தண்ணீருக்கும், மழைக்கும் திரையியலைப் பொருத்தவரை உலக அளவில் சில அர்த்தங்கள் உண்டு. சுத்திகரிப்பு, மறுபிறப்பு, பெண்மை, இவ்விரண்டையும் கற்பனையுடன் பயன்படுத்திய திரைபடங்களில் சட்டென நினைவுக்கு வருபவை: சிங்கிங் இன் த ரெயின் [1952], காட் ஒன் தெ ஹாட் டின் ரூஃப் [1958], ஸ்ட்ரே டாக் [1949], 7 சமுராய் [1954], பதேர் பான்சாலி [1955], மதர் இந்தியா [1957], ஷஷான்க் ரிடெம்ஷன் [1994], ரோட் டு பர்டிஷன் [2002]. எனக்கு மிகவும் பிடித்தது ராஷொமான் [1950] - பளீர் என்ற வெளிச்சமும், இடைவிடாத மழையும் மாறி மாறி விளையாடி, உண்மை, பெண் உடல், காதல், வன்புணர்ச்சி, இச்சை, நம்பிக்கை, என்று பல விஷயங்களை ஆராயும் திரைப்படம்.

காதலை வெளிப்படுத்த, வெளியிட முடியாத உண்மையைக் கூற, கிராமத்தைச் சூறையாட, கோடையின் வெக்கையை வெளிப்படுத்த, அடிப்பட்ட குடும்பத்தை மேலும் காயப்படுத்த, பழி வாங்க, விடுதலையைத் தேட அடுக்கி கொண்டே போகலாம்.

காதல் என்று சொல்லும் பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. காஸபிளான்காவில் [1942] ஆழமான உறவின் முடிவையும் சேஸிங் ஏமியில் [1997] இயலா காதலை வெளிப்படுத்தவும் கூட இயன்றுள்ளது.

ஏனோ இந்திய சினிமாவிற்கு மட்டும் கற்பனை பற்றாகுறை வந்து விடுகிறது இந்த விஷயத்தில். இராமநாராயணன் தனது நாயகியுடன், நளினியுடன் தொடங்கி வைத்த பாணியில் இன்றும் கதாநாயகியை, வெள்ளை புடவை, ரவிக்கையில், உள்ளே கறுப்பு பிரா பட்டை பளிச்சென்று தெரிய, மழையிலோ, நீர்வீழ்ச்சியிலோ ஆடவைக்க மட்டுமே விருப்பம் காட்டுகிறது இத்துறை. இந்தக் கண்டுபிடிப்பை ஒரேயடியாக இராமநாரயணுக்கு மட்டுமே ஒப்புவிப்பது தவறு; அவர் இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்தியவர், அவ்வளவே.

ஆராதனா [1969] காலகட்டத்தில் மழைக்கு இன்னமும் ஒரு நூதன பயன் ஆரம்பித்தது. இதற்கு நான்கு வருடங்கள் முன்பு திரைக்கு வந்து உலக அளவில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் ஐ எம் 16 கோயிங் ஆன் 17. அதன் பல இந்திய பதிவுகளின் முதல் பதிவு தான் ரூப்பு தெரா மஸ்தானா என்ற மெட்டு. ஏதோ ஒரு காரணத்திற்காகக் காட்டிற்கு போகும் இளம் காதலர்கள் மழையில் மாட்டி கொள்கிறார்கள். வேறு வழியில்லாமல் காட்டு பங்களாவில் அன்று இரவைக் கழிக்கிறார்கள். தெப்பமாக நனைந்து இருக்கும் நாயகி, குளிரினால் நடுங்குகிறாள். [மாறுதலுக்கு, நாயகன் என்றும் வைத்துக் கொள்ளலாம், தவறில்லை.] வேறு வழி தெரியாத காதலன், இருவரின் ஆடைகளையும் களைந்து விட்டு, அவளை அணைத்து கொள்கிறான். Cut to Song. அடுத்த காட்சியில், நாயகி வாந்தி எடுப்பாள். கர்ப்பம்!

உங்களுக்கு ஒரு போட்டி. இதே காட்சியை பார்த்த ஐந்து திரைபடங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அவை எந்த இந்திய மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை.

பூவா தலையாவில் [1969] தொடங்கி, புன்னகை மன்னன் [1986] வரையில் கே. பாலசந்தர் புதிய உறவில் இருக்கும் நாயகியைக் காட்டவே அருவியையோ, மழையோ பயன்படுத்தி உள்ளார். உதாரணம்: வான் மேகம். மணிரத்தினத்திற்கோ, இவை இரண்டும் தனது கன்னி கழியாத நாயகியை அறிமுகப்படுத்தவே தேவை பட்டது. இதயத்தை திருடாதேவில் [1989] வரும் ஆத்தாடி அம்மாடி. அஞ்சலி [1990] தொடக்க காட்சி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. உதாரணம்: அதில் மழை இனி வரபோகும் ரகசிய வாழ்விற்கு ஒரு அறிகுறியாகும்.

மழையையும் நீரையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்திய படமாக எனக்கு நினைவிற்கு ஒரே திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் [1975]. புயல் அடிக்கும் ஒரு மாலை வேளை, பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் கங்கா என்ற ஒரு இளம் கல்லூரி மாணவியை தனது காரில் ஏற்றி கொள்கிறான் ஒரு இளைஞன். காருக்குள் இருவருக்கும் உடலுறவு ஏற்படுகிறது. முதலில் இணங்கும் கங்கா, பிறகு தான் கற்பழிக்க பட்டதாக அதை புரிந்து கொள்கிறாள். நேரம் கடந்து வீட்டிற்கு வரும் கங்கா நடந்ததை தனது விதவை அம்மாவிடம் கூறுகிறாள். அதிர்ந்து போகும் தாய் அவளைத் தரதரவென்று இழுத்து சென்று கிணற்றடியில் அமர செய்து, குடம்குடமாகத் தண்ணீரை அவள் தலையில் கொட்டி, “நீ சுத்தமாயிட்டே டீ, சுத்தமாயிட்டே” என்று கதறுகிறாள். திரைப்படம் தொடங்கி பத்து நிமிடத்திற்குள் நீருக்கு இரண்டு பயன்பாடுகள்: ஒன்று கங்காவை அசுத்த படுத்த, மற்றொன்று, அவளை சுத்தப்படுத்த. ஜெயகாந்தனின் படைப்பில், பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முப்பத்தைந்து வருடங்கள் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு இந்தக் கற்பனாசக்தியே காரணம்.

பெண் உடலுடன் சம்மந்தப்படாத வேறு எந்தப் பயன்பாடும் இந்திய திரைப்படம் பொறுத்த வரையில் சண்டை காட்சிகள் மட்டும் தான். இது ரத்த வெறியை கோடிட்டு காட்ட உதவியுள்ளதே தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.

மழைநீரை சேமியுங்கள் என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு, இப்படி நீரை வீண் அடிக்கலாமா?

வாருங்கள் நாம் அனைவருமாகச் சேர்ந்து யோசித்து, திரைப்பட துறைக்கு மழையின் மாற்று பயன்பாடுகளுக்கு யுக்திகள் சொல்வோம். காரணம் 99% இந்திய திரைப்படங்கள் ஆண் மைய்யப்பட்டவை தான். 

Pin It