‘பெண்கள் சந்திப்பு’ சார்பில் சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இவை எங்கும் பதிவாகவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக, வாய்ப்பு நேரும்போது சந்தித்து, சமகாலம் பற்றி உரையாடுகிறார்கள். அண்மையில், ஈழத்தில் நடந்த படுகொலையை அடிப்படையாகக் கொண்ட கவிதை வாசிப்பு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதில் கலந்துகொண்ட சாரதி கிருஷ்ணன் தமது மனப்பதிவை எழுதித் தந்தார். அவர் வெளியிடுவதற்காக எழுதித் தரவில்லை; இருப்பினும் பெண்கள் சந்திப்பின் கவிதை வாசிப்பு நிகழ்வை அவரது எழுத்துகளில் பதிவு செய்கிறோம். 

இன்குலாப் எழுதிய ‘தடி’ பிரதியை கூத்தாக நிகழ்த்திய பிறகு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவர் நாடகக்காரர் அ. மங்கை. அலையன்சில் ஒரு நாள் பயிற்சி முடிந்தவுடன் கவிதை வாசிப்பு பற்றிக் கூறினார். எனக்கு யு.ஜி.சி.யைவிட இதில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்து ஒப்புதல் அளித்தேன். ஒருநாள், தமிழ் இலக்கியத்துறை யின் இரண்டாம் ஆண்டு அறையில் வ. கீதாவின் பிறந்த நாள் கேக்குடன் இனிதே ஒத்திகை தொடங்கிற்று.

மங்கை அவர்களின் சில பயிற்சிகளுக்குப் பின் நான்கு குழுக்களாகப் பிரிந்து கவிதைகளை வாசிக்கத் தொடங்கினோம். சுறுசுறுப்பாய் ஆரம்பித்து மாலை ஏழு மணிக்கு சிறுது சோர்வுடன் ‘ என்னடா இது நாடகம்னு சொன்னாங்களேன்னு’ யோசித்தேன். நிகழ்வு நாளன்று ஒரு மணி நேரத்திற்கு முன்னரே ‘ஒத்திகை’ பார்த்தோம். சிறிது நம்பிக்கையுடன் கழுத்தில் ஓவிய அட்டையுடன் நான்...

வாசிப்பும் நானும்

- -     பெண்கள் சந்திப்பு என வ-.கீதாவின் தொடக்கம்; கண்ணாடியையும் பிரதியையும் நோக்கும் மங்கையம்மா.

 -      காட்சிப்படுத்தும் உத்தியும் அது பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் தன்மையறிந்தேன். வரிசையும் வாசிப்புமாய் நாங்கள்.

 -      மேடைப்பேச்சில் திளைத்திருந்த காதுகளுக்கு அது ஓர் புதிய அனுபவம் தந்தது.

 -      ஈழத்தில் நடக்கும் பிரச்சினைக்காக நடத்தாத போராட்டங் களே இல்லை. எல்லாம் பழக்கப்பட்டவை. இறுதியில் சமரசம். ஆனால் இந்நிகழ்வு ‘வலியோடு வரலாற்றை உள்நுழைத்தது’.

 -      அரங்க அமைப்பு- அது சார்ந்த ஓவியங்கள்- வெற்று ஆர்ப் பாட்டத்தில் வெளிவந்த ரூபாய் நோட்டின் கேவலங்கள் அங்கே கிழிக்கப்பட்டன.

நான்கு குழுக்களும் தொடர்ச்சியான செயல்பாட்டுடன் கவிதைகளை வாசித்தனர். மங்கை, வ. கீதா ஆகியோரின் தேடுதல் குறித்த தளத்தைக் கண்டு ஆச்சரியப்பட வைத்தது. கிடைத்தற் கரிய கவிதைகள் அதில் இடம்பெற்றன. ஒன்பது பகுதிகளாக நடந்த அந்த நிகழ்வு கீதாவின் விரிவான அறிமுகத்தோடு தொடங்கின. பார்வையாளர்களுக்குள் நடிகர்களின் வலியின் நுட்பம் தாங்கிய வரிகள் பல குரல்களாக ஒலித்து இறுதியில், ‘கொல கொலயா முந்திரிகா நெரைய நெரைய சுத்திவா... கண்டுபிடி’ என்பதோடு முடியும்போது உணர்வற்ற நிலையிலிருந்து மீண்டெழுந்தோம்.

என் வளர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு மைல் கல்லாகவே இருக்கும். பெண்ணியச் சிந்தனையாளர்கள் அ.மங்கை, வ.கீதா, கல்பனா, பொன்னி, கவின் மற்றும் ரேவதி போன்றவருடனான அறிமுகம் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சில வரிகள்

“ஒளிபொருந்திய எங்கள் ஜீவிதத்தை

ஒரு ஒலிபெருக்கியின் மூலம்

இருட்டடிப்பு செய்ததே தமிழ் மறவர் வீரம்’’

“எங்கள் முற்றத்தின் நெஞ்சில்

உங்களைப் புதைக்கவில்லை, விதைத்தோம்

இப்போது

விதைத்ததை நாமே

அறுவடை செய்கிறோம்’’

என எல்லா வரிகளும் சிறந்தவைதான். ஒளவை, பானுபாரதி, அனார் எனப் பல்வேறு பெண் கவிஞர்களின் உணர்வுகளை உணர்ந்தவர்களாக வரிசையாய் அசைந்து குரலாய் வெளிப் படுத்தினோம். பார்வையாளர்கள் பரவாயில்லை. எழுத்தின் வழியேயும் உணர்வு வெளிப்படுத்திய குரலதிர்வு வழியேயும் அந்நிகழ்வு எங்களைப் போன்றவர்களுக்குப் புதியதொரு அனுபவத்தினை உண்டாக்கியுள்ளது.

- சீ.சாரதி கிருஷ்ணன்

Pin It