“உண்மை அழகற்றது. உண்மையைத் தெரிந்து கொள்வதால் எவ்விதப் பலனுமில்லை. காரணம் அகிலத்திற்குப் பொதுவான உண்மை என ஏதுமில்லை. ஒவ்வோர் அகநிலைக்கு எனத் தனித்த உண்மை உண்டு. மொழியின் சூழலுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ப இந்த உண்மை மாறுபடும். எனவே மொழியால் உண்மையைக் கூறமுடியாது.” - லக்கான்

ஒரு பக்கம் லக்கானியம். இன்னொரு பக்கம் ‘பாழி’. வெட்டுக் கணத்தில் நான். உங்களில் சிலருக்கு என் நிலைமை புரியும். இருப்பினும் துணிச்சலாகத்தான் இவ்வாய்வில் இறங்குகிறேன். லக்கானியம் - அவ்வளவு எளிதில் பிடிபடாத கோட்பாடு. ‘பாழி’யும் அப்படியே. கடந்த பத்து ஆண்டுகளாக லக்கானியத் தொடர்பு எனக்கு உண்டு. ஆறு ஆண்டுகளாகப் ‘பாழி’யைப் பார்த்து வருகிறேன். பார்க்கும்போதெல்லாம் ஆய்வு செய்ய எண்ணம் தோன்றும். இதற்குப் ‘பாழி’யின் கட்டமைப்பு, மொழியாடல் முக்கியக் காரணிகளாகும்.

லக்கானைக் கொண்டு எத்தனை கட்டுரை எழுதினாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக எழுதுவது போன்ற உணர்வே மிஞ்சும். இது லக்கானியத்தின் சிறப்பு. அதனால்தான் கோட்பாட்டளவில் லக்கானியம் பரவலாகவில்லை. மனதை மனமாக ஃப்ராய்ட் பார்த்ததைக் கடந்து, மனதை மொழியாகப் பார்க்கும் லக்கானின் கோணத்தில் உள மெய்ம்மைக்கான புதிய புரிதல் கிடைக்கிறது. கருத்தரிக்கும்போதே மனம் உண்டாகி விடுகிறது என்கிறார் ஃப்ராய்ட் (sE, Xvi, p.415-16). மொழிக்குப் பிறகுதான் (சமூக) மனிதனே பிறக்கிறான் என்கிறார் லக்கான். மொழிக்கு முன் மனித உடல்கூட இல்லை என்கிறார் (sarup: 7). எனவே மொழி வழியாகத்தான் மனமும் கட்டமைகின்றது என்பது அவரின் வாதம். இதன்படி மொழியைக் கொண்டு மனதைப் புரிந்து கொள்ளலாம் என்கிற அடிப்படைக் கொள்கை, லக்கானைப் பின் நவீனத்துவ வாதியாக்கி விடுகின்றது. இக்கொள்கையின் படி ‘பாழி’ மொழியைக் கொண்டு புதிய பனுவல் பகுப்பாய்வை (textual analysis) மேற்கொள்கிறேன்.

‘பாழி’யை லக்கானியத்தில் உட்படுத்துவதற்கு முன் லக்கானுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான ஊடாடல்களைக் காண்போம். இலக்கியம் மீதான லக்கானின் பார்வையே வேறு. மரபுவழி உளப்பகுப் பாய்வின் கருத்தாக்கங்கள் பலவற்றிலிருந்து லக்கான் வேறுபட்டவற்றில் ஒன்று இலக்கியமும் ஆகும்.

பனுவலில் உள்ள குறிப்பான், சங்கிலியால் ஒரு குறிப்பான் இன்னொரு குறிப்பானுக்காகப் பொருண்மையைப் பிரதிநிதிப்படுத்துகிறது. அதாவது ஏதோஒன்று இன்னொன்றுக்கான பிரதிமையாகின்றது (Lacan 1977:207). லக்கானைப் பொருத்த வரையில் எந்தக் குறிப்பானும் தனக்காகப் பொருண்மையைச் சுட்டுவதில்லை (Lacan: 1983:183). இந்தக் குறிப்பான் பனுவலின் ஒரு கூறுதான். மற்றவற்றிடமிருந்து அது வேறுபடுகிறது. அதேபோல் மற்றவற்றுடனான உறவுகளில்தான் அதற்குப் பொருண்மையும் கிடைக்கிறது (Thorn:12-3). மேலும், ஒரு பனுவலின் சொல், வாக்கியம், மரபுத்தொடர் எல்லாம் குறிப்பான் போலவே செயல்படுகின்றன (Lacan:1994:288). இதைக் கடந்து ஒரு பனுவல் கூடப் பெரும் தளத்தில் ஒரு குறிப்பான் ஆகிவிடுவதுண்டு. சான்றாக, தமிழ் இலக்கியத் தளத்தில் ‘பாழி’ ஒரு குறிப்பான் ஆகிவிடு வதுண்டு. குறிப்பான் பற்றி லக்கான் கூறும்போது மொழியியல் சாராப் பொருட்கள் கூடக் குறிப்பான்களாவதுண்டு (Lacan:1994:288) என்கிறார். பனுவலில் (கனவில்) வரும் படிமங்கள், உருக்கள் முதலியவை குறிப் பான்களே. ‘பாழி’ நாவலில் உள்ள சொற்கள் மட்டுமின்றிப் படிமங் களும் குறிப்பான் களாவதால் இது ஒரு ‘குறிப்பான் தொகுதி’ என்றா கின்றது. எனவே பாழியைக் குறியியல் உளப்பகுப்பாய்வுக்கு (லக்கா னியத்தை நான் இப்படித் தான் சுட்டுகிறேன்) உட்படுத்த முடியும்.

பாழி மீதான என் உளப்பகுப்பாய்வு வாதத்தைப் படிப்பதற்கு முன் நீங்கள் அந் நாவலை ஒருமுறை புரட்டிப் பார்ப்பது நலம். அதன் ஆசிரியர் கோணங்கி உலக எழுத்தாளர்களின் தரப்பட்டியலில் 42ஆவது இடத்தில் உள்ளதாகக் கேள்வி. பாழி நாவல் உண்மையில் நாவல் தானா என்கிற ஐயம் எழக்கூடும். காரணம் நாவல் இலக்கணக் கூறுகள் இதில் இல்லை. அதாவது, மரபு வழியில் சொல்லப்படும் நாவல் வட்டத்திற்கு வெளியே பாழி இருக்கிறது. எனவே பாழி நாவல் நவீன இலக்கியத் தளத்திற்கும் அப்பால் இருப்பதைக் காணமுடிகிறது.

‘நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி, பொருளில் ஒளித்து வைக்கப் பட்ட இயற்கைப் பரப்புகளில் எதிர்நிலைகளில் கூடுதல் பிரிவு என்ப தில் மயக்க வெளியை நீட்சியாக்கும் அகக்கிளர்ச்சியின் தூண்டுதலில் படிகமொழிப் பின்னி நகரும் நிலத்தோற்றம் இது’ என்று முன்னுரையில் கோணங்கி கூறுகிறார். இதிலிருந்து பாழி என்பது பின்நவீனத்துவ நாவல் எனும் சிறப்புப் பெறுகிறது. பின் நவீனத்துவம் ஒரு விசித்திர மான உலகம். இது முரண்கள் நிறைந்தது. ஒழுங்கின்மை, நடப்புக்கு ஒவ்வாமை எல்லாம் கொண்ட மாயாஜால உலகம். குறிப்பாக, அறிவறிவியல் உலகம். வீட்டுக்கு ஒரு தலைவாசல் வேண்டும் என்று மரபு கூறினால் ஒன்றுக்கு மேல் வைத்துக் கொண்டால் என்ன என்று பின் நவீனத்துவம் கேட்கும். இதன் முக்கியக் கோட்பாடு ‘இருநிலை எதிரிமையை’ (binary opposition) மறுப்பது; மேற்கண்ட கோணங்கி கூற்றில் இதைக் காணலாம். மேலும், மொழி மரபு, இலக்கிய மரபு, இலக்கண மரபு முதலியவற்றைப் பொருட்படுத்தாத சொல்லாடலாக விளங்குகிறது பாழி. இது பின் நவீனத்துவ இலக்கியத்தின் முக்கியப் பண்பாகும். அதனால்தான் சராசரி வாசகரால் பாழியில் நுழைய முடிவதில்லை. பிற படைப்பாளிகள் கூட நுழையச் சிரமம் தருவதாகப் பாழி உள்ளது. அந்த அளவுக்கு இருண்மை. இதற்குக் கவித்துவச் சொல்லாடல் காரணமாகிறது. சில இடங்களில் கல்வெட்டு மொழி நடையை நினைவுபடுத்துகின்ற வாக்கியங்களும் உண்டு. அவ்வளவு இருண்மைத் தனமான கவித்துவச் சொல்லாடல்கள் பாழி முழுவதும் நிரம்பியுள்ளன. இருப்பினும் ஒரு படைப்பாளி அவ்வாறு எழுதுவது கடினமான காரியம். அதேசமயம் இயல்பான நடையில் எழுதாமல் இப்படி எழுதக் காரணமென்ன? சான்றுக்கு ஒன்று:

“உலர்ந்த துக்கம் பெருமூச்சு விடுகிறது வெப்பக் காற்றில். கைக்குள் அடக்கமான மஞ்சள் சரக் கொன்றையை வெற்றிடத் தில் அசைந்து செண்டாக ஏந்தி பூவின் மஞ்சள் விழி உருள்கிறது பித்தத்தில்.” (ப.30) எனும் வாக்கியம் சராசரி வாசகனை மிரள வைக்கும். இப்படியாக எழுதுவதற்கு உளக்காரணியே காரண மாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் பாழியை ‘உளக் கிளர்ச்சியின் தூண்டுதலில்’ எழுதியிருப்பதாக முன்னுரையில் கோணங்கி கூறியிருப்பது என் நம்பிக்கைக்குத் துணைநிற்கிறது (ப.9).

பாழி பனுவலில் புழக்கமற்ற சொற்கள் மிகுதி. பாழி எனும் சொல்லே பெரு வழக்கில் இல்லை. கதிரைவேற்பிள்ளை அகராதிப் படி பாழி எனும் சொல் அகலம், அளை, ஆகாயம், உரை, ஊர், கடல், கிராமம், குகை, சயனம், திருக்குளம், தேவர் கோயில், பகைவரூர், பாழ், பெருமை, மருதநிலத்தூர், முனிவர் வாசகம், வலி, விலங்கின் படுக்கை முதலிய பொருள்களைக் கொண்டது. இந்த நாவல் கூடப் பாழி எனும் சொல்லுக்கான நீண்ட விளக்கமாகவே உள்ளது.

“படிக விசிறியாக நாவலின் உள்ளே மயங்கி விரியும் பாழி எனும் இடமற்ற தனிவார்த்தை நிலமடிப்பில் பாலையாகித் திணைக் கொரு கன்னி உருவம் வரைந்து முடிவற்ற குறியாக நகர்ந்து மொழி அபிதானத்தின் மடக்கு ஓலைகளில் கோர்க்கப்பட்ட முத்துவயல் குளித்த பல பொருளுடைய ஒரு சொல்தான் இந்நாவல் (ப.9)”

என்று கோணங்கி வாக்குமூலம் தருகிறார். இங்கே பாழி என்னும் சொல்லைப் பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பதைக் கவனிக்கவும். பின்வரும் விளக்கத்திற்கு இது முக்கிய ஆதாரமாகும். மேலும், இவர் குறியியலை உள்வாங்கிக் கொண்டு (கோட்பாட்டுத் தாக்கம்) நாவலை எழுதியிருக்கிறார் என்பதையும் உணரலாம். ஒரு குறிப்பானின் அர்த்தம் நிலையற்றது என்பது தான் பின் நவீனத்துவம் உணர்த்துகிறது. பாழி சொல் திணைக்கொரு குறியாக நகர்ந்து வருவதைக் காட்டுகிறார் கோணங்கி. மேலும், குறிப்பானுக்குள் பொருள் இல்லை; வெளியே உள்ளது என்பது குறியியல் (Leapins: 42). வார்த்தைக்குள் ஏதுமில்லை என்கிறார் கோணங்கி (ப.14). மேலும், பாழி எனும் பனுவலுள் ஏழடுக்குப் பனுவல்கள் குறிப்பிட்ட அமைப்பியல் ரீதியில் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் கோணங்கி மீதான குறியியல். குறிப்பாக, பின் நவீனத்துவத் தாக்கம் இருப்பதை உறுதி செய்கின்றன.

 

மேலும், இப்பாழியைச் சொல்லாடல் வழியிலும் அமைப்பியல் வழியிலும் அணுகலாம். இந்நாவலின் சொல்லாடலில் உள மெய்ம்மை மிகுந்து காணப்படுகின்றது. லக்கானிய அணுகுமுறைக்கு மிகவும் ஏற்புடைய நாவலாக / பனுவலாகப் பாழி விளங்குகிறது. காரணம், உள்ளடக்கத்தை விடச் சொல்லாடலுக்கே லக்கான் சிறப்பிடம் தந்தார். சொல்லாடல் மூலம் நனவிலி இயல்பை அறியும் உத்தியாக லக்கானியம் விளங்குவதால் சொல்லாடல் வகையிலான பாழியில் நனவிலியின் பிரதிபலிப்பைக் காணலாம்; என் ஆய்வின் நோக்கமும் இதுவே ஆகும். உளப்பகுப்பாய்வைப் பொருத்தவரையில் சொல்லாடல், புனைவு, கனவு ஆகியவை ஒரே தன்மையிலானவை. இது ஃப்ராய்ட் தொட்டு நிரூபணமான ஒன்று. நோயாளியின் நனவிலியை இம்மூன்றின் வழியில் அணுகினார் ஃப்ராய்ட்; லக்கானும் அதைப் பின்பற்றினார். இந்தச் சொல்லாடலைத் தான் தடையில் இயைபாக (Free association) உளப்பகுப்பாய்வு பார்க்கிறது. அதாவது தங்கு தடையின்றி நோயாளியைப் பேச விடுவதைக் குறிக்கிறது ((SE,XX,PP.40-44).

லக்கானியம் படி சொல்லாடலும் புனைவும் இணைநிலை யானவை. நம்மிடையே இரண்டு புனைவுகளான நனவுப் புனைவு, நனவிலிப் புனைவு ஆகியவை இருப்பதாக ஃப்ராய்ட் கூறுகிறார். (மாறாக, நனவிலிப் புனைவு மட்டும் இருப்பதாக லக்கான் கூறுகிறார்). ஃப்ராய்ட் படி பகற்கனவு, இலக்கிய ஆக்கம் எல்லாம் நனவு சார் புனைவுகளாகும். கனவு மட்டும் நனவிலிப் புனைவு ஆகும். லக்கான் கருத்துப்படி, நனவிலிக்கு மட்டும்தான் புனைவாற்றல் உள்ளது. எனவே நனவிலிப் புனைவே நம்மிடம் உள்ளது. இதுதான் அடிப்படைப் புனைவு (Fundamental fantasy) ஆகும் (Fink: 1999:56-7). இந்தப் புனைவுதான் மொழி உலகில் சொல்லாடல் ஆகிறது. பாழிப் பனுவல் அவ்வகையிலானதே. இப் பனுவலில் படிமங்கள், மாயக்காட்சிகள். தர்க்கத்திற்கு ஒவ்வாத வர்ணனைகள், கனவுக் காட்சிகள் போன்ற கதை ஓட்டம் முதலியவை இடம்பெற்றுள்ளன.

“ஆயிரம் பூக்களிலிருந்து செய்யப்பட்ட இத்தாலிக் கிண்ணி களைத் தன் மார்பில் புதைத்துக் கடலின் மத்தள ஒலி கேட்கி றான் உன்னிடம் ஏதாவது அதிசயக் கிண்ணம் இருக்கிறதா.” (ப.143);

“கொடூர வனத்தில் ஒளிந்து திரியும் நத்தைக் கண் மாடன் முள்ளெலிகளும் உடும்பும் சூழ வந்து கொண்டிருந்தான் ஊரை நோக்கி.” (ப.163);

“ஓவல் ஆடியில் பூசிய விஷத்தில் மிதந்து உடல் ஸ்பரிசத்தில் அறை வெதும்பிக் கூந்தல் வேகத்தில் துடித்துக் கொடி சுற்றிய பச்சைப் புலி நாக உலா மீது காமுற்று மூலிகை பூசிய பச்சை நாகர்கள் திரைவிலகி வருகின்றார்கள்.” (ப.205);

“நாகரீகத்தின் சாம்பல் படிந்த உவர்பட்டினம் இடம்மாறிக் கொண்டே இருந்தது. வேறு சில வறண்ட பிரதேசங்களில் வேறு பெயரில் இருப்பதாகச் சொன்னான் காமோஸ்.” (ப.336);

“பாழிச் சிகழிகை கோதி அலையும் பசித்த புலிகளுக்குக் களைந்த உடலை இவ்வேளை உணவாகக் கொடுக்கப் போகிறேன்.” (ப.426);

“சுவாசிப்பதற்கு இல்லாத காற்றில் விலங்குகள் குலுங்கும் ஓசை” (ப.498);

மேற்கண்ட வரிகள் பாழியின் புனைவுகளாகும். இவற்றில் அதர்க்கம் மிகுதி. இத்தகு அதர்க்கப் (Illogic) புனைவுகளே பாழி முழுவதும் நிரம்பியுள்ளன. இப்பனுவல் ஒரு நாவல் எனக் கொண்டால் கால வெளியிலோ பாத்திரங்களிலோ தர்க்கமற்ற தனிமையைத் தான் காணமுடிகிறது. கிரேக்கம், சீனம், இந்தியா, லத்தினம் என இட வெளிகள் வரும். அரிஸ்டாடில், புத்தர், மணிமேகலை, ஏழு கன்னியர், ஆஷ், சூஃபி, காமோஸ் எனப் பலரும் பவனி வருகின்றனர். அரசர் கால நிகழ்வுகளிலிருந்து இந்திய சுதந்திர நாள் வரை எல்லாம் இருக்கும். எனவே பாழியில் எந்த வெளிக்கட்டுப்பாடும் இல்லை. பாழி ஒரு நனவிலிப் புனைவு என்பதற்கு இதுவே சான்று. அதாவது பாழியில் கனவோட்டத்தைக் காணலாம். அதனால் இது நனவிலி ஓடை (Stream of unconsciousmen) வழிப்பட்டது எனக் கூற இடமுள்ளது. அதாவது சர்ரியலிசத் தொனியில் எழுதப்பட்ட பனுவலாகும் இந்தப் பாழி.

அதர்க்கம் நிறைந்த பாழி எனும் சொல்லாடலுக்குள் இருக்கும் பொருண்மைதான் என்ன? இலக்கிய ரீதியாகப் பாழியின் பொருண் மையை எளிதில் அடையாளம் காணமுடியாது. லக்கானிய ரீதியில் இதற்குள் இருக்கும் உளவியல் பொருண்மையைக் காண இயலாது. பொருண்மை பற்றிய லக்கானியப் பொருண்மை பல சிக்கல்களுக்குத் தீர்வாகின்றது.

பாழி நாவலில் பொருள்கோள் சிக்கல் பெருமளவில் உள்ளது. அதற்கு வழக்கில் புழக்கமற்ற சொற்களும் வாக்கிய அமைப்பும் காரணம். டேரட் கார்டுகள். காமோஸ், டாவோ, ஜிப்ஸி, ப்ரீகான், தானியாள், பிரைலி, பீபிலிகை, ஸர்ப்பயாறி, நரநாயி, அகாதம், படிக நயனப் பாழி, மண் தனிக்குடைவு, கலித்தூண், சிறகுராட்டில், அறநழற்பால், பெண்டுகர்கள், பலாசப் பூவுள் மானளி, போரோ பாழி, குஷானியச் சிற்பி, மறவிப்பிச்சன் முதலிய சொற்கள் வாசகர்களால் உடனே செரிக்க முடியாதவை. இத்தகு சொற்கள் பனுவல் முழுவதும் விரவி இருப்பதால் வாசகனின் படிப்போட்டம் தடைபடுகின்றது. ஒரு வாக்கியத்தின் எல்லாச் சொற்களும் புரியும்படி இருந்தால்தான் பொருள் கொள்ள முடியும். குறிப்பீடுகளைச் (Signifiers) சுட்டாத குறிப்பான்கள், குறிப்பான் சங்கிலியில் நிறுத்தத்தை ஏற்படுத்தும்; மனவோட்டம் நின்றுவிடும். படித்தல் என்பது மனவோட்டப் படிமுறை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பீடு இல்லாத குறிப்பான்களில் (இவற்றைத் தூய குறிப்பான்கள் (Pure Signfiers) என்பார் லக்கான்) இருண்மை கூடுவதுண்டு, பொருண்மை என்பது குறிப்பானின் தனித்த விளைவு மட்டுமல்ல; மற்ற குறிப்பான் களோடு கொண்டுள்ள குறித்தல் சங்கிலியின் விளைவுமாகும் (GROSZ:96-7). எனவே பொருண்மை என்பது தயாரிப்பு மட்டுமல்ல; படிமுறை. குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் இடையிலான வெளி மிகுந்தால் இருண்மை மிகும். ஒரு குறிப்பானுக் கான குறிப்பீடு சொல்வோன், கேட்போன் இருவருக்கும் பொதுவாக இருந்தால்தான் புரிதல் நிகழும். காரணம், பொருண்மை தனியர் நிலைக்கு உட்பட்டது (Leupin:48). சொல் எனது; பொருள் உன்னுடை யது என்பார் ஓஷோ. இதைத்தான் லக்கான் இடையக நிலையாகப் பார்க்கிறார். ஒரு சொல் பல பொருண்மைகளைக் கொண்டிருந்தாலும் (இது மொழியின் இயல்பு), எத்தகைய பொருண்மை சூழலுக்குப் பொருந்தும் என்பதைத் தனியரிடம் உள்ள சமூக விதியே (தந்தை பெயர்) தீர்மானிக்கிறது.

குறிப்பானின் சங்கிலி/ குறிப்பீடு = அதாவது  விதி/குறித்தல்=பொருண்மை         

என்பது லக்கானின் சமன்பாடு (Leupin:133). விதியின் வகைக்கு உட்பட்டவை பொருத்தமான பொருண்மையைப் பெற முடியும். பாழியில் இலக்கண விதி மீறல்களைப் பல வாக்கியங்களில் (சங்கிலி) காணலாம். சான்றாக,

“புதிர் மூலைகள் கொண்ட பாழிக்குள் பெருவிருந்துக்கான ஒலி கேட்க பைராகிகள் கடத்தி வந்த புரங்காட்டுக் கபாலங்கள் எருமை அசுரன் தரையிலிருந்து விண்வரை நின்ற யாளியின் காலில் கர்ஜிக்கிற வாயிலும் மான் கொம்புக் கத்தி கொண்ட தாவரப்பெண் அமர்ந்திருந்த அரக்கரோடு சேர்ந்த மூவிலை வேலும் பலிவாளும் எடுத்த நரகர்கள் தசாவதாரங்களில் மாறிமாறி நிரபலி கேட்டு உன்மத்தம் ஏறிய இரவு நெடிக்க தன் பாழியின் மது கைடபர் தூதகால எம உயிர்களைக் காவு கேட்கும் அவதாரங்களைப் பழித்து கதை ஏவிய யாளி விடும் மூச்சு தீப்பிழம்பாய் சுழல நீர்மேல் அசையும் இசை மீன் சதையுதடு பிளந்து சீறிப் பாய்ந்த வெள்ளிநீர்ப் பாழி (ப.110)”

இவ்வரிகள் ஒரே வாக்கிய அமைப்பாகும். ஒரு சொல்லுக்கான பொருண்மை அதற்கு வெளியே இருக்கிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல்.640). உண்மைதான். வெளியே உள்ள பொருண்மையைத் தேடிப் பிடித்துவிடலாம். அந்தப் பொருண்மைக்கான பிரதிநிதியாகத்தான் சொற்கள் உள்ளன. அதனால் தான் பொருண் மையை மெய் என்கிறார் லக்கான். இது இருக்கிறது. கண்ணுக்கும் புலப்படா நிலையில் உள்ளது; நனவிலி போல். எனவே பிரதிமைக்கு அப்பால் பொருண்மை உண்மையில் இருக்கிறது (Leupin: 40). இதன்படி மேற்கண்ட வாக்கியத்தில் பொருண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதைத் தேடிக்காணும் வழிதான் வாசகனுக்குத் தெரியவில்லை. அதனால் தான் இருண்மைப் பனுவலாகப் பாழி விளங்குகிறது. இப்படி மிகவும் அந்நியமான நிலையில் எழுதும் சொல்லாடல் இடையக நிலைக்குள் அமைவதில்லை. “ஒரு சொல்லாடலை இன்னொரு சொல்லாடலாக மொழிபெயர்க்கும்போதுதான் பொருண்மை தோன் றும்” என்பார் லக்கான் (Leupin:85). அத்தகு பேச்சு அல்லது மொழி குறியீட்டு மொழியாகும். மாறாக மொழிபெயர்ப்புக்கு இடம்தராத சொல்லாடல் கற்பனை மொழியாகும். ஒரு சொல்லாடலுக்கான பொருண்மை மறைவான இடத்தில் உள்ளது (Leupin:85). இதனால் பொருண்மையும் நனவிலியும் ஒன்றிப்போகிறது. அதனால்தான் நனவிலியே மொழிபோல் அமைப்புடையது என்கிறார் லக்கான் (Lacan:1977:20). இந்த நனவிலி மொழி மிகவும் அந்நிய மொழி. இதைப் படிக்க முடியாது. எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது (Fink:1999:113). லக்கான் கருத்துப்படி ஒவ்வொரு பனுவலுக்கும் நனவிலி உள்ளது. மேற்கண்ட பாழி வாசகம் எளிதில் புரிந்துகொள்ள முடியாததால் இது முழுமைக்கும் நனவிலிச் சொல்லாடலாக இருப்பதைக் காணலாம். அதாவது நனவிலிப் புனைவும் நனவிலிச் சொல்லாடலும் கலந்த படைப்பாகப் பாழி விளங்குகிறது என்பதே என் முதல் வாதமாகும்.

கனவுக்கும் தடையில் இயைபுக்கும் இடையிலான நெருக்கத்தைப் பல இடங்களில் ஃப்ராய்ட் விவரிக்கிறார் (SE, V.P. 635-41). இரண்டுக்கும் புனைவு ஆதாரமாக இருக்கின்றது. இரண்டையும் ‘மொழிதல்’ மூலமாகத்தான் உளப்பகுப்பாய்வாளர் அறிந்து கொள்கிறார். எனவே மொழியின்றி உளப்பகுப்பாய்வாளர் அறிந்து கொள்கிறார். எனவே மொழியின்றி உளப்பகுப்பாய்வு இல்லை (Lacan:1977ய:30). தடையில் இயைபு, அடிப்படையில் மொழியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு இருப்பதால் இதைப் பனுவலாக (கனவுப் பனுவலாக) உளப்பகுப்பாய்வு பார்க்கிறது. குறிப்பாக உணவு, இடப்பெயர்வு எனும் கனவுத் தொழில் மீது கவனம் செலுத்துகின்றது. இவற்றுள் வெளிப்பட்டுள்ள படிமங்கள் நோய்க் குறிகளைத் தாங்கியிருக்கும் இயல்புக்கு மீறிய படிமங்களில் நோய்க்குறி வீரியம் மிகுந்திருக்கும். இக்கோணத்தில் பாழியைப் பார்க்கும் போது கனவுப் பகுப்பாய்வு போல் அணுக வழியுள்ளது. கனவுக்கும் படைப்புக்கும் இடையிலான இணைநிலை ஃப்ராய்ட் தொட்டு விளக்கப்பட்டு வருகிறது. Creative writers and day dreaming எனும் கட்டுரை (1907) மூலம் ஃப்ராய்ட் கோட்பாடாக்குகிறார். லக்கானும் வழிமொழிகிறார். எழுத்தாளர் பற்றி லக்கான் இவ்வாறு கூறுகிறார்: எழுதும்போது தாம் என்ன செய்கிறோம் என்று எழுத்தாளனுக்குத் தெரியாது. காரணம், அவ்வமயம் நனவிலியின் பிடியில் அவர் சிக்கிக் கொள்கிறார். இது நரம்புநோய் வெளிப்பாடாகும் என்பது லக்கான் கருத்து (RABATE:4).

“ஈனாத குட்டிகளுடன் நிறைமாத மடுக்கள் பெருத்த நாய் தொங்கிய காம்புகள் அசைய வயிறு துருத்திக் கால் தூக்கி கிரகங்களை நோக்கி அண்ணாந்து ஓலமிட்டு அழைத்த சாவின் விதி பார்த்து சனி கிரகத்தின் கருஞ்சிறகு பாழியெங்கும் விரிந்து தாவர நகரையே ஆட்கொள்ள ஆயிரம் ஜன்னல் வீடுகளுக்குள் மறைந்து கொண்டவர்கள் காற்றில் சுருளும் ஊளையில் பதுங்கி குலை நடுங்க நுரையீரல் ரத்தம் ஏறிச் சிவந்த நாய் ரத்தம் பாய வயலின் வில் அசைகிறது ஊளையிடும் பாழியின் தொன்மத்தின் குறுக்கே” (பாழி:பக்.113-14).

இது தடையில் இயைபுக்கும் கனவுக்கும் இடைப்பட்ட புனைவாகும். பாழியின் அடிப்படைப் புனைவுப் பாணியாக இத்தகு புனைவு விளங்குகிறது. இதில் வாக்கிய அமைப்பு மரபார்ந்த முறையில் இல்லை. எனவே மொழியைத் துஷ்பிரயோகம் செய்தது போல் உள்ளது. துஷ்பிரயோகம் ஒருவிதத்தில் நோய்க்குறி என்கிறது உளப்பகுப்பாய்வு. தடையில் இயைபில் மொழியை நோயாளி துஷ்பிரயோகம் செய்கிறான். இங்கே எழுத்துப் பனுவல்போல் நோயாளியின் குறிகள் ஒழுங்கமைகின்றன (Lacan:1977:166).

பாழிச் சொல்லாடல் பொருண்மைக்கும் சொன்மைக்கும் இடையே பெரிய வெளி இருப்பதைக் காட்டுகிறது. சாமான்ய வாசகரால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள பாழிக்கு என்று சிறப்பு மிக்க வாசகர் தேவை - மருத்துவன் போல். இதற்கு, பாழி வாக்கியங்களின் புதிர்மையே காரணமாகும். மாறுபட்ட இலக்கணமும் நோய்க்குறி அமைப்பும் ஒன்றே என்பார் ஃப்ராய்ட் (FORRESTER:50-1). அதாவது உரு பனியல் (Morphology) மற்றும் வாக்கியத்தின் ஒழுங்கின்மை உருவகத்தை ஏற்படுத்த, மறு மொழி பெயர்ப்புக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. லக்கான் இதிலிருந்து வேறுபடுகிறார். இருப்பினும் இலக்கண நிலையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். யார், யாரிடம், எங்கே பேசுகிறார் என்பதைக் கவனத்திற்கொள்ள வைக்கிறார். ஃப்ராய்ட் போல லக்கானும் சொற்றொடர் அமைப்பில் குறிகளைக் காண் கிறார். ஒரு வாக்கியம் அமையும் விதம் மரபுவழிப்பட்டது. அதிலிருந்து மாறுவதால் ‘மீறல்’ நிகழ்கிறது. இது இயல்பு மீறிய நோய்க்குறியாகக் கருதப்படுகிறது. ‘உன் பெயர் என்ன’ என்பதற்கும் ‘பெயர் என்ன உன்’ என்பதற்குமான வேறுபாடு வெள்ளிடை நடைமுறைப் பேச்சில் சொற்களை இடமாற்றம் செய்து பேசுவதைக் காணலாம். இத்தகு வாக்கியங்கள் உளப்பொருண்மையைக் கொண்டு விளங்குகின்றன. மொழிப் பொருண்மையற்ற வாக்கியங்களுள் உளப் பொருண்மையைக் காணமுடியும். இது உளப்பகுப்பாய்வின் சிறப்பாகும்.

வாக்கியங்கள் நனவடங்கு (Pre-conscious) மனதில் இருப்பவை. இருப்பினும் இது நனவிலியோடு தொடர்புடையதாகிறது. நனவடங்கு மனம் தமது கதையைச் சொல்ல வரும் போது மறைவில் சில நிகழ்வுகள் நடக்கின்றன. அவைதான் வாக்கியத்தை ஆளுகின்றன. வாக்கியத்தை மேலும் மேலும் உறைவுக்கு (CONDENGED) உள்ளாக்குகின்றன (Lacan: 1977:68). எனவே பகுப்பாய்வின்போது பொருண்மையை முதன்மை யாகக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மொழியின் முறைகள், பண்புகள் மீது செலுத்தினால் போதும். இதே தொனியில் இலக்கியத் தின் ‘மொழிநடையை’ உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தலாம். பாழி நாவலில் மொழிநடை மிகவும் கவனிக்க வேண்டிய பகுதியாகும். படைப்பாளியின் இசிப்பு நோய்க்குறி மொழிநடையில் வெகுவாக வெளிப்பட்டுள்ளது. நீளமான வாக்கியங்கள், சொற்கள் இடமாற்றம் கொண்ட வாக்கியங்கள், படிமங்களால் உறைவுத்தன்மை கொண்ட வாக்கியங்கள், நிறுத்தற்குறிகள் இல்லாத வாக்கியங்கள், எச்சங்களால் முடியும் வாக்கியங்கள் என இயல்பு மீறிய வாக்கிய அமைப்புகள் பரவலாகப் பாழியில் உள்ளன. பாழியைப் படிக்க மிகவும் பொறுமை தேவை. ஒவ்வொரு வாக்கியத்தையும் மரபுக்கு ஏற்ப நாமே அமைத்துப் படிக்க வேண்டும். இல்லையேல் புரிதலில் சிரமம் ஏற்படும். வாக்கியங் களுக்கு இடையிலான தொடர்புபடுத்திக்கொள்வது கடினமாகிவிடும்.

“...மயக்கும் கனியை எட்டிக் கொம்புடன் வளைத்து உதடுகள் பதிய முத்தமிட்டாள் கண் சொருகி. கிளை தெறித்து விடாமல் கனியை விட்டு நகர்ந்தாள் தொலைவில், கனியின் தொலிபட்ட தும் வெட்கத்தைச் சால்வையாகச் சுற்றி உடலை மறைத்துக் கொண்டாள் ஜலகன்னி. கால் பெருவிரலில் பாதை தொடக் கூசினாள் உள்ளே. அவள் போன பச்சைத் தொலி சுருண்டு விசும்பி நுனிவாலில் நின்று ஜலகன்னி முத்தமிட்ட கனியை எட்டிப் பார்த்தது பச்சைப் பாம்பு. அரவின் கண் பார்வை யிலிருந்து போனபின் கனிகளின் நடுவே கமலை தோன்றினாள். தன் ரோக உடல் நீங்கிய பச்சை உடலுடன் வேறொரு கனியைக் கொம்புடன் வளைத்து நார்செரிந்த கனியின் மேற்பரப்பில் நாக்கை நீட்டி லிபி எழுதி அதில் சதையுதடு பிளந்து மிருதுவாக ஒட்ட வைத்தாள் கமலை. திரும்பிப்போன வழியெங்கும் பச்சை அரவுகள் எழுந்தன வனமாய். வெட்கிய நவஇலைகள் கூட்டமாய் அவள் உடல் படர்ந்தன ருதுவாய்...” (ப.46)

இந்த வாக்கியங்களில் மேற்கண்ட வாக்கிய வடிவங்கள் அனைத்தையும் காணலாம். இத்தகு வாக்கியம் அல்லது இலக்கணத்தில்தான் நனவிலி உள்ளது (HOMER:11). அதனால் தான் தொடரியலுக்கு (Syntagmatic) லக்கான் சிறப்பிடம் தருகிறார். பாழியில் தொடரியல் மரபு முரண்பட்டுக் கிடப்பதால் தொடர்ச்சியின்மை, இயைபின்மை எல்லாம் இசிப்பின் முக்கிய நோய்க்குறிகளாகும். (சான்று:பேய் பிடித்தோர் பேச்சு). வாக்கியத் தொடரின்மை, பத்தித் தொடரின்மை, இயல் தொடரின்மை எல்லாம் இதனுள் அடங்கும். இவையின்றிப் பாத்திரங்கள் தொடரின்மை, காலத் தொடரின்மை முதலியவை கூடச் சேர்க்கலாம். ஒரு வாக்கியம் முடியும் போது முடிந்த முடிவாக அல்லாமல் எச்சங்களாக முடிவதிலும் தொடர்பின்மை உள்ளது. பாழியில் கடைசி வாக்கியம் இத்தகு தொடர்ச்சியின்மைக்குச் சான்று.

‘வெள்ளையர்கள் சுதேசிகளை இழுத்து வந்து உதடுகளைப் பூட்டுத் துவாரத்தின் மேல் வைத்து வெட்டினார்கள் நாக்கை...’ எனக் கடைசி வாக்கியத்தில் போதகர் பௌஷீட் எழுதி முடித்த ‘வில்லேஜ் ஆஃப் தீவ்ஸ்’ இரண்டாம் பாகத்தின் கையெழுத்துப் பிரதி காலம் பழுத்து ஒடிய துவங்கிய கழுகுத் தூரிகை மை இன்னும் உலர்ந்துவிடாமல் சுதேசி நாக்கு அறந்த பல்லி வாலாய் துடித்துக் கொண்டிருக்கிறது எனவே, (ப.498)

இந்த வாசகம் ‘எனவே’ எனும் சொல்லில் முடிகிறது. இச்சொல் வாக்கியத்தின் முதலாக வருவது மரபு. ‘எனவே’ என முடிந்ததில் தொடர்ச்சி இருப்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் தொடர்ச்சி இல்லாமல் இருப்பதையும் காட்டுகிறது. எனவே, பாழிப் பனுவலே தொடர்ச்சி யின்மையைக் குறிப்பதாக உள்ளது. கோணங்கி மொழிநடையில் இத்தகு தொடர்ச்சியின்மை மற்ற படைப்புகளில் காண முடிகிறது. ‘உலோக மொழியுடல் ரஸவாதி ரகுலன்’ எனும் கட்டுரையின் (புது எழுத்து 16: ஐப்பசி 2007) கடைசி வாசகம்:

...நதிகள் நிரம்பி பொங்கி ஓடும் நதி கங்கை கூடும் பிரிவை எண்ணி சங்கமத்தில் சரஸ்வதியின் அரூபம் தண்டவாள இரும்பு ஈரத்தில் நனைத்த ஊழியின் பாழ் உரசும் ஊளைகளுடன் கடக்கிறேன். பிறகு... உங்கள் (ப.60)

முற்றுப் பெறாத வாசகங்கள் எழுதுவது கோணங்கியின் மொழிநடை போலும். குறிப்பிட்ட ஒரு படைப்புக்குப் பிறகு அவரின் மொழிநடை புதிர்மையாகவே உள்ளது. இயல்பான மனநிலையிலிருந்து இவை வராது. இசிப்பு நோய்க்குறி அவரிடம் அதிகமாக இருப்பதை உளப்பகுப்பாய்வு வழியில் காணமுடிகிறது. சமூக உலகில் நாம் அனைவரும் நோயாளிகளே. குறைந்தபட்ச நோய்த்தன்மை இருந்தாலன்றிச் சமூகத்தில் நாம் வாழ முடியாது. இந்த நோய்த்தன்மை அதிகமாகப் போனால் தனித்த ஆளுமையைப் பெற்ற நோயாளி ஆகிறான். படைப்பாளிகள் இரண்டுக்கும் இடையில் உள்ளனர். அவற்றில் யார் நோயாளி பக்கம் அதிகம் இருக்கின்றனரோ அவரிடம் இசிப்புச் சொல்லாடல் மிகுதியாக வெளிப்படும். இத்தகு பாங்கு கவித்துவச் சொல்லாடலில் வெளிப்படும். இருண்மை வாய்ந்த கவித்துவச் சொல்லாடல் மிகுதியாகப் படைக்கும் படைப்பாளியிடம் இசிப்பு நோய்த்தன்மை கூடுதலாக இருக்கும். அவர்களிடம் நடைமுறை வாழ்வில் இயல்பு மீறிய நடத்தைகளைக் காணலாம். மறதி, தான்தோன்றித் தனம், அடிக்கடி மனநிலை மாறுதல், மிகைக் கூருணர்ச்சி, செயல்களுள் தொடர்ச்சியின்மை முதலியவற்றைக் காணலாம். சிலர் தமது பெயரைக்கூட நினைவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. தாம் படைத்த கதாபாத்திரங்களுடன் சிலர் பேசுவதும் உண்டு (WELLEK:83). தாம் எழுதிய கவிதையை மற்றவரின் கவிதை எனப் படித்த நிகழ்வு பாரதி வாழ்வில் உண்டு. எனவே படைப்புத் தொழிலுக்கும் நோய்த்தன்மைக்கும் தொடர்பு இருப்பதைக் காணலாம்.

கவித்துவச் சொல்லாடலெல்லாம் வேட்கைக்கான வேட்கையாக (Desire for desire) உள்ளன. இத்தகு சொல்லாடல்களில் இலக்கண முறைமை முழுமையாக இராது. அப்படி மீறும் பட்சத்தில் அணிகளாக (Rhetoric) அமைந்துவிடும். ‘நிலா வந்தாள்’ என்பதில் இலக்கணம் இல்லை; எனினும் கவிதையாகிறது. எனவே கவித்துவச் சொல்லாடலில் இலக்கணத்திற்கும் உண்மைக்கும் இடையே நெருக்கடி இருப்பதைக் காணலாம். கவித்துவச் சொல்லாடல்கள் எல்லாம் தம்மை மற்ற சொல்லாடல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். இந்தத் தனித்துவத் திற்காகப் படைப்பாளி, தமது எழுத்தில் கவித்துவத்தைக் கையாளுவதுண்டு. உளப்பகுப்பாய்வில் தனித்தல் (Isolation) என்பதை நோய்க் குறியாகச் சொல்லப்படுகிறது (Laplan che:232-33). எனவே கவித்துவச் சொல்லாடலுக்கும் இசிப்புக்கும் இடையிலான தொடர் பால் கவித்துவச் சொல்லாடல்கள் இசிப்புச் சொல்லாடல்களாகின்றன. பாழி நாவல் உண்மையில் நாவல் மொழிநடையில் எழுதப்படவில்லை. உருவகங்கள், படிமங்கள் கொண்டு எழுதப்பட்ட கவித்துவச் சாயலில் எழுதியிருப்பதால் பாழி ஓர் இசிப்புச் சொல்லாடல் என்றாகிறது. இந்தச் சொல்லாடல் இசிப்பு நோயாளியின் சொல்லாடலோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதை இசிப்புச் சொல்லாடல் பற்றிய லக்கானின் விளக்கங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். முன்பே கூறியபடி நான்கு சொல்லாடல்களை லக்கான் முதன்மையாகக் கருதுகிறார். கல்விப்புலம், ஆண்டான், இசிப்பு, பகுப்பாய்வாளன் முதலிய சொல்லாடல்களை நான்கு கூறுகளடங்கிய பின்ன அமைப்பில் அமைக்கிறார் லக்கான்:

S2/S1 -> a/$ கல்விப்புலம்  

S2/S1 -> a/$ ஆண்டான்

S2/S1 -> a/$ இசிப்பு

S2/S1 -> a/$ பகுப்பாய்வாளன்

இவற்றில் S1 என்பது தலைமைக் குறிப்பான் ஆகும். அதேபோல் S2,$,a முறையே அறிவு, பிளவு அகநிலை, பகுதிப் புறநிலை ஆகியவற்றைக் குறிக்கும். மேற்படி நான்கு கூறுகள் கொண்ட நான்கு வித அமைப்பில் அக்கூறுகள் இடம் மாறிக் கிடந்தாலும் நான்கு அமைப்புகளுக்கு இடையே ஓர் அடிப்படை அமைப்பு உண்டு:

முகமை/ உண்மை     -> மற்றவர்/ஆக்கம் / இழப்பு

இவற்றில் முகமை (AGENT) என்பது யார் இயங்குகிறார் என்பதைக் குறிக்கும். மற்றவர் என்பது யார்மீது இயக்கம் ஏற்படுகிறது என்கிற நிலையைக் குறிக்கும். உண்மை என்பது அப்பின்னத்தின் மேல் உள்ள நிலை தொடர்புடைய உண்மையையும், ஆக்கம் / இழப்பு இரண்டாம் பின்னத்தின் மேல் உள்ள நிலையோடு தொடர்புடைய அறிவு சார்ந்த ஆக்கம் / இழப்பு முதலியவற்றையும் குறிக்கும் (Leupin:67-70), மேற்கூறிய ஒவ்வொன்றையும் விளக்க இங்கே தேவையில்லை. எனவே பாழிப் பனுவல் இசிப்புச் சொல்லாடலாக இருப்பதை விளக்க இசிப்புச் சொல்லாடலை மட்டும் விளக்க வருகிறேன். பாழி நாவல் ஒருவித இசிப்புச் சொல்லாடல் என்பதைப் படைப்பாளி இடத்திலிருந்து பார்க்கிறேன். இங்கே வாசகன் புறநிலையாகிறான். காரணம் வாசகன் பார்வையில் வேறாகத் தோன்றக் கூடும். இதைப் பின்னால் விளக்குகிறேன்.

அனைத்திலும் போல் இசிப்பு நோய்க்குறிக்கும் இரண்டு அகநிலைகள் உண்டு. ஒன்று: நோயாளி, இன்னொன்று: தலைமை (அல்லது) தந்தை. மேற்கண்ட இசிப்பு அமைப்பில் வரும் ஸ்ரீ என்பது பிளவு ஆளுமையைக் (நோயாளியைக்) குறிக்கும். இவர்தான் இந்த அமைப்பின் ஆளுகைக் கொண்ட கூறாகும். (Fink:1977:133). இவர் மொழிய S1 கேட்கும் இடத்தில் இருக்கிறார். ய என்பது நோயாளியின் உண்மை நிலை. இதை நோயாளி அறியார். இந்த இடத்தில் என்பது நோய்க்குறியைக் குறிக்கும். லக்கானியத்தில் ‘டீ’ என்னும் குறியீடு நோய்க்குறிக்கு உரியது. S2 என்பது (புறநிலை) தலைமை நபரின் அறிவாகும். இங்கே பிளவு ஆளுமை தலைமை நபரிடம் அறிவை உற்பத்தி செய்ய நிர்ப்பந்திக்கிறார் (Leupin:83). இந்த இடத்தை ஆனந்தத்தின் உற்பத்தியாகவும் கூட லக்கான் காண்கிறார். (Fink;1997:133). அறிவால் பெறும் ஆனந்தம் என்றுகூடச் சொல்லலாம். படித்துப் பெறும் இலக்கிய இன்பமாகவும் கருதலாம். எனவே புறநிலையான தலைமை நபரிடம் (இவர்தான் சொல்லாடலின் அடைவிடம்), இசிப்பு நோயாளி சில கேள்விகளைச் சொல்லாடல் மூலம் வைக்கிறார் (Leupin:83). கேள்விகள் அறிவை உற்பத்தி செய்கிறது. விடை கிட்டியதும் ஆனந்தம் கிட்டுகிறது. நோயாளியின் உண்மை நிலைதான் அறிவின் அடைவிடம். எனவே அகநிலைக்கும் புறநிலைக்கும் இடையே இடையக உறவு (Inter subjective relation) நடப்பதைக் காணலாம். இசிப்புச் சொல்லாடலைக் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்:

 $ (பாழி)/ O (பொருண்மை) ->      S1 (வாசகன்)/ S2 (அறிவு, ஆனந்தம்)

இதில் ஸ்ரீ என்பது இசிப்பு நோயாளி. S1 என்பது தலைமை நபர் (தந்தை, மருத்துவன்). டீ என்பது நோயாளியின் உண்மை; அதாவது நோய்க்குறி. S2 என்பது தலைமை நபரின் அறிவு அல்லது ஆனந்தம் (Leupin:82).

மேற்கண்ட இசிப்புச் சொல்லாடல் அமைப்பைப் பாழிக்கும் பொருத்திப் பார்க்கலாம். பாழிக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவைக் கொண்டு பொருண்மை உண்மைநிலை ஆகிறது. S1 இடத்தில் வாசகன் வருகிறான் அவனின் அறிவு பொருண்மையை அடைய முயல்கிறது. அதனால் இன்பம் அடைகிறான் வாசகன். இதோ அந்த அமைப்பு:

       $/C -> S1/S2

ஓர் இருண்மைத்தனமான சொல்லாடல் அதிக அறிவை உற்பத்தி செய்யத் தூண்டும். பாழியும் அதையே செய்கிறது. நான் எப்படிப் பட்டவன்? என்று பாழி வாசகனிடம் கேட்கிறது. எனவே பாழி இசிப்புச் சொல்லாடல் வகைக்கு உட்படுகிறது. இந்தக் கேள்வி தனது நனவிலியை அறியாத நிலையைக் குறிக்கும். கவித்துவச் சொல்லாடல் எல்லாம் நனவிலியின் செயல்பாடுகளே (Trilling:287); பாழியும் அவ்வாறே. கனவு போன்ற அதர்க்கக் காட்சிகள் இதில் மிகுதி. ஒரு பெருங்கனவை வாக்கியமாக்கிக் கொண்டு போவது போன்ற உணர்வு பாழியுள் உண்டு. அதனால் கனவுப் பொருண்மை போல் பாழியின் பொருண்மையும் பிடிபடாமல் நழுவிக்கொண்டு செல்கிறது. வாசகனிடம் ஆனந்தத்திற்குச் சவால் விடுகிறது. அதனால் தான் வாக்கியங்களுக்கு உள்ளே கூட வாசகனால் எளிதில் நுழைய முடிவ தில்லை. இதனால் வாசகன் உள்ளத்தில் ‘குறை’ ஏற்பட வாய்ப்பாகிறது. இந்தக் குறை அவனுள் வேட்கையை உண்டுபண்ணுகிறது. இப்போது வாசகன் நிலையில் பாழி ஏற்படுத்தும் தாக்கங்களைக் காண்போம்.

பொருண்மையை மிகவும் மறைவாக வைப்பது ஒரு நோய்க்குறி ஆகும். பாழியின் நோய்க்குறியே இந்த இருண்மைதான். எனவே இதன் (பனுவல்) இலக்கு என்றும் நிறைவாவதில்லை. உளப்பகுப்பாய்வுப் படி ஓர் இசிப்பு நோயாளி முழுமையாக நிறைவடைவதில்லை. எனவே தனது இருத்தலுக்கான தேவைகளில் குறை அவனிடம் என்றைக்கும் இருக்கும். பொதுவில் அனைவரிடத்திலும் குறை உள்ளதால் அனைவரும் இசிப்பு நோயாளிகளே; அளவில்தான் வேறுபாடு. ‘மனிதன் குறையுள்ளவனாக இருக்க வேண்டும்’ என்பார் வோர்ட்ஸ் வொர்த். லக்கான் இதை அகிலக் குறையாகக் காண்கிறார். இருப்புக்கான குறை வேட்கையையும் பேற்றில் உள்ள குறை நிபந்தனையையும் உண்டு பண்ணும் (Fink:1997: 53-4). பாழியில் இருப்புக்கான குறை உள்ளது. இந்தக் குறைதான் வாசகனின் அறிவை வேண்டுகிறது. லக்கானியத்தின் படி நோய்க்குறி என்பதே குறையின் பதிலியன் (Metaphor) ஆகும். பாழியில் இலக்கிய இன்பம் குறையாக உள்ளது. எனவே இந்தக் குறை வாசகனிடம் உழைப்பை / முயற்சியை வேட்கையாக்கிக் கொள்கிறது. இங்கே பாழிக்கும் வாசகனுக்கும் இடையில் முரண், இறுக்கம் முதலியவை ஏற்படுகின்றன. இவை நோய்க்குறிகளாக உருவெடுக்கின்றன.

அகநிலையின் குறை வேட்கை கொள்கிறது. குறையுடைய ஒரு பொருளைத் தயாரித்தல் என்பது வேட்கையின் வெளிப்பாடாகிறது. இந்தக் குறையானது அகநிலையில் இருப்பதால் அதை நிறைவு செய்யும் புறநிலை ‘பகுதிப் புறநிலை’ என்றாகிறது. இதைத்தான் லக்கான் ‘a’ எனும் குறியில் குறிப்பிடுகிறார். அடிப்படைப் புனைவு அமைப்பில் வரும் (s<>a)a எனும் குறிப் பகுதி புறநிலையைக் குறிக்கும். இது - முழுமைக்கும் புறப்பொருள் அல்ல. வேட்கைக்கான காரணி ஆகும். எனவே வேட்கை என்பது புறப்பொருளோடு தொடர்புடையதல்ல; மாறாகக் குறையோடு தொடர்புடையது. பாழி எனும் புனைவில் பொருண்மை குறையாக உள்ளது. இதனால் ஆனந்தம் குறைபடுகிறது. வாசகனால் மட்டுமே இதை நிறைவுசெய்ய முடியும். அவனின் அறிவுசார்ந்த பொருண்மை பாழிக்குப் பகுதிப் புறநிலை ஆகியது. இதுதான் அனுபவத்தையும் குறை நிறைவையும் தரும். இந்தப் புறநிலை மற்றவரிடம் (வாசகர்) இருப்பதால் வாசகரின் அறிவைப் பாழி தேடுகிறது (பார்க்க:முன்னுரை). இந்தப் புறநிலையால் மட்டும் வேட்கை இயக்கம் பெறும்.

மற்றவரிடம் ஏதோ ஒன்றை வேண்டுதல் என்பது தன்னிடம் உள்ள குறையைக் குறிக்கும். பாழி வாசகனிடம் அறிவை வேண்டுகிறது. எனவே அறிவு வேட்கையைப் பாழி தன்னகத்தே கொண்டுள்ளது. அப்பேர்ப்பட்ட வாசகனைத்தான் பாழி எதிர் நோக்குகிறது. பாழியின் முன்னுரையில் ‘முரண் மடிப்பில் கலை கொள்ளும் வெற்றிடம் அறிவின் நோக்கமான பிடியிலிருந்து வெளியேறி இருளில் புதைகிறது. கண் தெரியாதோர் வரைந்த தொடும் வெளி குகைத் தொடராய் இருக்கக் கூடும். உள்ளே சாயைகள் படிந்த ஓவியங்களில் உதிரும் நிறங்கள் கலையின் தொடு முனையில் மொழி அதிர்வு கொள்ளும். மயக்கம் மேலோங்கிய கருப்பொருளில் நிலங்கள் யாவும் சாய்ந்து கிடக்கும் மோனம். என் கைகளில் வடித்த மொழியின் படிகக் கிண்ணங்களை ஏந்தி காலவெளியில் காத்திருக்கிறேன் வாசகனுக்காக’ (ப.24).

என்று அறிவார்ந்த வாசகனுக்காகப் பாழி எதிர்நோக்கி கொண்டுள்ளது. லக்கானியக் கோட்பாட்டின் படி கற்பனை அறிவு, குறியீட்டு அறிவு என இரண்டு வகை அறிவுகள் உள்ளன. கற்பனை அறிவு என்பது ஈகோவின் அறிவாகும். குறியீட்டு அறிவு என்பது அகநிலையின் அறிவாகும். இந்த அகநிலை அறிவுதான் தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளச் செய்கிறது. குறிப்பாக நனவிலி வேட்கை தொடர்பான உண்மையைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. பாழியும் இந்த அறிவையே எதிர்பார்க்கிறது.

இலக்கியத்திற்கு வாசகன்தான் மூலப்பொருள். அவனின்றி ஒரு சொல்லும் இயங்குவதில்லை. தேர்ந்த வாசகனிடம் இலக்கியம் வேகமாக இயங்கும். வாசகனின் நிறைவில்தான் இலக்கியம் முழுமை பெறுகிறது. வாசகனின் குறையைப் போக்காத இலக்கியம் குறையுள்ள இலக்கியமே. வேறுவிதமாகச் சொல்லின், இலக்கியத்திற்குப் பொருண்மையை வாசகன் கொடுத்து அதை நிறைவு செய்கிறான். ஆனால் இருண்மை வாய்ந்த சொல்லாடலுக்குப் பொருண்மை தர வாசகனால் முடிவதில்லை. இதனால் இரு நிலையாலும் ‘குறை’ முழுமைபெறாமல் அப்படியே இருந்து விடுகிறது. இசிப்புத் தொடர்பு டைய சொல்லாடல் வாசகனிடம் நிறைவை எதிர்பார்ப்பதில்லை. வாசகனை அவனது வேட்கையை நிறைவேற்றம் காணாதபடி தக்கவைத்துக்கொள்கிறது. இசிப்பு நோயாளியும் இதைத்தான் செய்கிறான் (Fink:1999:127). இதன் மூலம் வாசகனின் ஆனந்தப் பொருளாகத் தான் இருப்பதைத் தவிர்க்கிறான். ஒரு இசிப்பு நோயாளி மற்றவரின் ஆனந்தப் பரவசத்திற்குக் காரணியாக இருக்க விரும்புவ தில்லை. மாறாக, அவனின் நிறைவின்மைக்குக் காரணியாக இருக்க விரும்புகிறான் (Fink:1999:123). இதே கோணத்தில்தான் பாழியாகிய பனுவல் உள்ளது. வாசகனிடம் ஆனந்தப் பரவசத்தின் குறையை நிலைநாட்டப் படைக்கப்பட்ட பனுவலாகப் பாழி உள்ளது.

அகநிலையின் குறைதான் புறநிலையில் புறத்தெறிவாகிறது. இதன்படி, படைப்பாளியிடம் உள்ள குறை பாழியின் குறையாகவும் (பொருண்மைக் குறை) வாசகனின் குறையாகவும் (புரிதல்/ஆனந்தம் குறை) புறத்தெறிவாகின்றன. லக்கான் கண்ட முடிவுப்படி, அகநிலையில் குறையுள்ள ஒரு பகுதி உவர் (Other) வேறுபட்டது ஆகும் (Fink: 1997:58-9). இந்த உவரை நனவிலியில் உள்ள பகுதி என்பதைவிடப் பதிவு எனக் கூறப் பொருந்தும். மற்றவரிடம் இருந்து உவர் வேறுபட்டது. மற்றவர் என்றைக்கும் மற்றவரே. புறநிலை என்பது இதன் இன்னொரு பெயர். உவர் அப்படியல்ல. அகநிலைக்குள் பதிந்த சுயபிம்பம் ஆகும். கண்ணாடிப் பருவத்தில் தனது பிம்பத்தைக் குழந்தை அகத்தெறிவாக்கிப் (Introjection) பதிய வைத்துக் கொள்கிறது. இந்தப் பதிவே உவராகும். கண்ணாடிப் பிம்பம் ஒரு விதத்தில் புறநிலையே. எனவே இந்தப் புறநிலை அகநிலைக்குள் இன்னொரு அகநிலையாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு உள்வாங்கப்பட்ட புறநிலை முழுமையற்று இருப்பதால் உவர் என்றைக்கும் குறையுடைய தாக இருக் கிறது. எனவே அகநிலையின் குறை என்பது உவரின் குறையே (Lack of others) ஆகும்.

அகநிலை உவர் குறையுடையதாக இருப்பதால் பெண்மையோடு தொடர்புபடுத்துகிறார் லக்கான் (Hekman:85). பெண்மையில் லிங்கக்குறை (டுயஉம டிக ஞாயடடரள) உள்ளது. ஆண், பெண் இருவரின் உவரும் பெண்மையே ஆகும். இந்த உவரிடம் இருந்துதான் குறிப்பான்கள் தோன்றுகின்றன. பேச்சு, சொல்லாடல் எல்லாம் உவர் இடத்தில்தான் கட்டமைகின்றன (Lacan:1993:274). மேலும் உவரிடம் பிறக்கும் சொல்லாடல்கள் எல்லாம் மற்றவரின் உவரை நோக்கிய சொல்லாடல் களாகும். இதனால் உவர்களுக்கு இடையே இடையக உறவு மேம்படுகின் றது. அதனால் உவர் என்பது சொல்லாடலின் பிறப்பிடமாக உள்ளது. குறையுடைய உவரிடம் பார்க்கும் சொல்லாடல்கள் (பொருண்மை) குறையுடையதாக இருக்கும். எனவே இருண்மை வாய்ந்த நனவிலியின் பகுதியை உவரின் சொல்லாடலாகப் பார்க்கிறார் லக்கான் (HOMER:70-71). இலக்கியத்தில் இருண்மை வாய்ந்த பனுவல் களில் நனவிலிப் பண்பு (மறைபொருள்) மிகுந்து காணப்படுவதால் இவை நனவிலியோடு தொடர்புடையதாகின்றன. இக்கோணத்தின் படி பாழி ஒரு நனவிலிப் பனுவலாகிறது; அதாவது உவரின் சொல்லாட லாகிறது.

பாழியில் பொருண்மைக் குறை இருப்பதால் இது பெண் சொல்லாடலாகிறது. பாழி எனும் சொல்லுக்குக் கன்னி உருவத்தைத் தான் ஆசிரியர் தருகிறார் (ப.9) பனுவலின் ஏழு ஏடுகளிலும் ஏழு கன்னிமார் என உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாழி ஒரு பெண் சொல்லாடலாகிறது. இசிப்பு நோய்க்கும் பெண்மைக்கும் மரபு ரீதியான தொடர்பு உண்டு. இசிப்பைப் பெண்களிடம் தொடக்கத்தில் அதிகம் கண்டதால் இதைப் பெண் நோய் என்று அறிவித்த காலமுண்டு. பின்னாளில் ஆண், பெண் இருவருக்கும் பொது என வைக்கப்பட்டது. இருப்பினும் உள்ளத்துள் பெண்மைக்கும் இசிப்புக்கும் தொடர்புண்டு என்று உளப்பகுப்பாய்வு வழியில் ஃப்ராய்ட் கண்டறிந்தார் (SE, XX, P.143); லக்கானும் ஏற்கிறார். இதற்குக் குறையையே (லிங்கக் குறை) முக்கியக் காரணமாகக் கருதுகிறார். இதற்குக் குறையுடைய உவர்தான் மூலம். எனவே உவரிடமிருந்து வெளிப்படும் புனைவுகளில் பெண்மை மையம் கொள்ளும்; இசிப்புப் புனைவுக்கு உவரே பங்காளி (Fink:1999: 123). பாழி எனும் இசிப்புப் புனைவுக்கும் உவரே மூலம். எனவே பாழி - உவரின் சொல்லாடலாகிறது; பெண்மைச் சொல்லாடலாகிறது; குறையுடைச் சொல்லாடலாகிறது. ஹேம்லட்டைக் கூட இப்படித்தான் லக்கான் பார்க்கிறார் (RABATE:65). சிலம்பில் ஏழு சுரங்களைக் கன்னிகளாக உருவகப்படுத்தியதையும் இதனுடன் இணைக்கலாம். பாழியில், ‘இருள்வழி ஓடும் ஒற்றை வார்த்தைக்குச் சுயேச்சையான பல பொருள் வடிவங்கள் மாறி உருகும் கற்சிலைகளில் பாழி அலைகிறது. சிதிலத்தின் நிலை பெயர்ந்த கற்கோணமாய் உருண்டு வட்டமாய் அந்தரத்தில் மிதந்து சுழல்கிறாள் பாழி’ (ப.23) என்கிற வரிகள் பாழியைப் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டதைக் காணலாம். எனவே பாழி - ஒரு இசிப்புச் சொல்லாடலே; குறிப்பாக, உவரின் இசிப்புச் சொல்லாடலாகும்.

உவருக்கும் வேட்கைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. அகநிலையின் வேட்கையெல்லாம் உவரின் வேட்கைகளே. இந்த வேட்கைகள்தான் சொல்லாடலாக உருவெடுக்கின்றன. வேட்கை களின் சொல்லாடல் இன்னொரு வேட்கையை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கும். இன்னொருவரின் (உவரின்) வேட்கையைக் கொண்டு தமது வேட்கையைப் போக்கிக் கொள்ள அகநிலை உவர் செயல்படும்போது இசிப்பு நோய்க்குறி பிறக்கிறது. பாழிப் பனுவல் வாசகனின் வேட்கையால் திருப்தியடைகிறது. வாசகனின் வேட்கை தீரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இது இசிப்புப் பண்பாகும் (Fink:1999:127). நிறைவேறாத வேட்கை மீது வேட்கை கொள்வது இசிப்புச் செயலாகும் (Fink:1999:123). இதனால் வாசகனுக்கும் பாழிக்கும் இடையே கற்பனை உறவே (ஐஅயபiயேசல சநடயவiடிn) மிஞ்சுகிறது. காரணம், இருவருக்குமிடையே இடைவெளி மிகுதியாகிறது. உவரின் வேட்கை மிகின் புறநிலை இடைவெளி மிகும். அதனால் புறநிலையை வேட்கையோடே வைத்துக் கொள்ள உவர் முனையும் (Fink:1999:123); பாழியும் இதையே செய்கிறது. நல்ல வேட்கையுடைய வாசகனால் மட்டும் பாழியுள் நுழைய முடியும். அவன் வேட்கை நிறைவடையா மல் குறை அடைந்தால் பாழிக்கு வெற்றி; நிறைவடைந்தால் வாசகனுக்கு வெற்றி. இசிப்பு நோய் மனநிலையன்றிப் பாழியை அடைவது கடினம். பாழியின் இசிப்புத் தன்மைக்கு ஏற்ற நிலையில் வாசகன் அமைய வேண்டும். அப்போது தான் அலைவரிசை ஒத்தமையும். அல்லது மருத்துவன் போல் நோய்த்தன்மை பற்றிப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். காரணம், பொருண்மை வெளியேதான் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது உவர் இடத்தில் தீர்மானிக்கப்படுகிறது; மற்றவர்களில் தீர்மானிக்கப்படுகிறது (Fink:1999:43). பாழிக்கு வாசகன், திறனாய்வாளன் எல்லாம் உவர் இடத்தில் உள்ளவர்களாவர். லக்கானியம் கருத்துப்படி பனுவல் ஒரு குறிப்பான். (HOMER:121); அதன் பொருண்மை பிறரிடம் / உவரிடம் உள்ளது. குறிப்பாக வாசகனுக்கும் பனுவலுக்கும் இடையே மறுகட்டமைப்புச் செய்யப்படுவதுதான் பொருண்மையாகும். ‘பாழியில்’ பொருண்மை மிகுந்த அமுக்கத்திற்கு உட்படுகிறது. இதனால் வாசகன் மனதிலும் அமுக்கம் வலுப்பெறுகிறது. உண்மையான ‘பொருண்மை’ நனவிலியிலேயே அமைந்துவிடுகிறது. இந்த அமுக்கத்தை எதிர்கொள்ளும் வாசகரால் மட்டுமே வெல்ல முடியும். காரணம் வாசிப்பில் நனவு ஈகோவின் பங்கு மிகுதி. இந்த வகையில் பாழிக்குக் கோணங்கியும் ஒரு வாசகராகக் கூடும்.

பயன்பட்டவை

       இரவிச்சந்திரன், தி.கு.(2005). சிக்மண்ட் ஃப்ராய்ட்: உளப்பகுப் பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை.

       ----(2007). ஃப்ராய்ட் யூங் லக்கான் : அறிமுகமும் நெறிமுகமும், அடையாளம், புத்தாநத்தம்.

       ----(2008) ‘ரிஷிமூலம் - ஃப்ராய்டியப் பார்வை.’ மொ. இளம்பரிதி (தொ.ஆ.), நாவல்கள் - நவீனப்பார்வைகள். காவ்யா வெளியீடு, சென்னை.

Bowie, Malcolm (1987), Freud, Proust, Lacan:Theory as fiction,
cambridge University press. New York.

    Derrida, Jacques (1985), ‘Structure, Sign and Play in the Discourse of the Human Sciences.’ B.B.DAS (ed), Literary Criticism - A Reading. Oxford press. Calcutta Fink, Bruce (1997), The Lacanian Subject: Between Language and Jouissance, Princeton University Press, Princeton.

    ----(1999), A Clinical Introduction to Lacanian Psycho analysis: Theory and Technique, Harvard Universty Press. Cambridge.

    Forrester, John (1981), ‘Philology and the Phakus,’ Colin Maccabe (ed), The Talkings Cure: Essays in Psycho analysis and Language. The Macmillan Press Ltd. London.

    Gerard, Wajcman (1982), ‘The Hysteric Discourse’, Internet Source.

    Grosz, Elizabeth (2001), Jacques Lacan:AFemenist Introduction, Routledge, London.

    Hek Man, Susan (1992), Gender and Knowledge: Elements of Postmodern Feminism. Polity press. Cambridge.

    Homer, Scan (2005), Jacques Lacan, Routledge, London.

    Jones, Ernest (1955), The life and work of Sigmund Freud - Vol.1. Basic Books, inc. New york.

    Lacan, Jacques (1975), Encore: Sevil. Paris.
------(1977a), Ecrits: A Selection, Tavistock Publicatians. London.

    -------(1977b), Four Fundamentals of Psycho analysis. The Hogonth press and the Institute of Psycho analysis, London.

    --------(1988), The Ego in Freud: Theory and the Technique of Psycho analysis. Norton, New york.

    --------(1993), The Psychoses, Routledge, London.

    ---------(1994), Object relations, sewil, Paris

    Laplanche, Jacques and J.B.Pontalis (1973), The Language of Psycho-Analysis, The Hogouth Press and the Institute of Psycho analysis. London.

    Leupin, Alexandre (2004), Lacan Today : Psycho analysis, Science, Religion; Other Press. New York.

    Rabate, Jean - Michel (2001), Jacques Lacan: Psycho analysis and the subject of Literature, Palgrave, New York.

    Sarup, Madan (1993), An Introductory Guide to Post Structuralism and Post Modernism. The University of Georgia Press Athens. (Second Edition)

    Sulloway, Frank J (1980), Freud:Biologist of the Mind. Clarion Books. New Delhi.

    Thorr, Martin (1981), ‘The Unconscious Structured as a Language.’ Colin Maccabe (Ed). The Talking cure: Essays on Psycho analysis and Language. The Macmillan Press Ltd. London.

    Trilling, Lionel (1972), ‘Freud and Literature’. David Lodge (Ed).
20th Century Literary Criticism. Longman, London. PP.276-291.

    Welle K, Rene and Austin Warren (1968), ‘Theory of Literature’: A Peregrime Book. Penguin Books. London.

    Wright, Elizabeth (1984), Psycho analitic Criticism. Theory in Practice. Methune and Co. Ltd. London.

          zizek, Slavoj (1991), Looking Awry. MIT Press, Cambridge.

முதன்மை நூல்: கோணங்கி, பாழி (2000), தி பார்க்கர், சென்னை.

(கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியப் பிரதிகளையும் நாட்டார் வழக்காறுகளையும் ஆய்வுக்குட்படுத்துகிறார்.)

Pin It