் நலனையும் அரவணைத்துச் செல்லும் இந்தப் பண்புதான் என்பதை இந்த நீதிமன்றம் நம்புகிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது.இது மட்டுமின்றி மாற்றுப் பாலியல் கொண்டோர் (LGBT persons) உரிமை என்ற விஷயத்தில் பொது ஜனத்தின் தவறான புரிதல்களின் பிடியில் குற்றவியல் சட்டம் இருப்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தீர்ப்பின் வாதமுறை எடுத்துச் சொல்கிறது. பாரபட்சம் காட்டுதல் என்பது அனைவரும் சமம் என்ற அடிப்படைக் கருத்தியலுக்கு நேரெதிரான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அது மட்டுமின்றி சம உரிமையின் அவசியத்தை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதன் மூலம்தான் ஒவ்வொரு தனி நபரின் சுயகௌரவத்தைப் பாதுகாக்க முடியும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

ஜூலை 2 ஆம் நாள் காலை 10.30க்குத் தீர்ப்பு என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் முதலாவது நீதிமன்ற அரங்கின் அன்றைய பணி பட்டியலில் முதலாவது விஷயமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் உள்ளே நுழைந்தார்கள். சட்டப் பிரிவு 377க்கு எதிராக ஒரு தலைமுறை கால போராட்டங்களின் தருணங்கள் அவர்களது நினைவில் அலைமோதுகின்றன. தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது அந்த அறையில் பொங்கி எழுந்த உணர்வுகளை நம்மால் உணர முடிந்தது. எங்களது கண்களில் கண்ணீர் பெருகியது. இந்தக் கண்ணீர் 'வெற்றி' பெற்றுவிட்டோம் என்பதால் அல்ல, எங்களைச் சுதந்திர மனிதர்களாய் ஆக்கியிருக்கிறது இந்தத் தீர்ப்பு. இது சுயகௌரவம் பற்றியது. நேரு கற்பனை செய்த இந்தியாவை வெளிப்படுத்துகிறது இந்தத் தீர்ப்பு. அதாவது தனது எல்லைக்குள் வாழும் அத்தனை விதமான மனிதர்களையும் அரவணைக்கத் தயாராக இருக்கும் இந்தியாவைத் தான் அவர் கற்பனை செய்தார். இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான 'உயிர்களின் வாழ்க்கையில்' சமத்துவம், சுய கவுரவம், உரிமைகள் போன்ற வார்த்தைகள் அர்த்த பாவத்துடன் வேர் கொள்ளப் போகும் தருணம் இது. இவர்கள் அனைவரும் இப்பொது தான் தங்களது கால்களைத் தங்களது நாட்டில் பயமின்றிப் பதியவைத்து, இனிமேல் தான் பயணத்தைத் தொடர்வார்கள்.

நம்மை அம்பேத்கர் காலத்திற்கு இட்டுச் செல்கிறது இந்தத் தீர்ப்பு. தனது வளமான சிந்தனைக்கு இணையான அரசியலமைப்புச் சட்டம் உருவாகப் போராடிய அம்பேத்கரை இந்த நீதிபதிகள் நினைவூட்டுகிறார்கள். அம்பேத்கர் இந்தியாவைப் பற்றி மிகுந்த மன எழுச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்ட ஒழுக்க நெறிகளின்படி இயங்க வேண்டுமே தவிர பொதுஜன ஒழுக்க நெறிகளின்படி அல்ல. நலன் என்பது பொதுஜன ஒழுக்க நெறிகளின்படி முடிவு செய்யப்படக் கூடாது. இதன் அடிப்படை அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்ம சக்தியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வரும் நாட்களில் ஒழுக்க நெறிகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஊடகங்களில் பல்வேறு விதங்களில் வெளிப்படும். அந்தச் சமயங்களில் ஒழுக்க நெறியின் மற்றொரு பக்கத்தையும் சமமான அளவில் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது குடிமக்கள் என்ற வகையில் நாம் பகிர்ந்துகொள்ளும் ஒழுக்க நெறிகளை மனதில் கொள்ள வேண்டுமே தவிர தனிப்பட்ட கருத்துப் பதிவுகளை அல்ல.

இந்தத் தீர்ப்பு சமத்துவம் பற்றியது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாரபட்சம் பற்றிய ஷரத்துக்களில் பொதுவான முறையில் பயன்படும் "பால்" என்ற சொல்லுடன் "பாலுறவுத் தேர்வுணர்வு" (sexual orientation) என்பதையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். பாரபட்சம் கூடாது என்பதற்கான சட்டங்கள் பாலினம், பாலுறவு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளன. இதனுடன் இனிமேல் "பாலுறவுத் தேர்வுணர்வு" என்ற அம்சத்தை யும் இணைத்து அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரினப் புணர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்குவது செல்லாது என்று அறிவித்ததன் மூலம், அவர்களை மருத்துவமனைகள், இல்லங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் சரிசமமான மரியாதை யுடன் நடத்த வேண்டும் என்பதையும் நீதிபதிகள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பை நாம் ஓரினப் புணார்ப்பாளர்கள் என்ற நிலையில் மட்டும் புரிந்துகொள்ளாமல், பொதுவாக இந்தியர்கள் என்ற நிலையில் நமது பாலினத் தேர்வு, பாலினம், மதம், சாதி, மொழி அல்லது பிராந்தியம் ஆகியன எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் முக்கியமான தீர்ப்பு என்ற கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். தங்களது பல்வேறு உரிமைகளுக்கான ஏராளமான இயக்கங்கள், இந்த நாட்டில், கடந்த காலங்களிலும் இப்போதும் தொடர்ந்து போராடி வருகின்றன. பலர் மாற்றம் என்பது இந்தியாவில், அதுவும் நவீன இந்தியாவில், சாத்தியமே இல்லை என்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் உட்பட பலரும் இன்றைய ஆட்சிமுறை மற்றும் அதனைச் செயல்படுத்தும் கட்டமைப்புகளின் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறோம். இந்த நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு நம்மிடையே ஒரு புதிய நம்பிக்கையைத் துளிர்க்க வைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதை நினைவுறுத்துவதோடு மட்டுமன்றி இயக்கங்கள், போராட்டங்கள் ஆகியன சில சமயங்களில் வெற்றிகளையும் அடையக்கூடும் என்பதையும் காண்பிக்கிறது. இந்தத் தீர்ப்பு ஓரினப்புணர்ச்சி யாளர்களின் உரிமைகளை மட்டும் நிலைநாட்டியதாக எண்ணாமல் அனைத்து இந்தியர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக் கின்றன என்ற உண்மையைப் புரிந்துகொண்டு எல்லா இந்தியர்களும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாட வேண்டும்.

அதே சமயம், வருங்காலம் குறித்து மிகக் கவனமாய் இருக்க வேண்டும். 'க்வியர்' மக்களின் சுயகௌரவத்தை மீட்டெடுக்கும் போராட்டம் நீதிமன்ற வெற்றிகளுடன் நின்றுவிட முடியாது என்று வெகுகாலமாகவே எங்களது அமைப்புகள் கூறிவருகின்றன. "ஹோமோஃபோபியா" என்று சொல்லக்கூடிய ஓரினப்புணர்ச்சி குறித்த பயமும் வெறுப்பும் குடும்பங்களில், மருத்துவமனைகளில், காவல் நிலையங்களில், அலுவலகங்களில், ஏன் தெருக்களில் கூட மிகுந்த எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை குறித்துத்தான் நமது உண்மையான போராட்டம் இருக்க வேண்டும். இது போன்ற பிரச்சனையைச் சட்டத்தினால் ஒரு நாளில் மாற்றிவிட முடியாது. நமது போராட்டங்கள் மூலம் கடந்து செல்ல வேண்டிய பாதை வெகுதூரம் இருக்கிறது. ஆனாலும் கூட இந்தத் தீர்ப்பு நமது கைகளை இணைத்திருக்கிறது. பொது மக்களின் கருத்தை மாற்று வதற்கான நமது வாதங்களை நம்மால் இனிமேல் சமமான களத்தில் வைக்க முடியும். இப்போது இந்தத் தீர்ப்பின் வார்த்தைகள் நமக்குத் தெம்பூட்டுபவையாகவும் பிறரிடம் எடுத்துக்கூறவேண்டிய உயிர்த்துடிப்புள்ள கருத்துக்களாகவும் அமைந்துவிட்டன.

இந்தத் தீர்ப்பால் மிகப்பெரிய மாற்றம் விளையக்கூடிய இடம் 'க்வியர்' மக்களின் இதயங்களே. நம்மை நாமே ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகள், நாம் நாமாக இருப்பதைப் பற்றி வெட்கப்படாமல், நமக்கான உரிமைகளைப் பெறுவது, அவை முக்கியமானவை என்று நம்புவது ஆகியவை நமக்குள் மனப்போராட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. எந்த ஒரு 'க்வியர்' இளம் பெண்ணும் இனி தான் கண்ணாடியில் காணக்கூடிய பிம்பத்தைச் சீரானதாக ஆக்கக் கூடியதாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

377ஆவது சட்டப் பிரிவைப் பற்றி சமீபத்தில் இந்திய அரசாங்க மும் அதன் அமைச்சர்களும் பல கருத்துக்களைக் கூறினார்கள். அவர்கள் இந்தத் தீர்ப்பை மிகக் கவனமாகப் படித்துத் தங்களது மனசாட்சிப்படி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இந்தத் தீர்ப்பின் எந்தெந்த அம்சங்களைப் பரிசீலிக்க அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். சட்டமியற்றும் மன்றங்களில் அரசியல் மற்றும் அரசு அறிவு மிக்கவர்கள் உறுப்பினராவார்கள் என்றொரு கனவு அம்பேத்கர் அவர்களுக்கும் நேரு அவர்களுக்கும் இருந்தது. இதனை இன்றைய சட்ட மாமன்றங்களின் உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சேர்ந்திணைந்து செல்லும் உணர்வு, சகிப்புத் தன்மை, அரசியலமைப்பு சட்டம் சார்ந்த ஒழுக்க நெறி, சமத்துவம் போன்ற வார்த்தைகள் நமது முன்னோர்கள் கற்பனை செய்த இந்தியாவில் எல்லா மக்களுக்குமானவை. இன்று அவை 'க்வியர்' மக்களுக்கும் பொருந்தும். இந்த வார்த்தைகள் மீண்டும் இந்தியத் தன்மையை குறிக்கும் வார்த்தைகளாக மாற முதல் அடி எடுத்து வைத்திருக் கின்றன. இந்தப் பண்புகள் நமது இந்தியப் பண்பாட்டு நெறிகளில் இரண்டற கலந்திருக்கின்றன என்பதை இந்த நீதிபதிகள் நமக்கு நினைவூட்டியுள்ளனர். இதனாலேயே பலர் இன்று இவற்றைக் "காப்பாற்ற" பெரு முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். நாம் யாராக இருந்தாலும் சரி, நமது பாலியலும் அதனைப் பற்றிய சிந்தனையும் எதுவாக இருப்பினும், இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இது மதச்சார்பற்ற, ஜனநாயக, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் சுதந்திர இந்தியாவிற்குக் கிடைத்த வெற்றி என்று கருத வேண்டும். நாம் அனைவரும் இதில் பெருமை கொள்ளலாம். இன்றைக்குத்தான் 'க்வியர்' மக்கள் பெருமித உணர்வுடன், மகிழ்ச்சியுடன் மற்ற இந்தியர்களைப் போல சுதந்திரமாகவும் சமமாகவும் உணர்கிறார்கள். வெகு காலம் கழித்து இன்று தான் தங்களது பாதங்கள் பூமியில் அழுத்தமாய்ப் பதிந்தது போல் உணர்கிறார்கள்.

(கௌதம்பான் தில்லியில் நகர்ப்புற திட்டமிடுநராகப் பணியாற்றி வருகிறார். பாலியல் புகார் சமூக இயக்கங்களில் கடந்த பத்தாண்டுகளாக இவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஜூலை 3, 2009 அன்று ஆங்கிலத்தில் வெளியானது. இதன் தமிழாக்கம் "உடல்கள் உணர்வுகள் உரிமைகள்" என்ற நூலில் வெளியானது.)