தனது வாழ்வியல் அனுபவத்திலிருந்து பின்னாளில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட நினைவுக் குறிப்புகளைக் கொண்ட புனைவுகளாக யூமா. வாசுகியின் படைப்புகளை அவதானிக்கலாம். அவை இரத்த உறவு, மஞ்சள் வெயில் என்பனவாகும். இவ்விரு புனைவுகளிலும் கதைச் சொல்லியாக இருப்பதோடு மட்டுமின்றித் தானொரு பாத்திர மாகவும் செயல்பட்டுத் தன்னைச் சுற்றிய சூழலைக் கதைக்களமாக அமைத்துக் கொள்கிறார் ஆசிரியர். இக்கதைக்களப் பின்னணியில் இவ்விரு புனைவு களும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் மையப்படுத்துகின்றன.

“குடும்பம்” என்ற கட்டமைப்பிற்குள் நிகழ்த்தப்படும் குரூரங்களை “இரத்த உறவு” முன்னிலைப்படுத்துகின்றது. குறிப்பாக, பட்டுக் கோட்டை பகுதியில் வாழும் குடும்பமொன்றின் உறவுகள் குறித்து விரிவாகப் பேசுகின்றது. குடிபோதைக்கு அடிமைப்பட்ட ஆண்கள், தமிழ்ச் சமூக வழமைப்படி அவர்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், எதிர்காலச் சிந்தனையற்று வயிற்றுக்கு வழிதேடும் பிள்ளைகள் என்று குடும்பக் கட்டமைப்பிற்குள் சிக்குண்டு தவிக்கும் இவர்களே இப்புனைவின் கதாபாத்திரங்கள். இவற்றில் பெரும்பாலான முதன்மைக் கதாபாத்திரங்கள் உறவுமுறைப் பெயர்களாலேயே சுட்டப் படுகின்றன. ஒவ்வொரு வாசகனையும் பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புனைவில் அதிகபடியான அத்யாயங்கள் சிறுவர்களையே மையமிட்டிருக்கின்றன. சிறுவர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இதில் அடக்கம். மூத்திரப் போட்டி, இரண்டு ரூபாய்க்காக இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், தூங்கும்போது கால் சட்டையிலேயே சிறுநீர் கழித்தல் என்பனபோன்ற சித்திரிப்புகள் சிறுபிள்ளைப் பருவ மனோநிலையை வாசகனிடத்தில் உண்டு பண்ணுகின்றன. இவை யதார்த்தம். இருப்பினும் இதனூடே இளமைக் காலங்களில் குடும்ப உறவுகளினூடான பிணைப்பில் ஏற்பட்ட பாசம், பரிவு, வெறுப்பு முதலானவற்றை முன்னிலைப் படுத்தும் விதத்தில் இப்புனைவு சிறுபிள்ளையின் சுய மனோபாவச் சார்புடனும் அமைந்திருக்கின்றது. இதை எப்போதும் குடித்துவிட்டு குரூர புத்தியுடன் அடிக்கும் பொறுப்பற்ற அப்பா; தன்மீது அதிகபடி யான பரிவையும் பாசத்தையும் கொண்டு தனக்குப் பதிலாக அடிவாங்கும் அம்மா, அக்கா; தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைக் கொடுக்காமல் தன்மகன் இறந்துவிட்டான் என்று வசைபாடும் பாட்டி என்று இப்புனைவில் வரும் பாத்திரப் படைப்புகள் சுட்டுகின்றன. இத்தன்மையை மிகையதார்த்தம் என்று கருத வாய்ப்பிருக்கின்றது. என்றாலும், தமிழ்ச் சமூகக் குடும்பக் கட்டமைப்பில் இயல்பாகவே பெண்கள் நசுக்கப்படுகின்றனர். அவ்வாறு நசுக்குவதற்கான அர்த்த மற்ற அதிகார கைகள் ஆயிரம் என்பதை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கும் இப்புனைவின் மையக் கருத்து மேற்கூறிய இரு நிலைகளையும் கடந்தது.

“ஜீவிதா” என்ற ஒற்றைச் சொல்லை மந்திரமாக்கி எழுதப்பட்ட மிக நீளமான கடிதமே மஞ்சள் வெயில். இது ஒரு தனிமனித உணர்வுப் படிமம். இக்கதையில் வரும் கதிரவன் பாத்திரமே இக்கதையை எழுதிச் செல்கின்றது. இத்தன்மை வாசிப்பினூடே அவ்வப்போது கதை எழுதப் பட்டு வருவது போன்ற தாக்கத்தினை வாசகரிடத்தில் உண்டுபண்ணு கிறது. இடையிடையேயான இளைப்பாறலுக்குப் பின் தொடர்ந்து எழுதப்படுவதாக அமைக்கப்பட்டிருக்கும் இப்புனைவு காதல் வயப்பட்ட ஒற்றை இளைஞனின் புலம்பல். “சிறுமி தொலைத்த ஒற்றைச் செருப்பின் ஊசலை” ஒத்த நிராதரவில் இருக்கும் அவனுடைய உள்ளக்கிடக்கை, தனது பாடலால் பிறறை மெய்மறக்கச் செய்யும் கான் முகமது, பலவிதமான பொருளாதார நெருக்கடியிலும் பச்சைக் கிளிகளுக்காகப் பனை மரத்தை விற்கத் துணியாத பாலகிருஷ்ணன், பூனைகளோடும் பூக்களோடும் வசிக்கும் கதிரவன் என்று இப் புனைவின்வழி அறியப்படும் இவர்களனை வரும் இவ்வகைப் பட்டவர்களே. ஆக இப்புனைவு என்பது நேசித்த ஒருவன் நிராகரிக்கப் பட்டதனால் ஏற்பட்ட வலியின் தழும்பாக அமைந்துள்ளது.

Pin It