பல்வேறு கோட்பாடுகள் பேசப்படும் தமிழ்ச்சூழலில் உங்களுடைய படைப்பினை நீங்கள் எப்படி இக்கோட்பாடுகள் சார்ந்து மதிப்பிடு கிறீர்கள்?

கோட்பாடுகள் என்பது என்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் அவ்வப்போது தற்காலிகமான விவாதப்பொருளாக வந்து மறைந்து போகக்கூடியவையாகவே இருக்கின்றன. ஒரு படைப்பின் மேன்மையைத் தீர்மானிப்பதில் கோட்பாட்டிற்கு எந்தவிதமான முக்கியப் பங்குமில்லை என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் உலகளாவிய எழுத்தாளர்களின் பல படைப்புகள். இந்திய, தமிழ்ச் சூழலின் எழுத்தாளர்களின் பல முக்கியப் படைப்புகள் கோட்பாட்டை மையமிட்டவையாக இல்லை. இருப்பினும் இவர்களின் படைப்புகள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் படைப்பிற்கான உள்ளெழுச்சி. அந்த உள்ளெழுச்சியும் படைப்பு வெளியீட்டிற்கான ஆழ்ந்த நேர்மையும்தான் ஒரு படைப்பை வெற்றிபெறச் செய்கின்றன. உதாரணமாக ஜி.நாகராஜன், தி.ஜா, சு.ரா, தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜெனே, காஃப்கா முதலானவர் களுடைய எழுத்துகளை எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்தினுள் அடக்க முடியும்?

எழுத்து என்பது ஒரு தனிமனித ஆளுமை. தங்கு தடையற்று பெருக்கெடுத்த அந்த ஆளுமையின் சாரம்தான் படைப்பாக உருப்பெறுகிறது. அவ்வாறு உருப்பெற்ற அப்படைப்பை அணுகும் வாசகன்தான் இப்படைப்பு இக்கோட்பாட்டினைச் சார்ந்தது; இந்தக் கோட்பாட்டின்படி இன்னதைச் சொல்கிறது, என்ற முடிவுக்கு வரவேண்டும். அது தவிர்த்து எந்தப் படைப்பாளிக்கும் கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் நின்று எழுத வேண்டும் என்ற எண்ணம் முன்கூட்டியே தோன்றுவதில்லை. அவர்களின் மனதாழத்தில் தைத்து வெளியிடத் தூண்டும் அந்தப் படைப்பின் பொறி எந்தக் கோட்பாட்டின்படியும் அமையலாம். அவ்வாறு ஒரு கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் நின்று மட்டுமே எந்த ஒரு படைப்பும் படைக்கப்படுமானால் அந்தப் படைப்பிலிருந்து அதன் ஆன்மா தொலைவில் இருக்கும். எது ஒன்றின் பொருட்டான இயல்பான தன்னெழுச்சிதான் ஒரு படைப்பை உருவாக்குமே தவிரக் கோட்பாடு அல்ல. ஒரு படைப்பு, கோட்பாட்டு அடிப்படையிலிருந்து எழுவதேயானாலும் அது புத்தாக்கத்தின் மறுமலர்ச்சிக் கூறுகளுடனும் இயல்பின் நம்பகத்துடனும் - உச்ச செயல்பாடாக உணர்வாழத்தில் செருகிக் கிளர்த்துவதாகவும் இருக்கும் பட்சத்தில் அது முதற்கட்டமாக நல்ல கதைப்படைப்பாகத் தான் ஏற்கப் படுமே அன்றி, கோட்பாடு என்பது அதன் பின்னணியில் கலந்து துருத்தித் தெரியாத வகையிலேயே அமைந்திருக்கும்.

நீங்கள் ஒவியராகச் செயல்படுவது புனைகதை படைப்பதற்கு எவ்வகையில் வலுசேர்க்கிறது?

நான் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகளாகப் படித்தேன். ஆனாலும் ஓவியமென்பது எனக்கு மிகச்சிறிய வயதிலேயே அறிமுகமான ஒன்று. காரணம் என்னுடைய தாய்மாமா இரண்டு பேரும் ஓவியர்கள். அவர்களுடைய தாக்கத்தால் ஆரம்ப காலத்தி லிருந்தே எனக்கு ஓவியத்தின்பால் ஈடுபாடு இருந்தது. அதுவே நாளடைவில் என்னை இலக்கியத்திற்கும் இட்டுச் சென்றது. பிறகு எழுதுவதற்கான ஊக்கத்தினையும் வளர்த்தெடுத்தது. ஆக ஓவியமும் எழுத்தும் என்னைப் பொறுத்த வரையில் இரண்டறக் கலந்த ஒன்றாகத்தான் கருத முடிகிறது. இவற்றில் உணர்வு வெளிப்பாட்டு முறைதான் வேறாகி இருக்கின்றதே தவிர அவைகளுக்கான மையம் என்பது ஒன்றுதான். ஆக இவையிரண்டும் எதை நோக்கிப் பயணிக் கிறது என்றால் எல்லையற்ற கவித்துவத்தை நோக்கி எனலாம். இவற்றிற்கான ஆகப்பெரிய இலக்கு அது தான்.

இலக்கியம், ஓவியம் இவையிரண்டிற்குமான வெளியீட்டு முறைமையில் ஓவியம் என்பது கோடு, வண்ணங்களால் ஆனதாகவும் இலக்கியம் என்பது எழுத்துகளால் ஆனதாகவும் இருக்கின்றது என்பதே இவற்றிற் கான வித்தியாசமே தவிர இவைகளின் அதிகபட்ச இலக்கு மேற்கூறிய அந்தக் கவித்துவம் என்ற ஒன்றையே மையமிட்டிருக்கின்றது. இதில் கதை, கவிதை எழுதுவதற்கு ஓவியம் எந்தளவிற்குப் பயன்படுகின்றது என்றால் ‘காட்சி’, அவற்றை மிகத் துல்லியமாக மனதில் உணர்வதற்கு உதவுகிறது. நுட்பத்துடனும் விவரண நம்பகத்துடனும் தெளிவாகச் சொல்லுவதற்கும் பயன்படுகிறது. குறிப்பாக, ஓர் இலையை வரையும் நோக்கோடு பார்க்கும் ஓர் ஓவியனின் பார்வை வெறும் மேம்போக்காக இருப்பதில்லை. மாறாக, இலை, அது சாய்ந்திருக்கும் கோணம், இலை நரம்புகளின் அமைவு, அதன் நிறம், அதன் மேல் மிணுக்குகிற ஈரம் என்று அவனின் பார்வை மிக நுணுக்கமாக இருக்கிறது. அதுவே ஓவியனின் இயல்பும் கூட. அப்படிப்பட்ட அந்தத் துல்லியமான பார்வைப் பரிமாணம்தான் விவரணையில் என் செயலுக்கு ஆதரவாக இருக்கிறது.

சிறுபத்திரிகையில் எழுதுதல் வெகுசனப் பத்திரிகையில் எழுதுதல் குறித்த உங்களுடைய கருத்து என்ன?

தமிழ்ச் சூழலில்தான் சிறுபத்திரிகை, வெகுசனப் பத்திரிகை என்ற கருத்து விரிசல் காணப்படுகிறது. இன்றைக்கும் இணக்கமான சூழல் ஏற்படவில்லை. சீரிய இசை, ஓவியம் இலக்கியத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விலக்கிவைக்கும் மிகக் கொடுமையான பாதகச் செயலை இன்றளவில் ஒட்டுமொத்த வெகுசன ஊடகங்களும் செய்து கொண்டிருக் கின்றன. சி.சு. செல்லப்பா, கா.ந.சு. தொடங்கிப் பல சிறுபத்திரிகையாளர்கள் நல்ல கலைவடிவங்களை அதன் தீவிரத்துடன் பரவலாக்க முயற்சித்தும் கூடச் சிறுபத்திரிகைக்கும் வெகுசனப் பத்திரிகைக்குமான மிகப்பெரிய இடைவெளி அகலவில்லை. இன்றைக்கும் இடைவெளி இருந்து கொண்டே யிருக்கின்றது என்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் வெளிவந்த எழுத்து, கசடதபற, ழ, பிரக்ஞை தொடங்கிய தீரமும் அர்ப்பணிப்பும் கொண்ட சிறுபத்திரிகைச் செயல்பாடுகளால் இன்றைக்கு அக்கறையுடன் செயல் படக்கூடிய இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் சிறிய அளவிலான ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இருப்பினும் இத்தனை ஆண்டுகால சிறுபத்திரிகை இயக்கம் வளர்த்தெடுத்த அம்சங்கள் இன்றும் அந்நியப்படுத்தப்பட்டே வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் வெகுசன ஊடகங்களின் மாபெரும் சக்தி. நூறு சதவிகித லாப நோக்கோடு செயல்படும் இவ்வூடகங்கள் இம்மாதிரி யான நல்ல வெளிப்பாடுகளை மக்களிடம் சென்றடையாதபடி செய்கின்றன. இது ஒரு சதிவேலை. வெகுசன ஊடகத்தினர் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் நன்கு பழகி வந்த, தங்களுக்கு எளிதான வெகுலாபம் ஈட்டக் கூடிய மலினமான விஷயங்களையே மக்களுக்கான தேவை யாகவும் மக்கள் இவற்றையே கணம் பொழுதும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பொய்யாகவோ, உண்மையாகவோ நம்புகின்றனர்.

வெகுசன மக்கள் சீரிய கருத்தாக்கங்கள் கொண்ட கதை, கவிதை, கட்டுரை, ஓவியங்களைப் பார்க்க, படிக்க மாட்டோமென்று யாரும் பிடிவாதம் பிடிப்பதில்லை. எங்கோ ஒரு மூலையில் மேசையின் முன்னால் அமர்ந்திருக்கும் ஊடகவியலாளன் ஒட்டுமொத்த மக்களும் அற்பமானவற்றையே பெரிதும் விரும்புகிறார்கள் என்று முடிவெடுத்துச் செயல்படுவதுதான் அபாயகரம். மோசடித்தனம். நன்மைக்கு எதிராக முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அச்சம். மக்களின் பின்தங்கிய ரசனை நிலையைத் தக்கவைத்து லாபம் பார்க்கும் வேலையை வெகுசன ஊடகத்தினரே சிரமேற்கொண்டு செய்கின்றனர். தவிர்த்துச் சமூக அசைவியக்கத்தினை அவதானித்து அதன் பல்முனை மேம்பாட்டிற் கான அம்சங்களை முன்னெடுக்கும் பக்குவமோ, தார்மீகமோ இவர்களுக்குக் கிடையாது. இதுதான் தற்போதைய வெகுசன ஊடக நிலைப்பாடு. இதற்கிடையிலும் தீவிர ஈடுபாடுடைய சிறுபத்தி ரிகைகள் பல இயங்கி வருகின்றன என்பது நம்பிக்கைக்குரியது. மேலும் இவ்வியக்கப்பாடுகள் எக்காலத்தும் தொடரும் என்பது என்னுடைய அசைக்கமுடியாத எதிர்பார்ப்பு.

இரத்த உறவில்குறிப்பிடும் குடும்ப வன்முறை குறித்துச் சொல்லுங்களேன்?

குடும்பம் என்பது ஒரு சமூகக் குறியீடு; அதிகாரப் படிநிலையின் குறியீடு என்பதுபோல் அநேக விஷயங்களின் குறியீடாகவே ‘இரத்த உறவு’ நாவலின் வரும் குடும்பமும் குறிக்கப்படுகிறது. அவ்வாறு குறிக்கப்படுவது குடும்பம் மட்டுமா? அல்ல. அது குடும்பம் மட்டுமாகத் தொடங்கிக் குடும்பம் மட்டுமாக முடிந்து விடுகிற ஒன்றல்ல. இது ஒரு சமூக மதிப்பீட்டினைப் பரிசோதிக்கும் முயற்சி. ஆக, அன்பு, மூர்க்கம், குழந்தமை போன்ற முக்கோணப் பட்டகத்தின் வாயிலாக மனித மனோ தர்மங்களை வேறுபடுத்தி அறியும் ஒரு யத்தனம். தவிர, வன்முறையை மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருக் கின்றது என்று சொல்லிவிட முடியாது. மற்ற விஷயங்களைக் காட்டிலும் அவை கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரிவது வாசகரின் மனச்சூழலைப் பொருத்தது.

மஞ்சள் வெயில்நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்நிராகரிப்பினைஎவ்விதம் புரிந்து கொள்ளலாம்?

நடைமுறை வாழ்க்கையில் நமக்குப் பலவிதமான அக நிர்பந்தங்கள் இருக்கின்றன. நிர்பந்தங்கள் என்பதை ஆன்மீகத்தின் உச்சமான பொருளி லேயே இங்கு அர்த்தங்கொள்ள வேண்டும். அது மனித மனங்களின் பல நூறு, பல ஆயிரம் அடுக்குகளின் கீழே கனன்று கனன்று மேலே கசிந்து உறவாகக் கூர்சேரும் நேயம் தொடர்பானது. இது வெற்றுத் தட்டையான வாழ்முறையை யாரும் வாழமுடியாது எனும்போது எதன்பொருட்டே னும் வாழ்வது என்ற நிலை இங்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. நான் ‘மஞ்சள் வெயில்’ நாவலில் பெண்மையை முன்வைத்து வாழ்ந்திருக்கின்றேன்.

ஆக ஒட்டுமொத்தத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் பெண்மையைக் கண்டு வாழ்ந்த, சரணடைந்து மனம் கரைந்த, வழிபட்ட, வலியேற்ற ஒரு மனப்பதிவுதான் ‘மஞ்சள் வெயில்’. இதில் சிலர் மிகை காணலாம். ஆயினும் இது எனக்கும் போதாது போதாது என்றே இன்றும் தோன்றுகிறது. கண்முன்னால் ஒரு இயற்கையாக, இயல்பாக, நடைமுறையாக வழக்கம் பழக்கமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தினாலேயே ஒரு மாபெரும் தரிசனத்தின் அருமையைக் குறைத்து மதிப்பிட ஒருபோதும் இயலாது. 

(உரையாடியவர்: அ. கார்வண்ணன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்.)

Pin It