தலித்தியப் படைப்புகளுள் பெரிதும் விமர்சிக்கப்பட்ட கோவேறு கழுதைகள், ஆறுமுகம் நாவல்களைத் தொடர்ந்து இமயம் ‘செடல்’ நாவலை எழுதியுள்ளார். நாவலின் மையக் கதாபாத்திரத்தின் பெயர்தான் செடல். பறைச்சேரியின் கூத்தாடிக் குடும்பப் பெண்ணான செடல்தான் ஊரின் நன்மைக்காகப் பொட்டுக் கட்டப்பட வேண்டியவள் என ஊர்ப் பெரியவர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி அவள் சொந்த ஊர் செல்லி யம்மன் கோயிலுக்கும் சுத்துப்பட்டிலுள்ள பத்து கிராமங்களின் கோவிலுக்கும் பொட்டுக்கட்டி விடப்படுகிறாள்.

பொட்டுக் கட்டுதல் கிராமத்து வழக்கம் என்ற முறை நடராஜ பிள்ளையின் உத்தரவின் பேரில் ராமலிங்க ஐயரால் (வள்ளுவர்) கூறப்படுகிறது. பின்பு அவர்கள் செடலின் உடலைத் தெய்வ மேறிய உடலாக மாற்றி அவளைக் குடும்பத்திலிருந்து பிரித்துக் கோவிலுடன் பிணைக்கின்றனர். கோவில் திருவிழாவுக்குக் காப்புக் கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல், துயிலெழுப்பல் என்று ஒவ்வொன்றுக்கும் பள்ளு பாடச் செல்கிறாள். அங்கே ஊர் ஆண்கள் சிரித்துப் பேசுவதையும் கிள்ளுவதையும் சகித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் செடலின் பெற்றோர்கள் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வாழ வழியின்றிக் கண்டிக்குப் போகின்றனர். செடலைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட சின்னம்மா கிழவியும் இறக்கிறாள். செடல் தனியே வாழ்கிறாள். தீட்டுள்ளவர் கள் கோவிலுக்குச் செல்லக் கூடாது என்ற நம்பிக்கையின்படி, செடல் பெரிய மனுஷியான பெருமழை நாளொன்றில், ஒதுங்கி உட்காரக்கூட இடமில்லாமல் தவிக்கிறாள். ஆடு, மாடு, கோழி களைக்கூடப் பத்திரப்படுத்திய கிராமத்தினர் ‘தெய்வமேறிய’ செடலுக்கு ஒதுங்கக்கூட இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தனது சொந்த ஊரையும் கோவிலையும் விட்டுப் போகிறாள்.

ஊரைவிட்டு வெளியேறிய செடலைத் தூரத்து சொந்தமான பொன்னன் என்னும் கூத்தாடி தன்னுடன் அழைத்துச் செல்கிறான்; தேர்ந்த கூத்துக்காரியாக மாற்றுகிறான். ஒருநாள் பெண்வேடம் கட்டவேண்டியவன் வராதபோது பொன்னன் குழுவினரின் மன்றாடலைக் கேட்டுச் செடல் கூத்தாடுகிறாள். ‘பொன்னன் செட்டு’ என்ற பெயர் ‘செடல் செட்டு’ என்றானதும் வருமானமும் சிக்கலும் சேர்ந்து வந்தன. செடல் மீது பாலியல் சீண்டல் நிகழ்கிறது. பொன்னன் இறந்ததும் அவனது மனைவி செடலை விபச்சாரியாகச் சித்திரித்துப் பேசுகிறாள். செடலால் பொன்னன் செட்டு பிரிகிறது.

தன்னைப் பார்க்க வரும் அக்கா வனமயிலுடனும் அவனது மகனுடனும் தனது சொந்த ஊருக்குச் செடல் திரும்புகிறாள். செல்லியம்மன் கோயிலையே சிதையவிட்ட செடலின் சொந்த ஊரார் முதலில் அவளை ஏற்க மறுத்துப் பின் சேர்த்துக் கொள்கின்றனர். பொட்டுக் கட்டிய பெண், கூத்துக்காரி என்ற இரட்டை அடையாளங் களுடன் செடல் வாழ்கிறாள். வனமயில் இறந்ததும் அவளது மகன் பாதிரியாரிடம் சேர்கிறான். கிறித்துவ நிறுவனங்களினூடே வேதப் பறையர்கள் பிணைக்கப்பட்டி ருப்பதை ஆசிரியர் உணர்த்துகிறார். மூத்த கூத்தாடிச்சியான பாஞ்சாலியைச் செடல் சந்திக்கிறாள். பாஞ்சாலியுடனான சந்திப்பு, செடலின் கடந்தகால வாழ்க்கைக்கும் நிகழ்கால இருப்புக்கும் இனித் தொடரப்போகும் நிகழ்வுகளுக்கும் அர்த்தங்களைச் சொல்வதாக அவள் உணர்வதோடு நாவல் முடிகிறது.

நம் சமுதாயத்தின் இறைநம்பிக்கையும் சடங்குகளும் ஒரு சிறுமியின் வாழ்வை இறுதிவரையிலும் பாதிக்கும் விதம் குறித்து இமயம் துல்லியமாகப் பதிவு செய்கிறார். இதன்மூலம் அறிவு, புனிதம் சார்ந்த குழுக்கள், பொருளாதார அதிகாரம் கொண்ட ஆண்டைகள், உழைக்கும் அடிமைகள், இவற்றுக்கு இடையேயான சேவைக்குழுக்கள் எனத் தன்னிறைவு பெற்ற சமூகமாக அடையாளப்படுத்தப்பட்ட கிராம சமுதாயத்தின் அபத்தங்களை, வன்மங்களைத் தோலுரிக்கிறார்.

இது வரையிலான நாவல்களில் தலித்துகளுக்குள்ளான தீண்டாமை, அதிகாரம் குறித்துப் பதிவுசெய்த இமயம் இந்நாவலில் தலித்துகளைப் பிற சாதியினர் ஒடுக்குவது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதேசமயம் பறையர்கள் பறைக்கூத்தாடிகளிடமும் பறைக்கூத்தாடிகள் சக்கிலியர் மற்றும் தொம்பர்களிடமும் கடைபிடிக்கும் தீண்டாமை யுணர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறித்துவ நிறுவனம் மீதான எதிர்மறையான கருத்தோட்டங்களே இந்நாவலில் ஊடாடியிருக்கிறது. கிறித்துவ மதத்தின் மூலமும் பறையர்களும் நாடார்களும் முன்னேறினர் என்பதே வரலாற்று உண்மை. அப்படியிருக்க கிறித்துவத்தை எதிர்மறையாகச் சித்திரித்துள்ளார். பாமாவும் எக்பெர்ட் சச்சிதானந்தமும் கூட கிறித்துவ நிறுவனங்களின் மீது விமர்சனம் வைத்துள்ளனர். ஆனால் இவர்களிலிருந்து இமயம் முற்றிலும் வேறுபடுகிறார். விழுப்புரம் வட்டார மக்களின் பேச்சுமொழி, பழமொழிகள், விடுகதைகள் முதலானவற்றை நேர்த்தியாகத் கதாபாத்திரங்களின் பேச்சினூடாக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக இந்நாவலில் கூத்துப் பனுவல், இராக தாளம், அடவுகள் பற்றிய சித்திரிப்புகள், பள்ளுப் பாடல்கள், ஒப்பாரி மற்றும் சாவுக்கூத்து எனப் பலவகையான தலித் கலைகளும் வழக்காறுகளும் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Pin It